You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகம் முழுவதும் கிளர்ச்சியின் அடையாள சின்னங்களில் ஒன்றாக இந்த படம் மாறிய வரலாறு
- எழுதியவர், ஸ்டெஃபனி ஹோம்ஸ்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இது அநேகமாக 20ஆம் நூற்றாண்டின் மிகவும் அதிகளவில் நகலெடுக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட, மறு உருவாக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களில் ஒன்று.
இந்தப் படத்தில் சே குவேரா கேமராவை உற்று நோக்குவதைக் காணலாம். அவரது அடர்த்தியான புருவங்கள், கலைந்த தலைமுடி, ஒரு நட்சத்திரம் பொறிக்கப்பட்ட 'பெரெட்' தொப்பி ஆகியவை இந்தப் புகைப்படத்தின் குறிப்பிடத்தக்க அடையாள அம்சங்களாக மாறின.
சே குவேரா 1967இல் கொல்லப்பட்டார். அவர் மறைந்து சுமார் 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் காலகட்டத்தில், கியூபா மற்றும் பொலிவியாவில் அவர் முன்னெடுத்த புரட்சிகரப் போராட்டங்களை ஆதரித்த பல இளைஞர்கள் முதிர்ச்சியை எட்டியிருப்பார்கள்.
இருப்பினும், சே குவேராவின் அந்தப் புகழ்பெற்ற படம் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவியது. அது டி-ஷர்ட்கள், சுவர்களில் இடம்பெற்றது. 'பாப் ஆர்ட்' (pop art) பாணியில் மாற்றப்பட்டது. அவ்வளவு ஏன், ஐஸ்கிரீம் உறைகள், சிகரெட் விளம்பரங்கள் போன்ற வணிகப் பொருட்களிலும்கூட பயன்படுத்தப்பட்டது. பல தசாப்தங்கள் கடந்த பின்னரும், அதன் புகழ் மங்கவில்லை.
"இதைப் போன்ற வேறொரு புகைப்படமும் இல்லை. வேறெந்தப் படம் இத்தகைய வலிமையுடன் தொடர்ந்து நிலைத்திருந்துள்ளது?" என்று கேட்கிறார் திரிஷா ஜிஃப். இவர் 2007இல் சே-வின் புகைப்படத்துடைய பல்வேறு பயன்பாடுகள் மற்றும் அர்த்தங்கள் குறித்த ஒரு பயணக் கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்.
"சே குவேரா ஒரு 'பிராண்ட்' ஆகிவிட்டார். அந்த பிராண்டின் சின்னமே இந்தப் புகைப்படம். இது மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. போருக்கு எதிரான இயக்கங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகள், உலகமயமாக்கலுக்கு எதிரான நிலைப்பாடு எனப் பொதுவான நீரோட்டத்தில் இருந்து மாறுபட்டுச் சிந்திப்பவர்களுக்கான அடையாளமாக இது மாறியுள்ளது," என்று கூறுகிறார் அவர்.
திரிஷா ஜ்ஃபின் கூற்றுப்படி, "பாலத்தீன பகுதிகளில் உள்ள சுவர்கள் முதல் பாரிஸில் உள்ள ஃபேஷன் கடைகள் வரை இந்தப் படம் எல்லா இடங்களிலும் இடம்பெற்றுள்ளது. இது மிகப் பரவலாகப் பரவியதாலும், பலவிதமான வழிகளில் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாலும், இந்தப் புகைப்படத்தைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது."
"தற்போதைய நிலையில் இதுவொரு பெருநிறுவனமாக, ஒரு பேரரசாகவே மாறிவிட்டது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் பரவியதற்கு, புகைப்படக் கலைஞர் ஆல்பர்ட்டோ கோர்டா மற்றும் சிலர் எடுத்த முடிவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்தப் படம் 1960இல் கோர்டா எடுத்த ஒரு புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் மக்கள் வணிகம் சார்ந்த நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்தும்போது, அதற்கான கட்டணத்தைக் கோர வேண்டாம் என்று அவரும் மற்றவர்களும் முடிவு செய்தனர்.
இந்த முடிவு, சே-வின் புகைப்படம் உலகம் முழுக்கப் பரவுவதற்கு உதவியது. இறுதியில் சே குவேராவின் முகம், கிளர்ச்சி, அரசியல் மாற்றம் ஆகியவற்றுக்கான மிகவும் அடையாளம் காணக்கூடிய சின்னங்களில் ஒன்றாக மாறியது.
உலகளவில் அடையாளச் சின்னமாக மாறிய சே
கடந்த 1960களின் பிற்பகுதியில் இளம் கிராஃபிக் கலைஞராக இருந்தபோது சே குவேராவின் புகழ்பெற்ற, அதிக மாறுபாடு கொண்ட (high-contrast) ஓவியத்தை உருவாக்கிய ஜிம் ஃபிட்ஸ் பேட்ரிக், தனது கலைப் படைப்பு பரவலாகச் சென்றடைய வேண்டுமென்றே விரும்பியதாக பிபிசியிடம் கூறினார்.
"முயல்களைப் போல அது பல்கிப் பரவ வேண்டுமென்ற நோக்கத்துடனேயே நான் அதை வடிவமைத்தேன்" என்று அவர் தனது ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அசல் புகைப்படத்தில் இருந்த நிழல்கள் மற்றும் ஆழமான தன்மைகளை நீக்கி, அதை ஓர் எளிமையான, அதேநேரம் சக்திவாய்ந்த கிராஃபிக் சித்திரமாக அவர் மாற்றினார். அதுவே பின்னர் ஒரு அடையாளமாக மாறியது.
சே குவேரா கொல்லப்பட்ட பிறகு, மக்கள் அவருக்கு நினைவிடங்களை அமைப்பதையோ அல்லது ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அவரை நினைவுகூரும் இடங்களை உருவாக்குவதையோ தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஃபிட்ஸ் பேட்ரிக் விளக்கினார்.
"அவர் கொல்லப்பட்ட விதம், அவருக்கு நினைவிடமோ அல்லது வேறு எந்த அடையாளமோ இருக்கக்கூடாது என்றே அவர்கள் விரும்பினார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால், அந்தப் படம் இயன்றவரை பரவலாகச் சென்றடைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்" என்று ஃபிட்ஸ் பேட்ரிக் கூறினார்.
மேலும் அவர், "சே-வின் பிம்பம் ஒருபோதும் அழியாது, அவரது பெயரும் ஒருபோதும் அழியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
திரிஷா ஜிஃபை பொறுத்தவரை, சே குவேராவின் கொலைதான் அந்தப் புகழ்பெற்ற பிம்பம் ஒரு 'லெஜண்ட்' அல்லது மாபெரும் அடையாளமாக மாறத் தொடங்கிய தருணமாகவும் அமைந்தது.
"கடந்த 1967 அக்டோபரில் சே-வின் மரணத்தின்போதுதான் அந்தப் பிம்பம் உருவானது" என்று அவர் கூறினார்.
அவரது கருத்துப்படி, சே இளைஞராகவும் வசீகரமானவராகவும் இருந்தார், ஆனால் அவர் தனது கொள்கைகளுக்காகப் போராடும்போது உயிர் நீத்ததே அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. "இதனால் அவர் விரைவிலேயே பலருக்கும் ஒரு குறியீடாக, அடையாளச் சின்னமாக (icon) மாறினார்."
அந்த அசல் புகைப்படத்தின் பயணமும் ஒரு குறிப்பிடத்தக்க கதையாக உள்ளது. கியூபாவில் இருந்து புறப்பட்ட அந்தப் புகைப்படம், சே-வின் ஆதரவாளர்கள் மூலம் ஐரோப்பாவை அடைந்து, பின்னர் ஜிம் ஃபிட்ஸ் பேட்ரிக் உருவாக்கிய புகழ்பெற்ற ஓவியமாக உருவம் பெற்றது.
ஹவானாவில் நடந்த ஒரு பெரிய இறுதிச் சடங்கு நிகழ்வின்போது, 1960 மார்ச் 5ஆம் தேதி ஆல்பர்ட்டோ கோர்டா அந்த அசல் புகைப்படத்தை எடுத்தார்.
நகரின் துறைமுகத்தில் வெடிமருந்துகளை ஏற்றி வந்த பிரெஞ்சு சரக்குக் கப்பல் ஒன்று வெடித்துச் சிதறிய மறுநாள் அந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது. அந்த வெடிவிபத்தில் சுமார் 80 கியூபர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்காதான் காரணம் என்று ஃபிடல் காஸ்ட்ரோ குற்றம் சாட்டினார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக இருந்த கோர்டா, அந்தப் புகைப்படத்துக்கு "கொரில்லா ஹிரோயிகோ" (இதன் பொருள் 'வீரமிக்க போராளி') என்று பெயரிட்டார்.
அந்தப் படத்தில் சே-வின் முகபாவனையை அவர் "என்காப்ரொனாடோ ஒய் டொலென்டே" (encabronado y dolente) என்று விவரித்தார். அதாவது, கோபமும் துயரமும் கலந்த உணர்வு என்று அதற்குப் பொருள்.
உண்மையில், அந்தத் தருணத்தில் சே-வை வைத்து கோர்டா எடுத்த இரண்டு புகைப்படங்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். அசல் புகைப்படத்தில் பனை ஓலைகளும் சே-வுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த மற்றொரு நபரும் தெரிந்தனர். ஆனால் பின்னர் அவையெல்லாம் கிராப்பிங் மூலம் நீக்கப்பட்டன.
அந்தப் புகைப்படம் ஏறக்குறைய ஓராண்டு காலத்துக்கு வெளியிடப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில், கோர்டாவின் ஸ்டுடியோவுக்கு சென்றவர்களால் மட்டுமே அதைப் பார்க்க முடிந்தது. ஏனெனில், அந்தப் படம் அவரது ஸ்டூடியோவின் உட்புறச் சுவரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
சே புகைப்படம் ஐரோப்பாவை அடைந்தது எப்படி?
சே குவேராவின் உருவத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு செல்ல உதவியவர்களில் ஒருவர், இடதுசாரி சிந்தனை கொண்ட இத்தாலிய பதிப்பாளரும் அறிஞருமான ஜியாஞ்சியாகோமோ ஃபெல்ட்ரினெல்லி. அவர் 1967இல், சே-வின் உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை இத்தாலி முழுவதும் விநியோகித்தார்.
அதற்குப் பிறகு, ஆல்பர்ட்டோ கோர்டா எடுத்த புகைப்படம் பல ஐரோப்பிய இதழ்களில் வெளியாகத் தொடங்கியது. ஜிம் ஃபிட்ஸ் பேட்ரிக் முதன்முதலில் அதை 'ஸ்டெர்ன்' என்ற ஜெர்மானிய வார இதழில் பார்த்தார்.
அந்த இதழில் தான் பார்த்த உருவம் மிகச் சிறியதாகவும் தெளிவற்றதாகவும் இருந்ததாக ஃபிட்ஸ் பேட்ரிக் விளக்கினார். "அதில் இருந்த உருவங்களில் ஒன்று கோர்டாவினுடையது. ஆனால் அது மிகவும் சிறியதாக இருந்ததால், நான் அதைப் பெரிதாக்கியபோது எனக்கு ஒரு புள்ளி அணிவடிவம் (dot matrix pattern) மட்டுமே கிடைத்தது. அதிலிருந்து நான் சே-வின் ஒருவித மாயத்தோற்ற, கடற்பாசி போன்ற வடிவத்தை உருவாக்கினேன்," என்று அவர் கூறினார்.
இந்த முதல் முயற்சி, பிற்காலத்தில் உலகளவில் அங்கீகாரம் பெற்ற அந்தப் புகழ்பெற்ற உருவமாக அமையவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அசல் புகைப்படத்தின் மிகவும் தெளிவான, பெரிய நகல் ஃபிட்ஸ் பேட்ரிக் கைக்குக் கிடைத்தபோதுதான், உலகப் புகழ்பெற்ற அடையாளச் சின்னமாக மாறிய சே குவேராவின் அந்தக் கலைப்படைப்பை அவரால் உருவாக்க முடிந்தது.
"ப்ரோவோ என்று அழைக்கப்பட்ட டச்சு அனார்கிஸ்டுகள் குழுவுடன் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து அந்தப் படத்தின் அசல் பிரதியை நான் பெற்றிருந்தேன்" என்று ஃபிட்ஸ் பேட்ரிக் கூறினார்.
ப்ரோவோ இயக்கம் என்று அழைக்கப்பட்ட அந்த டச்சு ரகசிய இயக்கம், தத்துவஞானியும் அரசியல் ஆர்வலருமான ஜான்-பால் சார்த்ரேவிடம் இருந்து அந்தப் படத்தைப் பெற்றதாக நம்பப்பட்டது.
கடந்த 1960களில் ஹவானாவில் நடந்த இறுதிச் சடங்கில் சார்த்ரே கலந்து கொண்டார், அங்குதான் ஆல்பர்ட்டோ கோர்டா முதலில் சே குவேராவின் புகழ்பெற்ற இந்தப் புகைப்படத்தை எடுத்தார். இந்த வெவ்வேறு நபர்கள் மற்றும் இயக்கங்கள் வழியாக, அந்தப் புகைப்படம் கியூபாவில் இருந்து ஐரோப்பாவுக்கு பயணித்து, இறுதியில் உலகளாவிய சின்னமாக மாறியது.
'வணிகப் பொருளாக மாறிய அரசியல் அடையாள சின்னம்'
சே குவேரா கொல்லப்பட்ட பிறகு, ஜிம் ஃபிட்ஸ் பேட்ரிக் மிகவும் கோபமடைந்தார். அவர் சே-வின் அசல் சுவரொட்டிகளை மீண்டும் அச்சிட்டு, அந்தப் படம் பரவலாகப் பரவ வேண்டும் என்பதற்காக ஐரோப்பா முழுவதும் உள்ள இடதுசாரி அரசியல் ஆர்வலர் குழுக்களுக்கு அனுப்பினார்.
சே உடனான ஃபிட்ஸ் பேட்ரிக்கின் உணர்வுபூர்வமான பிணைப்பின் ஒரு பகுதி, அவரது பதின்பருவத்தில் நடந்த ஒரு தனிப்பட்ட நினைவில் இருந்து உருவானது. அவர் அயர்லாந்தில் ஒரு மதுபான விடுதியில் பணியாற்றியபோது, ஒருமுறை சே குவேரா அங்கு நுழைவதைக் கண்டார்.
அந்த நேரத்தில், சே தனது அயர்லாந்து குடும்ப வேர்களுடன் தொடர்புடைய அந்த நிலத்திற்குச் சிறிது கால பயணத்தில் அங்கு வந்திருந்தார். அவரது முழுமையான குடும்பப் பெயர் குவேரா-லிஞ்ச். மேலும் அவர் மாஸ்கோ விமானப் பயணத்தின்போது அயர்லாந்து வழியாக சென்று கொண்டிருந்தார்.
"எனக்கு அப்போது தோராயமாக 16 அல்லது 17 வயது இருந்திருக்கும். அதுவொரு பிரகாசமான, வெயில் நிறைந்த காலைப் பொழுது. மதுபான விடுதியின் ஜன்னல் வழியாக ஒளி உள்ளே பாய்ந்து கொண்டிருந்தது. அங்கு உள்ளே நுழைபவர் யார் என்பதை நான் உடனடியாக அறிந்துகொண்டேன்," என்று அந்த நாளை ஃபிட்ஸ் பேட்ரிக் நினைவுகூர்ந்தார்.
சே-வை மிகவும் வசீகரமான மனிதர் என்று விவரித்த ஃபிட்ஸ் பேட்ரிக், "அவர் மிகவும் விரும்பத்தக்கவர், குறும்புக்காரர், வேடிக்கையானவர் மற்றும் அயர்லாந்துகாரர் என்பதில் மிகவும் பெருமை கொண்டவர்" என்றார்.
திரிஷா ஜிஃபின் கூற்றுப்படி, பல நாடுகள் அரசியல் மற்றும் சமூக அமைதியின்மையால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், சே குவேராவின் உருவத்தை ஃபிட்ஸ் பேட்ரிக் சித்தரித்த விதம் ஐரோப்பாவில் பரவியது.
மேலும் பேசிய திரிஷா ஜிஃப், "அவரது மரணத்தைத் தொடர்ந்து, முதலில் மிலனிலும் பின்னர் பிற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மிக விரைவில், செக்கோஸ்லோவாக்கியாவில் சோவியத் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கடுமையான கம்யூனிச அரசுக்கு எதிராகக் குடிமக்கள் நடத்திய போராட்டமான பிராக் வசந்தம் மற்றும் பிரான்ஸையே முடக்கிப் போட்ட மாபெரும் மக்கள் கொந்தளிப்பு, மாணவர் தலைமையிலான வேலை நிறுத்தங்கள், தொழிலாளார் போராட்டங்கள் நடந்த மே '68 ஆகிய சம்பவங்கள் 1968இல் நடந்தேறின. ஐரோப்பா கொந்தளிப்பில் இருந்தது. மக்கள் மாற்றம், சீர்குலைவு மற்றும் கிளர்ச்சியை விரும்பினர். மேலும் சே அந்த மாற்றத்துக்கான சின்னமாக மாறினார்" என்று விவரித்தார்.
இருப்பினும் காலப்போக்கில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், சே குவேராவின் உருவமும் அதற்குப் பின்னால் இருந்த உண்மையான நபரும் பிரிக்கப்பட்டதாக ஜிஃப் விளக்குகிறார்.
அந்தப் புகைப்படம் மெதுவாக ஓர் அரசியல் சின்னம் என்பதில் இருந்து ஒரு வணிகப் படமாக மாறியது. அது தாள்கள் முதல் உள்ளாடைகள் வரை பல பொருட்களில் தோன்றத் தொடங்கியது.
யுனிலீவர் நிறுவனம்கூட ஆஸ்திரேலியாவில், செர்ரி மற்றும் கொய்யா சுவையுடன், சே குவேராவை மையமாகக் கொண்ட தனது மேக்னம் ஐஸ்கிரீமின் ஒரு பதிப்பை வெளியிட்டது.
ஒரு புகைப்படம் பிரபலமாகும்போது, முதலாளித்துவம் இறுதியில் அதைக் கைப்பற்றி ஒரு வணிகப் பொருளாக மாற்றிவிடுகிறது என்று ஒரு நம்பிக்கை நிலவுவதாக ஜிஃப் விளக்குகிறார். அதே வேளையில், அத்தகைய படங்கள் ஏதேனும் ஒரு கிளர்ச்சி அல்லது ஆபத்து உணர்வைத் தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.
"முதலாளித்துவம் ஒரு படத்தைத் தனதாக்கிக் கொள்வதற்கு முன், அதுவொரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. ஆனால் படங்கள் ஏதேனும் ஒரு ஆபத்து உணர்வைத் தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே முதலாளித்துவம் அவற்றைத் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறது" என்றார் அவர்.
இருப்பினும், லத்தீன் அமெரிக்காவில், சே குவேராவின் முகம் இன்னும் மிகவும் தீவிரமான அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அது ஆயுதப் புரட்சி மற்றும் பழங்குடிச் சமூகங்களின் போராட்டங்களுடன் தொடர்புடைய சின்னமாகவே நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, ஹியூகோ சாவேஸ் அடிக்கடி சே குவேரா டி-ஷர்ட்களை அணிந்திருப்பது காணப்பட்டது. ஈவோ மொரேல்ஸின் அலுவலகத்துக்கு வருவோர், கோகோ இலைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சே-வின் புகழ்பெற்ற உருவத்தின் ஒரு வடிவத்தைக் கொண்டு வரவேற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜிஃபின் கூற்றுப்படி, சே-வின் உருவம் சக்தி வாய்ந்த ஒன்றாக நீடிக்கிறது. ஏனெனில், அது வணிகம் மற்றும் முதலாளித்துவம், மதம், அரசியல் புரட்சி மற்றும் சமூகப் போராட்டங்கள் போன்ற பல வேறுபட்ட உலகங்களை ஒன்றிணைக்கிறது.
"இந்த வெவ்வேறு இடங்கள் அனைத்துக்கும் நம்மை ஓரளவேனும் அழைத்துச் செல்லும் வேறு எந்தவொரு உருவமும் இல்லை" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு