200 ஆண்டுகளாக அழிந்து விட்டதாக நினைத்த பறவை திடீரென மீண்டு வந்தது எப்படி? வியப்பில் விஞ்ஞானிகள்

'200 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த இனத்தைப் பார்க்கிறோம்': கலபகோஸ் தீவுகளில் மீண்டு வரும் அழிந்த பறவைகள்

பட மூலாதாரம், Carlos Espinosa

    • எழுதியவர், சோஃபி ஹார்டாக்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

இயற்கை வரலாற்றில் சார்லஸ் டார்வின் மிகப்பெரும் புரட்சிக்கு வித்திடக் காரணமாக கலபகோஸ் தீவுக் கூட்டத்திற்கு அவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது ஒரு பறவையைப் பார்த்து, அதன் மாதிரியை பதிவு செய்தார். ஆனால், அதற்குப் பிறகு இரு நூற்றாண்டுகளாக அது காணப்படாமலே போனது. இதனால் அந்தப் பறவை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள்.

ஆனால், இப்போது கலபகோஸ் ரயில் பறவை எனப்படும் அந்தப் பறவை மீண்டு வருவதைக் காண முடிவதாக விஞ்ஞானிகள் வியப்புடன் கூறுகின்றனர்.

சுமார் 200 ஆண்டுகளாக, கலபகோஸ் ரயில் பறவை புளோரியானா தீவில் காணப்படாமல் இருந்தது. மக்கள் வசிக்கும் இந்தச் சிறிய தீவில் இது அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது; கூச்ச சுபாவமுள்ள, கிட்டத்தட்ட பறக்க முடியாத இந்தப் பறவை இன்னமும் வேறு சில தீவுகளில் காணப்படுகிறது. ஆனால், 1835இல் புகழ்பெற்ற தனது பயணத்தின்போது டார்வின் தான் புளோரியானாவில் இதைக் கடைசியாகப் பதிவு செய்திருந்தார்.

இந்த ஆண்டு, புளோரியானாவில் இருந்து எலிகள் மற்றும் காட்டுப் பூனைகள் அகற்றப்பட்ட பிறகு, இந்தப் பறவை மீண்டும் அங்கு தோன்றி இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காணாமல் போன இந்தப் பறவை எப்படித் திரும்பியது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.

ஆபத்தில் இருந்த பிற பறவைகளும் மீண்டு வந்துள்ளன; சில பறவைகள் இதற்கு முன் அந்தத் தீவில் கேட்டிராத புதிய ராகங்களைக்கூட பாடத் தொடங்கியுள்ளன. பாதுகாப்பான, வேட்டையாடிகள் இல்லாத சூழல் விலங்குகளை புதிய சோதனைகளைச் செய்யவும், புதுமைகளைப் புகுத்தவும் எப்படி அனுமதிக்கிறது என்பதற்கான புதிய நுண்ணறிவுகளை இந்த மாற்றம் வெளிப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"கலபகோஸ் ரயில் பறவையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை," என்கிறார் புளோரியானாவை மீட்டெடுக்கும் அமைப்புகளில் ஒன்றான ஐலேண்ட் கன்சர்வேஷனில் பணியாற்றும் காட்டுயிர் மருத்துவர் பவுலா காஸ்டானோ. "அது திடீரெனத் தோன்றியது," என்று கூறும் அவர், ஒருவேளை அது இவ்வளவு காலமாக யாருடைய கண்ணிலும் படாமல் ஒரு சிறிய மக்கள் தொகையாக மறைந்து வாழ்ந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.

"ரயில் பறவைகள் மீண்டும் தோன்றியுள்ளன, இப்போது அவை தீவைச் சுற்றி நடப்பதைப் பார்ப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அவற்றைக் கேட்க முடிகிறது, பார்க்க முடிகிறது, இதை நம்பவே முடியவில்லை," என்கிறார் மீட்டெடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான ஜோகோடோகோ பாதுகாப்பு அறக்கட்டளையின் கடல்சார் உயிரியலாளர் பயோலா சங்கோல்கி.

உள்நாட்டு இனங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு வேட்டையாடிகள் அகற்றப்பட்ட பிறகு, புளோரியானாவில் வாழ்க்கை வியக்கத்தக்க வகையில் திரும்புவதன் ஒரு பகுதியே இந்த ரயில் பறவையின் வருகை.

"கடந்த ஆண்டு வரை மிகவும் அரிதானவை என்று கருதப்பட்ட இனங்கள் இப்போது திடீரென வெடித்தாற்போலப் பெருகியுள்ளன," என்கிறார் வியன்னா பல்கலைக் கழகத்தின் நடத்தையியல் உயிரியலாளர் சோனியா கிளைண்டோர்ஃபர். இவர் தனது குழுவுடன் 20 ஆண்டுகளாக புளோரியானா மற்றும் பிற தீவுகளில் பல்வேறு ஃபிஞ்ச் பறவை இனங்களை ஆய்வு செய்து வருகிறார். அவர், "இது ஒரு குறிப்பிடத்தக்க, உடனடி மீள்வருகை," என்று கூறுகிறார்.

புளோரியானாவில் உள்ள கடல் இகுவானாக்கள்.

பட மூலாதாரம், Carlos Espinosa

படக்குறிப்பு, புளோரியானாவில் உள்ள கடல் இகுவானாக்கள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த 2023இன் பிற்பகுதியில், பத்து ஆண்டுக்கால தயாரிப்புப் பணிகளுக்குப் பிறகு, புளோரியானாவின் பூர்வீக சூழலியலை மீட்டெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எலிகள் மற்றும் காட்டுப் பூனைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 2025இல் எடுக்கப்பட்ட பறவை கணக்கெடுப்பில், முன்பு அரிதாக இருந்த கலபகோஸ் புறாக்கள், லாவா பல்லிகள், ஓணான்கள், கருப்பு அலகு குயில்கள் ஆகியவை இப்போது அடிக்கடி தென்படுவதாக சார்லஸ் டார்வின் அறக்கட்டளையின் ஆய்வாளர் பர்கிட் ஃபெஸ்ல் கூறுகிறார்.

"ஆனால் மிக உற்சாகமான கண்டுபிடிப்பு கலபகோஸ் ரயில் பறவையின் மீள்வருகைதான். இந்தப் பறவை பல நூற்றாண்டுகளாக புளோரியானாவில் பதிவு செய்யப்படவில்லை. அதன் இருப்புக்கான ஒரே வரலாற்று ஆதாரம் டார்வின் சேகரித்த ஒரு மாதிரி மட்டுமே," என்கிறார் ஃபெஸ்ல்.

அடுத்த சில ஆண்டுகளில், டார்வின் சென்றபோது இருந்த ஆனால் தற்போது அங்கு அழிந்துவிட்ட 12 இனங்களை மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் பல பறவை இனங்களும், ராட்சத ஆமைகளும் அடங்கும். இவை தார்மீக இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் அந்த உயிரினங்கள் இன்னும் எஞ்சியிருக்கும் பிற தீவுகளில் இருந்து கொண்டு வரப்படும். இந்தத் திட்டத்தை கலபகோஸ் தேசிய பூங்கா இயக்குநரகம் தலைமையேற்று நடத்துகிறது; இதை ஜோகோடோகோ, ஐலேண்ட் கன்சர்வேஷன், சார்லஸ் டார்வின் அறக்கட்டளை மற்றும் அவற்றின் கூட்டாளிகள் இணைந்து செயல்படுத்துகின்றனர்.

அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள இந்த மறுஅறிமுகங்களுக்கு முன்பே, புளோரியானா தீவு வியக்கத்தக்க வகையில் மாறி வருவதாகவும், சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வாறு மீள முடியும் என்பதற்கு இதுவொரு நேரடிச் சான்றாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தத் தீவுக் கூட்டத்தின் பிற பகுதிகளில் ஏற்கெனவே காணப்பட்ட இதுபோன்ற மீட்சிக் கதைகளுடன் இதுவும் ஒன்றாக இணைகிறது. உதாரணமாக, பின்சோன் தீவில் எலிகள் ஆமைக் குஞ்சுகளை வேட்டையாடியதன் விளைவாக அங்கிருந்த ராட்சத ஆமைகள் அழிவின் விளிம்பில் இருந்தன. ஆனால் இப்போது ஆமைக் குஞ்சுகள் உயிர் பிழைத்து வருவதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

புளோரியானா தீவு எலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது, அவை அங்கிருந்த வனவிலங்குகளை உண்டு வாழ்ந்தன.

பட மூலாதாரம், Carlos Espinosa

படக்குறிப்பு, புளோரியானா தீவு எலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது, அவை அங்கிருந்த வனவிலங்குகளை உண்டு வாழ்ந்தன.

பரிணாம வளர்ச்சியின் சிறந்த உதாரணம்

"கலபகோஸ் தீவுகளின் முதல் தோற்றம் எவ்வித வரவேற்பையும் அளிப்பதாக இல்லை. அங்கிருந்த புதர்கள் துர்நாற்றம் வீசுவதாகக்கூட நாங்கள் நினைத்தோம்," என்று 1835 செப்டம்பரில் பீகிள் கப்பலில் அங்கு சென்றபோது டார்வின் எழுதியிருந்தார்.

இந்தத் தொடக்கம் நம்பிக்கையற்றதாகத் தெரிந்தாலும், உயிரினங்கள் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைகின்றன என்ற டார்வினின் மிக முக்கியமான கொள்கைக்கு இந்தத் தீவுகள் பெரும் ஊக்கமளித்தன. அவர் பதிவு செய்த ஃபிஞ்ச் பறவைகள் மற்றும் மாக்கிங்பேர்ட் இனங்கள் இதற்கு விலைமதிப்பற்ற சான்றுகளாக அமைந்தன.

"பரிணாம வளர்ச்சி செயல்பாட்டில் இருப்பதற்கு கலபகோஸ் தீவுகள் ஓர் அழகான, பாடநூல் போன்ற உதாரணம்," என்று பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை இணைப் பேராசிரியரும், அறிவியல் வரலாற்றாசிரியரும், சார்லஸ் டார்வினின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகளில் நிபுணருமான பிராங்க் சுலோவே கூறுகிறார்.

ஒன்றொடொன்று நெருக்கமாக அமைந்துள்ள இந்தத் தீவுகள், மாக்கிங்பேர்ட், நில இகுவானாக்கள், லாவா பல்லிகள் மற்றும் ஃபிஞ்ச் பறவைகளின் வெவ்வேறு இனங்களைக் கொண்டுள்ளன என்று சுலோவே விளக்குகிறார். 'இயற்கைத் தேர்வு' செயல்முறையின் மூலம், ஒவ்வொரு இனமும் இந்தத் தீவுக் கூட்டம் முழுவதும் மாறுபடும் அந்தந்த குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. உதாரணமாக, 'டார்வின் ஃபிஞ்ச்' என்று அழைக்கப்படும் ஃபிஞ்ச் பறவைகள், ஒரு பொதுவான முன்னோடியில் இருந்து வெவ்வேறு வகையான உணவு வகைகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு அலகுகளைக் கொண்ட இனங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. (இருப்பினும், லண்டனுக்கு திரும்பிய பிறகு, பறவையியல் நிபுணர் ஜான் கோல்டுடன் கலந்தாலோசித்த பின்னரே டார்வின் இந்த நுண்ணறிவுகளைப் பெற்றார் என்று சுலோவே கூறுகிறார்.)

எலிகள், சுண்டெலிகள் மற்றும் காட்டுப் பூனைகள் ஏற்கெனவே கலபகோஸ் தீவுக் கூட்டம் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள தீவு காட்டுயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை டார்வின் கவனித்தார். மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வேட்டையாடிகளை அவர் ஒரு 'பெரிய கொள்ளைநோய்' என்று வர்ணித்தார்."

எலி போன்ற ஒரு புதிய வேட்டையாடி அறிமுகப்படுத்தப்படும்போது, அது சுற்றுச்சூழலை மாற்றுகிறது, அங்கிருக்கும் பூர்வீக இனங்கள் அதற்குத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அழிந்துபோக வேண்டும் என்று சுலோவே மேலும் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, கலபகோஸ் தீவுகளிலும் அதுதான் நடந்தது.

'டார்வின் கற்பனை செய்தது போலவே, ஆக்கிரமிப்பு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், ஒரு நிலையான அமைப்பு சீர்குலைவதைப் பார்க்கிறீர்கள், பின்னர் அது பரிணாம வளர்ச்சியின் கொள்கைகளை உங்களுக்குக் காட்டத் தொடங்குகிறது.'

ஆய்வாளர் சோனியா கிளைண்டோர்ஃபர் ஒரு சிறிய மர ஃபிஞ்ச் பறவையை வைத்திருக்கிறார்.

பட மூலாதாரம், Jefferson Garcia-Loor

படக்குறிப்பு, ஆய்வாளர் சோனியா கிளைண்டோர்ஃபர் ஒரு சிறிய மர ஃபிஞ்ச் பறவையை வைத்திருக்கிறார்.

தீவுக் கூட்டம் முழுவதும், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆக்கிரமிப்பு இனங்கள், பெரும் அழிவை ஏற்படுத்தி, பூர்வீக இனங்களை அச்சுறுத்தியதோடு சிலவற்றைஉள்ளூர் அளவில் அழிவை நோக்கி தள்ளின.

எலிகளும் பூனைகளும் ஆமைக் குஞ்சுகள், வளர்ந்த பறவைகள், பறவைக் குஞ்சுகள், லாவா பல்லிகள், இகுவானாக்கள் மற்றும் நத்தைகளைக்கூடத் தின்று தீர்த்தன. புளோரியானாவில், கலபகோஸ் ரயில், புளோரியானா ஆமை மற்றும் புளோரியானா மாக்கிங்பேர்ட் ஆகியவை காணாமல் போன இனங்களில் அடங்கும். 2017இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, புளோரியானாவில் முதலில் வாழ்ந்த நிலப் பறவை இனங்களில் பாதி அழிந்துவிட்டதைக் காட்டியது.

'புளோரியானாவில் பூனை மற்றும் கொறித்துண்ணிகளை (எலிகள்) ஒழிக்கும் பணி 2023இன் பிற்பகுதியில் தொடங்கியது,' என்று ஃபெஸ்ல் கூறுகிறார். விமானங்கள் மூலமாக விஷம் தூவப்பட்டது மற்றும் கைகளாலும் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு முன்னும் பின்னும் ஆய்வாளர்கள் தீவில் உள்ள பறவைகளைக் கண்காணித்தனர் (முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக்கிரமிப்பு உயிரினங்களை ஒழிக்கும் பணியின்போது சில பறவை இனங்கள் தற்காலிகமாகத் தீவில் இருந்து அகற்றப்பட்டன). எஞ்சியுள்ள எலிகள் மற்றும் சுண்டெலிகளைக் குறிவைத்து மற்றொரு சுற்று ஒழிப்புப் பணி 2026இன் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபிஞ்ச் பறவைகளின் பரிசோதனைப் பாடல்கள்

காணாமல் போன 'ரயில்' பறவை மீண்டும் திரும்பியது மட்டும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கவில்லை. வேட்டையாடிகள் இல்லாத தற்போதைய சூழலில், புளோரியானாவில் உள்ள சில ஃபிஞ்ச் பறவைகள் முற்றிலும் புதிய பாடல்களைப் பாடத் தொடங்கியிருப்பதுதான் அனைத்திலும் வியக்கத்தக்க விஷயம் என்று கிளைண்டோர்ஃபர் கூறுகிறார்.

கிளைண்டோர்ஃபர் மற்றும் அவரது குழுவினர் புளோரியானா மற்றும் அத்தீவுக் கூட்டத்தின் பிற தீவுகளில் உள்ள டார்வின் ஃபிஞ்ச் பறவைகளைச் சுமார் 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றின் அழைப்பொலிகளை 8,000 முறை பதிவு செய்துள்ளனர். அவை அனைத்தும் மிகவும் குறுகிய அளவிலான அழைப்பொலித் தொகுப்புகளையே கொண்டிருந்தன.

புளோரியானா தீவில் முதலில் ஒன்பது வகையான டார்வின் ஃபிஞ்ச் இனங்கள் இருந்தன என்றும், அவற்றில் நான்கு இனங்கள் கடந்த 100 ஆண்டுகளில் உள்ளூர் அளவில் அழிந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். புளோரியானாவில் எஞ்சியிருந்த பறவைகள் முதுமையடைந்து கொண்டிருந்தன, மேலும் அவை அனைத்தும் "சீ-சீ-சீ-சீ" போன்ற மாறாத ஒரு தொகுப்பில் இருந்தே அழைப்பொலிகளைப் பாடி வந்தன என்று கிளைண்டோர்ஃபர் கூறுகிறார்.

ஆனால் இந்த ஆண்டு, இளம் ஃபிஞ்ச் பறவைகள் திடீரென முற்றிலும் புதிய ராகங்களைப் பரிசோதிப்பதை அவர் கேட்டார்.

உதாரணமாக, பழக்கமான பழைய "சீ-சீ-சீ-சீ" என்பதற்குப் பதிலாக, "இப்போது சில இளம்பறவைகள் 'சு-வா! சு-வா! சு-வா!' (Choo-waa!) என்று பாடுவதைக் கேட்க முடிகிறது. இதற்கு முன்பு நான் இதைக் கேட்டதே இல்லை," என்கிறார் அவர்.

மற்ற இளம் ஃபிஞ்ச் பறவைகள் அந்த அசைச் சொற்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, பழைய பாடல்களில் இருந்து ரீங்கார ஒலிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றைப் புதிய ராகங்களாக மாற்றுகின்றன.

"இந்த ஆண்டு சில ஆண் பறவைகள், எந்த அசைச் சொற்களையும் எழுப்பாமல், அந்த ரீங்கார ஒலியிலேயே புதுமையைப் புகுத்துகின்றன. அவை 'பிஸ்-பிஸ்!' (Bzz-bzz!) அல்லது 'பிஸ்-ப்சீ!' (Bzz-pshee!) எனக் குரல் எழுப்புகின்றன. இது மிகவும் விசித்திரமானது," என்று அவர் கூறுகிறார்.

இளம் பறவைகள் இப்போது மிகவும் துணிச்சலாக நடந்து கொள்கின்றன, மற்ற பறவைகளுடன் அதிகமாகக் கலந்து பழகுகின்றன. மேலும் தங்களுக்குள் அழைப்பொலிகளைப் பரிமாறிக்கொள்கின்றன. "வெவ்வேறு இனங்கள் கலந்த திரள்களில் இந்த இளம்பறவைகள் ஒன்றாகச் சுற்றித் திரிவதையும், அவை ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக் கொள்வதையும் பார்க்கிறோம்," என்று கூறும் கிளைண்டோர்ஃபர், அவை ஒன்றையொன்று பின்பற்றிக் குரல்களை எழுப்புவதாகவும் கூறுகிறார்.

200 ஆண்டுகளாக அழிந்து விட்டதாக நினைத்த பறவை திடீரென மீண்டு வந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கலபகோஸ் தீவுக் கூட்டம்

என்ன நடக்கிறது?

இந்த மாற்றத்தை விளக்குவதற்காக, எலிகள் மற்றும் பூனைகள் அகற்றப்படுவதற்கு முன்பு ஃபிஞ்ச் பறவைகளின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை ஒரு கொடூரமான சித்திரமாக கிளைண்டோர்ஃபர் விவரிக்கத் தொடங்கினார்.

"நாங்கள் பறவைக் கூடுகளைச் சோதிக்கச் சென்றபோது, பெரும்பாலும் ஒரு எலியாவது அதனுள் இருந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்," என்று அவர் கூறுகிறார். "அவை கூடுகளில் இருந்தன, மரங்களில் ஏறின, தீவு முழுவதையும் எலிகள் ஆக்கிரமித்திருந்தன. அவை எங்கள் கூடாரங்களின் மீது கூட ஊர்ந்து கொண்டிருந்தன."

நடுத்தர மர ஃபிஞ்ச் வகை பறவைகள் குறிப்பாகப் பாதிக்கப்பட்டிருந்தன. ஏனெனில் அவற்றின் கூடுகள் தீவில் உள்ள பூர்வீக ஆந்தைகள் உள்ளிட்ட அனைத்து வேட்டையாடிகளுக்கும் வசதியான உயரத்தில் இருந்தன என்று அவர் கூறுகிறார்.

இந்தப் ஃபிஞ்ச் இனம் 'ஏவியன் வேம்பயர் ஃபிளை' எனப்படும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒட்டுண்ணியால் குறிப்பாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் லார்வாக்கள் இளம் பிஞ்ச் பறவைகளின் அலகுகளை உள்ளிருந்து தின்று தீர்த்தன, இதனால் அவற்றின் நாசித் துவாரங்கள் சிதைந்தன. ரத்தம் மற்றும் திசு இழப்பால் பல குஞ்சுகள் உயிரிழந்தன. மேலும் சிதைந்த நாசித் துவாரங்களால் பிஞ்ச் பறவைகளால் அவற்றின் பாடல்களைச் சரியாகப் பாட முடியவில்லை. இது அவை தங்களுக்குரிய இணையைத் தேடும் வாய்ப்பையே கெடுத்தது.

"ஃபிஞ்ச் பறவைகளின் கூடுகள் முட்டை நிலையில் இருக்கும்போதே எலிகளால் தின்னப்பட்டன, அல்லது குஞ்சுகள் ஏவியன் வேம்பயர் ஃபிளைகளால் உயிருடன் தின்னப்பட்டன. எலிகளிடம் இருந்து தப்பிக்கப் தாய்ப் பறவைகள் மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து தள்ளித் தள்ளிக் கூடுகளைக் கட்டியதால், அதையும் மீறி உயிர் பிழைத்த ஒரு சில குஞ்சுகளும் ஆந்தைகளால் வேட்டையாடப்பட்டன. எனவே, கடுமையாக அழியும் நிலையில் இருந்த நடுத்தர மர ஃபிஞ்ச் பறவைகளில் மிகச் சில குஞ்சுகளே உயிர் பிழைத்தன. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது," என்று அவர் விளக்கினார்.

புளோரியானாவில் உள்ள ஓர் ஆந்தை.

பட மூலாதாரம், Johannes Ploderer

படக்குறிப்பு, புளோரியானாவில் உள்ள ஓர் ஆந்தை

"அந்தக் கொடூரமான நிலைமை இப்போது வியத்தகு முறையில் மாறிவிட்டது. தற்போது அந்தத் தீவு கிட்டத்தட்ட வேட்டையாடிகள் இல்லாத இடமாக மாறியுள்ளது. எலிகளும் காட்டுப் பூனைகளும் இப்போது தீவில் இருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டுவிட்டன. விஷம் வைக்கப்பட்ட எலிகளின் சடலங்களை உண்டு பூர்வீக ஆந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க, அவை தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 'ஏவியன் வேம்பயர் ஃபிளை' ஒட்டுண்ணியை ஒழிக்க, பறவைக் கூடுகளில் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன மற்றும் ஃபிஞ்ச் பறவைகளுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த கூடுகட்டும் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்று கிளைண்டோர்ஃபர் கூறுகிறார்.

இதன் விளைவாக, இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கண்காணிப்புத் தரவுகள் ஃபிஞ்ச் பறவைகளின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுவதாக கிளைண்டோர்ஃபர் கூறுகிறார்: "நாங்கள் குஞ்சுகள் வெற்றிகரமாகப் பொரித்து வெளிவருவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்ததைப் பார்த்தோம். இத்தனை கூடுகளில் இவ்வளவு அதிகமான குஞ்சுகளை நாங்கள் இதற்கு முன் பார்த்ததே இல்லை."

மீண்டெழுந்துள்ள இந்த இளைய தலைமுறைப் பறவைகள், தற்போது நிலவும் பாதுகாப்பான சூழல் காரணமாகப் புதிய ராகங்களைப் பாடிப் பரிசோதனை செய்து வருகின்றன என்று அவர் கூறுகிறார்.

ஃபிஞ்ச் பறவைகள் இளமையாக இருக்கும்போது ஓர் இணையை ஈர்க்கும் பாடலைக் கற்றுக்கொண்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் அதையே பாடுகின்றன என்று அவர் கூறுகிறார். இந்தப் பாடல் ஒரு மூத்த ஆண் பறவையிடம் இருந்து கற்றுக் கொள்ளப்படுகிறது; இருப்பினும், இளம் பறவையால் அந்த மெட்டை மாற்றியமைக்க முடியும். உதாரணமாக, ஒரு புதிய ஒலியை முயல்வது அல்லது மற்றொரு இனத்தின் ஒலியைப் பின்பற்றுவது போன்றவற்றைச் செய்யலாம். குழுவில் உள்ள மற்றவர்களைப் போலவே பாடுவது அல்லது புதியவற்றைப் பரிசோதித்து வித்தியாசமாகத் தெரிவது ஆகிய இரண்டில் எது நன்மையானது என்பது சூழலைப் பொறுத்து, அமையும் என்கிறார் கிளைண்டோர்ஃபர்.

"அனைத்தும் 'சீ-சீ-சீ-சீ' என்று ஒரே மாதிரிப் பாடிக் கொண்டிருக்கும்போது ஓர் ஆந்தை அங்கே பறந்து வந்தால், ஒன்றை மட்டும் தனியாக அடையாளம் காண்பது அதற்குக் கடினமாக இருக்கும்," என்கிறார் கிளைண்டோர்ஃபர்.

"இப்போது அனைத்தும் 'சீ-சீ-சீ-சீ' என்று பாடும்போது, ஒரு பறவை மட்டும் 'ட்வீ! ட்வீ!' என்று பாடுவதாகக் கற்பனை செய்து பாருங்கள். வித்தியாசமாகப் பாடும் அந்தப் பறவையை ஓர் ஆந்தையால் மிக எளிதாகக் குறிவைத்துப் பிடிக்க முடியும்," என்கிறார் அவர்.

தீவில் வேட்டையாடிகள் சுற்றித் திரிந்த காலத்தில், ஃபிஞ்ச் பறவைகள் ஒரு இனத்திற்கு ஐந்து முதல் பத்து பாடல்கள் என்ற குறுகிய எல்லைக்குள் ஒரே மாதிரியான பாடல்களையே பாடின; இது அடிப்படையில் அவை கூட்டத்தோடு கூட்டமாக ஒளிந்துகொள்ள உதவியது.

"வேட்டையாடிகள் இருக்கும் சூழலில் வித்தியாசமாகத் தெரிவதிலும், வித்தியாசமாக ஒலிப்பதிலும் பெரிய ஆபத்து உள்ளது. ஆனால் அந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபடும்போது, புதிய பரிசோதனைகளைச் செய்ய முடிகிறது" என்கிறார் கிளைண்டோர்ஃபர்.

கலபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள புளோரியானா தீவு.

பட மூலாதாரம், Carlos Espinosa

படக்குறிப்பு, கலபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள புளோரியானா தீவு

"இப்போது, ஒரு பாதுகாப்பான சூழலில், நாம் ஒரு 'கலாசாரப் புரட்சியை' கண்டு வருகிறோம்," என்று கிளைண்டோர்ஃபர் குறிப்பிடுகிறார். ஃபிஞ்ச் பறவைகள் அதிக நடத்தையை வெளிப்படுத்துவதோடு, புதிய பரிசோதனைப் பாடல்களையும் பாடுகின்றன. "துணிச்சலாக இருக்கும் அனைத்து இளம் பறவைகளும் இப்போது இறப்பதில்லை. முன்பு, அவை இறந்தன," என்று அவர் விளக்குகிறார்.

இதேபோன்ற ஒரு முறை பிற இடங்களிலும் காணப்படுவதற்கான சான்றுகள் உள்ளன: ராபின் பறவைகள் குறித்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், வேட்டையாடிகள் இல்லாத சூழலில் வாழும் பறவைகள், வேட்டையாடிகள் உள்ள சூழலில் வாழ்பவற்றைவிட கணிசமான அளவு அதிகத் துணிச்சலுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

"அடுத்த சில ஆண்டுகளில் ஃபிஞ்ச் பறவைகளிடையே இத்தகைய 'புத்தாக்கங்கள்' பெருமளவு அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என்று கூறும் கிளைண்டோர்ஃபர், அவை இந்தப் பாதுகாப்பான சூழலுக்குத் தொடர்ந்து தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் என்கிறார். அடுத்த கேள்வி, இந்த மாற்றங்களுக்குப் பெண் ஃபிஞ்ச் பறவைகள் எப்படி எதிர்வினையாற்றப் போகின்றன என்பதுதான். அதாவது, அவை புதிய பரிசோதனைப் பாடல்களைப் பாடும் ஆண் பறவைகளைத் தேர்வு செய்யுமா அல்லது பாரம்பரியமான முறையில் பாடும் ஆண் பறவைகளைத் தேர்வு செய்யுமா?

"எந்த வகையான நடத்தைகள் அழிந்து போகப் போகின்றன, எவை நாம் கற்பனை செய்து பார்த்திராத வழிகளில் செழிக்கப் போகின்றன?" என்று சுவாரஸ்யமான கேள்வி இருப்பதாக அவர் கூறுகிறார். இதற்கான விடை, நடத்தைகள் எப்படி, ஏன் பரிணாம வளர்ச்சி அடைகின்றன என்பது குறித்த முற்றிலும் புதிய நுண்ணறிவுகளை வழங்கும் என்று அவர் நம்புகிறார்.

இந்தத் தீவுக் கூட்டத்தில் உள்ள சாண்டா குரூஸ் தீவில் வளர்ந்த பயோலா சங்கோல்கி, கலபகோஸ் ரயில் பறவை இப்போது அடிக்கடி தென்படும் காட்சியாக மாறியிருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக உள்ளதாகவும், "உயிரினங்கள் எவ்வளவு மீள்திறன் கொண்டவை என்பதை இந்தத் தீவு காட்டுகிறது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓர் இனத்தை மீண்டும் பார்க்க முடிகிறது," என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு