முதலாளிகளை குறிவைக்கும் 'பாஸ் ஸ்கேம்': ஒரு மெசேஜ் மூலம் ரூ.1.5 கோடியை பறித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராக்ஸி கட்கேகர் சாரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஒரு மெசேஜ், ஒரு ஜிப் ஃபைல்... சில மணி நேரத்திலேயே நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 1.5 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் காவல்துறை இந்த குற்றத்தின் பின்னணியைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் நிறுவன முதலாளியின் அடையாளத்தைப் பயன்படுத்தி, ஊழியர்களை நிறுவனத்தின் பணத்தை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றச் செய்துள்ளனர்.
இந்த வகை மோசடியில், நிறுவன முதலாளியின் பெயர் மற்றும் சுயவிவரப் படத்தைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் கணக்காளர் அல்லது நிதித் துறை ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
அதில், குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாகப் பணத்தை அனுப்புமாறு உத்தரவிடப்படுகிறது. இத்தகைய சைபர் மோசடிகள் 'பாஸ் ஸ்கேம்' என்று அழைக்கப்படுகின்றன.
அந்த குறுஞ்செய்தி, முதலாளியின் உண்மையான எண்ணிலிருந்து வரவில்லை என்றாலும், ஊழியரின் போனில் அது முதலாளியின் பெயரிலேயே தோன்றும். இதனால் ஊழியர் குறுஞ்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் பணத்தை அனுப்பிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.
ஆமதாபாத் சைபர் குற்றப்பிரிவின் விசாரணையில், போலி சிம் கார்டுகள், ஓ.டி.பி, வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் மால்வேர்களைப் பயன்படுத்தும் ஒரு திட்டமிட்ட குழு இந்த மோசடியின் பின்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காவல்துறையினர் இந்தியாவின் 26 மாநிலங்களில் பதிவான 251 புகார்களை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 4,500 சிம் கார்டுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் மூன்று 'பாஸ் ஸ்கேம்' புகார்களும் அடங்கும்.
இந்த மோசடி நெட்வொர்க்குக்கு இந்தியா தவிர சீனா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய இடங்களுடனும் தொடர்புகள் இருப்பதற்கான ஆரம்பக்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
'பாஸ் ஸ்கேம்' வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
ஆமதாபாத் இணையக் குற்றப்பிரிவு கிரைம் காவல்துறையில் பிரவீன் நாகஜிபாய் பாவ்லியா அளித்த புகாரின்படி, 2026 ஜூன் 23 அன்று தெரியாத ஒரு மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது.
அந்த செய்தியை அனுப்பியவர், இந்திய ரிசர்வ் வங்கியின் அபாயக் கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 'வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனைகள்' நடந்துள்ளன என்றும், அதனால் கணக்கு முடக்கப்படலாம் என்றும் கூறிய அந்த வாட்ஸ்அப் செய்தியுடன் ஜிப் கோப்பு ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பிரவீன்பாய், "கடந்த ஆறு மாதங்களாக எனக்கு தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆரம்பத்தில் நான் இதை கவனிக்கவில்லை. ஆனால், இதுபோன்ற இணைப்புகள் தொடர்ந்து வந்ததால், இவை உண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பிய செய்திகளாக இருக்கலாம் என்று நினைத்தேன்" என்று தெரிவித்தார்.
"அதனால், எனது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கணக்காளருக்கு அந்த லிங்கை அனுப்பி, வங்கிக் கணக்கு முடக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த கூடுதல் தகவல்களைச் சேகரிக்குமாறு கூறினேன்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "கணக்காளர் தனது கணினியில் அந்த கோப்பைத் திறந்து பதிவிறக்கம் செய்தார். பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், ஹேக்கர் எனது கணினியிலிருந்து எனது வாட்ஸ்அப் தொடர்புகள் மற்றும் செய்திகளைப் பார்க்கத் தொடங்கினார்."
பிரவீன்பாய் உதய்பூரில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
அவரது கூற்றுப்படி, அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் ஹேக்கருக்கும் தெரிந்திருந்தது. மறுநாள் காலையில், ஹேக்கர் பிரவீன்பாயின் பெயரில் அவருடைய கணக்காளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்திற்கு உடனடியாக 1.5 கோடி ரூபாயை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
கணக்காளரும் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் 1.5 கோடி ரூபாய் பணத்தை மாற்றினார்.
இந்தப் பரிவர்த்தனை குறித்துத் தெரிந்ததும், பிரவீன்பாய் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, 1930 உதவி எண் மூலம் புகார் பதிவு செய்யப்பட்டு, மோசடி செய்யப்பட்ட தொகையில் 1 கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 700 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சுமார் ரூ. 25 லட்சம் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டது.
இந்த மோசடியில் தொடர்புடையதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஈரம் அலி பியாடா மற்றும் இன்ஜாமூல் மொல்லா ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கறிஞர்கள் அல்லது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவர்களின் தரப்பு விளக்கத்தைப் பெற பிபிசி முயன்றது. ஆனால், செய்தி வெளியாகும் வரை அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களின் கருத்து கிடைக்கும் பட்சத்தில், அதனை இந்தச் செய்தியில் அதைப் புதுப்பிப்போம்.
'பாஸ் ஸ்கேம்' எவ்வாறு நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்த மோசடி எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, ஆமதாபாத் சைபர் குற்றப் பிரிவின் டிஎஸ்பி லவினா சின்ஹாவிடம் பிபிசி பேசியது.
அவர் கூறுகையில், சைபர் குற்றவாளிகள் முதலில் ஆர்பிஐ அல்லது ஏதேனும் அரசு நிறுவனத்தின் அதிகாரியைப் போல நடித்து, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இயக்குநர் அல்லது ஊழியருக்கு வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் ஒரு ஜிப் (ZIP) ஃபைலை அனுப்புகிறார்கள்.
"அந்த ஜிப் கோப்பில் .exe அல்லது .dll போன்ற தீங்கிழைக்கும் மென்பொருள் இருக்கும். இத்தகைய ஃபைலை நிறுவனத்தின் கணினி அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்அப் வெப் மூலம் திறந்தால், குற்றவாளிகளால் அந்த வாட்ஸ்அப் வெப் கணக்கை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்."
"பின்னர், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது இயக்குநரின் அடையாளத்தைப் பயன்படுத்தி, ஒரு சுயவிவரப் புகைப்படத்தை வைத்து, முதலாளியின் பெயரில் தங்கள் மொபைல் எண்ணைச் சேமிக்கிறார்கள்."
"எண்ணைச் சேமித்த பிறகு, நிறுவனத்தின் கணக்கு அல்லது நிதித் துறை ஊழியருக்கு உடனடியாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்யுமாறு ஒரு செய்தி அனுப்பப்படுகிறது. இந்தச் செயல்பாட்டில் போலி சிம் கார்டுகளும் ஓடிபி-களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன."
காவல்துறையின் கூற்றுப்படி, "வாடிக்கையாளர்களின் பெயரில் பெறப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள மொபைல் எண்களை, அவர்களுக்குத் தெரியாமலேயே செயல்படுத்துவதன் மூலம் போலி சிம் கார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிம் (SIM) கார்டுகள் பல்வேறு தொலைபேசிகளில் பயன்படுத்தப்பட்டன; அவற்றின் எண் விவரம் இணையக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்கைச் செயல்படுத்தியபோது, அதற்கான ஒருமுறை கடவுச்சொல் ஒரு போலி சிம் கார்டுக்கு வந்துள்ளது; அந்தச் சிம் கார்டு பின்னர் இணையக் குற்றவாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அந்தக் குற்றவாளிகள் வாட்ஸ்அப் கணக்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உதவியுள்ளது."
ஆமதாபாத் காவல்துறை விசாரணையின்போது, இந்த வழக்கில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் ஒருவர் இணைய மோசடி தொடர்பாகக் காவல்துறையால் விசாரிக்கப்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நபர் அவர்களுக்கு மொபைல் எண்கள், போலி சிம் கார்டுகள் மற்றும் வாட்ஸ்அப் கட்டுப்பாடு ஆகியவற்றில் உதவி செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டாவது நபர், ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தவர்.
அந்த நபர், வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் கைரேகைகளையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயலிகளையும் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் பெயரில் சிம் கார்டுகளைப் பெற்று, அவர்களின் அனுமதியின்றி மற்ற சிம்களில் மொபைல் எண்களைச் செயல்படுத்தினார் என்பது காவல்துறை குற்றம்சாட்டு.
சேவையாக இணையக் குற்றம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இணையக் குற்ற உலகில், இனி ஒவ்வொரு குற்றவாளியும் முழுமையான தொழில்நுட்ப உள்கட்டமைப்பைத் தாங்களாகவே உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
யாரோ ஒருவர் போலி சிம் கார்டை வழங்குகிறார், மற்றொருவர் ஓடிபி அனுப்புகிறார், இன்னொருவர் வாட்ஸ்அப் கணக்கை உருவாக்குகிறார், வேறு ஒருவர் பாதிக்கப்பட்டவரிடம் பேசிப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய வைக்கிறார்.
தயார் நிலையில் உள்ள இதுபோன்ற டிஜிட்டல் சேவைகள், குழுக்கள் மற்றும் ஆதாரங்களை ஆமதாபாத் காவல்துறை தனது செய்திக்குறிப்பில் 'சைபர்கிரைம்-அஸ்-ஏ-சர்வீஸ்' (Cybercrime as a Service - CaaS) அதாவது சேவையாக வழங்கப்படும் இணையக் குற்றம் என்பதற்கான உதாரணங்களாகக் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, இணையக் குற்றம் செய்வதற்குத் தேவையான டிஜிட்டல் கருவிகளும் சேவைகளும் உடனடியாகக் கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன.
இந்த வழக்கு விசாரணையின் போது கண்டறியப்பட்ட சுமார் 4,500 சிம் கார்டுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஆமதாபாத் இணையக் குற்றப் பிரிவு காவல்துறை, 26 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 251 என்.ஆர்.சி.பி புகார்களை விசாரித்தது.
இந்தப் புகார்களில் 194 ஆன்லைன் நிதி மோசடிகள், மூன்று 'பாஸ் ஸ்கேம்' வழக்குகள் மற்றும் 29 ஆன்லைன் மற்றும் சமூக ஊடகம் தொடர்பான குற்றங்கள் அடங்கும்.
இதுதவிர, பிற வகையான சைபர் குற்றங்கள், ஹேக்கிங், ஆபாச உள்ளடக்கம் மற்றும் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான புகார்களும் இந்தத் தரவில் சேர்க்கப்பட்டிருந்தன.
விசாரணையின் போது மால்வேர் அடங்கிய 10,000-க்கும் மேற்பட்ட சாதனங்கள் கண்டறியப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஏழு மொபைல் போன்கள் மற்றும் ஒரு ரவுட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களில் உள்ள வாட்ஸ்அப் சாட்கள், குழுக்கள், மொபைல் எண்கள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், மற்ற குற்றவாளிகள் மற்றும் இந்த நெட்வொர்க்கின் முக்கிய சூத்திரதாரிகளைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆமதாபாத் சைபர் க்ரைம் பிரிவு மற்றும் I4C (இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்) ஆகியவற்றின் தொழில்நுட்ப மற்றும் வலையமைப்புப் பகுப்பாய்வின்படி, இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட மால்வேர் சீனாவுடன் தொடர்புடைய இணையக் குற்றவாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
'பாஸ் ஸ்கேம்' மோசடியில் இருந்து தப்புவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இத்தகைய சைபர் மோசடிகளில் இருந்து தப்பிக்க ஆமதாபாத் காவல்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது:
அடையாளம் தெரியாத மொபைல் எண்கள் அல்லது மின்னஞ்சல்களில் இருந்து வரும் ZIP, .exe, .dll அல்லது .apk கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம்.
இது குறித்து டிஎஸ்பி சின்ஹா கூறுகையில் "வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பணத்தைப் பரிமாற்றம் செய்யச் சொல்லி மெசேஜ் வந்தால், அதை தனிப்பட்ட முறையில் சரிபார்க்காமல் பணத்தை அனுப்ப வேண்டாம்."
"நிறுவனத்தின் முதலாளி அல்லது தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து உடனடியாகப் பணம் செலுத்துமாறு மெசேஜ் வந்தால், அவர்களின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண், வீடியோ கால் அல்லது அவர்களுக்குத் தெரிந்த மாற்று எண் மூலம் நேரில் தொடர்புகொண்டு உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும்."
"வாட்ஸ்அப் உடன் இணைந்துள்ள சாதனங்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். அடையாளம் தெரியாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால், உடனடியாக லாக்-அவுட் செய்து வெளியேறவும். வாட்ஸ்அப்பில் இரு படிநிலை சரிபார்ப்பை எப்போதும் ஆன் செய்து வைக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்துகிறார்.
நிறுவனங்கள், அடையாளம் தெரியாத .exe மற்றும் .dll கோப்புகளைத் தடைசெய்யும் மென்பொருள் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும். விண்டோஸ், வைரஸ் தடுப்பு மற்றும் எண்ட்பாயிண்ட் பாதுகாப்பை புதுப்பித்த நிலையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற மோசடிகளில் விரைவாகச் செயல்படுவது மிக முக்கியம். ஏதேனும் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்குமாறு ஆமதாபாத் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரவீன்பாய் வழக்கில் மோசடி நடந்திருப்பது தெரிந்தவுடனேயே புகார் அளிக்கப்பட்டதால், காவல்துறையின் உடனடி நடவடிக்கையினால் கணிசமான தொகையை மீட்க முடிந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































