மற்றொருவரின் ரத்தத்தைச் செலுத்தி போதை பெறும் 'ப்ளூடூத்திங்' முறை - எவ்வளவு ஆபத்தானது?

முன்புறத்தில் ஒரு ஜோடி கைகள் ஊசியை பிடித்திருக்கின்றன. பின்னால் போலியான ரத்தம் சிதறியிருப்பது தெரிகிறது. அதற்கு அப்பால், கருப்பு-வெள்ளை நிறத்தில் தானியத் தன்மை கொண்ட பனைமரங்களின் மங்கலான உருவம் பின்னணியில் தெரிகிறது.
படக்குறிப்பு, "ப்ளூடூத்திங்" எனப்படும் நடைமுறையின் நோக்கம், நரம்பு வழியாகச் செலுத்தப்படும் மருந்துகளை அதிகமான நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் நீட்டிப்பதாகும்.
    • எழுதியவர், ரெபேக்கா தோர்ன்
    • பதவி, உலக சேவை சர்வதேச சுகாதார செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சமீபத்தில் ஃபிஜியில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. உலகிலேயே மிக வேகமாக அதிகரித்து வரும் ஹெச்ஐவி பாதிப்பு நிலவும் பகுதிகளில் ஒன்றாக ஃபிஜி மாறியிருப்பதை இது வெளிப்படுத்தியது.

உலகளவில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் இவை இன்னும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளன என்பதையும், பாதிப்பு திடீரென கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கக்கூடும் என்பதையும் இது தீவிரமாக நினைவூட்டுகிறது.

பசிஃபிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்ட நாடான ஃபிஜியில், தற்போது வயது வந்த சுமார் 60 பேரில் ஒருவர் ஹெச்ஐவி வைரஸுடன் வாழ்ந்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 167 பேரில் ஒருவர் என்ற அளவில் இருந்தது. உலகளவில் சுமார் 4.1 கோடி பேர் ஹெச்ஐவியுடன் வாழ்ந்து வருவதாக ஐ.நா.வின் எய்ட்ஸ் அமைப்பான யுஎன்எய்ட்ஸ் மதிப்பிட்டுள்ளது.

இந்த சமீபத்திய நெருக்கடியை மேலும் மோசமாக்குவது, சில போதைப்பொருள் பயன்படுத்துவோரிடையே காணப்படும் "ப்ளூடூத்திங்" எனப்படும் ஆபத்தான ஊசி பகிர்வு நடைமுறையாகும்.

ஏற்கெனவே போதைப்பொருளை செலுத்திக்கொண்ட ஒருவரின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அதை மற்றொருவருக்கு செலுத்தி, அவருக்கும் இரண்டாம் நிலை போதை உணர்வை ஏற்படுத்துவதே "ப்ளூடூத்திங்" ஆகும்.

நரம்பு வழியாக செலுத்தப்படும் போதைப்பொருளை அதிக பேருக்கு பகிர்ந்து பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தும் வழியாக இதை சிலர் கருதுகின்றனர்.

லெசோதோ, ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் இதுபோன்ற நடைமுறை காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நடைமுறை எந்த அளவுக்குப் பரவியுள்ளது, ஃபிஜியில் ஏற்பட்டுள்ள ஹெச்ஐவி நெருக்கடிக்கு இதை எந்த அளவுக்குக் காரணமாகக் கூற முடியும் என்பது குறித்து கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், சமூகப் பணியாளர்கள் இது உண்மையான பிரச்னை என்று கூறுவதுடன், உலகெங்கிலும் உள்ள அரசுகளும் சுகாதார அமைப்புகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

"நாம் உண்மையில் ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்?" என்று 'போதையில்லா ஃபிஜி என்ற அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநர் கலேசி வோலடாபு கேட்கிறார்.

'ப்ளூடூத்திங்' ஏன் மிகவும் ஆபத்தானது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஹெச்ஐவி என்பது ரத்தத்தின் மூலம் பரவும் நோய். எனவே, போதைப்பொருளால் கலந்த ரத்தத்தை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செலுத்தும் இந்த நடைமுறையில், ஊசியைப் பகிர்ந்துகொள்பவர்கள் ஹெச்ஐவி வைரஸ் பரவும் அபாயத்துக்கும் தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் கூறுவதன்படி, இந்த நடைமுறை "மிகவும் அதிகமான ஆபத்தை" ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி உள்ளிட்ட பிற தொற்றுகளும், தீவிரமான பாக்டீரியா தொற்றுகளும் பரவும் அபாயம் உள்ளது.

ஃபிஜியில் போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்திக்கொள்பவர்கள் ஊசிகளைப் பகிர்ந்துகொள்வது ஏற்கெனவே பொதுவான நடைமுறையாக உள்ளது. இவர்களுக்கு தொற்று இல்லாத, பாதுகாப்பான ஊசி உபகரணங்கள் கிடைப்பது கடினமாக இருக்கலாம். ஆனால், "ப்ளூடூத்திங்" நடைமுறை உருவாகியிருப்பது, இந்த ஆபத்தான செயலுக்குப் பின்னால் வறுமையும் முக்கிய காரணியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

முதன்முதலில் இந்த நடைமுறை நடப்பதை நேரில் பார்த்தபோது தான் அதிர்ச்சியடைந்ததாக கலேசி வோலடாபு கூறுகிறார்.

"அந்த ஊசியை செலுத்திக்கொள்ளத் தயாராக ஐந்து அல்லது ஆறு பேர் சுற்றி நின்றுகொண்டிருந்தனர்," என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறுகிறார்.

"அவர்கள் மேலும் ஐந்து பேருக்கு தொற்றைப் பரப்பக்கூடும். அதாவது, ஐந்து பேரிடமிருந்து 25 முதல் 30 பேருக்கு வரை தொற்று பரவக்கூடிய நிலை உருவாகிறது''

ஃபிஜியில் மக்கள் நீரின் கரையோரத்தில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் புற்களும் மரங்களும் நிறைந்த கரைப்பகுதி உள்ளது. தொலைவில், மற்ற தீவுகளின் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன.
படக்குறிப்பு, ஃபிஜியில் அதிகரித்து வரும் ஹெச்ஐவி பாதிப்புகள், அதிகமானோர் முன்வந்து ஹெச்ஐவி பரிசோதனை செய்துகொள்வதன் விளைவாகவும் இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

2024-ஆம் ஆண்டிலேயே ஃபிஜியில் ஹெச்ஐவி பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணிகளில் ஒன்றாக இந்த நடைமுறையை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அடையாளம் கண்டிருந்தது. ஜனவரி மாதத்தில், ஹெச்ஐவி பாதிப்பு "தேசிய நெருக்கடி" என்று அறிவித்த அமைச்சகம், அதற்கான தீர்வின் ஒரு பகுதியாக ஊசி மற்றும் சிரிஞ்சு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்தது.

ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட விரைவான மதிப்பீட்டுக்குப் பிறகு, ஃபிஜியில் "ப்ளூடூத்திங்" பரவலாக இருப்பதற்கான ஆதாரங்கள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் 56 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், இருவர் மட்டுமே "ப்ளூடூத்திங்" நடைமுறையில் ஈடுபட்டதாகவும், நான்கு பேர் அதை நேரடியாகப் பார்த்ததாகவும் தெரிவித்தனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

ஆனால், தான் நேரில் பார்க்கும் வரை இந்த நடைமுறை உண்மையில் நடைபெறுகிறது என்பதை நம்புவதற்கே தயங்கியதாக வோலடாபு கூறுகிறார்.

நரம்பு வழியாக போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பான களங்கம் மற்றும் அவமான உணர்வு காரணமாக, இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஃபிஜி அரசு தயக்கம் காட்டியிருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.

"சுனாமி வரப்போகிறது என்று எனக்குத் தெரியும். நாம் இப்போது இருக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் (அரசு) விரும்பினீர்கள்" என்கிறார் அவர்.

உலகளவில் ஹெச்ஐவி

ஒரு மருத்துவப் பணியாளர் சிறு குழந்தையின் விரலில் ஊசி குத்தி, ஹெச்ஐவி பரிசோதனைக்காக ரத்த மாதிரியை எடுக்கிறார். மஞ்சள் நிற ஹிஜாப் அணிந்திருக்கும் குழந்தையின் தாய், குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியுள்ளார்.
படக்குறிப்பு, ஹெச்ஐவி தாய்மார்களிடமிருந்து அவர்களது குழந்தைகளுக்கும் பரவக்கூடும்.

ஹெச்ஐவி என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்களை சேதப்படுத்தும் வைரஸ். இதனால், அன்றாடம் ஏற்படும் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறன் குறைகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவு உள்ளிட்ட உடல் திரவங்களின் மூலம் ஹெச்ஐவி பரவுகிறது. காயங்கள் மூலமாகவும், ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவதன் மூலமும் பரவலாம். கர்ப்ப காலம், பிரசவம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவக்கூடும்.

எய்ட்ஸ் என்பது ஹெச்ஐவி வைரஸால் நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்ட பிறகு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்கள் ஏற்படும் நிலையாகும்.

கடந்த சில தசாப்தங்களில் சிகிச்சை முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், ஹெச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவின்படி, 2025ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 5.7 லட்சம் பேர் ஹெச்ஐவி தொடர்பான காரணங்களால் உயிரிழந்தனர். 2004ஆம் ஆண்டில் பதிவான அதிகபட்ச அளவுடன் ஒப்பிடுகையில் இது 73 சதவிகிதம் குறைவு.

தற்போது பரிந்துரைக்கப்படும் சிகிச்சையில் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை அடங்கும். இது பொதுவாக உடலில் உள்ள வைரஸின் அளவை கண்டறிய முடியாத அளவுக்குக் குறைக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதுகாக்கப்படுவதுடன், பாலியல் தொடர்பு மூலம் வைரஸ் பரவுவதும் தடுக்கப்படுகிறது.

எனினும், கடந்த ஆண்டு ஐ.நா. எய்ட்ஸ் அமைப்பின் தலைவர் வின்னி பியானிமா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தி வைக்க எடுத்த முடிவு, ஒவ்வொரு நாளும் கூடுதலாக 2,000 புதிய ஹெச்ஐவி தொற்றுகளுக்கும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 60 லட்சத்துக்கும் அதிகமான கூடுதல் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்று கூறினார்.

2025-ஆம் ஆண்டில் மூன்று பிராந்தியங்களிலும் 21 நாடுகளிலும் புதிய ஹெச்ஐவி தொற்றுகள் அதிகரித்ததாக ஐ.நா எய்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், கென்யா, சூடான், பிரேசில், பாகிஸ்தான், ஏமன், எகிப்து, செனகல் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் அடங்கும்.

வேறு எங்கு 'ப்ளூடூத்திங்' நடைமுறை உள்ளது?

மொகோசி ஓஆ மங்கோனா குழுவைச் சேர்ந்த இருவர் நீல நிற போலோ சட்டைகளை அணிந்தபடி, பெரிய நீல நிறப் பதாகையைப் பிடித்துள்ளனர். அதில், "மொகோசி ஓஆ மங்கோனா. நம்பிக்கையைத் தூண்டி, எதிர்காலத்தை வலுப்படுத்தி, அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைத்தல்” என்று எழுதப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, லெசோதோவில் போதைப்பொருள் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடி வரும் மொகோசி ஓஆ மங்கோனா குழுவின் உறுப்பினர்கள்.

உலகிலேயே ஹெச்ஐவி பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் லெசோதோ இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், பெண்களின் உயிரிழப்புக்கு ஹெச்ஐவி முக்கிய காரணியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அங்கு "ப்ளூடூத்திங்" நடைமுறையைத் தடுப்பதற்காக செயல்படும் அமைப்புகளில் ஒன்று மொகோசி ஓஆ மங்கோனா, அதாவது "ஒரு தாயின் அழுகுரல்". போதைப்பொருள் பயன்படுத்தும் பிரச்னை கொண்ட குழந்தைகளைப் பெற்ற தங்களது அனுபவங்களை இந்தப் பெண்கள் குழு பகிர்ந்து கொள்கிறது.

தென்னாப்பிரிக்காவில் இந்த நடைமுறை நடப்பது குறித்து அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். ஆனால், 2024-ஆம் ஆண்டில்தான் இது தங்களது நாட்டிலும், குறிப்பாக "டிராப் ஹவுசஸ்" எனப்படும் இடங்களிலும் நடப்பதை அவர்கள் அறிந்தனர். "டிராப் ஹவுசஸ்" என்பது போதைப்பொருள் பயன்படுத்துவோர் குழுவாகச் சேர்ந்து போதைப்பொருளை விற்பனை செய்யவும், வாங்கவும், பயன்படுத்தவும் கூடிய கைவிடப்பட்ட அல்லது தனியார் கட்டடங்களாகும்.

பொன்டோ துமிசியின் மகள், கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு பள்ளியில் எப்போதும் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவியாக இருந்தார்.

குறைந்த அளவிலான போதைப்பொருளை அனைவரும் பகிர்ந்துகொள்ள விரும்பும்போது "ப்ளூடூத்திங்" நடைபெறுகிறது என்று அவர் கூறுகிறார்.

"தங்களது ரத்தப் பிரிவுகள் ஒன்றுக்கொன்று பொருந்துமா என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதா என்பதும், அந்த ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் அவர்களிடம் உள்ளனவா என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பதும் முக்கியமல்ல. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை" என்கிறார் அவர்.

ரத்தத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் யாரும் உயிர் பிழைக்க முடியாது என்பதால், இந்த நடைமுறை இருக்கவே முடியாது என்று சுகாதாரப் பணியாளர்கள் தன்னிடம் கூறியதாக துமிசி தெரிவிக்கிறார்.

போன்டோ டுமிசி நீல நிற மேலாடை, கருப்பு நிற கார்டிகன் மற்றும் பழுப்பு நிறப் பாவாடை அணிந்துள்ளார். அவருக்கு அருகில் எழுத்துகள் கொண்ட பலகை ஒன்றை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
படக்குறிப்பு, போதைப்பொருள் பயன்பாட்டில் மக்கள் ஈடுபடுவதைத் தடுப்பதில் கல்வி மிகவும் முக்கியமான படி என டுமிசி கூறுகிறார்.

இதேபோன்ற நேரடி ரத்தப் பகிர்வு நடைமுறைகள் வேறு இடங்களிலும் வெவ்வேறு பெயர்களில் பதிவாகியுள்ளன. உதாரணமாக, தான்சானியாவில் போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்திக்கொள்பவர்களிடையே இது "ஃபிளாஷ்பிளட்" என அழைக்கப்படுவதாக ஐ.நா எய்ட்ஸ் அமைப்பின் பிராந்திய இயக்குநர் ஈமன் மர்ஃபி கூறுகிறார். எனினும், இது "உலகளவில் பரவலான போக்காக இல்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், புதிதாக உருவாகும், அதிகம் அறியப்படாத போதைப்பொருள் பயன்படுத்தும் முறைகள் மற்ற நாடுகளில் கண்டறியப்படாமலேயே போகக்கூடும் என்று துமிசி கவலைப்படுகிறார்.

போதைப்பொருள் பயன்பாட்டின் முன்னணியில் இருப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆரம்பகட்ட எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து தங்களைத் தாங்களே அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

"நீங்கள் பெற்றோராக இருந்தால், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், நீங்கள் ஒரு மனிதர். அதாவது, நீங்களும் ஆபத்தில் இருக்கிறீர்கள். போதைப்பொருள் அடிமைத்தனத்தில் எதுவும் நடக்கலாம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு