You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் கணிசமாக அதிகரிப்பு - இந்தியா பற்றி கூறப்பட்டது என்ன?
- எழுதியவர், ஆசாத் சுஹைப்
- பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
2026 - 2027 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பாகிஸ்தான் அரசு, பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டை விட 17.6% அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் முகமது ஒளரங்கசீப், இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு 3 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (10.8 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் (2025 - 2026) பாதுகாப்புக்கான பட்ஜெட் 20.2% உயர்த்தப்பட்டு 2,550 பில்லியன் ரூபாயாக (9.17 பில்லியன் டாலர்) இருந்தது. அது பின்னர் 2,595 பில்லியன் ரூபாயாக (9.33 பில்லியன் டாலர்) திருத்தப்பட்டது.
2024- ஆம் ஆண்டு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் அரசு தனது முதல் நிதிநிலை (2024 - 2025) அறிக்கையை தாக்கல் செய்கையில் பாதுகாப்பு துறைக்கு என 7.63 பில்லியன் டாலரை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய பட்ஜெட்டை விட 1.13 பில்லியன் டாலர் அதிகம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு துறைக்கான பாகிஸ்தானின் பட்ஜெட் 3.16 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
2026 - 2027 நிதியாண்டிற்கான பாகிஸ்தானின் 64.71 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு மட்டும் 16.67% ஆக உள்ளது.
எனினும் ராணுவ ஓய்வூதியங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டில் ஓர் அங்கமாக இருப்பதில்லை.
பட்ஜெட் ஆவணங்களின்படி அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களுக்கு 4.20 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் ஓய்வூதியங்கள் மட்டும் 2.95 பில்லியன் டாலராக உள்ளது.
இந்த பட்ஜெட் உயர்வை ஆதரித்து பேசிய நிதியமைச்சர், "பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற சூழல் மற்றும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக பாதுகாப்பு பட்ஜெட் பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் ஆக்ரோஷத்துக்கு வலுவான பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ராணுவம் எதிரியை பின்வாங்க வைத்து நாட்டின் ராணுவ தயாரிப்பு மற்றும் திறனைக் காட்டியது." என்றார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட்டில் வேறு என்ன உள்ளது?
பட்ஜெட் ஆவணங்களின்படி, பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட்டின் ஒதுக்கீடான 10.78 பில்லியன் டாலரில் 3.48 பில்லியன் டாலர், சம்பளம் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கான படி உள்ளிட்ட ஊழியர்கள் செலவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.36% அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
மேலும் 2.67 பில்லியன் டாலர் போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை, உணவுப் பொருட்கள், பயிற்சி, எரிபொருள் மற்றும் தினசரி செலவுகள் உள்பட அன்றாட செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு தான் அதிகரித்துள்ளது. இந்தச் செலவுகளுக்காக அடுத்த நிதியாண்டிற்கு 3.33 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதற்காக 2.38 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது 39% அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பணிகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்பின் பராமரிப்பு மற்றும் புதிய வசதிகளின் கட்டுமானம் ஆகியவற்றுக்கு 1.21 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.92% அதிகம்.
பாதுகாப்பு பட்ஜெட் உயர்த்தப்படுவதை தவிர்த்திருக்க முடியுமா?
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் அதிகரித்து வந்துள்ளது. இது வலுவிழந்த பொருளாதாரம் கொண்ட ஒரு நாடு இவ்வளவு பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டைச் சமாளிக்க முடியுமா, இதனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க வேண்டுமா என்பது தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
உலகளாவிய மோதல்கள், எல்லைப் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்த பாகிஸ்தானை நிர்பந்தித்ததாகக் கூறுகிறார் பாதுகாப்பு வல்லுநரான ஓய்வுபெற்ற லெஃடினன்ட் ஜெனரல் கலீத் நயீம் லோதி.
இது தொடர்பாக பிபிசி உருது மொழி சேவையிடம் பேசிய அவர், "வளைகுடாவில் சமீபத்தில் நடைபெற்ற போர் ஒரு நாட்டின் பாதுகாப்பு வலுவாக இல்லையென்றால் அது மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதைக் காட்டுகிறது."
"யுக்ரேன் போர் தொடங்கி, கடந்த ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதல் மற்றும் வளைகுடா போர் வரை பாரம்பரிய போர்முறைகளுக்கு மாற்றாக சைபர் போர்முறைகள், ராக்கெட்டுகள் டிரோன்கள், லேசர் தொழில்நுட்பம் மற்றும் தொலைதூரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவை தற்போது போரின் போக்கை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன." என்றார்.
அவரது கூற்றுப்படி, இத்தகைய சூழலில் தனது பாதுகாப்பை வலுப்படுத்த விரும்பும் எந்த நாடும் புதிய தொழில்நுட்பம் இல்லாமல் செய்ய முடியாது.
புதிய கப்பல்கள் வாங்குவது, கடற்படை புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவது அல்லது தரைப் படைகள் நவீன ராணுவ உபகரணங்களை வாங்குவது வரை நாட்டின் மூன்று பாதுகாப்பு படைகளும் தங்களின் தேவையை இந்த பட்ஜெட்டில் இருந்து பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ செலவீனங்கள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த லோதி, "என்னுடைய பணிக்காலத்தில் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கான எந்தத் தொகையும் வேறு எங்கும் இருந்து வந்ததைப் பார்க்கவில்லை. அதன் அர்த்தம் இதற்காக ஆன செலவீனங்கள் அரசாங்க பட்ஜெட்டில் இருந்து நேரடியாக வந்தது என்பது தான். ஆனால் எங்களின் பார்வைக்கு வராத ஆதாரங்கள் அரசாங்கத்திடம் இருந்தால் அது வேறு விஷயம்." என்றார்.
ராணுவ வீரர் ஓய்வூதியம் பாதுகாப்பு பட்ஜெட்டில் இடம் பெறாது
ராணுவ வீரர்களுக்கான செலவினங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகிறார் பொருளாதார ஆய்வாளரான குர்ரம் ஹுசைன். ராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் ஊதியம் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
முன்னதாக ராணுவ வீரர்களின் ஓய்வூதியங்கள் தனியாக கணக்கிடப்பட்டதாகவும் அவர் விளக்குகிறார். "2001-ஆம் ஆண்டில் அரசாங்கம் இந்த ஓய்வூதியங்களையும் சிவிலியன் பட்ஜெட்டில் இணைத்தது. " என்றார்.
மேலும் அவர், "இதற்கு ராணுவம் அப்போது கொடுத்த காரணம், ஒரு வீரர் ஓய்வு பெறுகிறார் என்றால் அதன்பிறகு அவர் வீரர் கிடையாது, பொதுமக்களில் ஒருவராகிவிடுகிறார். எனவே அவரின் ஓய்வூதியம் பொதுச் செலவினமாக கருதப்பட வேண்டுமே தவிர, ராணுவ செலவினமாக கருதப்படக்கூடாது." என்றும் தெரிவித்தார்.
பொருளாதார நிபுணரும் மேலாண்மை படிப்புகளுக்கான லாகூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளருமான முனைவர் அலி ஹஸ்னைன் கூறுகையில், "நாம் புள்ளிவிவரங்கள் பற்றி பேசுவோம் என்றால், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) ஒப்பிடுகையில், பாதுகாப்புச் செலவினத்தின் விகிதம் படிப்படியாகக் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த விவகாரத்தில் தெற்கு ஆசிய நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தது." என்றார்.
'வரியை மிஞ்சும் பாதுகாப்பு செலவினம்'
நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில் முந்தைய ஆண்டைவிட பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் 15 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 85.4 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதத்தைக் குறிக்கும்.
பிபிசி உருதுவிடம் பேசிய அலி ஹஸ்னைன், "ஓய்வூதிய செலவினங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு செலவினங்கள் ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது நாம் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பணத்தை எடுத்து கல்வி அல்லது வேறு எதுவும் துறையில் முதலீடு செய்துவிட்டதால் அல்ல. கடன் சுமை அதிகரித்துவிட்டதால் மற்ற அனைத்தும் குறைந்துவிட்டன என்பதே இதன் அர்த்தமாகும்." என்றார்.
"கடனால் செலவினங்களைக் குறைப்பதற்கான அழுத்தம் இருக்குமென்றால் அனைத்து துறைகளும் பாதிக்கப்படும். ஆனால் பாதுகாப்பு செலவினங்களில் பெரிய அளவிலான செலவு குறைப்பைத் தவிர்ப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது."
பாகிஸ்தானின் ஜிடிபி உடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்டது 2 சதவிகிதமாக உள்ளது. சமீப ஆண்டுகளில் அது 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.
ஜிடிபி உடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு செலவினங்களுக்கான விகிதம் குறைந்து வருவதாகக் கூறும் அலி ஹஸ்னைன், அரசாங்கத்தின் வருவாயான வரியுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு செலவினங்கள் மிகவும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டிய தேவை ஏன்?
பாகிஸ்தானும் இந்தியாவும் பரஸ்பரம் தங்களின் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டியுள்ளது என்கிறார் கலீத் நயீம் லோதி.
"இருநாடுகளும் அமர்ந்து தங்களின் சர்ச்சைகளைத் தீர்த்தால் அவர்களின் பாதுகாப்பு பட்ஜெட் குறைக்கப்பட்டு அந்தப் பணம் வறுமையை ஒழிக்க பயன்படுத்தப்படலாம்," என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், "'யாருடைய கையில் தடி இருக்கிறதோ, அவரே எருமைக்குச் சொந்தக்காரர்' என்பதுதான் உலக வழக்கம் என்றால், அந்த தடி தடிமனானதாக இருக்க வேண்டும்." என்றார்.
பாகிஸ்தானின் உலகளாவிய செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக லோதி தெரிவிக்கிறார்.
"கடந்த ஆண்டு நாம் சௌதி அரேபியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டோம். மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலை தீர்ப்பதில் பாகிஸ்தான் முன்னணியில் இருக்கிறது." என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, மற்ற நாடுகள் பாகிஸ்தான் உடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முனைகின்றன. அதற்கு பாகிஸ்தானின் வலுவான பாதுகாப்பு துறையும் ஒரு காரணம். அதில் அதிக வளங்கள் செலவிடப்படுகிறது என்றால் அது பாகிஸ்தானின் நலனுக்கானதே.
"முன்னர் நமக்கு இந்தியாவுடன் மட்டுமே பகை இருந்தது, தற்போது ஆப்கானிஸ்தான் உடனான எல்லையிலும் சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாக உள்ளது. " என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாதுகாப்பில் இவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்றால் மக்களின் வாழ்வு எப்படி மேம்படும் என்கிற கேள்வி என் மனதில் எழுகிறது." என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா - இரான் இடையே ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்கி இரானுடன் வர்த்தகம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு பாகிஸ்தான் கோர வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
"பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அண்டை நாடுகள் உடனான பதற்றங்கள் முடியும் வரை பாகிஸ்தானின் பாதுகாப்பு தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்." என்கிறார் லோதி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு