பிகார் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்ணுறுப்பில் 'இருந்த தோட்டா, மரத்துண்டு' - என்ன நடந்தது?

சோமாவின் பெண்ணுறுப்பிலிருந்து ஒரு மரத்துண்டை மருத்துவர்கள் எடுத்தனர்

பட மூலாதாரம், Shahnawaz Ahmad/BBC

படக்குறிப்பு, சோமாவின் பெண்ணுறுப்பில் இருந்து ஒரு மரத்துண்டை மருத்துவர்கள் எடுத்தனர்
    • எழுதியவர், சீது திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர், பெகுசராயில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தச் செய்தியின் சில விவரங்கள் வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

சோமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவமனை படுக்கையில் கிடக்கிறார், சிறிது நேரத்திற்கு ஒருமுறை திடுக்கிட்டு எழுகிறார். செய்தியாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எனத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பவர்களால் அவரது தூக்கம் அடிக்கடி கலைகிறது.

அருகிலுள்ள படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பிற பெண் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் சோமாவை சில நேரம் ஆர்வத்துடனும், சில நேரம் அனுதாபத்துடனும் பார்க்கிறார்கள்.

சோமாவின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பெண் காவலர், அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை என்று கவலைப்படுகிறார். ஆனால் சோமாவுக்கு, தன்னை விட்டுப் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் உறவினர்கள் ஆதரவில் இருக்கும் தனது குழந்தைகளைப் பற்றிய கவலை மேலோங்கியுள்ளது.

சோமாவின் பெண்ணுறுப்பில் இருந்து மருத்துவர்கள் சுமார் நான்கு அங்குல நீளமுள்ள ஒரு மரத்துண்டை எடுத்துள்ளனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு இந்தத் துண்டு அவரது பெண்ணுறுப்பில் செருகப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தன்னுடன் ஒரு துப்பாக்கியின் காலி தோட்டாப் பகுதியையும் கொண்டு வந்திருந்தார். அவரது கூற்றுப்படி, அதுவும் அவரது பெண் உறுப்பிலிருந்துதான் வெளிவந்தது.

"மருத்துவ அறிக்கையில் பாலியல் தாக்குதல் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிஎன்எஸ் (BNS) பிரிவு 70(1)இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடையாளம் காணப்பட்ட மூவர் மீதும், அடையாளம் தெரியாத இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது," என்று பெகுசராய் எஸ்பி மணீஷ் பிபிசியிடம் கூறினார்.

மேலும், "குற்றம் சாட்டப்பட்ட நிதிஷ் மஹதோ, அமர் நிஷாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களைக் கைது செய்யத் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது." என்றும் அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது?

கடந்த ஜூன் 11ஆம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில், பிகார் மாநிலத்தில் அமைந்துள்ள பெகுசராயில் தனது வீட்டில் உள்ள கழிவறைக்குச் சென்றதாக சோமா தெரிவித்தார். அவரது ஒரு அறை கொண்ட வீட்டிற்குச் சுற்றுச்சுவர் எதுவும் இல்லை. கழிவறையில் கதவு இல்லை. அதன் மேல் ஒரு திரைச்சீலை மட்டுமே தொங்கவிடப்பட்டு உள்ளது.

"கிராமத்தைச் சேர்ந்த ராமு மஹதோ, சூரஜ் மஹதோ, நிதிஷ் மஹதோ ஆகியோர் வந்து எனது புடவையை அவிழ்த்து என் வாயைக் கட்டினார்கள். என் ரவிக்கையைக் கிழித்து கைகளைக் கட்டினார்கள். என்னிடம் தவறாக நடக்கத் தொடங்கிய இந்த ஆட்கள், என் மார்பில் பிளேடால் கீறி, வன்கொடுமை செய்தனர்," என்று சோமா பிபிசியிடம் கூறினார்.

"நான் வலியில் அலறிக் கொண்டிருந்தபோது, என் கணவர் பூனை சத்தம் போடுவதாக நினைத்து இரு முறை அதட்டினார். பின்னர் சந்தேகம் வந்து அவர் வெளியே வர அறையின் கதவைத் திறக்க முயன்றபோது, அது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு அவர் பக்கத்து வீட்டில் உள்ளவருக்கு ஃபோன் செய்தார். பின்னர் கதவு திறக்கப்பட்டது, அனைவரும் எனது நிலையைப் பார்த்து அழத் தொடங்கினர்."

சோமாவும் அவரது குடும்பத்தினரும் ஒரு அறை கொண்ட வீட்டில் வசிக்கிறார்கள். இந்த வீட்டிற்குச் சுற்றுச்சுவர் இல்லை, கழிவறையில் திரைச்சீலை தொங்குகிறது

பட மூலாதாரம், Shahnawaz Ahmad/BBC

படக்குறிப்பு, சோமாவும் அவரது குடும்பத்தினரும் ஒரு அறை கொண்ட வீட்டில் வசிக்கிறார்கள். இந்த வீட்டிற்கு சுற்றுச்சுவர் இல்லை, கழிவறையில் கதவு இல்லை, திரைச்சீலை மட்டுமே தொங்குகிறது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சோமாவின் வீட்டில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் வசிக்கின்றனர்.

சோமாவின் கணவர் ஈ-ரிக்ஷா ஓட்டுகிறார். தனது மனைவியின் இந்த நிலையைப் பார்த்து, அவர் ஈ-ரிக்ஷாவிலேயே சோமாவை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அது அவர்கள் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

"அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து எங்களை விரட்டிவிட்டார்கள், முதலில் போய் இவருக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார்கள்," என சோமா குற்றம் சாட்டுகிறார். தன் கணவரிடம் காவல் நிலையத்தின் வீடியோ இருப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் காவல் நிலைய ஆய்வாளர் ராஜீவ் குமாரின் 'அலட்சியம் மற்றும் உணர்வற்ற தன்மையை' கருத்தில் கொண்டு பெகுசராய் போலீஸ் அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

சிகிச்சைக்காக மூன்று இடங்களுக்குச் சென்ற பெண்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ஈ-ரிக்ஷாவிலேயே அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக சோமாவின் கணவர் தெரிவித்தார். அவர்களுடன் சில குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால், அந்த கிளினிக் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது.

பிபிசி அந்த கிளினிக் ஊழியரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, "அந்தப் பெண் ஈ-ரிக்ஷா மூலம் வந்திருந்தார். அவரது நிலைமை கவலையளிப்பதாக இருந்தது. நாங்கள் அவசரக்கால சிகிச்சை தேவைப்படுவோரை அனுமதிப்பதில்லை. இங்கு மருத்துவர் யாரும் இல்லை. அதனால் நாங்கள் மறுத்துவிட்டோம்." என்று கூறினார்.

இதையடுத்து குடும்பத்தினர் சோமாவை சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். இங்கு ஜூன் 11 இரவுப் பணியில் ஆயுஷ் மருத்துவ அதிகாரி கவிதா குமாரி இருந்தார்.

"அந்தப் பெண் மயக்க நிலையில் இருந்தார். அவர் எதையும் சொல்லும் நிலையில் இல்லை, அவருடன் வந்த பெண்களும் எதுவும் கூறவில்லை. அவர்கள் மார்பையும் காலையும் காட்டினார்கள், அதில் கீறல் காயங்கள் இருந்தன. நான் அவரை சிகிச்சைக்காக சதர் மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தேன்," என கவிதா குமாரி பிபிசியிடம் கூறினார்.

இதன் பிறகு சோமாவுக்கு சதர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது கூற்றுப்படி, ஜூன் 12 காலை சுமார் ஏழு முதல் எட்டு மணிவாக்கில் நினைவு திரும்பியபோதுதான், அவர் தனது கணவரிடம் பாலியல் தாக்குதல் பற்றித் தெரிவித்தார்.

பெகுசராய் சிவில் சர்ஜன் அசோக் குமார், அந்தப் பெண் வயிற்று வலி புகாருடன் மருத்துவமனைக்கு வந்தார் என பிபிசியிடம் கூறினார். ஜூன் 13 அன்று அவர் தனக்கு நடந்த வன்முறை பற்றித் தெரிவித்தார் என்றார்

பட மூலாதாரம், Shahnawaz Ahmad/BBC

படக்குறிப்பு, பெகுசராய் சிவில் சர்ஜன் அசோக் குமார், அந்தப் பெண் வயிற்று வலி புகாருடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஜூன் 13 அன்றே அவர் தனக்கு நடந்த வன்முறை பற்றித் தெரிவித்தார் எனவும் பிபிசியிடம் கூறினார்.

மருத்துவர்கள் காவல்துறைக்கு ஏன் தகவல் கொடுக்கவில்லை?

சோமாவுக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்ட சமூக சுகாதார மையத்தின் பதிவேட்டில், அவரைப் பற்றி "ஃபிசிக்கல் அஸால்ட்", அதாவது உடல் ரீதியான தாக்குதல் என்று எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த கவிதா குமாரி, "அந்தப் பெண்ணுக்கு ரத்தப்போக்கு எதுவும் இல்லை, பாலியல் வன்கொடுமை போன்ற விஷயம் வெளிப்புறமாகத் தெரியவில்லை. எனவே தகவல் கொடுக்கப்படவில்லை" என்றார்.

சதர் மருத்துவமனை இதுகுறித்து காவல்துறையில் தகவல் தெரிவித்ததா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த பெகுசராய் சிவில் சர்ஜன் அசோக் குமார், "அந்தப் பெண் வந்தபோது வயிற்று வலி இருப்பதாகப் புகார் கூறினார். அவர் இந்தச் சம்பவத்தைப் பற்றி (கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி) எதுவும் கூறவில்லை. ஜூன் 13 அன்று அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறியபோது, மருத்துவர்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்." என்று பிபிசியிடம் கூறினார்.

இந்த வழக்கில் உள்ளூர் காவல் நிலையத்தில் ஜூன் 13 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் சோமாவும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் நடந்த உடனேயே காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், "ஜூன் 12 அன்று சிகிச்சையின்போது மருத்துவர் அவருக்கு ஊசி போடும்போது, உனக்கு பாலியல் வன்கொடுமையும் நடந்துள்ளதா என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நான் 'ஆம் மேடம், நடந்துள்ளது' என்று கூறினேன்" என்று சோமா பிபிசியிடம் கூறினார்.

இதுபோன்ற வழக்குகளில் மருத்துவமனைகளின் பொறுப்பு என்ன?

பிபிசியின் இந்தக் கேள்விக்கு, இந்திய மருத்துவ சங்கத்தின் பிகார் பிரிவு தலைவர் அசுதோஷ் சரண் பதிலளிக்கையில், "இது உடல் ரீதியான தாக்குதல் எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்தது. அனைத்து வழக்குகளிலும் தகவல் கொடுக்கப்படுவதில்லை, ஆனால் நிலைமை தீவிரமானது என்று மருத்துவர் கருதினால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். பெண் நோயாளி விஷயத்தில் இது மிகவும் முக்கியமானது." என்று விளக்கினார்.

பிகார் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 'பெண்ணுறுப்பில் இருந்த தோட்டா, மரத்துண்டு' - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

அடிக்கடி மயக்கம், வயிற்று எரிச்சலால் அவதி

சதர் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, ஜூன் 13 இரவு சோமா மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பினார்.

"வீட்டிற்குத் திரும்பிய பிறகு ஜூன் 14 காலை சோமா மயக்கமடைந்தார். அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார், ஆனால் காவல் நிலையத்தில் சதர் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினார்கள். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, மீண்டும் ஜூன் 15 அன்று வீட்டிற்குத் திரும்பினோம். ஆனால் அவர் அடிக்கடி மயக்கமடைந்தார், நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருந்தார். வயிற்றில் அலை அடிப்பது போல் எரிச்சல் எழுவதாகக் கூறினார்," என்று சோமாவின் கணவர் பிபிசியிடம் கூறினார்.

"கிராமத்து செவிலித்தாய் (பிரசவம் பார்க்கும் பெண்) வயிற்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு வயிற்றில் ஏதோ இருப்பதாகக் கூறினார். பின்னர் ஜூன் 18 காலை அவர் ஒரு பொருளைக் கொண்டு வந்து, இது தனது பெண்ணுறுப்பில் இருந்து வெளிவந்தது என்று கூறினார். நான் பார்த்தபோது அது ஒரு தோட்டா என்பது தெரிய வந்தது." என்றார்.

சோமாவும் அவரது கணவரும் அந்தத் தோட்டாவை எடுத்துக் கொண்டு மீண்டும் சதர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

"அது ஒரு காலி தோட்டா அல்லது தோட்டாக் கூடு. நாங்கள் அந்தப் பெண்ணை மீண்டும் பரிசோதித்தபோது, மருத்துவர்கள் அவரது பெண்ணுறுப்பில் இருந்து ஒரு மரத்துண்டை எடுத்தனர். அது மூன்று முதல் நான்கு அங்குல நீளம் இருந்தது. அந்தப் பெண் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார், குணமடைந்து வருகிறார்," என்று சிவில் சர்ஜன் அசோக் குமார் கூறினார்.

மார்ச் மாதத்திலும் நடந்த பாலியல் தாக்குதல்

ஜூன் 11 இரவு நடந்த சம்பவத்தில் ராமு மஹதோ, சூரஜ் மஹதோ, நிதிஷ் மஹதோ ஆகிய மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராமு மஹதோ சோமாவின் வீட்டிற்கு நேர் எதிரே வசிக்கிறார். அவர் தனது சகோதரர் பிரதீப் மஹதோவுடன் சேர்ந்து கடந்த 2026 மார்ச் 12 அன்றும் சோமா மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை உள்ளூர் காவல் நிலையத்தில் மே 3 அன்று பதிவு செய்யப்பட்டது.

அந்த எஃப்ஐஆரில், "ராமு மற்றும் பிரதீப் மஹதோ கொள்ளையடித்தனர், தாக்கினர் மற்றும் ஆடைகளைக் கழற்ற முயன்றனர். அவர்கள் தவறான செயலில் தோல்வியடைந்தனர்." என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பிற பிரிவுகளுடன் சேர்த்து பிஎன்எஸ் பிரிவு 76இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 76 என்பது ஒரு பெண்ணை நிர்வாணமாக்கும் அல்லது நிர்வாணமாக இருக்கக் கட்டாயப்படுத்தும் நோக்கில் அவர் மீது தாக்குதல் நடத்துவதுடன் தொடர்புடையது. இந்த வழக்கில் ராமு மற்றும் பிரதீப் மஹதோவுக்கு காவல் நிலையத்தில் இருந்தே ஜாமீன் கிடைத்தது.

பெகுசராய் மண்டல டிஐஜி ஷைலேஷ் குமார் சின்ஹா, மார்ச் மாத பாலியல் தாக்குதல் வழக்கில் போலீஸ் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

பட மூலாதாரம், Shahnawaz Ahmad/BBC

படக்குறிப்பு, பெகுசராய் மண்டல டிஐஜி ஷைலேஷ் குமார் சின்ஹா, மார்ச் மாத பாலியல் தாக்குதல் வழக்கில் போலீஸ் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரி அபிராம் குமார் ஜா பிபிசியிடம், "இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு வழிவகை செய்யப்பட்டு இருப்பதால், ராமு, பிரதீப் இருவருக்கும் ஜாமீன் கிடைத்தது." என்றார்.

இருப்பினும், பிபிசியிடம் பேசிய சோமா, "கடந்த முறையும் இந்த ஆட்கள் என்னை வன்கொடுமை செய்தனர். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை என்று எழுதுங்கள் எனக் கூறினேன், ஆனால் இவர்கள் கொள்ளை என்று எழுதிக் கொண்டிருந்தார்கள். நான் படித்தவள் இல்லை. பின்னர் ஒருவரிடம் கொடுத்து விண்ணப்பத்தைப் படிக்க வைத்தபோதுதான் கொள்ளை என்று எழுதியிருப்பது தெரிந்தது. அந்த ஆட்களுக்கு (குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு) காவல் நிலையத்தில் இருந்து ஜாமீன் கிடைத்ததால் அவர்களுடைய துணிச்சல் அதிகரித்துவிட்டது. முதலிலேயே போலீஸ் ஏதாவது செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது." என்று குற்றம் சாட்டினார்.

பிபிசியுடனான உரையாடலில், பெகுசராய் மண்டல டிஐஜி ஷைலேஷ் குமார் சின்ஹா, மார்ச் மாதத்தில் நடந்த அந்தச் சம்பவம் தொடர்பாக எந்தவிதமான அலட்சியமும் காட்டப்படவில்லை என மறுத்தார்.

"மார்ச் மாதத்தில் நடந்த சம்பவத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் பிரிவுகள் போடப்பட்டன. காவல் நிலைய ஆய்வாளர் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார். இந்த முறை (ஜூன் 11 சம்பவம்) காவல் நிலைய ஆய்வாளர் அலட்சியமாக இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

ஏற்கெனவே ஏதேனும் தகராறு இருந்ததா?

சோமாவின் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளனர், அரசு வேலையில் யாரும் இல்லை. இந்த மக்கள் கூலி வேலை செய்தோ அல்லது வேறு ஏதேனும் வேலை செய்தோ தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

சோமாவும் அவரது சகோதரியும் ஒரே கிராமத்தில் வசிக்கிறார்கள். "இந்தக் குடும்பத்திற்கு யாருடனும் எந்தத் தகராறும் இல்லை. நிலத் தகராறும் இல்லை, கடனும் இல்லை. எப்போதுமே சண்டையும் நடந்ததில்லை. ஆனால் அப்படியிருந்தும் இந்த ஆட்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்," என சோமாவின் சகோதரி பிபிசியிடம் கூறினார்.

இருப்பினும் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மக்கள் பிரதிநிதி ஒருவர், "சோமா யாருக்கும் அடங்குபவர் அல்ல. அவருக்கு ஏதேனும் விஷயம் பிடிக்கவில்லை என்றால், அவர் வெளிப்படையாக அதை எதிர்ப்பார். தகராறின் காரணம் இதுவாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது." என்று பிபிசியிடம் கூறினார்.

சோமாவின் குடும்பத்திற்கு யாருடனும் எந்தத் தகராறும் இல்லை, எப்போதுமே சண்டையும் நடந்ததில்லை

பட மூலாதாரம், Shahnawaz Ahmad/BBC

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள், அதே நேரம் சோமாவின் குடும்பத்தினர் நேர்மையான முறையில் சம்பாதித்துச் சாப்பிடும் மக்கள்," எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெகுசராய் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த நிதிஷ் மஹதோ, அமர் நிஷாத் ஆகிய இரு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றப் பின்னணி உள்ளது. பெகுசராய் போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இவர்கள் கிராமத்தில் 'ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை' வைத்திருந்ததாக எழுதப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சோமாவின் கிராமத்தில் அச்சம் நிலவுகிறது.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், "நாங்கள் இப்போது அரிவாளை எங்களுடனேயே வைத்துக் கொண்டு தூங்குகிறோம்." என்று பிபிசியிடம் கூறினார்.

பெண்ணுறுப்பில் தோட்டா

இந்த முழு சம்பவத்திலும் முக்கியமான கேள்வி, ஒரு நபரின் உடலில் இத்தனை நாட்கள் ஒரு தோட்டா அல்லது ஏதேனும் வெளிப்புறப் பொருள் இருக்க முடியுமா என்பதுதான்.

இதுகுறித்த மருத்துவர்களின் கருத்துகள் வேறுபடுகின்றன.

இது தொடர்பாகப் பேசிய பெகுசராய் சிவில் சர்ஜன் அசோக் குமார், "எந்தவொரு வெளிப் பொருளும் இத்தனை நாட்கள் உடலில் இருக்க முடியாது. மனிதன் நடக்கும்போது அது விழுந்துவிடும். இத்தனை நாட்கள் இருந்துவிட்டால் உடலில் செப்டிசீமியா போன்ற உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்." என்றார்.

அதே நேரத்தில் தோட்டா குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஐஎம்ஏ-வின் அசுதோஷ் சரண், "காலி தோட்டா மிகவும் பாதுகாப்பான உலோகம். தங்கக் கடத்தலில் கடத்தல்காரர்கள் ரகசிய உறுப்பில் தங்கத்தை மறைத்து எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. எனவே தோட்டா உள்ளே இருப்பதால் ஒரு நபரின் உயிருக்கு ஆபத்து இல்லை." எனக் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சியைப் பிடித்த பிறகு, முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி பல்வேறு மேடைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறி வருகிறார்.

ஆனால் சோமாவுக்கு நடந்த சம்பவம், காவல்துறை அமைப்பின் மிகக் கீழ்மட்ட நிர்வாகப் பிரிவான காவல் நிலையத்தின் செயல்பாட்டு முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை மீதான அவர்களின் உணர்திறன் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு