தவெகவுக்கு அதிமுகவில் ஒரு பிரிவு ஆதரவு: எடப்பாடி பழனிசாமி மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

அதிமுகவில் ஒரு பிரிவு தவெகவுக்கு ஆதரவு

பட மூலாதாரம், EPS

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசினார்.

"அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறது. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். தவெகவுக்கு குறிப்பாக முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்." என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், "தேர்தலுக்கு பிறகு கலந்தாலோசித்தபோது அதிமுகவின் பொதுச் செயலாளர் சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். திமுகவை எதிர்த்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறோம். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்த 'திமுகவின் ஆதரவுடன் அதிமுக என்னை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டுள்ளனர், அதனை நாம், ஒப்புக்கொள்ள வேண்டும்' என அவர் சொன்னபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை." என்றார்.

"நாங்கள் அதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். எப்படி இதை சொல்கிறார் என நினைத்தோம். திமுகவுடன் இணைந்தால் அதிமுக என்பதே இல்லாமல் போய்விடும் என்று எங்கள் கருத்தை சொன்னோம். இதை வேண்டாம் என கூறினோம். ஆனால், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்."

செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர்

"அதனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது, அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. அதிமுக புதிய முடிவை எடுக்க வேண்டும். புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும். புதிதாக கூட்டணியை அமைக்க வேண்டும்' என கூறினோம். அதன்படி, முதலமைச்சர் விஜயின் ஆட்சியை ஆதரிப்பதாக அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவெடுக்கப்பட்டது."

மேலும், சட்டப்பேரவை அதிமுக குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும், கொறடாவாக சி.விஜயபாஸ்கர், துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

"இது அதிமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு. பல தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவருகிறோம். இந்த தோல்விகளுக்கு எல்லோரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்பதே இப்போது எங்களிருக்கும் கவலை. ஏன் தோற்றோம், அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும், எல்லோரையும் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என பொதுச் செயலாளரை அதிமுக பொதுக்குழுவை விரைந்து கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அதில் என்ன நடந்தது என்பதை நாம் ஆரோக்கியமாக விவாதிக்கலாம், எங்கு தவறு என்பதை ஆராயலாம் என கூறினோம். விரைந்து பொதுச் செயலாளர் பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம். அப்போது நாங்கள் ஒற்றுமையாக கலந்தாலோசித்து அதிமுகவின் எதிர்காலத்துக்காக செயல்படுவோம்." என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "அதிமுகவை உடைக்கிறோம் என அவதூறு பரப்புகின்றனர். எங்களுக்கு அந்த நோக்கம் இல்லை. தொடர் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதனால் சில கேள்விகளை எழுப்பியுள்ளோம். அதிமுக எப்போதும் உடையாது, அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர் முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

அதிமுகவில் ஒரு பிரிவு தவெகவுக்கு ஆதரவு

பட மூலாதாரம், Getty Images

அதிமுகவில் என்ன நடக்கிறது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதுமே அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர். அதற்கேற்றபடியே, புதிதாக தேர்வான அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசினார்.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பதாக மூன்று நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தரப்பில் இதுகுறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், அதிமுக எம்எல்ஏக்களிடையே அதிருப்தி நிலவியது சட்டப்பேரவையின் முதல்நாளிலேயே வெளிப்பட்டது. புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் வந்தனர். எஸ்.பி.வேலுமணி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

சட்டப்பேரவையில் பதவியேற்க வந்த சி.வி.சண்முகம் பதவியேற்பில் பங்கெடுக்காமல் பாதியிலேயே திரும்பிவிட்டார். பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக அவர் பெயர் அழைக்கப்பட்டும் பங்கேற்கவில்லை. பின்னர் பேரவைத் தலைவர் அறையில் சி.வி.சண்முகம் பதவியேற்றார்.

பின்னர், அதிமுகவின் சட்டமன்றக் குழுவின் தலைவர் உள்ளிடட் பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக ஓ.எஸ்.மணியன் தலைமையிலான எம்.எல்.ஏக்களும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர்.

அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் யார் என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு