"கட்சி நிதி" குற்றச்சாட்டு, கையால் சைகை: மரபுகளை மீறினாரா முதல்வர் விஜய்?

தமிழ்நாடு, விஜய். உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை

பட மூலாதாரம், TamilNadu Assembly

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், கட்சி நிதி என்று குற்றம்சாட்டியதும் கைகளால் சைகை காட்டியதும் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முதல்வர் ஆதாரமின்றிப் பேசுவதாகக் குற்றம்சாட்டும் திமுக, முதல்வரின் பேச்சும் செயலும் சட்டப்பேரவை மரபுகளை அப்பட்டமாக மீறியது என்கிறது.

ஆனால் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் கூறியதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகவும், சட்டப்பேரவையில் முதல்வர் நகைச்சுவையாகப் பேசியதை பெரும் குற்றமாகச் சித்தரிக்க திமுக முயற்சி செய்வதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் விஜய் பேசியதும், பிற கட்சிகளின் எதிர்வினைகளும்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த 18 ஆம் தேதியிலிருந்து துவங்கியது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அதில் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திமுக, அதிமுக உறுப்பினர்கள் பலரும் பேசினர். இதற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பேசினார்.

அவர் பேசுகையில், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 40 நாட்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளைப் பட்டியலிட்டார். அதன்பின் திமுக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து பல விஷயங்களை அவர் தனது உரையில் குறிப்பிட்டார். திமுக ஆட்சியின்போது, தமிழக சட்டப்பேரவையில் குடியரசுத்தலைவர் கலந்து கொண்ட கருணாநிதி படத்திறப்புவிழாவின்போது இரு முறை தேசியகீதம் பாடப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பினார்.

திமுகவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப்பேசிய முதல்வர் விஜய், "அவர்களுடைய தயவில்தான் ஆட்சி நடக்கிறது" என்று கூறுவதாக குற்றம் சாட்டியதுடன், மக்களின் ஆதரவில்தான் ஆட்சி நடக்கிறது என்றார். திமுக கூட்டணியிலிருந்து வந்த கட்சிகள், தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை சுதந்திரமாகத்தான் எடுத்தார்கள் என்றும் அவர் பேசினார். கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களிக்க திமுக மறுத்ததாகவும் அவர் குறைகூறினார்.

தமிழ்நாடு, விஜய். உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை

பட மூலாதாரம், TamilNadu Assembly

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடை பிடிக்கவிரும்பவில்லை என்ற அவர், மத்திய அரசுடனான அரசியல் வேறு, நிர்வாகத் தொடர்புகள் வேறு என்று கூறினார். கடந்த காலங்களில் "கட்சி நிதி" (பார்ட்டி ஃபண்ட்) என்ற பெயரில் வாங்கப்பட்ட தொகை, தற்போது அரசின் கஜானாவுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளதாக அவர் பேசியதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், குறுக்கீடு செய்ய அனுமதி கேட்டனர்.

அவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், திமுகவினருக்கு பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுமென்று கூறி இருக்கையில் அமரச்சொன்னார். முதல்வர் விஜய் தொடர்ந்து பேசவும் அனுமதித்தார். அதனால் திமுக உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்வதாகக் கூறாமலே அவையை விட்டு வெளியேறினர். அதிமுக உறுப்பினர்கள் உள்ளே இருந்தனர். அப்போதும் விஜய் தொடர்ந்து பேசினார்.

ஒரு குட்டிக்கதை கூறுவதாகச் சொல்லிப் பேசிய அவர், ''எங்களுக்கும் நக்கலாக, நையாண்டியாக சம்பந்தம் இல்லாமல் குட்டிக்கதையாகப் பேசத்தெரியும்.'' என்றார். அதை அதிமுக உறுப்பினர்களும் சிரித்தவாறே ரசித்தனர். அதற்குப் பின், கையை வைத்து சைகை செய்து காட்டினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முதல்வர் விஜயின் இந்தப் பேச்சும், சைகையும் அடுத்த சில மணி நேரங்களில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி, ''சட்டப்பேரவையை படப்பிடிப்பு தளமாக முதல்வர் மாற்றிவிட்டார். சினிமா வசனம் போல மனப்பாடம் செய்து வந்து ஒப்பிப்பது போல அவரின் உரை உள்ளது. ஆதாரமில்லாமல் பேசுகிறார்.'' என்று குற்றம்சாட்டினார்.

"சட்டம்–ஒழுங்கு, தேர்தல் வாக்குறுதி பற்றிக் கேட்டால் பதில் தரவில்லை. இது சினிமா ஆட்சியாக நடக்கிறது.'' என்றும் உதயநிதி கூறினார்.

திமுக தரப்பில் மட்டுமின்றி, தவெக அரசுக்கு ஆதரவளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் இதுபற்றி கருத்துத் தெரிவித்திருந்னர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், ''ஆட்சிக்கு ஆதரவு என்பது சுதந்திரமாக எடுத்த முடிவு என்று முதல்வர் பேசியதுதான் சரி. ஆளுநர் மூலமாக பாஜக அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது. மீண்டும் தேர்தல் வரக்கூடாது என்பதற்காக இந்த ஆட்சியை ஆதரிக்கிறோம். மதச்சார்பின்மையின் பக்கமாக ஆட்சி இருக்க வேண்டும். துவக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.'' என்றார்.

இதேபோல ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவெக அரசுக்கு ஆதரவளித்ததாகக் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ''மே 8 அன்றிருந்த சூழ்நிலையில் நாங்கள் ஆதரிக்காமல் போயிருந்தால் 10 ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது. மாறாக 10 ஆம் தேதிக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டிருக்கும். ஆளுநர் ஆட்சி மூலமாக தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் தவெக அரசுக்கு மாநிலக்குழுவில் முடிவெடுத்து ஆதரவளித்தோம்.'' என்றார்.

தவெக, திமுக இரு கட்சிகளுமே முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லையா?

தமிழ்நாடு, விஜய். உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை

பட மூலாதாரம், Barakath Ali

படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, "முதல் நாள் சைகை காண்பிக்கக் கூடாது என்று சொல்லும் சபாநாயகர், அடுத்த நாள் முதல்வர் அனுமதி கேட்டதும் சைகை செய்வதை அனுமதித்தது தவறு என்றும் அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு முதல்வர் விளக்கமளித்திருக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பழி தீர்க்கும் விதமாகப் பேசி, சைகை காண்பிப்பது சட்டப்பேரவை மரபுகளை மீறிய செயல்.'' என்றார்.

ஆனால் முதல்வர் விஜய் தன்னுடைய நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இப்படிச் செய்வதாகவே பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். எல்லாச் செயல்களுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்று குறிப்பிடும் அவர், உதயநிதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றாவிட்டால் விஜய் பலவீனமாகப் பார்க்கப்படுவார் என்கிறார்.

பிபிசியிடம் பேசிய பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன், ''முதல்வரின் பேச்சுக்குப் பின்னால் எதிர்க்கட்சியின் தூண்டுதலும் இருக்கிறது. ஆனால் சட்டப்பேரவையில் முதல் நாளில்தான் சைகை காட்டக்கூடாது என்று சொன்ன சபாநாயகர், மறுநாள் ஆக்சன் செய்யலாமா என்று முதல்வர் கேட்டதும் அனுமதிப்பது தவறானது. பேரவையின் கண்ணியத்தைக் காப்பது ஆளும்கட்சியின் பொறுப்பு. இப்போது ஆட்சியிலிருப்போர்க்கு அதற்கான அனுபவமும் முதிர்ச்சியும் வராததுதான் இப்படி நடந்து கொள்ளக் காரணமென்று நினைக்கிறேன்.'' என்றார்.

முதல்வர் விஜய் பேசும்போது, கடந்த காலங்களில் கட்சி நிதி என்று குறிப்பிட்டுப் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வெளியில் சென்றனர்.

இதற்கான காரணம் பற்றி பிபிசியிடம் பேசிய திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, ''சட்டப்பேரவையில் இதைப் பேசுவதற்கு முதல் நாளிலேயே டாஸ்மாக் கொள்முதலில் இனி பார்ட்டி ஃபண்ட் கிடையாது, எல்லாம் கஜானாவுக்கு வந்துவிடும் என்று ஒரு செய்தியைக் கசியவிடுகின்றனர். திமுகவினர் என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் அவர் முந்தைய ஆட்சி என்று சொல்வது திமுக ஆட்சியையே குறிப்பது தெளிவாகத் தெரிகிறது. பெயரைச் சொன்னால் ஆதாரம் தர வேண்டும் என்பதால் அதைச் சொல்லும் துணிவு முதல்வருக்கு இல்லை. சொன்னால் உரிமை மீறல் பிரச்னை வருமென்று சொல்லவில்லை.'' என்றார்.

''ஆதாரமின்றி பேசக்கூடாது அவதூறு சொல்லக்கூடாது, சைகை காட்டக்கூடாது என்று சபாநாயகர் சொல்கிறார். ஆனால் அவையனைத்தையும் முதல்வர் பேசவும் செய்யவும் அவரே அனுமதிக்கிறார். அவையில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பது சட்டப்பேரவையின் மாண்பு. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது யார் யாரோ எழுந்து குறுக்கீடு செய்ய சபாநாயகர் அனுமதிக்கிறார். முதல்வர் தவறான விஷயத்தைப் பேசும்போது குறுக்கிட்டுப் பேச ஏன் அனுமதிப்பதில்லை.'' என்றார் சரவணன் அண்ணாதுரை.

இதற்கு மாறான கருத்தைத் தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் ஆர்.கே., ''கட்சி நிதி என்பதற்கு திமுக மட்டுமே எதிர்வினையாற்றுவதற்கு காரணம் உள்ளது. முதல்வர் விஜய் குறிப்பிடுவது திமுகவைத்தான் என்பது பொதுவெளிக்கே தெரிகிறது. ஆனால் இத்தகைய விஷயங்களை திமுக கடந்து செல்ல வேண்டும். அந்த விஷயத்தில் இப்போதுள்ள திமுகவும் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வதில்லை என்று கருதுகிறேன்.'' என்றார்.

தமிழ்நாடு, விஜய். உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை

பட மூலாதாரம், RK Radhakrishnan

சட்டப்பேரவையில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் பெரும் கவலையளிப்பதாகக் கூறும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் இன்பதுரை பேரவை விதிகளே தெரியாமல் பல விஷயங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய இன்பதுரை, ''மக்களின் தேவைகள், மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசி தீர்வு காணும் இடம் சட்டப்பேரவை. அரசின் கொள்கைகளை, திட்டங்களைத் தீர்மானிக்கும் மன்றம். இப்போது மாநிலம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்னை மேகதாது அணை விவகாரம். அதற்காக தமிழக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும் ஆதரித்தது.'' என்றார்.

''எடப்பாடி பழனிசாமி பேசியபின்பு, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி பேசும்போது, புதிதாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதை முதல்வரும் உடனே ஏற்றுக்கொண்டார். விதி எண்: 104 ன் படி, ஒரு தீர்மானத்தின் நகலை அனைவருக்கும் கொடுத்து படித்த பின்பு பேச அனுமதித்து அதற்குப் பின்பே அதை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த விதி மீறப்பட்டது.'' என்றார் அவர்.

முதல்வர் பேசிய கட்சி நிதி பேச்சுக்கு ஆதாரம் இருப்பதாக தவெக விளக்கம்!

"முதல் நாளில் சைகை காட்டக்கூடாது என்று கூறிய சபாநாயகர் பிரபாகர், மறுநாள் சைகை காட்ட முதல்வரே அனுமதி கேட்டதும் அதற்கு அனுமதிக்கிறார். இதை மரபுக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.'' என்றார் இன்பதுரை.

மேலும் தொடர்ந்த அவர், ''ஆதவ் அர்ஜூனா பேசும்போது ஆதாரமில்லாமல் பேசக்கூடாது என்று சபாநாயகர் கூறினார். அதை எல்லோரும் வரவேற்றனர். ஆனால் மறுநாளே கட்சி நிதி என்ற பெயரில் முதல்வரே ஆதாரமின்றிப் பேசுவதை அவர் அனுமதிக்கிறார். அது அப்பட்டமாக ஒரு தலைபட்சமானது. அப்படியானால் ஆதவுக்கு ஒரு நீதி, முதல்வர் விஜய்க்கு ஒரு நீதியா.'' என்றார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு, உடனுக்குடன் பதில் சொல்லாமல், தயாரித்து வந்த உரைகளை மட்டுமே முதல்மைச்சர் பேசுகிறார் என்று குற்றம்சாட்டும் திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, ''தவெகவினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெறும் ஸ்டண்ட் அடிக்கின்றனர். இவர்களால் அரசை வழி நடத்த முடியாது என்பது மின்வெட்டிலேயே தெரிந்துவிட்டது.'' என்றார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வதற்கு முதல்வர் விஜய்க்கு, இன்னும் சற்று காலஅவகாசம் தேவைப்படுமென்றும், அதை அவருக்கு வழங்குவதுதான் சரியான அரசியல் அணுகுமுறை என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாடு, விஜய். உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை

பட மூலாதாரம், Felix Gerald

முதல்வர் விஜய் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, ''சட்டப்பேரவையில் ஆதாரம் இல்லாமல் முதல்வர் விஜய் பேசவில்லை. முந்தைய ஆட்சியில் "கட்சி நிதி" வாங்கப்பட்டது குறித்து 2025 டிசம்பரில் அன்றைய அமைச்சர் கே.என்.நேரு குறித்து அமலாக்கத்துறை பல ஆதாரங்களைச் சேகரித்திருந்தது.'' என்றார்.

''டாஸ்மாக் விவகாரத்திலும் கட்சி நிதி இருந்ததற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் குறிப்பிட்டு அந்த அறிக்கையை தமிழக டிஜிபியிடம் கொடுத்து வழக்கு பதியுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தியது. ஆனால் ஆட்சி மாறிய பின்பு இப்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் ஆதாரமின்றி முதல்வர் பேசவில்லை.'' என்றார் அவர்.

தனிப்பட்ட முறையில் பேசியது, சைகை காண்பித்தது குறித்துப் பேசிய தவெக செய்தித்தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, ''முதல்வர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை தேவையின்றி பெரிது படுத்துகின்றனர். அது மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம். இதுபோல கருணாநிதி முதல்வராக இருந்தபோது பல விஷயங்கள் நடந்துள்ளன. அதேபோன்று அவர் சட்டப்பேரவையில் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லாததற்குக் காரணம், துறை சார்ந்து சரியான தகவல் தர வேண்டுமென்பதுதான்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு