பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 4-வது தோல்வி: ஷ்ரேயாஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகிறதா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், நிதிஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தொடரின் முதல் ஏழு போட்டிகளில் தோல்வியே பார்க்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இறுக்கமாய் பற்றி அமர்ந்திருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாய் பஞ்சாப் தகுதிபெற்றுவிடும் என்றுதான் கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தார்கள். ஆனால் இரண்டு வாரங்கள் கழிந்தபின்னும் புள்ளிப்பட்டியலில் அதே 13 புள்ளிகளோடு நான்காவது இடத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது அணி. பஞ்சாபை விட ஒரு புள்ளி அதிகமாக மூன்று அணிகளும் ஒரு புள்ளி குறைவாக இரண்டு அணிகளும் இருப்பதால் இப்போது ப்ளே ஆஃப் செல்வதும் அவ்வளவு எளிதான பயணமாக இருக்காது.
பஞ்சாபின் இந்த தடுமாற்றத்துக்கு மிக முக்கியக் காரணம் ஃபீல்டிங். இதுவரை 16 கேட்ச்களை விட்டிருக்கிறார்கள் பஞ்சாப் அணி வீரர்கள். அதில் ஐந்தை சஷாங் சிங் ஒருவர் மட்டுமே விட்டிருக்கிறார். இந்தத் தொடரில் அதிக கேட்ச்கள் விட்ட அணிகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது பஞ்சாப்.

பட மூலாதாரம், ANI
மறுபக்கம், உலகத்தர பேட்ஸ்மேன்கள், இந்தியாவின் சிறந்த இரண்டு ஸ்பின்னர்கள், சர்வதேச அளவில் கலக்கும் பவுலர்கள் என எல்லாமும் இருந்தும் ஆடிய 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட தவறவிடக் கூடிய நிலையில் இருந்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டி நேற்று (மே 11) தரம்சாலாவில் நடந்தது.
தரம்சாலாவில் 2023-லிருந்து நடந்திருக்கும் ஐந்து ஐ.பி.எல் போட்டிகளில் நான்கில் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது. எனவே, டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், டெல்லி கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
அந்த அணியில் பொரெல், மில்லர், நபி, மாதவ் திவாரி, சஹில் பராக் என ஐந்து வீரர்கள் இந்தப் போட்டிக்காக உள்ளே வந்திருந்தார்கள். பஞ்சாப் அணியில் பெர்குசனுக்கு பதிலாக பென் ட்வார்ஷுயிஸ் பஞ்சாப் அணிக்காக தன் முதல் போட்டியில் களம் கண்டார்.
ஆர்ப்பரித்த பஞ்சாப் டாப் ஆர்டர்
டெல்லிக்காக முதல் ஓவரை போட வந்தது சர்வதேச அளவில் எல்லா பேட்ஸ்மேன்களையும் பதறவைக்கும் மிட்செல் ஸ்டார்க். எதிர்ப்புறம் பேட்டிங் செய்தது 24 வயதேயான ப்ரியான்ஷ் ஆர்யா. துளியும் சலனமின்றி முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கினார் ஆர்யா. நான்காவது பந்தில் மற்றுமொரு சிக்ஸர். அந்த ஒரு ஓவரில் ஆர்யா எடுத்தது மட்டும் 13 ரன்கள். மொத்தமாய் அந்த ஓவரில் 22 ரன்கள். இதுவரை டி20 போட்டிகளில் 93 முறை முதல் ஓவர் வீசியுள்ளார் ஸ்டார்க். அதில் அதிக ரன்கள் கொடுத்திருப்பது இந்த போட்டியில்தான். இந்த மூன்றாண்டுகளில் இளம் இந்திய வீரர்களின் வரவு எப்படி டி20 கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியுள்ளது என்பதற்கு ஸ்டார்க்கின் இந்த ஓவர் ஒரு உதாரணம்.
நபி வீசிய இரண்டாவது ஓவரில் 12 ரன்கள். இங்கிடி வீசிய மூன்றாவது ஓவரில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 17 ரன்கள். மூன்றே ஓவர்களில் ஐம்பது ரன்களை கடந்தது டெல்லி. அடுத்த மூன்று ஓவர்களில் டெல்லி பவுலர்கள் சரியான லென்த்தில் பந்துவீசியதால் ரன்கள் ஓரளவுக்கு மட்டுப்பட்டன. ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 72/0.
கொஞ்சம் தடுமாற்றத்தோடு ஆடிக் கொண்டிருந்த ப்ரப்சிம்ரன் சிங் ஏழாவது ஓவரின் கடைசி பந்தில் முகேஷ் குமாரிடம் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் அரைசதம் எடுத்த ஆர்யாவும் அவுட். களத்திலிருந்து ஷ்ரேயாஸ் ஐயரும் கூப்பர் கொனல்லியும் அதன்பின் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் ஆறு ஓவர்களில் 12-ஆக இருந்த டெல்லி அணியின் ரன்ரேட் அடுத்த பத்து ஓவர்களில் பத்தாக குறைந்தது. ஸ்கோர் 16 ஓவர்கள் முடிவில் 162/2.
17வது ஓவரில் முகேஷ் குமார் வெறும் ஆறு ரன்களை மட்டுமே விட்டுத்தர, கடைசி மூன்று ஓவர்களில் 200 ரன்களை கடந்தால் மட்டுமே இந்த பிட்ச்சில் சமாளிக்க முடியும் என்பதை உணர்ந்து அதிரடி காட்டினார்கள் பேட்ஸ்மேன்கள். அதனால் கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் எடுத்தது பஞ்சாப். ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 210/5. இறுதிக்கட்டத்தில் சூர்யான்ஷ் ஷெக்ட்டே 8 பந்துகளில் 21 ரன்கள் அடித்தது அணியை இந்த இமாலய இலக்குக்கு நெருக்கமாய் அழைத்துச்சென்றது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அக்சர் படேல் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை. டெல்லி சார்பில் பந்துவீசிய ஐந்து பவுலர்களுமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான். கடைசியாக ஐ.பி.எல்லில் இப்படி ஒரு ஓவர் கூட ஸ்பின்னை பயன்படுத்தாத ஆட்டம் நிகழ்ந்தது பத்தாண்டுகளுக்கு முன். பெங்களூரு அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் விளையாடிய போது.

பட மூலாதாரம், ANI
இலக்கைத் துரத்திய டெல்லி
தரம்சாலாவில் 200 ரன்களை இதுவரை எந்த அணியும் சேஸ் செய்ததே இல்லை. இந்த மைதானத்தில் ஐ.பி.எல்லில் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்டிருக்கும் இலக்கு 193. 2010-ல் தோனி ஆக்ரோஷமாய் சிக்ஸர் அடித்து தன் ஹெல்மெட்டை ஓங்கிக் குத்திக்கொள்வாரே... அந்த வரலாற்று சிறப்புமிக்க ஆட்டம்தான்.
இந்த தரவுகள் எல்லாம் டெல்லி அணி பேட்ஸ்மேன்களையும் அழுத்தத்தில் தள்ளியதோ என்னவோ, அடுத்தடுத்து அதிரடியாய் ஆட முற்பட்டு அவுட்டாகி வெளியேறினார்கள். யாஷ் தாக்கூர் வீசிய இரண்டாவது ஓவரில் க்ளீன் போல்டானார் அபிஷேக் பொரேல். அர்ஷ்தீப் வீசிய மூன்றாவது ஓவரில் யான்சனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ராகுல்.
பந்து நன்றாக ஸ்விங் ஆகவே, பவர்ப்ளேவுக்குள் அர்ஷ்தீப்புக்கு மூன்றாவது ஓவரையும் கொடுத்தார் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். கை மேல் பலன். பராக் 13 ரன்களில் வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 47/3. இப்போது வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் 11.71. ஆனால் அணியின் ரன்ரேட் 7.83.
இந்த சீசனில் பல ஆட்டங்களில் பவர்ப்ளே முடிவிலேயே வெற்றி தோல்விகள் முடிவாகியிருக்கின்றன. இந்த ஆட்டத்திலும் பஞ்சாபின் வெற்றி ஏறக்குறைய முடிவாகியிருந்தது. ஆனால் களத்தில் இருந்த டெல்லி பேட்ஸ்மேன்களான ஸ்டப்ஸ்ஸும் அக்சர் படேலும் விடாப்பிடியாய் போராடினார்கள். ட்வார்ஷுயிஸ் வீசிய ஏழாவது ஓவரில் மட்டும் 16 ரன்கள். ஆனால், இந்த போக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஒன்பதாவது ஓவரில் பேக்வர்ட் பாயிண்ட்டில் இருந்து குறிபார்த்து எறிந்து ஸ்டப்ஸ்ஸை ரன் அவுட்டாக்கினார் கூப்பர் கொனல்லி.
சில ஆட்டங்களுக்கு முன் சிங்கிள் எடுக்க மறுத்து அதனால் இரண்டு புள்ளிகளையே பறிகொடுத்த மில்லர் ஆறாவது வீரராக களமிறங்கினார். முன்பு செய்த தவறை சரிசெய்யும்விதமாக பொறுப்பாக ஆடினார். மறுபக்கம் இந்த சீசனில் இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட சொல்லிக் கொள்ளும்படி ஆடியிராத அக்சர் படேல். ஒருவகையில் இவ்விரண்டு வீரர்களுக்குமே இந்தப் போட்டி ஒரு மீட்சி தான். அடுத்த நான்கு ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தது இந்த இணை.

பட மூலாதாரம், ANI
ஸ்டாய்னிஸ் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்த கையோடு அவுட்டானார் அக்சர் படேல். இப்போது களத்தில் அஷுதோஷ் சர்மா. இருவரும் யான்சன் வீசிய 16வது ஓவரை பதம் பார்த்தார்கள். 15 ரன்கள். ஸ்கோர் 158/5. நான்கு ஓவர்களில் 53 ரன்கள் தேவை எனும் நிலை. ட்வார்ஷுயிஸ் வீசிய 17வது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அரைசதம் கடந்த மில்லர் ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அஷுதோஷ் சர்மாவின் அதிரடியில் அடுத்த ஓவரில் 19 ரன்கள்.
இப்போது 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை. அஷுதோஷ் டீப் தேர்ட் பக்கம் ஒரு சிக்ஸர் அடித்தார். அதே ஓவரில் யஷ் தாக்கூர் ஒரு நோ பால் வீச, அது பவுண்டரிக்கு பறந்தது. அடுத்த பந்தே சிக்ஸர். வெற்றிகரமாய் இலக்கை அடைந்தது டெல்லி. பஞ்சாப் அணியும் கடைசிவரை ஸ்பின்னை பயன்படுத்தவே இல்லை.
இந்த சீசனில் தன் முதல் போட்டியில் ஆடி இரண்டு விக்கெட்களை வீழ்த்திய மாதவ் திவாரி ஆட்டநாயகன். இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இன்னும் தக்கவைத்திருக்கிறது டெல்லி. மறுபுறம் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்று மூன்றாவது வாரமாக அதே 13 புள்ளிகளில் இருக்கிறது பஞ்சாப்.
கடந்த முறை இந்த இரண்டு அணிகளும் மோதியபோது டெல்லி வைத்த இலக்கு 265. அதை 18.5 ஓவர்களிலேயே அடைந்து ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்கிற பெருமையை பெற்றது பஞ்சாப் அணி. பழிதீர்க்கும் விதமாக 212 ரன்களை சேஸ் செய்து இந்த மைதானத்தில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது டெல்லி.
இந்தப் போட்டியில் இரு அணிகளிலும் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. டெல்லி அணியின் மிடில் ஆர்டர் ஃபார்முக்கு வந்திருக்கிறது. முக்கியமாக அக்சர் படேல். பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பலமடங்கு முன்னேறியுள்ளது. அதேபோல் ஆடிய பத்து போட்டிகளில் ஏழில் எகானமி பத்தை தாண்டி வைத்திருந்த அர்ஷ்தீப் இந்தப் போட்டியில் 5.25 என்கிற சிக்கனமான எகானமியில் பந்துவீசி இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்த நேர்மறை விளைவுகளோடு அடுத்தடுத்த ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் போராடினால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































