பாரதிராஜாவிடம் சினிமா கற்று திரை, அரசியல் உலகில் தடம் பதித்த 4 பிரபலங்கள் யார்?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இயக்குநர் இமயம் என்று தமிழ்த் திரையுலகினரால் போற்றப்படும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய பலரும் தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும், சமூகத்திலும் பெரும் வெற்றிகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

உடல் நலக்குறைவால் மறைந்த பாரதிராஜாவை பல்கலைக்கழகம் என்று அவருடைய உதவி இயக்குநர்கள் கொண்டாடியிருக்கின்றனர்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்களில் இயக்குநர் கே.பாக்யராஜ், தமிழ்த்திரையுலகில் ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். அதேபோன்று மணிவண்ணன். மனோபாலா ஆகியோரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாக இருந்து சினிமாவைக் கற்று, பல வெற்றிப்படங்களை இயக்கியவர்கள். மற்றொரு உதவி இயக்குநரான சீமான், சில படங்களை இயக்கியதுடன் நாம் தமிழர் கட்சியையும் தொடங்கினார்.

மனோஜ்குமார், பொன்வண்ணன். சித்ரா லட்சுமணன், கே.ரங்கராஜ், லீனா மணிமேகலை என பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றிய பலரும் தமிழ்த்திரையுலகிலும், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளிலும் முத்திரை பதித்து தனித்த அடையாளம் பெற்றவர்கள்.

அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.

ஷார்ட் வீடியோ

பாரதிராஜாவின் தலைமை சீடராக விளங்கிய கே.பாக்யராஜ்

பாரதிராஜாவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டு வெளிவந்தவர்களில் மிகப்பெரிய உயரத்தை எட்டியவர் இயக்குநர் கே.பாக்யராஜ் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான வெற்றிப்படங்களை அவர் கொடுத்து இருக்கிறார்.

பாரதிராஜா இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' படத்துக்கு வசனமும், 'ஒரு கைதியின் டைரி' படத்துக்கு கதை, வசனமும் எழுதிய அனுபவத்தை கே.பாக்யராஜ் பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார்.

பாரதிராஜாவின் 'ஒரு கைதியின் டைரி'யை 'ஆக்ரி ரஸ்தா' என்று இந்தியில் அமிதாப்பை வைத்து இவர் இயக்கிய படம் மெகா ஹிட் அடித்தது. அதற்குப் பின் இந்தியில் பல வாய்ப்புகள் வந்தும் அதைத் தவிர்த்ததாக பிபிசியிடம் கூறியிருந்தார்.

பாக்யராஜை நடிகனாக அறிமுகம் செய்ததும் பாரதிராஜாதான். தன்னுடைய பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்கள் கொடுத்து பாக்யராஜை நடிகராக்கிய பாரதிராஜா, தன்னுடைய ''புதிய வார்ப்புகள்'' படத்தில் அவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

இதுபற்றி முன்பு ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த பாரதிராஜா, ''பாக்யராஜைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். இயல்பாகவே அவன் டயலாக் ரைட்டர். அவன் வசனம் சொல்லிக் கொடுக்கும் விதம் நன்றாக இருக்கும். நடிகர் விஜயனும் என்னுடைய அஸிஸ்டெண்ட். அவன் மலையாளி. அவன் ஒரு டைப். 'கிழக்கே போகும் ரயில்' சமயத்தில், அவர்களிடம் , 'டேய்... ராதிகாவை சந்தேகப்பட்டீங்களே. அப்புறம் ஒத்துக்கிட்டீங்கதானே. உங்க ரெண்டு பேரையும் நடிகனாக்குறேண்டா. இந்த நாடு ஒத்துக்குதா இல்லியானு பாருங்க' என்று சொன்னேன். ஒரு சேலஞ்ச் தான்! அதில்தான் பாக்யராஜை நடிகனாக்கினேன். விஜயனை நடிகனாக்கினேன்.'' என்று கூறியிருந்தார்.

புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜை நடிக்க வைத்தது பற்றி கூறிய அவர், ''பாக்யராஜை நான் ஹீரோவாக்கும் போது, பெரும்புள்ளிகள் பல பேர், 'ஏன் இந்த விஷப்பரிட்சை' என்று கேட்டார்கள். 'இல்லை. என் கற்பனையில் தோன்றுகிற வாத்தியார் இப்படித்தான் இருக்கவேண்டும். நடிப்பதற்கு எவ்வளவோ பேர் வந்து போகிறார்கள். இவன் தான் சொல்லிக்கொடுக்கிறான். என் வாத்தியார் மாதிரியே இருக்கிறான். ஒரு கண்ணாடி மட்டும் போட்டுவிட்டால், என் வாத்தியார்தான்' என்று நினைத்தேன்.'' என்று கூறியிருந்தார் பாரதிராஜா.

பாரதிராஜாவிடம் பணியாற்றியது குறித்து பிபிசி தமிழிடம் முன்பு பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ''எங்க டைரக்டர் எப்பவுமே சீரியஸ் டைப். எல்லா விஷயத்தையும் அழுத்தமாக சீரியஸ் ஆக சொல்வார். நான் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் அதை எளிமையாகவும், காமெடி, சென்ட்டிமென்ட் கலந்தும் கொடுக்கணும்னு நினைப்பேன்'' என்று கூறியிருந்தார்.

இதுபற்றி பாரதிராஜாவும் தன்னுடைய பேட்டியில், ''பாக்யராஜ் பிரில்லியண்ட்டானவன். க்ளைமாக்ஸ் சீரியஸாக இருக்கும். சீரியஸை சீரியஸாகவே சொல்லக்கூடாது. சீரியஸை, கொஞ்சம் ஹ்யூமர் கலந்து சொல்லவேண்டும். அப்போதுதான் க்ளைமாக்ஸ் எடுபடும். இதை அவனிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். பாக்யராஜ் என்னிடம் இருந்து கற்றுக்கொண்டது ஆயிரம். நான் இதை அவனிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்'' என்று கூறியிருந்தார்.

சீரியஸ் அரசியலையும் காமெடியாக சொன்ன மணிவண்ணன்

மறைந்து போன இயக்குநர் மணிவண்ணனும், பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியுள்ளன. மணிவண்ணன் மறைவுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ''பாரதிராஜா என்ற பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவன் பாக்யராஜ். அவருக்கு அடுத்த மாணவர்கள்தான் நாங்களெல்லாம்.'' என்று பேசியிருந்தார்.

அதே நிகழ்வில், ''நானெல்லாம் படம் டைரக்ட் பண்ணுவேன்னு எங்க டைரக்டர் (பாரதிராஜா) நம்பவேயில்லை. ஆனால் அவருடைய படங்களின் பாடல் காட்சிகளுக்கான சூழலை நான்தான் இளையராஜாவிடம் விளக்குவேன். அப்படி காட்சிகளை நான் விளக்கும் விதத்தைப் பார்த்து, 'நான் நன்றாக வருவேன்' என்று நினைத்து, கலைமணியிடம் அறிமுகம் செய்து ''கோபுரங்கள் சாய்வதில்லை'' இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது இளையராஜாதான்.'' என்றும் மணிவண்ணன் பேசியிருந்தார்.

இயக்குநர் பாரதிராஜா நல்ல உடல்நிலையுடன் இருந்த வரையிலும், 'என் இனிய தமிழ் மக்களே' எனும் யூடியூப் சேனலில் தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்து வந்தார். அதில் தன்னுடைய முதல் தோல்விப்படம் என்று குறிப்பிட்டு 'நிழல்கள்' திரைப்படம் குறித்த சில தகவல்களைப் பதிவிட்டிருந்தார்.

''என்னிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன், மிகச்சிறந்த எழுத்தாளர். அவனை 'நிழல்கள்' படத்துக்கு வசனம் எழுதச் சொன்னேன். அவனை படத்தில் நடிக்கவும் வைத்திருந்தேன் 'மணிவண்ணனை சேர்த்துக் கொண்டதால்தான் உங்களுக்குத் தோல்வி' என்று எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கிற சினிமா உலகம், ஏதேதோ சொன்னது. இந்த சென்டிமென்டையெல்லாம் நான் நம்புவதுமில்லை. மணிவண்ணனை அழைத்தேன். 'டேய்... பிரமாதமா ஒரு கதை பண்ணுடா. பக்கா கமர்ஷியலா, இப்போ எடுத்ததுக்கு அப்படியே நேர்மாறா இருக்கணும். உடனே ரெடி பண்ணுடா' என்று சொன்னேன். அதுதான் 'அலைகள் ஓய்வதில்லை''' என்று தனது அனுபவத்தை பாரதிராஜா பகிர்ந்திருந்தார்.

பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்துக்கு பக்கம் பக்கமாக கதை எழுதியது மணிவண்ணன்தான் என்று நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன், மணிவண்ணனின் அஞ்சலி நிகழ்ச்சியில் பேசியிருந்தார். ஆனால் மணிவண்ணன் இறப்பதற்கு முன்பு, பாரதிராஜா குறித்து மணிவண்ணனும், மணிவண்ணன் குறித்து பாரதிராஜாவும் பேசிய பல கருத்துகள் இருவருக்கும் இடையிலான மோதல்களை வெளிப்படுத்தின. மணிவண்ணன் இறப்பின்போதும் இதுபற்றி பேசப்பட்டது.

ஆனால் சினிமாவில் முன்னேறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டுமென்று கற்றுக்கொடுத்தவர் பாரதிராஜாதான் என்று ஒரு நிகழ்வில் பேசியிருந்த மணிவண்ணன், ''காலை ஐந்து மணிக்கு இயக்குநர் எழுந்துவிடுவார். ஏழு மணிக்கு சூட்டிங் ஆரம்பித்து, காலை 9 மணிக்குள் முக்கியக்காட்சிகளை எடுத்துவிடுவோம்.'' என்று கூறியிருந்தார்.

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்று மறைந்த மனோபாலா!

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து வெளிவந்து இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் மறைந்த மனோபாலா. பாக்யராஜ், மணிவண்ணன் அளவுக்கு வெற்றிப் படங்களை மனோபாலா கொடுக்காவிட்டாலும், அவருடைய முதல் படமான 'பிள்ளை நிலா' குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதுடன் அவரை கவனிக்க வைத்த திரைப்படமாகவும் இருந்தது.

ரஜினியை வைத்து அவர் இயக்கிய 'ஊர்க்காவலன்', விஜயகாந்த் நாயகனாக நடித்த 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' ஆகிய திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.

அவர் மறையும் வரையிலும், மிகவும் பிஸியான, எல்லோரையும் ஈர்க்கின்ற காமெடி நடிகராக வலம் வந்தார்.

ஷார்ட் வீடியோ

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில், பாரதிராஜா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை அங்கு சென்று நேரில் சந்தித்து, அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் 'என் குரு' என்று கூறி பதிவிட்டிருந்தார் மனோபாலா.

அதற்கு முன்பாக ஒரு நேர்காணலில் பேசியிருந்த மனோபாலா, ''பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். இப்போ நடக்குற சமுதாயப் பிரச்னை அப்போதும் இருந்தது. எல்லோரும் பாரதிராஜாவிடம், "அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு! அவனை சேர்த்தா உனக்கு ஆபத்து" னு சொன்னாங்க. ஆனால் அதையும் தாண்டி என்னை பாரதிராஜா சேர்த்துக்கிட்டாரு" என பகிர்ந்திருந்தார்.

மனோபாலா இறந்தபோது, காணொளி வெளியிட்ட பாரதிராஜா, ''என்னுடைய நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியவன் மனோபாலா. என்னிடம் எத்தனையோ உதவியாளர்கள் இருந்திருக்கிறார்கள். மனோபாலா சிறந்த ஓவியன். ஒரு காட்சியை அழகான ஓவியமாகக் கொடுப்பான். அவன் இயக்கிய படங்கள் மிக மென்மையாக இருக்கும். வன்முறை இருக்காது. குடும்பக்கதை, காதல்கதை அற்புதமாகப் பண்ணுவான்.'' என்று பேசியிருந்தார்.

சினிமாவிலிருந்து வந்து அரசியல் ஆளுமையாக மாறிய சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டில் ''பாஞ்சாலங்குறிச்சி'' என்ற படத்தை இயக்கியதன் மூலமாக சீமான் இயக்குநராக அறிமுகமானார். ஓரளவுக்கு வெற்றி பெற்ற அந்தப் படத்துக்குப் பின், சில படங்களை மட்டுமே அவர் இயக்கினார்.

அவற்றில் மாதவனை நாயகனாக வைத்த அவர் இயக்கிய 'தம்பி' படம் ஓரளவு வெற்றி பெற்றது. அவர் இயக்கிய, பிறமொழி வார்த்தைகளே இடம் பெறாத ''வாழ்த்துகள்'' படமும் பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. மற்ற இயக்குநர்களைப் போலவே சீமானும் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியைத் துவக்கி அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான், இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அதை மாநிலக்கட்சி என்ற அங்கீகாரம் பெறும் அளவுக்கு வளர்த்துள்ளார்.

ஷார்ட் வீடியோ

கடந்த 2018 ஆம் ஆண்டில் 'நாம் தமிழர்' கட்சி நடத்திய வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிராஜா, ''நீண்ட இடைவெளிக்குப் பின் புறப்பட்டுள்ள அக்னிக்குஞ்சு சீமான். வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது ஈழத்தில் இல்லை. அவன் மறு அவதாரமாக தமிழகத்தில் இருக்கிறான். சீமானின் பேச்சில் பொருள், அர்த்தம் இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்கிறீர்கள்.'' என்று பேசியிருந்தார்.

பாரதிராஜாவை சீமான் அப்பா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார். அதை வெளிப்படுத்தும் வகையில் பாரதிராஜாவும் மேடையில் சீமானை 'என் பிள்ளை' என்று பேசியிருப்பார்.

பாரதிராஜா பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான், ''படப்பிடிப்பின்போது நள்ளிரவில் பாரதிராஜா ரசம் சோறு கேட்பார். கிராமத்தில் ஏதாவது ஒரு வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டு வாங்கி வருவோம். இரவு 2 மணிக்கு படுத்தாலும் காலை 5 மணிக்கு எழுந்து படப்பிடிப்புக்குத் தயாராகிவிடுவார்.'' என்று பாரதிராஜாவைப் பற்றி பகிர்ந்திருந்தார்.

பாரதிராஜா உடலுக்கு ''அப்பா'' என்று அழுதபடியே அஞ்சலி செலுத்தினார் சீமான்.

இவர்களைத் தவிர்த்து, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் சித்ரா லட்சுமணன், பொன் வண்ணன் ஆகியோரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்தான்.

பாரதிராஜாவின் உறவினரும் உதவி இயக்குநருமான மனோஜ்குமாரும், சிவாஜி நடித்த 'மண்ணுக்குள் வைரம்' படம் துவங்கி, 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். மற்றொரு உதவி இயக்குநரான கே.ரங்கராஜ், ''உதயகீதம்'', ''உன்னை நான் சந்தித்தேன்'', ''கீதாஞ்சலி'', ''பாடுநிலாவே'' போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த லீனா மணிமேகலை, கவிஞர், ஆவணப்படத்தயாரிப்பாளர், சமூக செயற்பாட்டாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். அவர் பாரதிராஜா மறைவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இயக்குநர் பாரதிராஜா. நீங்கள் பல தொடக்கங்களின் முகவரி. முன்னத்தி ஏர். கலங்கரை விளக்கம். காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தருணம். சென்று வாருங்கள்''' என்று பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு