உத்தர பிரேதசத்தில் 'ஒரு லிட்டர் கோமியம் 10 ரூபாய்' - விவசாயிகள் பயனடைவது எப்படி? எதிர்ப்பு ஏன்?

உத்தர பிரேதசத்தில் 'ஒரு லிட்டர் கோமியம் 10 ரூபாய்' - விவசாயிகள் பயனடைவது எப்படி? எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கௌரவ் குல்மோஹர்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் கோமியத்தை ஒரு லிட்டர் 10 ரூபாய் என்ற விலையில் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாட்டு கோமியத்தில் இருந்து இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் இந்த முன்முயற்சி திட்டத்தை விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு ஒன்று புலந்த்ஷஹரில் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும், இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று அரசு கூறுகிறது.

இந்தத் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள சமாஜ்வாதி கட்சி, உத்தர பிரதேச அரசு பசுவின் பெயரால் மக்களை ஏமாற்றியுள்ளதாகக் விமர்சித்துள்ளது. "ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் நிலையில் அரசு அதில் கவனம் செலுத்தவில்லை" என்றும் அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுடனும் அந்தக் கட்சி தொடர்புபடுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சி இதை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நடவடிக்கை எனக் கூறியுள்ள நிலையில், புதிய முயற்சிகளுக்கு எதிராக செயல்படுவது சமாஜ்வாதி கட்சியின் இயல்பு என்று பாஜக விமர்சித்துள்ளது.

இந்தத் திட்டம் இதுவரை உத்தர பிரதேசம் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை. இது புலந்த்ஷஹர் மாவட்டத்தின் ச்யானா தாலுக்காவின் நர்சைனா கிராமத்தில் தொடங்கப்பட்டு, அதைச் சுற்றியுள்ள சுமார் 15 கிராமங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முயற்சி தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

புலந்த்ஷஹரில் இந்த முயற்சி எப்படி தொடங்கியது?

புலந்த்ஷஹரில் இந்த முன்முயற்சி திட்டம், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள "நர்சைனா ஆர்கானிக் ஃபார்மர் புரொட்யூசர் கம்பெனி லிமிடெட்" மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த முயற்சி, அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான பிரவீன் குமார் தலைமையில் நடத்தப்படுகிறது.

"இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் 15 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோமியம் சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மகளிர் குழுக்களிடம் இருந்து கோமியம் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. சுமார் 300 பெண்கள் இதில் இணைந்துள்ளனர். அவர்கள் தினமும் 8 முதல் 10 லிட்டர் வரை மாட்டு கோமியத்தை சேகரிக்கின்றனர்" என்று பிரவீன் குமார் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் கோமூத்திரத்திலிருந்து உரமும் பூச்சிக்கொல்லியும் தயாரிக்கும் முன்முயற்சி திட்டம் நடத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Praveen Kumar

படக்குறிப்பு, உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் மாட்டு கோமியத்தில் இருந்து உரமும் பூச்சிக் கொல்லியும் தயாரிக்கும் முன்முயற்சித் திட்டம் செயல்படுகிறது.

தினமும் சுமார் 500 லிட்டர் கோமியம் சேகரிக்கப்படுவதாகவும், இதன் மூலம் கிராமப்புற பெண்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் கோமியம் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் பல்வேறு மூலிகைகளைச் சேர்த்து காய்ச்சி, திரவம், பொடி, துகள்கள் ஆகிய வடிவங்களில் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதுகுறித்துப் பேசிய பிரவீன் குமார், "செயலாக்கத் தொழிற்சாலைக்காக வாடகைக்கு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சுமார் 6000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 5 தொழில்நுட்ப நிபுணர்களும் 25 தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம்" என்றார்.

கோமிய உரம் குறித்து அறிவியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரவீன் குமார், "நான் தாவர இனப்பெருக்க துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். நாங்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கோமிய அடிப்படையிலான பூச்சிக் கொல்லியை தெளித்தால் செடிகளில் நீண்ட காலத்திற்கு பூஞ்சைத் தாக்குதல் ஏற்படுவதில்லை" என்றார்.

இந்தத் திட்டம் கிராமப்புற பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் வருமானத்தை அதிகரிக்கும் என எஃப்பிஓவின் பிரவீண் குமார் கூறுகிறார்.

பட மூலாதாரம், Praveen Kumar

படக்குறிப்பு, இந்தத் திட்டம் கிராமப்புற பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் வருமானத்தை அதிகரிப்பதாக என எஃப்பிஓவின் பிரவீன் குமார் கூறுகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"இந்தத் தலைப்பில் பந்தா வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படவில்லை. ஆனால் இலக்கியங்கள் அடிப்படையிலான பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் உயிரியல் பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சைநாசினி தயாரிப்புகளுக்கான இயற்கைக் கூறுகளாக கோமியத்தை பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாகத் தெரிய வருகிறது" என்று பந்தா வேளாண் பல்கலைக்கழகத்தின் கால்நடை உடலமைப்பியல் துறையின் இணைப் பேராசிரியர் ஷைலேந்திர சௌராசியா பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

"குறிப்பாக வேப்பம், மெலியா அசடெராக் போன்ற தாவரச் சாறுகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது பல வேளாண் பூச்சிகள் மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராக இது சிறப்பாகச் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது" என்றார் அவர்.

"ஐசிஏஆர்-என்சிஐபிஎம் மற்றும் ஐஏஆர்ஐ ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட கள ஆய்வில், கோமியம் அடிப்படையிலான தாவரச் சேர்மங்கள் கலவையைப் பயன்படுத்தியபோது தக்காளிப் பழங்களைத் துளைக்கும் பூச்சிகள் சுமார் 70-80% கட்டுப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது" என அவர் விளக்கினார்.

"அத்துடன், விளைச்சலிலும் முன்னேற்றம் காணப்பட்டது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கூறாக இதைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது."

தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Praveen Kumar

படக்குறிப்பு, தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்கப்படுகின்றன.

கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை

உத்தர பிரதேச மாநில கௌசேவா ஆணையத்தின் தலைவர் ஷ்யாம் பிஹாரி குப்தா, இந்தத் திட்டத்தை இயற்கை விவசாயத்தையும் ரசாயனமற்ற விவசாயத்தையும் ஊக்குவிக்கும் அரசின் உறுதியான நடவடிக்கையாக விவரித்தார்.

அவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதில் இருந்து ரசாயன உரங்கள், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களில் நெருக்கடி உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கிராமங்களில் கிடைக்கும் இயற்கை வளங்களை பயன்படுத்தி உயிரியல் உரங்களையும் இயற்கையான பூச்சிக் கொல்லிகளையும் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.

"குஜராத்தின் பனாஸ்காந்தாவில் 10,000 லிட்டர் திறன் கொண்ட கோமிய சேகரிப்பு மையம் உள்ளது. அங்கு பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. அது வெற்றிகரமான முயற்சி."

மேலும் விளக்கிய அவர், "இந்தத் திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் அரசின் முழுமையான ஆதரவு உள்ளது. புலந்த்ஷஹர் தொழிற்சாலையில் தயாராகும் இயற்கை உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன" என்றார்.

ஆனால் கோமியம் வாங்கும் முயற்சி இதற்கு முன்பே சத்தீஸ்கரில் நடைமுறைக்கு வந்திருந்தது. அங்கு பூபேஷ் பகேல் தலைமையிலான அரசு "கோதன் நியாய்" திட்டத்தின் கீழ் மாட்டுச்சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கும், கோமியத்தை லிட்டருக்கு 4 ரூபாய்க்கும் வாங்கத் தொடங்கியது.

அவற்றில் இருந்து உயிரியல் உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் தயாரிக்கப்பட்டன. வேளாண் நிபுணர் தேவீந்தர் சர்மா பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "கோமியம் விவசாயத்தில் பயன்படுத்தப்படுவது புதிதல்ல. அதை மக்கள் முன்பே வாங்கி வந்துள்ளனர். விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பது நல்ல செய்திதான். ஆனால் எஃப்.பி.ஓ தொழிற்சாலையில் எந்தச் செயல்முறை மூலம் உரம் அல்லது பூச்சிக்கொல்லி தயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்க்காமல் கருத்து சொல்வது சரியல்ல" என்றார்.

இந்தத் திட்டம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்று சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது.

பட மூலாதாரம், Praveen Kumar

படக்குறிப்பு, இந்தத் திட்டம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்று சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது.

'தேர்தலுக்கு முன் மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி'

ஆனால் இந்த திட்டத்தை திசைதிருப்பும் முயற்சி என சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சந்த் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் எதையும் செய்து காட்டாத பாஜக, பசுவின் பெயரால் மக்களை ஏமாற்றியுள்ளது" எனத் தெரிவித்தார்.

"மாநிலத்தில் எந்தத் தேர்வோ, நியமனமோ வினாத்தாள் கசிவு மற்றும் தடைகளின்றி நடைபெற்றதில்லை. பாஜக தற்போது வினாத்தாள் கசிவு மற்றும் ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரங்களில் சிக்கியுள்ளது. அதனால் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இத்தகைய விஷயங்களை முன்வைக்கிறது."

மேலும், "இன்று மாநிலத்தில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. விவசாயிகள் அதை விற்பனை செய்வதற்குப் பதிலாக குப்பையில் வீசுகிறார்கள். அமெரிக்கா சென்று விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக ஒப்பந்தம் செய்த பாஜக அரசிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?" என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, சமாஜ்வாதி கட்சி புதிய முயற்சிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறினார்.

"ஒரு காலத்தில் சமாஜ்வாதி கட்சியால் பாதுகாக்கப்பட்ட கும்பல்கள் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றின. விவசாயிகளின் விளைபொருட்கள் வாங்கப்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கான பணம் வழங்கப்படவில்லை. அவர்கள் சர்க்கரை ஆலைகளைச் சுற்றி அலைய வேண்டியிருந்தது. ஆனால் இன்று உத்தர பிரதேசத்தின் நிலை மாறியுள்ளது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுகின்றனர். ஒரு வாரத்திற்குள் பணம் கிடைக்கிறது" என்று ஆனந்த் துபே பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

அத்துடன், "விவசாயிகள் எப்படி வலுப்பெறலாம், பசு வளர்ப்பை ஊக்குவிப்பது, ரசாயன உரங்களின் மீதான சார்பைக் குறைக்கலாம், குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெறலாம் என்பதற்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

ஜூலை 2022-ல் அப்போதைய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கோமூத்திர கொள்முதல் திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட படம்

பட மூலாதாரம், ALOK PRAKASH PUTUL

படக்குறிப்பு, ஜூலை 2022இல் அப்போதைய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கோமிய கொள்முதல் திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட படம்

சத்தீஸ்கரில் கோமியம் கொள்முதல்

ஜூலை 2022இல் சத்தீஸ்கர் மாநில அரசு கோமிய கொள்முதல் திட்டத்தைத் தொடங்கியது. அப்போது கோமியத்தின் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

அப்போதைய முதலமைச்சர் பூபேஷ் பகேல், மகளிர் சுய உதவிக் குழுவிடம் 5 லிட்டர் கோமியத்தை விற்பனை செய்து இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அதற்குப் பதிலாக அந்த பெண்கள் சுய உதவிக்குழு அவருக்கு 20 ரூபாய் வழங்கியது. மாநிலத்தின் பல பஞ்சாயத்துகளில் மாடுகள் மற்றும் காளைகளுக்காக அமைக்கப்பட்ட கால்நடை கொட்டகைகளில் இருந்து கோமியம் கொள்முதல் செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டது.

சத்தீஸ்கரில் இதற்கு முன் மாட்டுச்சாணம் கொள்முதல் செய்யும் திட்டமும் செயல்பட்டது. சத்தீஸ்கருக்கு பிறகு ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களும் மாட்டுச்சாணம் வாங்கும் திட்டங்களை வகுத்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு