50 பந்துகள் மீதமிருக்க 295 ரன் இலக்கை எளிதாக எட்டிய இந்தியா - வெற்றிக்கு வித்திட்ட 3 பேர் யார்?

பட மூலாதாரம், R.Satish BABU / AFP via Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.
திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் சதமடித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜான் கேம்பெல் மற்றும் அமிர் ஜாங்கோ இருவரும் அரைசதம் அடித்தார்கள்.
பவர்பிளேவில் (முதல் 10 ஓவர்கள்) அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கம் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ரன்ரேட் குறைந்தது. இருந்தாலும் கடைசி 10 ஓவர்களில் மீண்டும் ரன் விகிதத்தை அதிகப்படுத்தி 295 ரன்கள் எடுத்தது அந்த அணி.
அந்த இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 50 பந்துகள் மீதம் வைத்து பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த கோலி, கில், குல்தீப் ஆகியோரின் பங்களிப்பு பற்றி அலசுவோம்.
மிடில் ஓவர்களில் மாற்றம் ஏற்படுத்திய குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், R.Satish BABU / AFP via Getty Images
வழக்கமாக டி20 போட்டிகளில் அதிக ஆல்ரவுண்டர்களை பிரதானப்படுத்தும் தற்போதைய இந்திய அணி, ஒருநாள் போட்டிகளிலும் தற்போது அதே திட்டத்தோடு களமிறங்கியது.
பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ் ஆகிய மூவர் மட்டுமே பிரதான பௌலர்கள். தவிர ரவீந்திர ஜடேஜா, நித்திஷ் குமார் ரெட்டி என இரு ஆல்ரவுண்டர்கள் மற்றும் ஆஃப் ஸ்பின் வீசக்கூடிய நமன் திர் ஆகியோர் மற்ற பௌலிங் ஆப்ஷன்களாக இருந்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இந்த இந்திய அணியில் இல்லை. அதனால் இந்திய அணியின், பவர்பிளே பந்துவீச்சு சற்றே பலவீனமாக இருந்தது.
அதைப் பயன்படுத்தி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் - ஜான் கேம்பெல் கூட்டணி நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய பந்தில் பந்துவீசிய நித்திஷ் குமார் ரெட்டி தன் முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் உள்பட 18 ரன்கள் விட்டுக்கொடுத்தார். குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஓவர்களிலும் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்த ஜடேஜாவை கேப்டன் கில் கொண்டுவர, அவரது முதல் ஓவரிலும் 16 ரன்கள் எடுக்கப்பட்டன. அதனால், முதல் 10 ஓவர்களில் விக்கெட்டே இழக்காமல் 85 ரன்கள் எடுத்தது அந்த அணி.
42 பந்துகளில் க்ரீவ்ஸ் அரைசதம் கடக்க, கேம்பெல் 49 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தைக் கடந்தார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அந்த தொடக்க ஜோடியை 20வது ஓவரில் பிரித்தார் குல்தீப் யாதவ். தொடர்ந்து கேம்பெலுக்கு வைட் லைனில் பந்துவீசிக்கொண்டிருந்த குல்தீப், அந்த ஓவரின் 2வது பந்தை ஃபுல் லென்த்தில் வீச கேம்பெல் அடித்த ஸ்வீப் ஷாட், சரியாகப் படாமல் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் ஆனது. 62 ரன்கள் எடுத்து வெளியேறினார் கேம்பெல். முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 19.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது.

பட மூலாதாரம், R.Satish BABU / AFP via Getty Images
முதல் விக்கெட்டை வீழ்த்திய குல்தீப், மிடில் ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரன்ரேட்டை வெகுவாகக் குறைத்ததோடு, மேலும் பெரிய பார்ட்னர்ஷிப்கள் உருவாகாமலும் பார்த்துக்கொண்டார்.
101 ரன்கள் எடுத்திருந்த க்ரீவ்ஸ், கேப்டன் ஷாய் ஹோப், ஜெவெல் ஆண்ட்ரூ ஆகியோரையும் வெளியேற்றிய குல்தீப், 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்தப் போட்டியில் பந்துவீசிய 12 பந்துவீச்சாளர்களில் சிக்கனமாகப் பந்துவீசியவர் குல்தீப் தான். தன்னுடைய இடது கை லெக் ஸ்பின் பந்துவீச்சாலும், மாற்றிய வேரியேஷன்களாலும் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் அவர்.
ஒருநாள் போட்டிகளில் 12வது முறையாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் குல்தீப். அவர் பந்துவீச வந்தபோது மேற்கிந்திய தீவுகள் அணியின் ரன்ரேட் 7.13 ஆக இருந்தது. 44வது ஓவரில் அவருடைய ஸ்பெல் முடிந்தபோது அது 5.61ஆகக் குறைந்தது.
குல்தீப் யாதவின் பந்துவீச்சு பற்றி போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் கில், "குல்தீப் போன்ற ஒரு வீரர், மிடில் ஓவர்களில் நன்றாகப் பந்துவீசும்போது அது சாதகமாக அமையும். அவர் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். அவர்களின் தொடக்கக் ஜோடியால் நாங்கள் சற்று பின்னடைவைச் சந்தித்தோம், ஆனால் குல்தீப் எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்" என்று கூறினார்.
இப்படி ஆட்டத்தில் மாற்றம் ஏற்படுத்திய பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சிறப்பான தொடக்கம் கொடுத்த கில்

பட மூலாதாரம், R.Satish BABU / AFP via Getty Images
ஒரு பெரிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா - சுப்மன் கில் கூட்டணி நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ரோஹித் 32 ரன்கள் எடுத்து வெளியேறியிருந்தாலும், கில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே அவர் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்து தன் ஸ்டிரைக் ரேட்டை சீராக வைத்திருந்தார். அதனால் இந்தியாவின் ரன்ரேட்டும் நல்ல நிலையில் இருந்தது.
கில் அதீத கட்டுப்பாட்டோடு தன்னுடைய இன்னிங்ஸைக் கட்டமைத்தார். கிரிக்பஸ் தரவின்படி 108 பந்துகள் சந்தித்த கில், ஆடியது ஒரேயொரு ஃபால்ஸ் ஷாட் (false shot) மட்டுமே. ஃபால்ஸ் ஷாட் தரவுகளில் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த செயல்பாடு இதுதான். அவ்வளவு உறுதியாக இருந்தது அவருடைய ஆட்டம். 49 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 96 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.
இது ஒருநாள் போட்டிகளில் கில் அடிக்கும் 10வது சதம். தன்னுடைய 67வது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லைக் கடந்திருக்கிறார் கில். இதை எட்டிய மூன்றாவது அதிவேக வீரர் இவர். இந்த ஆண்டு விளையாடிய 9 இன்னிங்ஸ்களில் ஏழில் அரைசதம் கடந்திருக்கிறார் கில்.
அவரும் கோலியும் இணைந்து ஒரு மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். ஒருபக்கம் கில் நிலைத்து நின்று ஆடியதால் கோலியால் நெருக்கடி இல்லாமல் அதிரடியாக ஆட முடிந்தது. இந்தக் கூட்டணி 2வது விக்கெட்டுக்கு 132 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தது.
கில்லோடு விளையாடியது பற்றி போட்டிக்குப் பின் பேசிய விராட் கோலி, "அவரைப் போன்ற ஒரு வீரருடன் விளையாடும் போது, ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் அல்ல. நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விஷயங்களைப் பேசிக்கொள்ளலாம். ஆனால் அவரிடம் அதிகமாக எதுவும் பேச வேண்டிய அவசியம் இருக்காது. உலக தரம் வாய்ந்த சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் திகழ்கிறார்" என்று கூறினார்.
சாதனை இன்னிங்ஸை அரங்கேற்றிய விராட் கோலி

பட மூலாதாரம், ANI
ஒருநாள் போட்டிகள் என்று வந்தாலே விராட் கோலி தன்னுடைய மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவார். அதுவும் சேஸிங் என்று வந்துவிட்டால் அவருடைய ஆட்டம் அடுத்த கட்டத்தை அடைந்துவிடும். இந்தப் போட்டியிலும் கோலி அதையே செய்தார். சேஸிங்கின்போது இன்னொரு சதம் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் அவர்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி, சமீபமாக தன்னுடைய ஆட்டத்தில் சிறு மாற்றம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பெரிய ஷாட்கள் ஆடுகிறார். முன்பை விட அதிரடியாக விளையாடுகிறார். திருவனந்தபுரத்தில் அதுவே நடந்தது.
இந்த இன்னிங்ஸில் 88 பந்துகளை சந்தித்த கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதில் 10 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடக்கம். ஒரு ஒருநாள் இன்னிங்ஸில் கோலி அதிக சிக்ஸர்கள் அடித்தது இந்தப் போட்டியில் தான். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 2023-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் 8 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரின் பந்துவீச்சையும் பாரபட்சம் பார்க்காமல் அடித்து நொறுக்கினார் கோலி. அதிலும் குறிப்பாக அல்சாரி ஜோசப் பந்துவீச்சிலேயே பெரும் பகுதி ரன்களை எடுத்தார். அவர் வீசிய 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார் கோலி.
40 பந்துகளில் அரைசதம் கடந்த கோலி, 74 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இந்த இன்னிங்ஸில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார் அவர். தன்னுடைய 55வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்த கோலி, ஒருநாள் போட்டிகளில் 15000 ரன்களையும் கடந்தார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு 15000 ஒருநாள் ரன்களைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அவர்.

பட மூலாதாரம், R.Satish BABU / AFP via Getty Images
அதுமட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளில் ஒரு நாட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார் கோலி. கிரிக்பஸ் தரவுகளின்படி இதுவரை இந்தியாவில் விளையாடிய 128 இன்னிங்ஸ்களில் அவர் 7006 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்தியாவில் 160 இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கும் சச்சின் 6976 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
"மிகச்சிறந்த கலைஞர்களிடம் இருந்து நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டீர்கள் என்று நினைக்கும்போதெல்லாம், அவர்கள் தங்களின் மகத்துவத்தின் மற்றொரு புதிய பரிமாணத்தை உங்களுக்குக் காட்டுவார்கள். அதைத்தான் கோலி இன்றிரவு செய்துள்ளார்." என்று கோலியின் இந்த இன்னிங்ஸ் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே.
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் "விராட் கோலியின் சகாப்தம் நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































