பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்: தவெக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு - நீதிமன்றம் கூறியது என்ன?

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் - ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
படக்குறிப்பு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் இறுதி அறிக்கையை டிசம்பர் 22-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு, நீதிபதி லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, எந்தவித புகாரும் பெண் அதிகாரியிடம் இருந்து வரவில்லை என அரசுத் தரப்பு கூறிய நிலையில், எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் இதுதொடர்பாக தான் நடத்திய உரையாடலை நீதிபதி முன்பாக அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன் சமர்ப்பித்தார்.

மேலும், த.வெ.க எம்.எல்.ஏ மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

'இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதால் எஸ்.பி நிலைக்கு மேலான அதிகாரி விசாரிக்க வேண்டும்' என நீதிபதி லட்சுமி நாராயணன் குறிப்பிட்டார்.

எம்.எல்.ஏ தொடர்பான வழக்கில் அரசியல் எதுவும் செய்ய வேண்டாம் எனவும் நீதிபதி கூறினார்.

வழக்கின் விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தொடர்புடைய விசாரணையை மேற்கொள்ளும் குழுக்கள் தொடர்பான விவரங்களையும் போஷ் (POSH) சட்டத்தின்கீழ் அமைக்கப்பட வேண்டிய உள்புகார் குழு குறித்த தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

டிசம்பர் 22-ஆம் தேதி எம்.எல்.ஏ மீதான புகாரில் இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் - ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
படக்குறிப்பு, கோப்புப் படம்

நேற்று என்ன நடந்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறியிருந்தார்.

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாசமான தகவல்களை அனுப்பியதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்வதற்கு காவல்துறைக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியிருந்தார்.

வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடந்தபோது, தலைமைச் செயலாளரிடம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி புகார் அளித்துள்ளதாக மனுதாரர் கூறினார். அதுதொடர்பான புகாரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கேட்டார்.

அது என்னிடம் இல்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும் வழக்கின் உண்மைகளை அரசுத் தரப்பில் அதிகாரிகள் மறைப்பதாகவும் அவர் வாதிட்டார்.

அப்போது இடைமறித்த நீதிபதி, "ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை எனக் கூறுகிறீர்களா? அவர் ஒரு பொறுப்பில் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறினார்.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வைந்து டி.ஜி.பியிடம் அறிக்கை கோரியுள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

அதற்குப் பதில் அளித்த நீதிபதி, "செய்திகளின் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் என்னால் அவ்வாறு செய்ய முடியாது. ஆபாசமான செய்திகளை எம்.எல்.ஏ அனுப்பினார் என்பதற்கான உறுதியான ஆதாரத்தை என்னிடம் சமர்ப்பித்தால் உரிய உத்தரவைப் பிறப்பிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

மனுதாரர் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், "எந்தப் புகாரையும் சம்பந்தப்பட்ட அதிகாரி அளிக்காத நிலையில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மாநில அரசின் வழக்கறிஞர் ஜான் சத்யன் சில தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் வாதிடும்போது, "கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவருவதைப் போல, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை" எனக் கூறினார்.

"தலைமைச் செயலாளர் அல்லது காவல்துறையிடம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி புகார் மனு எதுவும் அளித்துள்ளாரா?" என நீதிபதி கேட்டபோது, இல்லை என உறுதியான பதிலை ஜான் சத்யன் தெரிவித்தார்.

இதையடுத்து, பெண் அதிகாரியிடம் இருந்து உரிய தகவல்களைப் பெற்று செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் இருந்து காவல்துறைக்கோ அல்லது தலைமைச் செயலாளருக்கோ எந்தவித புகாரும் வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசு தயாராக இருப்பதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு