'நான் திரும்பி வந்துவிட்டேன்' - 2 கோல்கள்; புதிய வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நடந்துவரும் ஃபிஃபா உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என வீழ்த்தியது போர்ச்சுகல் அணி. முந்தைய போட்டியில் டி.ஆர்.காங்கோ அணிக்கு எதிராக டிரா செய்த போர்ச்சுகல் இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாள்களாக விமர்சனங்களை சந்தித்துவந்த அவர், இந்தத் தொடரில் தன் கோல் கணக்கைத் தொடங்கினார்.

இதன்மூலம், 6 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரொனால்டோ. ஜெர்மனியில் நடந்த 2006 உலகக் கோப்பையில் முதல் முறையாகக் களமிறங்கிய ரொனால்டோ, தன்னுடைய இரண்டாவது போட்டியில் (இரான் அணிக்கெதிராக) கோலடித்தார். அதற்கடுத்து நடந்த ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர்களிலும் கோலடித்திருக்கிறார் அவர்.

அதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த போர்ச்சுகல் வீரர் சாதனையையும் இந்தப் போட்டியில் படைத்தார் ரொனால்டோ. 9 கோல்கள் அடித்திருந்த யுசேபியோவின் சாதனையை அவர் முறியடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்றிருக்கிறது போர்ச்சுகல். அந்த அணி கொலம்பியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.

எதிர்பார்ப்புகளும் நெருக்கடியும்

கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த சில நாள்களாகவே பெரும் விமர்சனங்களை சந்தித்துவந்தார். நடந்துவரும் ஃபிஃபா உலகக் கோப்பையின் முதல் லீக் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் செயல்பாடும், அவருடைய செயல்பாடும் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

'கடந்த சில மாதங்களாகவே ரொனால்டோ தேசிய அணியின் தொடக்க லெவனில் இருக்க வேண்டுமா', 'அவரால் அந்த அணியில் தாக்கம் ஏற்படுத்த முடியுமா' என்ற கேள்விகள் எழுந்துவந்தன. 41 வயதான ரொனால்டோவின் ஆட்டம் முன்பைப்போல் இல்லை என்றும், அது பலமான இந்த போர்ச்சுகல் அணிக்குப் பின்னடைவாக அமைந்து வருகிறது என்றும் பேசப்பட்டு வந்தது.

அப்படியிருக்கும்போது டி.ஆர்.காங்கோவுக்கு எதிரான அவரது செயல்பாடு அந்த விவாதங்களுக்கெல்லாம் வலு சேர்ப்பது போல் அமைந்தது. பலம் குறைந்த அணியாகக் கருதப்படும் டி.ஆர்.காங்கோவுக்கு எதிரான அந்தப் போட்டியில் போர்ச்சுகல் 1-1 என டிராவே செய்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு ஷாட் கூட இலக்கை நோக்கி அடிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல், மற்ற நட்சத்திர வீரர்கள் தங்களின் முதல் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். கிலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் தங்கள் முதல் போட்டிகளில் 2 கோல்கள் அடித்தார்கள். லயோனல் மெஸ்ஸியோ ஹாட்ரிக் அடித்தார். அவையெல்லாம் ஒரே நாளில் நடக்க, மறுநாள் நடந்த போட்டியில் தான் ரொனால்டோ மற்றும் போர்ச்சுகல் டி.ஆர்.காங்கோவுக்கு எதிராகத் தடுமாறின.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அது ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தது ஒருபக்கம் இருக்க, நிறைய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. சில ரொனால்டோ ரசிகர்கள் ஜோ நெவஸ், புரூனோ ஃபெர்னாண்டஸ் ஆகியோரை, அவர்களின் குடும்பங்களை சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினார்கள். அதனால், ஒட்டுமொத்தமாக போர்ச்சுகல் அணிக்குள் சூழ்நிலையே சரியில்லை என்ற வாதம் ஏற்பட்டது.

ரொனால்டோ தொடக்க லெவனில் இடம்பெறாமல் இருப்பது தான் அந்த அணிக்கு சரியானதாக இருக்கும் என்று பல வல்லுநர்கள் கருதினார்கள். டி.ஆர்.காங்கோவுக்கு எதிரான போட்டியில் மற்ற வீரர்கள் வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும், அது ரொனால்டோவின் தவறில்லை என்றும் சில வல்லுநர்கள் கூறினார்கள். இருந்தாலும், ரொனால்டோவின் வயது, ஃபார்ம், அணியில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றின் மீது எதிர்மறையான வாதங்களே அதிகம் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்பாக அந்த நெருக்கடியும் எதிர்பார்ப்பும் அதிகரித்தன. முந்தைய தினம் எம்பாப்பே, மெஸ்ஸி, ஹாலண்ட் மூவரும் மீண்டும் ஜொலித்தார்கள். அவர்கள் மூவருமே இந்தப் போட்டியில் தலா 2 கோல்கள் அடித்தார்கள். அதற்கு முன்பாக ஹேரி கேன், வினிஷியஸ் ஜூனியர், லமீன் யமால் என இந்தத் தொடரின் மிகப் பெரிய நாயகர்களாகக் கருதப்பட்ட அனைத்து வீரர்களுமே கோலடித்திருந்தார்கள். அதனால், ரொனால்டோ மீதான எதிர்பார்ப்பு கூடியது. அதற்கு மத்தியில் தான் மீண்டும் போர்ச்சுகல் அணியின் தொடக்க லெவனில் இடம்பெற்றார் ரொனால்டோ.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

மாறிய ஆட்டம், மாறிய முடிவு

டி.ஆர்.காங்கோ அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணியின் ஆட்டத்தைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய இந்திய முன்னாள் வீரரும் தமிழ்நாடு சந்தோஷ் டிராபி அணியின் பயிற்சியாளருமான தர்மராஜ் ராவணன், "போர்ச்சுகல் வீரர்கள் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தாலும் அதிக வாய்ப்புகளை உருவாக்கவில்லை. வெளியே இருந்த ஷாட்கள் எடுக்கவில்லை. கிராஸ்கள் எதுவும் போடவில்லை. எதிரணியின் டிஃபன்ஸிவ் கட்டமைப்பை உடைக்கக்கூடிய பாஸ்கள் போடவில்லை. அடுத்த போட்டியில் அவை மாற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக அதுவே நடந்தது. ஆரம்பம் முதலே நிறைய வாய்ப்புகளை உருவாக்கியது அணி. கிராஸ்களும் போடப்பட்டன. அதனால், தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் டிஃபன்ஸுக்கு போர்ச்சுகல் சவால் கொடுத்தது. அதன் விளைவாக 6வது நிமிடத்திலேயே போர்ச்சுகலுக்கு முதல் கோல் வந்தது. அதை அடித்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

வலது விங்கில் இருந்து ஜோ கன்சலோ கொடுத்த கிராஸை நன்றாக பாக்சுக்குள் நகர்ந்து வந்த ரொனால்டோ எளிதாக கோலாக்கினார். இதன் மூலம் 6 உலகக் கோப்பை தொடர்களில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மேலும், ஃபிஃபா உலகக் கோப்பையில் கோலடித்த இரண்டாவது வயதான வீரரும் அவர்தான்.

அடுத்த 10 நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்தது போர்ச்சுகல். பாக்சுக்கு சற்று வெளியே பெட்ரோ நெடோவை ஃபவுல் செய்தார் உஸ்பெகிஸ்தான் அணியின் கம்ப்ரோபெகோவ். அதனால், போர்ச்சுகலுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. அதை அடிக்க வலது பக்கம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயராக இருந்தார். உஸ்பெகிஸ்தான் வீரர்களும் ரொனால்டோ அதை கோலாக்குவதைத் தவிர்க்க தயாராக இருந்தார். ஆனால், உஸ்பெகிஸ்தான் அணி எதிர்பாராத வகையில் பந்தின் இடதுபக்கமிருந்து அந்த ஃப்ரீ கிக்கை அடித்தார் நூனோ மெண்டெஸ். உஸ்பெகிஸ்தான் வீரர்கள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களால் அதைத் தடுக்க முடியாமல் போக, பந்து கோலானது. 2-0 என முன்னிலை பெற்றது போர்ச்சுகல்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிய போர்ச்சுகல் அணிக்கு 39வது நிமிடத்தில் கோலடித்தார் ரொனால்டோ. புரூனோ ஃபெர்னாண்டஸ் கொடுத்த த்ரூ பாலை, போஸ்டுக்கு வலது புறம் இருந்து சிறப்பான முறையில் கோலாக்கினார் அவர். முதல் பாதி முடியும் தருவாயில் ரொனால்டோவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு வந்தது. முன்னே வந்த உஸ்பெகிஸ்தான் வீரரைத் தாண்டி அவர் பந்தை அனுப்பினார். ஆனால், கோல் நோக்கிச் சென்ற பந்தை கடைசி தருணத்தில் தடுத்தார் உஸ்பெகிஸ்தான் டிஃபண்டர் குஷனோவ். ரொனால்டோவின் ஹாட்ரிக் வாய்ப்பு தவறியது. முதல் பாதி 3-0 என முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிய போர்ச்சுகல் அணி 2 கோல்கள் அடித்தது. 60வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பிலிருந்து போர்ச்சுகல் அணிக்கு 4வது கோல் கிடைத்தது. ஃபீலிக்ஸ் அடித்த பந்து, குஷனோவ் மீது பட்டு, பின்னர் கோல்கீப்பர் நெமடோவ் மீது பட்டு கோலானது. அது நெமடோவ் அடித்த சுய கோலாகக் கருதப்பட்டது. பின்னர் 87வது நிமிடத்தில் ரஃபேல் லயோவும் கோலடிக்க, 5-0 என வெற்றி பெற்றது போர்ச்சுகல்.

இந்தப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. போட்டி முடிந்தபிறகு பேசிய அவர், "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, மிக முக்கியமான விஷயம் நமது உழைப்பும் நாம் காட்டிய நம்பிக்கையும்தான். அணி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு, பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. வெளிப்படையாக, தனிப்பட்ட முறையில் சொல்வதானால், சாதனைகள் எப்போதும் மகிழ்ச்சி தருபவைதான், ஆனால் எனது இலக்கு எப்போதும் தேசிய அணி அதன் நோக்கங்களை அடைவதற்கு உதவுவது மட்டுமே." என்று கூறினார்.

மேலும், இரண்டு கோல்கள் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணியின் சிக்கலுக்குக் காரணம் தான்தான் என்று விமர்சித்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தொலைக்காட்சி கேமராவை நோக்கி 'நான் திரும்பி வந்துவிட்டேன், நான் திரும்பி வந்துவிட்டேன்' என்ற வார்த்தைகளை உரக்கக் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு