தாய், சகோதரிகள் அனுபவித்த சித்ரவதையை அறிந்ததும் தந்தையை கொன்ற மகன் - நாடே கொந்தளிப்பது எதற்காக?

பட மூலாதாரம், Sara Martínez
- எழுதியவர், வாலண்டினா ஓரோபெசா
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தங்கள் தந்தையால் பல ஆண்டுகளாக அனுபவித்த கொடுமைகள் குறித்து அவரிடம் நேரில் சென்று பேச வேண்டாம் என்று 28 வயதான மோய்சஸ்ஸிடம் அவரது சகோதரி சாரா மார்டினெஸ் கெஞ்சினார்.
2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் உருகுவேயின் தலைநகரான மான்டிவீடியோவின் புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. தனது தந்தை கார்லோஸ், தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் குழந்தைகளாக இருந்தபோது பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தகவலை மோய்சஸ் அப்போதுதான் அறிந்திருந்தார்.
அடுத்த நாள், மோய்சஸ் தனது தந்தையை 14 முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இரண்டு நாட்களாக அவரது சடலத்தின் அருகிலேயே காத்திருந்த அவர், அதன் பிறகு காவல்துறையிடம் சரணடைந்தார்.
தற்போது, மோய்சஸ் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையை உருகுவே மக்கள் யூடியூப் நேரலை மூலம் பின்தொடர முடிந்தது, இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மோய்சஸுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவரது உடன்பிறந்தவர்களும் தாயும் நம்புகிறார்கள். அவரது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இப்போது போராடி வருகின்றனர்.

பட மூலாதாரம், Sara Martínez
தற்போது 27 வயதாகும் சாரா, அந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுத்த வலிமிகுந்த உரையாடல் குறித்து கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி, பிபிசியிடம் பேசினார்.
பல ஆண்டுகளாக கார்லோஸ், மோய்சஸையும் அடித்துத் துன்புறுத்தியதை அப்போதுதான் தெரிந்து கொண்டதாக அவர் கூறுகிறார்.
"அவர் சுமந்து கொண்டிருந்த மன உளைச்சலின் அளவை நான் முழுமையாக ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை" என்று கூறும் அவர், "விசாரணையின் போதுதான் நாங்கள் பல விஷயங்களைக் கண்டறிந்தோம்" என்றார்.
சாராவின் கூற்றுப்படி, மோய்சஸும் அவரது சகோதரிகளும் தங்கள் தந்தையைக் கண்டு மிகவும் பயந்தனர்.
"அவர் எங்கும் நிறைந்திருப்பவர் போன்ற ஒரு பிம்பமாக இருந்தார். அவர் அங்கில்லாத போதும், ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தினார்" என்று சாரா கூறுகிறார்.
"அதிகாலையில் அவர் எழுந்து எங்களைக் குளியலறைக்கு அழைத்துச் சென்று, ஷவரைத் திறந்து விட்டு, பல மணி நேரம் எங்களைக் குளிர்ந்த நீரின் அடியில் நிற்க வைப்பார்."
தன்னையும் தனது மூத்த சகோதரி ஆனாவையும் கார்லோஸ் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறுகிறார் சாரா.
ஒவ்வொரு முறை துன்புறுத்திய பிறகும், அவரது தந்தை அழுது மன்னிப்பு கேட்பார் என்றும், அவருக்குப் பிடித்தமான 'அல்பஜோர்' ( சாக்லேட் மற்றும் கேரமல் கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு பிஸ்கட்) என்ற இனிப்பை வாங்கி வருவார் என்றும் அவர் மோய்சஸிடம் கூறுகிறார்.
"இப்போது என்னால் அவற்றைச் சாப்பிடக் கூட முடிவதில்லை" என்று கூறும் அவர், "நான் குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன். அல்பஜோர் சாப்பிடுவதற்காக அவர் என்னைத் துன்புறுத்த நான் அனுமதிப்பது போன்ற உணர்வு எனக்கு இருந்தது"என்கிறார்.
தனது தாய் வேலைக்குச் சென்றிருந்தபோது, இரவில் அவரது தந்தை இழைத்த சுமார் 60 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை தாம் எண்ணி வைத்திருந்ததாகச் சாரா கூறுகிறார்.
"என்றாவது ஒருநாள் இதைப் பற்றிப் பேசத் துணிவு வரும் என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டதால், நான் அவற்றை எண்ணிக் கணக்கு வைத்திருந்தேன்."

பட மூலாதாரம், Uruguayan Press Association
தனது 12 வயதில், ஆனாவை கார்லோஸ் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதைக் கண்ட பிறகு, சாரா இதைப் பற்றி வெளியே பேசினார். தனது பள்ளி நிர்வாகத்திடம் தந்தையைப் பற்றிப் புகார் அளித்தார்.
"ஒரு காகிதத்தில் 'பாலியல் வன்கொடுமை' என்று எழுதியது எனக்கு நினைவிருக்கிறது, அதை அப்போது எனது நெருங்கிய நண்பரிடம் கொடுத்தேன்" என்று கூறும் அவர், பின்னர் மற்றொரு வகுப்புத் தோழர் அந்தத் தாளைத் தலைமை ஆசிரியையிடம் கொண்டு சென்றதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் நடந்தவை, குறிப்பாகத் தடய அறிவியல் நிபுணர்களின் விசாரணைகள் தொடர்ச்சியான மனவேதனை அளிக்கும் அனுபவங்களாக இருந்ததாக சாரா விவரிக்கிறார்.
அந்த விசாரணையைத் தொடர்ந்து, கார்லோஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஓராண்டு மட்டுமே சிறையில் இருந்தார்.
"என்னைப் பொறுத்தவரை அது மிகக் குறைவான தண்டனை, ஏனென்றால் எனது தந்தை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக என்னைத் துன்புறுத்தினார் என்பது எனக்குத் தெரியும்" என்று சாரா கூறுகிறார்.
"என் தந்தை ஒரு அரக்கன். அவர் பள்ளியில் கூறிய கதையில், அவரது தந்தை அவரது சகோதரியைத் துன்புறுத்தியதால் டீன் ஏஜ் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய ஏழை, அப்பாவி மனிதராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டார்."
அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, கார்லோஸை மீண்டும் வீட்டிற்குள் நுழையத் தமது குடும்பத்தினர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், தான் டீன் ஏஜ் வயதில் இருந்தபோது பள்ளிக்கூடத்திற்கும், வளர்ந்து பெரியவரான பிறகு வேலை செய்யும் இடத்திற்கும் தனது தந்தை அடிக்கடி வந்து கொண்டிருந்ததாகச் சாரா கூறுகிறார்.

பட மூலாதாரம், Sara Martínez
தங்கள் குடும்பத்தில் யாரும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளின் அளவைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதே இல்லை என்று சாரா விளக்குகிறார்.
கார்லோஸ் சிறையிலிருந்து விடுதலையான பிறகும், அவருடனான உறவைத் தொடர மோய்சஸ் விரும்பியதாக சாரா கூறுகிறார்.
ஆனால், கார்லோஸ் தன்னை மிரட்டுவதாகத் தாய் மெர்சிடிஸ் பெரேரா கூறி, பல ஆண்டுகளாகத் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்தபோது, மோய்சஸ் உடனடியாகத் தனது சகோதரிகளைத் தேடிச் சென்று இது குறித்துப் பேசினார்.
அந்த உரையாடல்களுக்குப் பிறகுதான், அவர் தனது தந்தையைச் சுட்டுக் கொன்றதாக சாரா கூறுகிறார்.
"அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்கவும், விளக்கம் அளிக்கவும், இனி ஒருபோதும் எங்கள் முன்னால் வரவேண்டாம் என்று சொல்லவும் தான் தந்தையைப் பார்க்க மோய்சஸ் விரும்பினார்" என்று கூறும் அவர்,
"எங்கள் தந்தை எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுவதற்காக அன்று நான் மோயிடம் [மோய்சஸ்] பல விஷயங்களைக் கூறினேன். அவர் அங்கு செல்வதைத் தடுப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் அவர் சென்றார். அதன் பிறகுதான் அனைத்தும் நடந்தன"என்கிறார்.

பட மூலாதாரம், Sara Martínez
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போது, நீதிபதி மரியா நோயல் ஓட்ரியோசோலா, உருகுவே தண்டனைச் சட்டத்தின் 36-வது பிரிவின் கீழான நீதித்துறை மன்னிப்பை வழங்க முடியாது என்று விளக்கினார்.
"குடும்ப வன்முறையினால் ஏற்படும் தொடர் துன்பங்களால் உண்டாகும் தீவிர அதிர்ச்சியின்" கீழ் ஒரு கொலை நிகழும்போது மட்டுமே இந்த விதி பொருந்தும்.
கடந்த 15 ஆண்டுகளாக கார்லோஸ் மார்டினெஸைப் பற்றி யாரும் புகார் அளிக்காததால், அந்தக் குடும்பம் "முதன்மையான தீர்வாக எந்தப் பாதுகாப்பு அமைப்பையும் நாடவில்லை" என்று நீதிபதி கூறியதாக மோய்சஸின் வழக்கறிஞர் ரோட்ரிகோ ரே கூறுகிறார்.
மோய்சஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், குடும்ப வன்முறை வழக்குகளில் அரசின் பங்கு குறித்து உருகுவேயில் ஒரு தேசிய விவாதத்தைத் தூண்டியது.
இது உருகுவே அதிபர் யாமந்து ஓர்சி, ஆனா மற்றும் சாராவை ஒரு தனிப்பட்ட சந்திப்பிற்கு அழைக்கும் நிலைக்குக் கூட கொண்டு சென்றது.
தனது சகோதரர் கைது செய்யப்பட்ட நாளில் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, தந்தையின் உடலைத் தான் பார்க்கவில்லை என்று சாரா கூறுகிறார். அவரால் மோய்சஸையும் பார்க்க முடியவில்லை.
"வாக்குமூலம் அளிப்பதற்காக எங்களை அழைத்துச் சென்றபோது, எங்களால் பார்க்க முடியாத ஒரு அறையில் அவர் இருந்தார். ஆனால் அவர் எனக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அதில் 'இனி, நான் நிம்மதியாக அல்பஜோர் இனிப்பைச் சாப்பிடலாம்' என்று குறிப்பிட்டிருந்தார்"என்று கூறுகிறார் சாரா.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































