'ரூ. 2.47 லட்சம் கோடி கடன்' - மின்வாரிய வெள்ளை அறிக்கையில் என்ன உள்ளது? திமுகவின் பதில் என்ன?

தமிழ்நாடு மின்சார வாரிய வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம், TNEB

படக்குறிப்பு, தமிழ்நாடு மின்சார வாரிய வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தமிழ்நாடு மின்வாரியத்தின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வியாழக்கிழமையன்று (ஜூன் 25) மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டார்.

2001 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மின்வாரியம் கடந்து வந்த பாதையை விவரித்த அமைச்சர், மின்துறைக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த தி.மு.க ஆட்சியில் எந்தவித புதிய திட்டங்களையும் மேற்கொள்ளாமல் செலவீனம் அதிகரித்துள்ளதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆனால், கடந்த திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து செலவீனத்தைக் குறைத்துள்ளதாக மின்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற த.வெ.க அரசு, நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தது.

அதன்படி, கடந்த 16 ஆம் தேதியன்று அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். தொடர்ந்து, 'மின்சார வாரியத்தின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என, துறையின் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியிருந்தார்.

'25 ஆண்டுகளில் மோசமான நிலை'

இதனைத் தொடர்ந்து சென்னையில் வியாழக்கிழமையன்று வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டார். கடந்த 2001 முதல் தற்போது வரையில் மின்வாரியம் கடந்து வந்த பாதையை இது வெளிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் பேசும்போது, "தமிழ்நாட்டின் உயிர்நாடியாக மின்சார வாரியம் இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் கடன் மற்றும் மோசமான நிலைக்கு இந்தத் துறை சென்றுள்ளது" எனக் கூறினார்.

மின்துறையை த.வெ.க அரசு எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப் போகிறது என்பதை வெளிக்காட்டுவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நான்கு நிறுவனங்களாக மாற்றப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் வருவாய், செலவீனம், காலிப் பணியிடம், உபகரணக் கட்டமைப்பு, ஒப்பந்தப் பணியாளர் முறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக வெள்ளை அறிக்கை அமைந்திருந்தது.

மின்வாரியத்தின் வருவாய் குறித்துப் பேசிய அமைச்சர், " 2001–2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் 59,084 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், செலவு 67,439 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 8,355 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டார்.

'கட்டண உயர்வால் வருவாய் அதிகரிப்பு..ஆனால்?'

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு அது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார்.

பட மூலாதாரம், TNEB

படக்குறிப்பு, வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு அது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2006–2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வருவாய் 92,737 கோடியாகவும் செலவீனம் 1,28,200 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. 2011–2016 அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் 1,92,971 கோடி ரூபாயாகவும் செலவீனம் 2,49,332 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2016–2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் 3,20,140 கோடி ரூபாயாகவும் செலவீனம் 3,78,674 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2021–2026 தி.மு.க ஆட்சியில் வருவாய் 4,97,996 கோடியாகவும் செலவீனம் 5,32,443 ரூபாயாகவும் இருந்துள்ளது.

2011-2016 மற்றும் 2016- 2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் 56,361 கோடி ரூபாய் மற்றும் 58,534 கோடி ரூபாய் என பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதுவே, 2021-26 தி.மு.க ஆட்சியில் 34,447 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "2022ம் ஆண்டு மின் கட்டணம் உயர்வால் 100 சதவிகிதம் அளவுக்கு புதிதாக வருவாய் வந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

"ஆனால், புதிதாக மின்மாற்றிகளோ, திட்டங்களோ, காலிப் பணியிடங்களோ நிரப்பப்படவில்லை" எனக் கூறிய அவர், "மின்வாரியம் நஷ்டத்தில் இருந்ததால் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இதில் செலவீனம் ஏன் கூடியது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், "வருவாய் அதிகரித்தும் மின்வாரியத்துக்கு எந்தப் பலனும் இல்லை. மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் தான் கஷ்டப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்

கடன் அளவு 2,47,130 கோடி ரூபாய்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வாரியத்துக்கு அதிக வருவாய் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், "2021 முதல் 2026 வரையில் 87,399 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதேநேரம் செலவீனம் அதிகரித்துள்ளது" என்கிறார்.

மின்வாரியத்தின் கடன் அதிகரித்தது குறித்த விவரங்களும் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு 6,492 கோடி ரூபாயாக இருந்த கடன், 2006 ஆம் ஆண்டில் 2,831 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

அதுவே, 2006-11 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 26,552 கோடி ரூபாயாகவும் 2011-16 அ.தி.மு.க ஆட்சியில் 56,204 கோடி ரூபாயாகவும் அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் 67,652 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2021-26 தி.மு.க ஆட்சியில் 87,399 உயர்ந்து தற்போது கடன் அளவு 2,47,130 கோடியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மின் கொள்முதல் குறித்த விவரங்களும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதிகப்படியான மின் நுகர்வு 21,307 மெகாவாட்டாக இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.

மின்வாரியம் மூலமாக எண்ணூர் அனல்மின் நிலையம், மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து 3499 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிப்பதாகக் கூறிய அவர், "உள் மாநிலங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் பெறப்பட்டது" எனத் தெரிவித்தார்.

ஒரு சில காலங்களில் யூனிட் மின்சாரத்தை 21 ரூபாய்க்கெல்லாம் வாங்கியுள்ளதாகக் கூறிய அவர், " கடந்த ஒரு மாதத்தில் சிறிய கசிவுகளை (Leak) சரிசெய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதன்மூலம் மாதம் 215 கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும்" எனக் குறிப்பிட்டார்.

அடுத்து, மின்வாரியங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அரசின் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

கடன், வருவாய் பற்றாக்குறை குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

செந்தில் பாலாஜி
படக்குறிப்பு, செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)

மின்வாரிய வெள்ளை அறிக்கை குறித்து மின்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை காலமாக இருந்தாலும் சீரான மின் விநியோகத்தைக் கொடுத்து வந்தோம்" எனக் கூறினார்.

த.வெ.க அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்வாரியத்தின் வருவாய், செலவு ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை மேற்கோள்காட்டிப் பேசிய செந்தில் பாலாஜி, "வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் பற்றாக்குறை என்பது 34,447 கோடி ரூபாயாக இருந்தது" என்கிறார்.

அதுவே அ.தி.மு.க ஆட்சியில் இழப்பு என்பது 58 ஆயிரம் கோடியாக இருந்ததாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சியில் ஆண்டுதோறும் படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து செலவீனத்தைக் குறைத்துள்ளதாகக் கூறிய அவர், " பல்வேறு நிதி நிறுவனங்களிடம் 13.5 சதவிகிதம் என கடனுக்கான வட்டி கட்டி வந்தனர். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் பேசி 9.5 சதவிகிதத்துக்குள் கொண்டு சென்றோம்" என்கிறார்.

"இதன்மூலம் ஆண்டுக்கு 1,200 கோடி முதல் 1,500 கோடி ரூபாய் சேமிப்புகளை உருவாக்க முடிந்தது" என்கிறார் அவர்.

"அ.தி.மு.க ஆட்சியில் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி சாம்பல் மூலம் 90 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வந்தது. கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வருவாயை உயர்த்தினோம்" என்கிறார் செந்தில் பாலாஜி.

தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் செலவீனம் அதிகரித்துள்ளதாகவும் அந்த இழப்புகள் எங்கே சென்றது என, மின்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியதைக் குறிப்பிட்டு அவர் விளக்கம் அளித்தார்.

"தமிழ்நாட்டின் மின் நுகர்வு என்பது கடந்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப கொள்முதல் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால் செலவினங்கள் அதிகரிக்கும்" என செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

"எந்தெந்த வகையில் வருமானம் வந்தது? எந்தெந்த வகைகளில் செலவீனம் என்பதைக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" எனக் கூறிய அவர், " அதைத் தவிர்த்து அவர்களுக்கு வசதியாக மக்களிடம் மாற்றுக் கருத்தை முன்வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது" என்கிறார்.

மின்வாரிய கடனுக்கு செலுத்தும் வட்டி குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, "ஆண்டுக்கு ஏறக்குறைய 15 ஆயிரம் கோடியை வட்டியாக செலுத்துவதாக சட்டமன்றத்தில் பேசினேன். ஐந்தாண்டுகளுக்கு 75 ஆயிரம் கோடியை கடனுக்கு வட்டி மட்டுமே செலுத்தியுள்ளோம்" எனக் கூறினார்.

"இது நாங்கள் வாங்கிய கடனுக்கு அல்ல. இதற்கு முன்பு வாங்கிய கடனுக்கும் சேர்த்துக் கட்டியுள்ளோம். அதை வெள்ளை அறிக்கையில் கூறாமல் மறைத்துவிட்டனர்" எனவும் அவர் சாடினார்.

'27 ஆயிரம் பேர் ஓய்வு... 343 பேர் தேர்வு'

வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "ஒவ்வொரு துணை மின்நிலையங்களுக்குக்கீழ் 300 முதல் 400 கிராமங்கள் உள்ளன. இங்கெல்லாம் எவ்வளவு ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்பது முக்கியமானது" என்றார்.

"மின்வாரியத்தில் 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களில் 74,714 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 வருடங்களில் 20,240 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இது எச்சரிக்கையுடன் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்" என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த 5 ஆண்டுகளில் 16782 பேர் ஓய்வு பெற உள்ளதாகக் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், "2001-2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 425 பேர் புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அப்போது 93,721 பேர் பணியில் இருந்துள்ளனர்" என்கிறார்.

"ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் 27 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், 343 பேர் மட்டுமே புதிதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது. செலவும் அதிகரித்து கடனும் வாங்கப்பட்ட நிலையில் 343 பேர் மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

2001 ஆம் ஆண்டில் அப்போதைய தேவைக்கு சுமார் 1 லட்சம் பேர் வேலை பார்த்ததாகக் கூறிய அமைச்சர், " இருமடங்காக பணியாளர் எண்ணிக்கை கூடியிருக்க வேண்டிய துறையில் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

"இது பெரிய செலவீனம் அல்ல" எனக் கூறிய அவர், "இந்தத் துறைக்கு அவர்கள் தான் முக்கியம். அவர்கள் மீது கவனம் செலுத்தாமல் நிர்வாகரீதியான தவறுகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக எந்தத் திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, "மூன்று பேர், நான்கு பேர் செய்யக் கூடிய வேலையை ஒருவர் செய்கிறார். களத்தில் நின்று வேலை செய்ய வேண்டும். தினமும் சேவை தொடர்கான புகார்கள் அதிகம் வருகின்றன. அதில் தாமதம் ஆவதற்கு இதுதான் காரணம்" என்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த காலங்களில் இதே பணியாளர்கள் தான் இருந்தனர். இவர்களை வைத்து சீரான மின்விநியோகம் நடந்தது" எனக் கூறினார்.

மின்வாரியத்தில் 401 பேருக்கு புதன்கிழமையன்று பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். " இந்தத் தேர்வு எந்த அரசு நடத்தியது என்ற யதார்த்தத்தை அமைச்சர் உணர வேண்டும்" என செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

"த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதி தேர்வு வைத்து பட்டியலை மின்வாரியத்துக்கு கொடுத்து ஆணையைக் கொடுத்தார்களா என்பதை அறிய விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

ஒரு பைசா செலவு இல்லாமல் பணி நியமன ஆணை கொடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளதைக் குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, "டிஎன்பிஎஸ்சியில் யார் விண்ணப்பம் செய்தார்கள்? யாருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது என யாருக்கும் தெரியாது" எனத் தெரிவித்தார்.

"401 பணிகளுக்கும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடந்தது. நேற்று (ஜூன் 24) அதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அவர்களே வெளிப்படைத்தன்மையுடன் பணிக்கு எடுத்தது போல காட்டிக் கொள்கின்றனர்" என அவர் விமர்சித்தார்.

இதுதவிர, தொழில்நுட்ப உதவியாளர்கள் 656 பேர், ஐடிஐ முடித்தவர்களுக்கு 1,795 பேர் ஆகியோருக்கான பணியிடம் தயாராக உள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

"இதுவும் நாங்கள் அனுப்பிய பட்டியல் தான். நீங்கள் மட்டுமே செய்தது போல மக்களை ஏமாற்றும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசும்போது, "தி.மு.க அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் த.வெ.க அரசு ஈடுபட்டு வருகிறது. பணி நியமனத்திலும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்" எனக் கூறினார்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

பட மூலாதாரம், CTR Nirmalkumar

படக்குறிப்பு, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

'மறைமுகமாக லாபம் சம்பாதித்தனர்'

மேலும், வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், தனியார் முதலீட்டின் மூலம் 30 ஆயிரம் மெகாவாட் உற்பத்தியை செய்யும்போது மின்வாரியம் ஏன் ஈடுபடவில்லை எனக் கேள்வியெழுப்பினார். "தனியாரை அனுமதித்து மறைமுகமாக லாபம் சம்பாதிக்கும் செயல்கள் தான் கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ளது" என சாடினார்.

"மின்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக துணை மின்நிலையங்களைப் பயன்படுத்த முடியாது" எனக் கூறிய அவர், "இதே நிலைமை தான் மின்மாற்றிகளுக்கும் பொருந்தும்" என்கிறார்.

184 துணை மின்நிலையங்கள் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டதாகவும் 42 ஆயிரம் மின்மாற்றிகள் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

"இந்த ஆண்டில் பழைய துணை மின்நிலையங்களை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான 8,318 கோடி ரூபாய் செலவுக்கு முதலமைச்சரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டோம்" என்கிறார் அவர்.

"21,512 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளோம். அடுத்த நான்கு ஆண்டுகளில் 238 துணை மின்நிலையங்களை உருவாக்க உள்ளோம். இதனைக் கடன் மூலம் மேற்கொள்ளவிருக்கிறோம். இதைச் செய்தால் தான் நுகர்வோருக்கு பலன்களைக் கொண்டு சேர்க்க முடியும்" என அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்துறையில் உபகரண உள்கட்டமைப்பு குறித்து வெள்ளை அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

'2001 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 618 துணை மின்நிலையங்கள் இருந்தன. 2001- 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் 259 துணை மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டன. 2006-11 வரை 289 துணை மின் நிலையங்களும் 2011-16 காலகட்டத்தில் 263, 2016-2021 வரை 359 துணை மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

"ஆனால், கடந்த தி.மு.க ஆட்சியில் 122 துணை மின்நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. நிறைய அறிவிப்புகளை மட்டுமே செந்தில் பாலாஜி வெளியிட்டார்" என்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்.

மின்வாரியத்தின் உள்கட்டமைப்பு குறித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசியது குறித்து செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

"வெள்ளை அறிக்கையில் 122 துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக உள்ளது. ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லை என இடைச்செறுகலாக அமைச்சர் பேசினார்" என்கிறார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மின் மாற்றிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியது குறித்து விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி, "மின்வாரியத்தில் பணியாற்றும் நபர்களுக்கு ஒவ்வொரு அரசும் ஆண்டுதோறும் செய்யக் கூடிய தொடர் பணிகளாக இவை உள்ளன" எனத் தெரிவித்தார்.

"10,109 கோடி மதிப்பில் 121 புதிய துணை மின்நிலையங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர். ஐந்தாண்டுகளில் எதுவும் செய்யவில்லை எனக் கூறிவிட்டு, இந்தப் பணிகள் நடப்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்" என்கிறார் செந்தில் பாலாஜி.

துணை மின் நிலையங்களுக்கு நிலங்கள் எடுக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் கூறியதைக் குறிப்பிட்ட அவர், "ஆட்சி அமைந்த 40 நாட்களுக்குள் துணை மின்நிலையங்கள் எங்கே தேவை என்பதை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி, நிலங்கள் வகை மாற்றம் செய்ததாகக் கூற முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

"கடந்த ஐந்தாண்டுகளில் புதிதாக எந்தத் திட்டங்களும் கொண்டு வரவில்லை" என மின்துறை அமைச்சர் கூறியது குறித்தும் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

" வடசென்னை அனல்மின் நிலைய திட்டத்தை (stage 3) முந்தைய ஆட்சியில் ஸ்டாலின் தொடங்கிவிட்டார். அங்கு 800 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. உடன்குடி மின்திட்டம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது" எனக் கூறினார்.

"கடந்த ஐந்தாண்டுகளில் 9,032 மெகாவாட் மின் உற்பத்தி மின்வாரியத்தின் நிறுவுதிறனில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது" எனக் கூறிய அவர், "எண்ணூர் திட்டத்தில் 70 சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டன. உப்பூரில் நிலக்கரியை எடுத்துச் செல்வதில் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மறுபரிசீலனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, வெள்ளை அறிக்கை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இல்லை" எனவும், "அதற்கான கையெழுத்தைப் போடப்போவது இல்லை" எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி " இதனால் இழப்பு ஏற்படாது என அமைச்சர் கூறியுள்ளார். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை உயர்த்துமாறு கூறியபோது அரசு அந்த நிதியைக் கொடுத்தது. அமைச்சரின் வார்த்தை கடந்து செல்லக் கூடியது அல்ல" எனத் தெரிவித்தார்.

"ஆண்டுவாரியாக வருமானம், ஆண்டுவாரியாக செலவு, ஆண்டுவாரியாக செலுத்திய வட்டி ஆகியவற்றைக் கூறினால் 34 ஆயிரம் கோடி இழப்பு எப்படி வந்தது எனத் தெரியும். அமைச்சர் சொல்லாவிட்டால் சொல்ல வைப்போம்" எனவும் செந்தில் பாலாஜி கூறினார்.

செமி கண்டக்டர் தொடர்பான ஒன்பது டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த செந்தில் பாலாஜி, "மின்வாரியத்தில் யார் வேண்டுமானாலும் ஒப்பந்தம் கோரலாம். அதில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்" எனப் பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசும்போது, "மின்வாரியத்தில் கொள்முதல், பணி நியமனங்கள், பணி உயர்வு ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் நடந்தன. அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை" என்கிறார்.

தி.மு.க அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு வெள்ளை அறிக்கையை த.வெ.க அரசு வெளியிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு