திருப்பரங்குன்றம் தீபம்: ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு - தடை உத்தரவு பற்றி உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவுறுத்தியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், மத நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்குமான பக்தர்களின் உரிமைக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, "இந்த உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம் எல்லாமே சீர்குலைந்துவிடும். அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் தடையாக இருக்க வேண்டாம்" என்று நீதிபதிகள் வாய்மொழியாகக் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தனர். ஆட்சியர் நேரில் ஆஜராகும் வரை அவரது தரப்பு வாதங்களைக் கேட்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
வழக்கின் பின்னணி என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நவம்பர் 24-ஆம் தேதியான இன்று கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்ற அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. திருவிழா நெருங்கிவிட்டதைக் கருத்தில் கொண்டு, இந்த அனுமதி ஒரு முறை மட்டுமே வழங்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் 163-வது பிரிவின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், பக்தர்கள் ஒன்றுகூடுவதற்கும், தீபம் ஏற்றப்படுவதை மலையடிவாரத்தில் நின்று காண்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விசாரணையின் போது நீதிமன்றம் கூறியது என்ன?
விசாரணையின் தொடக்கத்தில், இந்த மனுக்களை ஏன் தாக்கல் செய்தீர்கள் என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முற்றிலும் முரணானது என்றும், இது நீதிமன்ற அவமதிப்பாக அமையும் என்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "நிஷாந்த் (மதுரை மாவட்ட ஆட்சியர்) உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளத் துணிந்திருந்தால், அவர் அதைச் செய்யட்டும். இந்த உத்தரவை எந்த அடிப்படையில் எதிர்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.

பட மூலாதாரம், Getty Images
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவின் உள்ளடக்கத்தை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாசித்த போது, "இந்த உத்தரவை யார் தயாரித்திருந்தாலும் அவரைப் பாராட்ட வேண்டும். மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மற்றொரு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மக்கள் அந்தப் பகுதிக்கு வருவதைத் தடுத்து வருவதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து வந்தவர்கள்கூட கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக இந்த அமர்வு அமரவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
"உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நான் படித்திருக்கிறேன். 'மாநில அரசு கோரினால்' மத்திய அரசு சிஆர்பிஎஃப் படையினரின் உதவியை வழங்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசு அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, பக்தர்கள் கைது செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அவர், கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தன்னிடம் இல்லை என்றும், அந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் தாம் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக நீதிபதி சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாகவே இந்த மனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பான விவகாரங்களை உச்ச நீதிமன்றத்திலேயே முறையிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தபோது அவரது மனதில் என்ன இருந்தது என்று நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கோபால் சங்கரநாராயணன், "நவம்பர் 20-ஆம் தேதி முதலே அவர் (மாவட்ட ஆட்சியர்) உத்தரவைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்" என்றார்.
மத உரிமையைச் செயல்படுத்தத் தடையாக இருக்கக் கூடாது: நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தாண்டி தங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றாலும், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், "இங்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, மலை உச்சியில் தீபம் ஏற்றுவது. அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாருங்கள், அனைவரும் கிரிவலம் செல்ல விரும்புவார்கள். அந்தப் பகுதிக்குச் சென்று தரிசனம் செய்ய விரும்புவார்கள். இந்தத் தடை உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம் எல்லாமே சீர்குலைந்துவிடும். அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் தடையாக இருக்க வேண்டாம்" என்று தெரிவித்தனர்.
அவசர முறையீட்டின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?
இதற்கு முன்னதாக, இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்பதற்காக வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.
நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை மட்டும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அதைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் தற்போது அந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த வழக்கை பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகாவிட்டால் அவரது தரப்பு வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்கப் போவதில்லை என்று நீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































