நெதன்யாகுவை அப்புறப்படுத்த கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இஸ்ரேலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தோற்கடிப்பதற்காக, இரண்டு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு புதிய கட்சியை உருவாக்கியுள்ளன.
முன்னாள் வலதுசாரி பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் மையவாத எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட் ஆகியோர் தங்களது கட்சிகளை இணைத்து 'யாச்சாட்' என்ற புதிய கட்சியை உருவாக்குவதாக அறிவித்துள்ளனர். 'யாச்சாட்' என்பதற்கு 'ஒன்றாக' என்று பொருள்.
இஸ்ரேலிய செய்தித்தாள்களில் ஏப்ரல் 27 அன்று இந்தச் செய்தி தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது.
இந்த முடிவின் மூலம் 'யாச்சாட்' மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குப் போட்டியாக பென்னட் முதன்மைப் போட்டியாளராக மாறியுள்ளார்.
இஸ்ரேலிய ஊடகங்கள் பலவும் நெதன்யாகுவை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்று கூறுகின்றன. ஏறக்குறைய அனைத்துப் பெரிய நாளிதழ்களிலும் பென்னட் மற்றும் லாபிட் ஆகியோரின் புகைப்படங்கள் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்தன.
இதற்கு முன்பும் 2021-இல் நெதன்யாகுவை ஆட்சி, அதிகாரத்திலிருந்து அகற்ற பென்னட் மற்றும் லாபிட் கைகோர்த்தனர். இருப்பினும், நெதன்யாகுவை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அவர்களின் அந்தப் பலவீனமான கூட்டணி விரைவில் சிதைந்து போனது.
இஸ்ரேலிய ஊடகங்களில் என்ன சொல்லப்படுகிறது?

பிரபலமான மையவாத சேனலான 12 நியூஸ், பென்னட்டின் கூற்றை மேற்கோள் காட்டி, "நாங்கள் ஜியோனிசக் கட்சிகளை மட்டுமே நம்புவோம். அரபு கட்சிகள் ஜியோனிசக் கட்சிகள் அல்ல, எனவே நாங்கள் அவர்களை நம்ப மாட்டோம்." என்று கூறியுள்ளது.
சமீபத்திய மாதங்களில், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் ஊடக விவாதங்களில் பாலஸ்தீனக் கட்சிகளை கூட்டணி அரசுகளில் இருந்து வெளியேற்றுவது ஒரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
தாராளவாத நாளிதழான 'ஹாரெட்ஸ்' கருத்துப்படி, இஸ்ரேலின் அடுத்த தேர்தல் செயல்முறை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்த நாளிதழ், "சட்டப்படி தேர்தல் சரியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு நடக்க வேண்டும், ஆனால் தேர்தல் செயல்முறை இன்றே தொடங்கிவிட்டது." என்று எழுதியுள்ளது.
நஃப்தாலி பென்னட் மற்றும் யாயர் லாபிட் ஆகியோர் முதலில் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு குறைவு என்று கூறியிருந்தனர், ஆனால் பின்னர் "யதார்த்தச் சூழலின் அழுத்தம்" காரணமாகத் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக அந்த செய்தி கூறுகிறது.
ஹாரெட்ஸ் செய்தியின்படி, பென்னட் தனது தலைமையிலான விரைவான இணைப்பிற்கு ஆதரவாகப் பேசினார். "வலதுசாரிகளிடமிருந்து சாத்தியமான ஒவ்வொரு வாக்கையும் கொண்டு வர வேண்டும்" என்று அவர் கூறினார். "நான் வெற்றி பெறவே வந்துள்ளேன்" என்று பென்னட் கூறினார்.
அதே நேரத்தில், இது மிகவும் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு என்று லாபிட் முதலில் கருதினார். பெஞ்சமின் நெதன்யாகு தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதையும், அரசியல் நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதையும் அவர் பொறுத்திருந்து பார்க்க விரும்பினார்.
சாத்தியமான இந்தக் கூட்டணி இப்போது காடி ஐசன்கோட் எடுக்கும் முடிவுக்காகக் காத்திருப்பதாக ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது. அவர் இந்தக் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
வலதுசாரி மற்றும் நெதன்யாகு ஆதரவு ஊடகமான சேனல் 14 நியூஸ், இந்த இணைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், இது லாபிட் மற்றும் பென்னட் ஆகியோரின் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு முயற்சி என்று கூறியுள்ளது. ஒரு விமர்சகர், கருத்துக்கணிப்புகளின்படி அவர்களது கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த வாதம் தற்போதைய முக்கியக் கருத்துக்கணிப்புகளுக்கு முரணாக உள்ளது. இந்தக் கருத்துக்கணிப்புகளில் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு பென்னட்டின் கட்சி மிகப்பெரிய போட்டியாளராகக் காட்டப்பட்டுள்ளது.
பென்னட்டின் பழைய கருத்துகளால் சர்ச்சை

பட மூலாதாரம், Amir Levy/Getty Images
இந்த நடவடிக்கைக்குப் பிறகு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன. பென்னட்டின் பழைய கருத்துகளை பயனர்கள் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். அந்த கருத்துகளில் லாபிட் பிரதமராகப் போட்டியிடுவதை தான் ஆதரிக்கப் போவதில்லை என்றும், அது தனது கொள்கைகளுக்கு எதிரானது என்றும் பென்னட் கூறியிருந்தார்.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், யாரும் உங்களுடன் உட்கார விரும்ப மாட்டார்கள் என்று லாபிட்டிடம் பென்னட் கூறுவது தெரிகிறது. அந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர், "அவர் மீண்டும் இவ்வாறு பொய் சொல்வதைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது" என்று எழுதியுள்ளார். மேலும், "அவரிடம் திறமை இருந்தது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில் பென்னட்டின் பழைய கருத்துகளின் தொகுப்பு பகிரப்பட்டுள்ளது. அதில் அவர் தன்னை ஒரு வலதுசாரித் தலைவர் என்று கூறிக்கொண்டார் மற்றும் "லாபிட்டை பிரதமராக விடமாட்டேன்" என்றும் கூறினார்.
பென்னட் இதற்கு முன்பு தீவிர தேசியவாத 'நியூ ரைட்' கட்சியின் இணைத் தலைவராகவும், அதற்கு முன்பு 'ஜூயிஷ் ஹோம்' கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































