இரான் போரால் சாமானியர்கள் வாழ்க்கையில் ஏற்படும் 5 பாதிப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த 2022-ஆம் ஆண்டு யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, கச்சா எண்ணெய் விலைகள் இப்போது அதன் உச்சபட்ச அளவை எட்டியுள்ளன.
இந்நிலையில், இரான் மீது மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் விளக்கமளிக்க உள்ளதாக வெளியாகும் செய்திகள், உலகளாவிய கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளன.
அக்ஸியோஸ் செய்தி இணையதளத்தின்படி, இரானுடனான பேச்சுவார்த்தையில் நிலவும் சிக்கலைத் தீர்க்க "குறுகிய மற்றும் சக்திவாய்ந்த" தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு வகுத்துள்ளது.
இது குறித்துத் தெரிந்துகொள்ள அமெரிக்க ராணுவம் மற்றும் வெள்ளை மாளிகையை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.
ஆனால், இதன் தாக்கம் எரிபொருள் விலைகளைத் தாண்டியும் வெகுவாக விரிவடைகிறது. கச்சா எண்ணெய் விலைகள் உயரும்போது, அதன் விளைவுகள் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பரவுகின்றன. அதனால் இதன் செயல்முறை ஒரு சங்கிலித் தொடர் போன்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எண்ணெய் விலையேற்றம் என்பது "எண்ணெய் சார்ந்தது மட்டுமின்றி, எண்ணெய் தொடர்பான பொருட்கள், பணவீக்கம் மற்றும் அடிப்படையில் நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு காரணியிலும் ஒரு தொடர் விளைவை ஏற்படுத்துகிறது" என்கிறார் கெப்ளர் தரவு பகுப்பாய்வுத் தளத்தின் மூத்த எண்ணெய் ஆய்வாளர் நவீன் தாஸ்.
"மீண்டும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்த செய்திகளை நாம் அதிகம் பார்க்கத் தொடங்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
1. அதிகரிக்கும் எண்ணெய் விலை
இதுதான் தொடக்கப் புள்ளி. விநியோகப் பற்றாக்குறை, உலக அரசியல் மோதல்கள் அல்லது சந்தை ஊகங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்கின்றன.
ஐரோப்பிய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 126 டாலருக்கும் அதிகமாக, அதாவது கிட்டத்தட்ட 7% திடீரென உயர்ந்தது. பின்னர் மீண்டும் சுமார் 116 டாலராகக் குறைந்தது. சமாதான முயற்சிகள் முடங்கியதாலும், ஹோர்மூஸ் நீரிணை திறம்பட மூடப்பட்டிருப்பதாலும் இந்த வாரம் விலைகள் அதிகரித்துள்ளன, இது வாகன ஓட்டிகளுக்கான எரிபொருள் செலவை உயர்த்தியுள்ளது.
இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 70 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது வியாழக்கிழமையின் உச்ச விலையை விட 80% குறைவாகும்.
பெட்ரோல் மற்றும் டீசலில் கச்சா எண்ணெய் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், மொத்த விற்பனை விலை உயர்வு உடனடியாக விற்பனை நிலையங்களிலும் எதிரொலிக்கிறது.
ஜூன் மாத டெலிவரிக்கான தற்போதைய பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் வியாழக்கிழமை 23:00 ஜிஎம்டி நேரத்தில் முடிவடைகிறது. அதே நேரத்தில் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் ஜூலை மாத ஒப்பந்தம் ஒரு பீப்பாய் சுமார் 110 டாலராக இருந்தது.
ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் என்பது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு சொத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு செய்யப்படும் ஒப்பந்தங்கள் ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
2. எண்ணெய் தொடர்பான பொருட்களின் விலை உயர்வு
எண்ணெய் எரிபொருளுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாகப் பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கான முக்கிய மூலப்பொருளாகவும் உள்ளது.
இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது விமான எரிபொருள், பிளாஸ்டிக் மற்றும் பேக்கேஜிங், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் போன்ற தொழில்துறைகள் முழுவதும் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.
இந்த மோதலின் விளைவாக வீடுகளுக்கான எரிசக்தி கட்டணங்கள், உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் விமானக் கட்டணங்கள் உயரக்கூடும் என்று அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன.
சில விமான நிறுவனங்கள் ஏற்கனவே கட்டணங்களை உயர்த்தி வருகின்றன அல்லது சில வழித்தடங்களை ரத்து செய்து வருகின்றன. உரங்களின் விலையும் அதிகரித்து வருகிறது, இது இறுதியில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.
வெல்த் கிளப் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி நிபுணரான சுசன்னா ஸ்ட்ரீட்டர், இந்தச் செலவுகள் அடுத்த ஆண்டு வரை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் என்கிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் யூரியா ஏற்றுமதி முடக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அந்த பொருட்களை வாங்கி வைக்காத உலகெங்கிலும் உள்ள விவசாயிகளுக்குச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன" என்று கூறுகிறார்.
மேலும், "இந்தச் செலவுகள் விநியோகச் சங்கிலிகள் வழியாகப் பரவி, இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் அன்றாடப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதே கவலையாக இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Saqib Majeed / SOPA Images / LightRocket via Getty Images
3. அதிகரிக்கும் போக்குவரத்து செலவு
உணவு, நுகர்வோர் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் என அனைத்தும் போக்குவரத்தைச் சார்ந்தே இருப்பதால், எரிபொருள் விலை உயர்வு நேரடியாகக் கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துகிறது.
உலகளாவிய ரீதியில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான செலவு அதிகரிக்கும் போது, வணிக நிறுவனங்கள் வழக்கமாக அந்தச் செலவுகளை நுகர்வோர் மீது சுமத்துகின்றன. இது சில்லறை விற்பனை விலையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
4. அதிகரிக்கும் பணவீக்கம்
அதிகரித்து வரும் இந்த செலவுகள் உலகப் பொருளாதாரம் முழுவதும் ஒன்று சேர்கின்றன.
எரிசக்தி விலை அதிகமாகும்போது, தொழிற்சாலைகளை இயக்குவது முதல் பொருட்களைக் கொண்டு செல்வது வரை வணிகங்கள் இயங்குவதற்கு அதிக செலவுகளை எதிர்கொள்கின்றன.
அதேபோல், உணவு விலைகளும் அதிகரிக்கின்றன. ஏனெனில் விவசாயம், பேக்கேஜிங் மற்றும் விநியோகம் ஆகியவை எரிபொருளையும் எண்ணெயுடன் தொடர்புடைய உரங்களையும் சார்ந்துள்ளன.
மேலும், ஆடைகள் முதல் மின்னணு சாதனங்கள் வரை அன்றாடப் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அதிக செலவாகிறது.
ஒரே நேரத்தில் பல துறைகளில் இந்த விலை உயரும்போது, விலையழுத்தம் மிகவும் பரவலாகவும் நீடித்ததாகவும் மாறுகிறது.
இந்த முறை குறுகிய கால உயர்வாக இல்லாமல் நீண்ட காலத்திற்குத் தொடரும்போது, பொருளாதார நிபுணர்கள் இதனைப் பணவீக்கம் என்று விவரிக்கிறார்கள். இது அத்தியாவசியச் செலவில் ஏற்படும் பொதுவான, நீடித்த உயர்வாகும்.
"முழு உலகமும் இதை எதிர்கொள்கிறது, சில நாடுகள் அதிகமாகவும், மற்றவை குறைவாகவும் பாதிக்கப்படுகின்றன" என்கிறார் ஏபிசிஇ ஆலோசனை நிறுவனத்தை வழிநடத்தும் பிரேசில் நாட்டு பொருளாதார நிபுணர் ஆண்ட்ரே பெர்பெயிட்டோ.
"உதாரணமாக, பிரேசில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறும் அவர், சமீபத்திய மாதங்களில் பணவீக்கம் தொடர்ந்து மத்திய வங்கியின் இலக்கு வரம்பை விட தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
5. அன்றாட வாழ்வில் ஏற்படும் தாக்கம்
குடும்பங்களைப் பொறுத்தவரை, இது இறுதியாகப் பல வழிகளில் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவுகிறது. மளிகைப் பொருட்களின் விலை உயர்கிறது, பயணச் செலவுகள் அதிகமாகின்றன மற்றும் மின்சாரம், எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளும் அதிகரிக்கின்றன.
அன்றாடச் செலவுகள் அதிகரிக்கும்போது, தொழிலாளர்கள் அதனை சமாளிக்க அதிக ஊதியம் கேட்கலாம். இது மேலும் பணவீக்க அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு பதிலாக, மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும். இதனால் வீட்டு கடன்கள் மற்றும் பிற கடன்களுக்கான செலவு அதிகமாகி, செலவு செய்வதையும் கடன் வாங்குவதையும் தடுக்கும்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற சில நாடுகளில், எரிபொருளைச் சேமிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் பள்ளிகளை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
"இவை அனைத்தும் பொருளாதார மந்தநிலைக்கும், உலகளாவியப் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கின்றன" என்று கூறுகிறார் பெர்பெயிட்டோ .
சர்வதேச நாணய நிதியம் தனது சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இரான் மோதல் உலகப் பொருளாதாரத்தை அதன் "பாதையிலிருந்து திசைதிருப்பும்" அபாயம் இருப்பதாகவும், நீண்டகால மோதல் உலகளாவியப் பொருளாதார வீழ்ச்சிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், அதிகப்படியான பணவீக்கத்திற்குப் பதிலடியாக வட்டி விகிதங்களை உயர்த்துவதில் மத்திய வங்கிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
இருப்பினும், இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றால், "சில வாரங்களுக்குச் சிறிய அளவிலான பொருளாதாரச் சிரமத்தைப்" பொறுத்துக் கொள்வதில் நியாயம் இருப்பதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "நீண்ட காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும்போது, குறுகிய காலக் கணிப்புகள் குறித்து நான் பெரிதாகக் கவலைப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































