You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் - மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்
- எழுதியவர், நவ்ஜோத் கவுர், பிமல் சைனி
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்.
"நான் 26 ஆண்டுகளாக என் கணவருக்காகக் காத்திருந்தேன். அவர் ஒரு நாள் வீடு திரும்புவார் என்று நம்பாமல் ஒரு நாள் கூடக் கடக்கவில்லை. ஆனால் இப்போது அவரது அஸ்தியை கண்டெடுத்த பிறகு என்னுடைய காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது."
பஞ்சாபின் ரூபார் மாவட்டத்திலுள்ள அனந்த்பூர் சாஹிப் அருகே இருக்கும் கோட்லா கிராமத்தைச் சேர்ந்த சீதா தேவி என்பவர் கூறிய உணர்வுபூர்வமான வார்த்தைகள் இவை. அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
இறுதியாக அவருக்குக் கிடைத்த செய்தி தனது கணவரின் இறப்பு பற்றியதாக இருந்தாலும், சீதா தேவி இப்போது ஒரளவு நிம்மதியை உணர்வதாகக் கூறுகிறார். ஏனெனில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவருக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரம் குறைந்தபட்சம் இப்போதாவது அவருக்குத் தெரிய வந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் 2000ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி நிகழ்ந்தது. அன்று, சீதா தேவியின் கணவர் முனி லால், ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகப் பயணம் செய்துகொண்டிருந்தார். ரூபாரில் இருந்து அனந்த்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த வாகனம் 'பக்ரா கால்வாய்க்குள்' விழுந்தது.
இந்த விபத்தில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர். இதில், முனில் லால், ஓட்டுநர் தேஜ் ராம், சுர்ஜித் சிங், சுர்ஜித் சிங்கின் எட்டு வயது மகன் காலு ஆகியோர் இறந்தனர்.
விபத்து நிகழ்ந்து ஏறக்குறைய இரண்டரை தசாப்தங்கள் கடந்துவிட்டன. இந்தக் காலம் முழுவதும், விபத்து தொடர்பான எந்தத் தெளிவான ஆதாரமும் கண்டறியப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், தங்கள் அன்புக்கு உரியவர்களின் இறுதித் தடயங்களோ அல்லது உடற்பாகங்களோ எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் சமீபத்தில், மே 17, 2026 அன்று, ரூபாரை சேர்ந்த கமல்ப்ரீத் சைனி என்ற உள்ளூர் நீச்சல் வீரரும் அவரது குழுவினரும், 26 ஆண்டுகளுக்கு முன்பு பக்ரா கால்வாய்க்குள் விழுந்த 'மாருதி ஆம்னி' வேனை கண்டறிந்தனர்.
சைனியின் தலைமையின் கீழும், உள்ளூர் மக்களின் உதவியுடனும், பலத்த சேதமடைந்த அந்த ஆம்னி வேன் கால்வாயில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது. வாகனத்துடன் சேர்த்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, உயிரிழந்த அந்த நான்கு பேரின் எலும்புக்கூட்டு எச்சங்கள் சிலவும் மீட்கப்பட்டன.
இந்தக் கண்டுபிடிப்பு, சீதா தேவி, அவரது குடும்பத்தினர் மற்றும் விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்குப் பழைய உணர்வுபூர்வமான காயங்களை மீண்டும் கிளறிவிட்டது. அந்தத் துயரச் சம்பவத்தின் வலிமிகுந்த நினைவுகள் மீண்டும் அவர்களை ஆட்கொண்டன.
கிரத்பூர் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி ராகுல் சர்மா அளித்த தகவலின்படி, இந்த விபத்து அக்டோபர் 17, 2000 அன்று நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
கணவரைக் கண்டுபிடிக்க கடையை விற்ற மனைவி
சீதா தேவி, 26 ஆண்டுகளுக்கு முன்பு தான் இழந்த தனது கணவருக்காகப் பல ஆண்டுகளாகக் கண்ணீருடன் காத்திருந்தார். அக்டோபர் 17, 2000 அன்று, தனது கணவர் முனி லாலை கடைசியாகப் பார்த்தபொது, அவருக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் கடந்திருந்தன. அன்று முதல், எப்படியாவது அவர் வீட்டிற்குத் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அவர் தொடர்ந்து காத்திருந்தார்.
தற்போது, காணாமல் போன மாருதி ஆம்னி வேனும், மனித எச்சங்களும் பக்ரா கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பிறகு, தங்கள் குடும்பத்திற்கு இறுதியாகச் சற்று நிம்மதி கிடைத்து இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 26 ஆண்டுகள் காத்திருந்த பிறகு, இப்போது அவர்களால் முனி லாலுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய முடிகிறது.
மே 18, 2026 அன்று, முனி லாலின் மகன் தவிந்தர் குமார், கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதியை கிராத்பூர் சாஹிப்பில் கரைத்தார். எஞ்சியிருக்கும் இறுதிச் சடங்குகளை வரும் நாட்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அக்குடும்பத்தினர் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
முனி லாலின் மனைவி சீதா தேவிக்கு ஆறுதலும் ஆதரவும் அளிப்பதற்காக, உறவினர்களும் அண்டை வீட்டாரும் அவரது வீட்டிற்கு வருகை தந்து வருகின்றனர்.
தனது கணவரை நினைவுகூர்ந்த சீதா தேவி, "என் கணவர் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பவராக இருந்தார். எங்களுக்கென ஒரு கடையும் இருந்தது. 2000ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி, மதிய வேளையில் அவர் என்னிடம் இருந்து துணிகளை வாங்கிக்கொண்டு, மாலையில் கடையில் தயாரான பிறகு, ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிராத்பூர் சாஹித்திற்கு புறப்பட்டுச் சென்றார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "அவர் சென்ற குழுவினர் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு முன்பாகவே, எங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள 'நாகியான்' என்னும் இடத்தில், அவர்கள் பயணித்த வாகனம் பக்ரா கால்வாய்க்குள் விழுந்துவிட்டது. நாங்கள் அவர்களுக்காகக் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் திரும்பி வரவே இல்லை. அக்டோபர் 18ஆம் தேதி அவர்களைத் தேடினோம். பின்னர் மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அக்டோபர் 20 அன்றுதான், அவர்கள் பயணித்த ஆம்னி வேன் பக்ரா கால்வாய்க்குள் விழுந்துவிட்டது என்ற தகவல் எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால், அதற்கான எந்த ஆதாரத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை," என்று கூறினார்.
கால்வாய்க்குள் தேடுதல் மேற்கொள்வதற்காகப் பல்வேறு இடங்களில் இருந்து பல நீச்சல் வீரர்கள் (முக்குளிப்பவர்கள்) வந்ததாகவும், ஆனால் பல ஆண்டுகளாகத் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை என்றும் சீதா தேவி விளக்கினார்.
"நீச்சல் வீரர்கள் கால்வாய்க்குள் கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுவதும் தேடினர். ஆனால் அந்த வேனையோ அல்லது சடலங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினரும் தங்கள் அன்புக்கு உரியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகத் தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவழித்தனர். ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
விபத்திற்குப் பிந்தைய அந்தக் கடினமான ஆண்டுகள் குறித்துப் பேசுகையில், சீதா தேவி, "அந்தக் காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு வெறும் ஏழு அல்லது எட்டு வயதுதான் ஆகியிருந்தது. ஒரு நாள் அவர்களின் தந்தை திரும்பி வருவார் என்றே எப்போதும் அவர்களிடம் கூறி வந்தேன். அவருக்காகக் காத்திருப்பதை நான் நிறுத்தவே இல்லை," என்றார்.
"எங்கள் கடையைக்கூட நான் அடமானம் வைத்தேன். உறவினர்களின் உதவியுடன், எப்படியோ வீட்டுச் செலவுகளைச் சமாளித்தேன். பால் விற்றுத்தான் என் குழந்தைகளை வளர்த்தேன். என் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தபோது, அவர்களுடைய தந்தையை நினைத்து மிகவும் ஏங்கினேன். ஆனால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. ஏனெனில், அனைத்தும் எங்கள் கைகளை மீறிச் சென்றுவிட்டன."
முனி லாலின் மகன் தவிந்தர் குமாரும், தனது தந்தையைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். அந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்தஓது அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது.
"இந்த விபத்து நடந்தபோது எனக்கு சுமார் ஏழு வயதுதான் இருக்கும். எனக்கு விவரங்கள் எதுவும் தெளிவாக நினைவில்லை, ஆனால் ஒரு நாள் என் தந்தை திடீரென காணாமல் போய்விட்டார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது," என்று அவர் கூறினார்.
அதோடு, "அவர் எங்கே சென்றார் என்பது எங்களுக்கு ஒருபோதும் தெரியாமலே இருந்தது. ஒருவேளை என்றாவது ஒரு நாள் அவர் வீட்டிற்குத் திரும்பி வருவார் என்றே நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் வரவே இல்லை. இப்போது அந்த வாகனத்தையும் அவரது உடலின் எஞ்சிய பாகங்களையும் கண்டெடுத்த பிறகுதான், அவர் உயிருடன் இல்லை என்பதை நாங்கள் இறுதியாகத் தெரிந்துகொண்டோம்," என்றும் கூறினார் தவிந்தர்.
ஆம்னி வேன் மீட்கப்பட்டது எப்படி? அதில் என்ன கிடைத்தது?
மறைந்த முனி லாலின் மகனான தவிந்தர் குமாரின் கூற்றுப்படி, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேன் பக்ரா கால்வாய்க்குள் விழுந்துவிட்டதாக உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் நீண்ட காலத்திற்கு முன்பே நீச்சல் வீரரான கமல்ப்ரீத் சைனிக்கு தகவல் தெரிவித்து இருந்தனர்.
"சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, காணாமல் போன வேறொரு நபரைத் தேடுவதற்காக கமல்ப்ரீத் சைனி கால்வாய்க்குள் இறங்கியபோது, கால்வாய்க்குள் ஒரு வேன் இருப்பதைக் கவனித்தார். வெளியே வந்த பிறகு, அதைப் பற்றி எங்களிடம் தெரிவித்தார்," என்றார் தவிந்தர்.
மேலும் விளக்கிய அவர், "பின்னர் கமல்ப்ரீத் சைனி ஒரு கேமராவுடன் மீண்டும் கால்வாய்க்குள் சென்று, அந்த வாகனத்தை முழுதாக வீடியோ பதிவு செய்தார். அதைப் பார்த்த பிறகு, 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் காணாமல் போன அதே ஆம்னி வேன்தான் இது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்," என்று விவரித்தார்.
பக்ரா கால்வாயில் இருந்து அந்த வேனை வெளியே எடுக்கும் பணி, உள்ளூர் நீச்சல் வீரரான கமல்ப்ரீத் சிங் சைனி மற்றும் உள்ளூர் மக்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
அது மீட்கப்பட்டபோது அந்த இடத்தில் நேரில் இருந்த 'ஹேப்பி சைனி' என்ற நபர், அந்த மீட்புப் பணி குறித்து பிபிசியிடம் விளக்கினார். மே 17ஆம் தேதியன்று அந்த வேனை கால்வாயில் இருந்து வெளியே எடுக்கலாம் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அதனால், கமல்ப்ரீத் சைனியின் நீச்சல் குழுவினரும், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் அன்று கால்வாய்க் கரையில் திரண்டிருந்தனர்.
"காலை சுமார் 9 மணியளவில், கமல்ப்ரீத் சைனி கால்வாய்க்குள் இறங்கி, அந்த வேனுடன் ஒரு கயிற்றைக் கட்டினார். கால்வாய்க் கரையில் நின்றிருந்த மக்கள் அந்தக் கயிற்றைப் பயன்படுத்தி வேனை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை," என்று ஹேப்பி சைனி நடந்ததை விவரித்தார்.
"அதன் பிறகு, ஒரு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன் உதவியுடன், அந்த வேன் இறுதியாக கால்வாயில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, 26 ஆண்டுகளாக நீருக்கடியில் இருந்ததால் அந்த வேன் மிகவும் சேதமடைந்து இருந்தது. இருப்பினும், அதுவொரு 'மாருதி ஆம்னி வேன்' என்பதைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.
"அதைக் கவனமாகச் சோதித்தபோது, அதற்குள் சில எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. துணித் துண்டுகளும் மீட்கப்பட்டன. அவற்றில் ஒன்று, ஒரு குழந்தையின் பள்ளிச் சீருடையின் பகுதியாகத் தெரிந்தது," என்று ஹேப்பி சைனி கூறினார்.
அந்த வேனுக்குள் நீண்ட இருக்கையும் கண்டெடுக்கபட்டதாக அவர் மேலும் விளக்கினார். பல ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய்க்குள் விழுந்த அதே வாகனம்தான் இது என்பதை உறுதிப்படுத்த அந்த இருக்கை உதவியது. அந்த வேனை மீட்பதற்கான முழு நடவடிக்கையையும் முடிக்க சுமார் மூன்று முதல் நான்கு மணிநேரம் எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை அளித்த தகவல்கள்
கிராத்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராகுல் சர்மாவின் கூற்றுப்படி, சுர்ஜித் சிங்கின் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், 2000ஆம் ஆண்டில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு 'தினசரி நாட்குறிப்பு அறிக்கை' பதிவு செய்யப்பட்டது.
அதில், அந்த வேன் கால்வாய்க்குள் விழுந்திருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக குடும்பத்தினர் குறிப்பிட்டு இருந்ததாக ராகுல் சர்மா தெரிவித்தார். அந்தக் காலகட்டத்தில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலு, அந்த வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை.
அவர் மேலும் கூறுகையில், "இறுதியாக மே 17ஆம் தேதி அந்த வேன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது அதன் உரிமையாளரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்திற்குள் இருந்து அதன் பதிவுச் சான்றிதழும் மீட்கப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் அதில் இருந்த பெரும்பாலான எண்களும் எழுத்துகளும் மங்கிவிட்டன அல்லது அழிந்துவிட்டன" என்றார்.
நீச்சல் வீரரான கமல்ப்ரீத் சைனி, சுயாதீனமாகச் செயல்படுவர் என்றும், கால்வாய்களிலும் ஆறுகளிலும் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உதவுவதற்காக அறியப்படுபவர் என்றும் ராகுல் சர்மா விளக்கினார்.
அவர் அளித்த தகவலின்படி, நீண்ட காலமாகக் காணாமல் போயிருந்த இந்த வாகனம் குறித்த விவரம் கமல்ப்ரீத் சைனிக்கு தெரிய வந்தபோது அவர் அதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
"தகவல் கிடைத்ததும், கால்வாய்க்குள் இறங்கி அந்த வேனை வெளியே கொண்டு வரும் தேடுதல் பணியை மேற்கொள்ள அவருக்கு நாங்கள் அனுமதி அளித்தோம்" என்று ராகுல் சர்மா கூறினார்.
இந்த விபத்து 26 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அப்போது நீச்சல் வீரர்களிடம் நவீன தொழில்நுட்பமோ அல்லது மேம்பட்ட நீருக்கடியில் தேடும் கருவிகளோ பயன்பாட்டில் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அக்காலகட்டத்தில் அவர்களால் அந்த வேனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் அவர்.
ஆனால் இப்போது, கமல்ப்ரீத் சைன் பயன்படுத்திய நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட நீருகட்டியில் தேடும் கருவிகளின் உதவியால், இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்த வேனை இறுதியாகக் கண்டுபிடிக்க முடிந்தது என்று ராகுல் சர்மா விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு