தொங்கு சட்டப்பேரவையில் சவாலான சபாநாயகர் பதவியில் ஜேசிடி பிரபாகரின் பின்னணி

தவெக, விஜய், ஜேசிடி பிரபாகர், சபாநாயகர்

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஜே சி டி பிரபாகர் 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். அவர் எவ்வித எதிர்ப்புகளுமின்றி சபாநாயகராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுமார் 5 நாள் இழுபறிக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்றது. ஆளுநர் கேட்டுக் கொண்டபடி, நாளைக்குள் (மே 13 புதன்கிழமை) சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அரிதானதாக அமைந்துள்ள தொங்கு சட்டப்பேரவையில் பல்வேறு சவால்களோடு சபாநாயகர் இருக்கையில் ஜே.சி.டி பிரபாகர் அமர்ந்துள்ளார்.

'அரசியலில் தன்னை நிலைபெறச் செய்தவர் எம்ஜிஆர்' என்று சட்டப்பேரவையில் அவர் இன்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம்.

ஜேசிடி பிரபாகரின் அரசியல் பயணம்

தவெக, விஜய், ஜேசிடி பிரபாகர், சபாநாயகர்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, முதல் தேர்தலுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் ஊன்றுகோலுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜேசிடி பிரபாகர்

எம்.ஜி ஆர் மீதான பற்றால் அரசியலுக்கு வந்த ஜேசிடி பிரபாகர், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கியதும், அவருடனே இணைந்து செயல்பட்டார்.

1980-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டாலும் தளராமல், ஜேசிடி பிரபாகர் ஊன்றுகோலுடன் வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தான் சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அடுத்த தேர்தலில் (1984) தோல்வியடைந்தார்.

எம்.ஜி. ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்த அதிமுகவில் ஜானகி அணியில் இருந்த அவர் 1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தொடர் தோல்விகளுக்கு பிறகு மீண்டும் 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை வென்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் ஜேசிடி. அதன் பிறகு இரண்டு தோல்விகளுக்குப் பிறகு தற்போதைய சட்டபேரவைக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தேர்வான அவர், சபாநாயகராகவும் பதவியேற்றுள்ளார்.

தவெக, விஜய், ஜேசிடி பிரபாகர், சபாநாயகர்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மறைந்த எம்ஜிஆருடன் ஜேசிடி பிரபாகர்

தவெக சொல்வது என்ன?

"அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் சபாநாயகர் பொறுப்பு வழங்கியது அவருக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் என்கிறார்" தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தவெக சார்பாக ஆயிரம் விளக்கில் போட்டியிட்டு பிரபாகர் பெற்ற வெற்றியை சென்னையே திரும்பி பார்த்தது" என்று அவர் கூறினார்.

அரசியலில் மிகுந்த அனுபவம் பெற்ற ஜேசிடி பிரபாகருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் சபாநாயகராக தேர்வு செய்ய காரணம் அவரது சாதுர்யம்தான் என்று குறிப்பிட்ட அவர், "சட்டப்பேரவையை நடுநிலையோடு கொண்டு செல்ல சரியான நபர், அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்ற காரணத்தால் ஜேசிடி பிரபாகருக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த அங்கீகாரம்தான் சபாநாயகர் பொறுப்பு" என்று தெரிவித்தார்.

தவெக, விஜய், ஜேசிடி பிரபாகர், சபாநாயகர்

பட மூலாதாரம், TNDIPR

'சபாநாயகர் பதவிக்கு சரியான தேர்வு'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த ஜேசிடி பிரபாகரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்தேன்" என்கிறார் முன்னாள் அமைச்சர் எச். வி ஹண்டே.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், அரசியலில் தவறு செய்பவர்களுக்கு மத்தியில் யாராலும் எவ்வித குறையும் சொல்ல முடியாத நபராக இருப்பவர் ஜேசிடி பிரபாகர்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "சபாநாயகர் பதவி மிகவும் கடினமானது, நான் உறுப்பினராக இருந்த காலத்தில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கருத்துகளை சொல்ல அதிக வாய்ப்புகள் வழங்குவார்கள் , வெளிநடப்பு என்ற ஒன்று அப்போது இல்லை, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும். ஆனால் சமீபகாலமாக எதிர்க்கட்சிகளுக்கு போதியவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

"ஜேசிடி பிரபாகரிடம் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றர். முதலமைச்சர் சரியான நபரை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டது என் மகன் தேர்வு செய்யப்பட்டதை போல் உணர்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எச்.வி ஹண்டே

பட மூலாதாரம், HVHande/X

படக்குறிப்பு, 99வது வயதில் வாக்கு செலுத்திய முன்னாள் அமைச்சர் எச்.வி ஹண்டே (கோப்புப்படம்)

சவால் நிறைந்த சபாநாயகர் பதவி

'முதல் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரபலமான எம் எல் ஏவாக இருந்தவர் ஜே.சி.டி பிரபாகர்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், 1980 தேர்தலில் திமுகவின் பிரபலமான வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றதால் மிகவும் பிரபலமான எம் எல் ஏ வாக இருந்த ஜேசிடி பிரபாகர் ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்" என்கிறார் அவர்.

எம்.ஜி. ஆர் அறிமுகம் செய்து அதிமுகவில் இருந்தாலும் அவரது மறைவுக்கு பிறகு ஜானகியை ஆதரித்து பின்னாளில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான நபராக இருந்தார், ஆனால் ஒரு கட்டத்தில் அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்" என்று அவர் கூறினார்.

"அதன் பிறகு மூப்பனாருடன் சில காலம் பயணித்த அவர், மீண்டும் அதிமுகவில் இணைந்து 2011ல் போட்டியிட வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்றார்." என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும் பேசிய அவர், சபாநாயகர் பொறுப்பேற்றதும் அவருக்கு காத்திருக்கும் முதல் சவால் நம்பிக்கை தீர்மானத்தை கையாள்வது, அதிலும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கம் சூழலில் அதனை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதே அவருக்கான முதல் சவாலாக இருக்கும், அதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஜேசிடி பிரபாகர்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மறைந்த ஜெயலலிதாவுடன் ஜேசிடி பிரபாகர்

குடும்ப உறுப்பினர்கள் சொல்வது என்ன?

குடும்பத்துடன் செலவு செய்யும் நேரத்தின் அருமையை என் தாய் மரணத்திற்கு பிறகு நன்கு உணர்ந்தவர் என் தந்தை என்கிறார் ஜேசிடி பிரபாகரின் மகள் மருத்துவர் ஆதிரா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் இருக்கும் என் தந்தைக்கு, கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் யார் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர்" என்று அவர் கூறினார்.

ஜேசிடி பிரபாகரின் மகள் மருத்துவர் ஆதிரா.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ஜேசிடி பிரபாகரின் மகள் மருத்துவர் ஆதிரா.

பொதுவாழ்வில் இருப்பதால் அதிக நேரம் செலவு செய்வதை காட்டிலும், ஆக்கப்பூர்வமான நேரத்தை குடும்பத்துடன் செலவு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவர் என்று கூறிய ஆதிரா, "அரசியலில் இருப்பதால் பொதுவெளியில் சொல்லப்படும் எதிர்மறை கருத்துக்கள் எங்கள் குடும்பத்தை கடுமையாக பாதிக்கும் .ஆனால் அவர்கள் கருத்துக்களை அவர்கள் சொல்கிறார்கள் நாம் செய்யும் வேலை நம் மீதான அவர்களது பார்வை மாற்றும் என்று சொல்லி எதையும் நேர்மறையாக எடுத்துகொண்டு கடந்து செல்வார் என் தந்தை" என்று அவர் கூறினார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு