ஆர்ஜென்டினா தோல்விக்கு என்ன காரணம்? 5 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து இரண்டாவது முறையாக பட்டம் வென்றுள்ளது.
சுமார் 80 ஆயிரம் பேர் குழுமி இருந்த அந்த மைதானத்தில் 105வது நிமிடம் வரை ஒரு முடிவு தெரியாமலே இருந்தது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் ஃபெர்ரான் டோரஸ் ஆட்டத்தின் முதல் கோலை அடிக்க உலகக்கோப்பை ஸ்பெயின் வசமானது.
2010-இல் 1-0 என நெதர்லாந்தை தோற்கடித்து தனது முதல் உலகக் கோப்பையை வசப்படுத்திய ஸ்பெயின் 16 ஆண்டுகள் கழித்து அதேபோல் 1-0 என ஆர்ஜென்டினாவை தோற்கடித்து 2வது உலகக் கோப்பையை வென்றுள்ளது.
கோப்பையை கைப்பற்றியிருக்கும் ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 444 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆர்ஜெண்டினாவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 296 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
ஒரே நேரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் நாடு என்ற பெருமையை அவர்கள் பெறுகிறார்கள்.
எகிப்துக்கு எதிரான நாக் அவுட் சுற்றாகாட்டும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியாகாடும், ஆர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் இறுதியில் கோல்களை அடித்து வெற்றியை வசப்படுத்தி இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமலேயே போனது.
ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா தோல்வி அடைந்த நிலையில், மெஸ்ஸி மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார்.
1. மெஸ்ஸியை மட்டுமே அதிகமாக சார்ந்திருந்தது
இறுதிப்போட்டி முழுவதும் லியோனல் மெஸ்ஸியை ஸ்பெயின் அணி ஆச்சரியப்படும் வகையில் கட்டுப்படுத்தியது .
இறுதிப் போட்டிக்கு முன்பு இத்தொடரில் எட்டு கோல்கள் அடித்திருந்த ஆர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியால், இறுதிப்போட்டியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
தனது வேகமான மற்றும் துல்லியமான பாஸிங்கால் புகழ்பெற்ற மெஸ்ஸியின் பாஸ்களும் இந்தப் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை.
ஒருவேளை மிகச்சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணத்தின் கடைசிப் போட்டி இதுவென்றால், நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினா பட்டத்தை இழந்த ஏமாற்றத்துடனும், போட்டியில் மெஸ்ஸியால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையிலும் தான் இப்போட்டி முடிவடைந்துள்ளது.
இத்தொடரின் மற்ற போட்டிகளில் மெஸ்ஸியின் திறமை முழுமையாக வெளிப்பட்டது. ஆனால் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அவரை நெருக்கமாகக் கண்காணித்தது.
மெஸ்ஸி ஒரே ஒரு ஷாட் மட்டுமே அடித்தார். அதுவும் இலக்கைத் தவறவிட்டது.
2. தற்காப்பு நிலையில் ஆர்ஜென்டினா

பட மூலாதாரம், Carl RecineGetty Images
ஆர்ஜென்டினாவின் உத்திகளும் மெஸ்ஸிக்குப் பெரிதாக உதவவில்லை.
தங்களது ஆட்டத்தை நம்புவதற்குப் பதிலாக, ஸ்பெயினின் ஆட்டத்தை சீர்குகலைத்து அவர்களை எரிச்சலடையச் செய்வதிலேயே அணி கவனம் செலுத்தியது.
ஸ்பெயின் அணி பல எளிய வாய்ப்புகளை தவறவிட்டது. இல்லாவிட்டால், வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ "டிபு" மார்டினஸ் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் கோல் வாய்ப்புகளை, தனது அணியின் சிறந்த வீரர் என்பதை நிரூபித்தார்.
ஸ்பெயினின் இடைவிடாத தாக்குதல்களைச் சமாளித்து, போட்டியை கூடுதல் நேரம் இழுத்துச் சென்றதே ஆர்ஜென்டினாவின் மிகப்பெரிய சாதனையாக இருந்தது.
குறிப்பாக, ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்று வெளியேறிய பிறகு, 10 வீரர்களுடன் ஸ்பெயினை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது.
போட்டியின் இறுதி தருணங்களில் ஆர்ஜென்டினா வெற்றி பெற ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஜூலியானோ சிமியோனே இரண்டு ஆபத்தான தாக்குதல்களை முன்னெடுத்தார். ஆனால் கால்பந்தில் அதிர்ஷ்டம் என ஒன்று இருந்தால், அது ஸ்பெயின் பக்கம் தான் இருந்தது எனலாம்.
கிடைத்த ஒரு வாய்ப்பு கார்னராக மாறியது. மற்றொரு ஷாட் கோல் ஆக மாறவில்லை.
3. மிட்ஃபீல்டில் ஸ்பெயின் செலுத்திய

பட மூலாதாரம், Getty Images
தொடர் முழுவதும் ஸ்பெயினின் மிட்ஃபீல்ட் வீரர்கள் ஆட்டத்தின் போக்கை வெகுவாக கட்டுப்படுத்தினர்.
இதனால் எதிரணியால் நீண்ட நேரம் பந்தைத் தங்கள் வசம் வைத்திருக்க முடியவில்லை.
துல்லியமான பாஸிங்கிற்கு ஏற்கனவே பெயர் பெற்ற ஸ்பெயின் அணி, பந்தை எதிரணியிடம் இருந்து மீட்டெடுத்து உடனடியாக அழுத்தம் கொடுக்கும் திறமையையும் இந்தத் தொடரில் சிறப்பாக வெளிப்படுத்தியது.
இறுதிப்போட்டியிலும் பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த ஸ்பெயின் அணி வீரர்கள், ஆர்ஜென்டினா அணி வேகம் பெறுவதைத் தடுத்தனர்.
4. ஒரு வீரர் இல்லாதது

பட மூலாதாரம், Lars BaronGetty Images
இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், பாவ் குபார்சியை திட்டமிட்டு தடுத்ததற்காக என்சோ பெர்னாண்டஸுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
இதனால் அவர் களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு ஆர்ஜென்டினா 10 வீரர்களுடன் ஸ்பெயினை எதிர்கொண்டது.
10 வீரர்களுடன் விளையாடுவது எந்த அணிக்கும் சவாலானது தான்.
குறிப்பாக, இந்தத் தொடர் முழுவதும் ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்த ஸ்பெயினுக்கு எதிராக அது இன்னும் கடினமானதாக இருந்தது.
கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதி தொடங்கி ஆறு நிமிடங்களில், ஸ்பெயின் தங்களுக்கு கிடைத்த சாதகமான சூழலை பயன்படுத்திக் கொண்டது.
பெர்ரான் டோரஸ் மூலம் அந்த அணி கோல் அடித்தது.
முதல் பாதியின் இறுதியில் மார்டினஸ் காயம் காரணமாக வெளியேற வேண்டியிருந்தது.
அதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, அந்தத் தொடர் முழுவதும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ள தற்காப்பு வீரர் நிக்கோலஸ் ஒட்டமெண்டியை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த ஒரு போட்டியும் குரூப் சுற்றில் தான் அவர் விளையாடியிருந்தார்.
5. அணியாக பலத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின்

பட மூலாதாரம், Getty Images
கிலியன் எம்பாப்பே, லியோனல் மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற தனிப்பட்ட சூப்பர் ஸ்டார்கள் ஸ்பெயின் அணியில் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், ஒரு சிறந்த இயந்திரம் போல ஒற்றுமையாக செயல்படும் அணியாக ஸ்பெயின் அணி திகழ்கிறது.
மைக்கேல் ஒயர்சபாலின் ஐந்து கோல்கள், ரோட்ரி மற்றும் பெட்ரியின் அபாரமான கோல் வாய்ப்புகளை உருவாக்கும் திறன், மார்க் குகுரேயாவின் தாக்குதல் திறன், மாற்று வீரராக களமிறங்கி மிக்கேல் மெரினோ வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் என, இந்த அணியில் ஒரே ஒரு வீரரை மட்டும் தனியாகக் குறிப்பிடுவது கடினம்.
ஒவ்வொருவரும் தங்களது பங்கை கச்சிதமாக நிறைவேற்றும் ஒரு இசைக்குழுவைப் போல இந்த அணி செயல்பட்டது.
இந்த வெற்றிக்கு தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டேவுக்கும் அதிக பாராட்டு கிடைக்க வேண்டும்.
ஊடகங்களின் கவனத்தை அதிகம் விரும்பாத பயிற்சியாளராக இருந்தாலும், ஸ்பெயின் அணியை உருவாக்கி, ஒன்றிணைத்து, மீண்டும் உலக கால்பந்தின் உச்சத்திற்குக் கொண்டு வந்தவர் அவர் தான்.
2022ஆம் ஆண்டு டி லா ஃபுவென்டே ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
அதே ஆண்டில் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில், ஸ்பெயின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மொராக்கோவிடம் பெனால்டி ஷூட்-அவுட் மூலம் தோற்றது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































