'மற்றவரை சாக விடமாட்டேன்' - மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்திய விமானி கூறியது என்ன?

பட மூலாதாரம், Narendramodi/X
- எழுதியவர், விகாஸ் பாண்டே
- பதவி, இந்திய டிஜிட்டல் ஆசிரியர், டெல்லி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
துபையிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானத்தில், சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட போதிலும், சக பயணிகள் உள்ளே வருவதற்காகக் காக்பிட் கதவைத் திறந்த இந்திய விமானி, "மற்றவர்களைச் சாக விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த விமானம் ஆபத்தான முறையில் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்ததைக் கவனித்தபோது, தான் தரையில் காயங்களுடன் கிடந்தாலும் எப்படியாவது ஒரு இறுதி முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்ததாகக் கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machhar) கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் காணொளி வாயிலாகப் பேசிய அவர், "நான் காயமடைந்து தரையில் கிடந்தாலும், கதவை உள்ளிருந்து திறக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு ஒரு இறுதி முயற்சி செய்தேன்" என்றார்.
"மற்றவர்களும் உள்ளே வந்து (சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதில்) உதவினர். நான் நிச்சயமாக எனது சொந்த உயிருக்காகத்தான் போராடிக்கொண்டிருந்தேன், அதே நேரத்தில் மற்றவர்களை சாக விடமாட்டேன் என்பதிலும் தெளிவாக இருந்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.
புதன்கிழமை அதிகாலை துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை விமானம், தனது பயணத்தின் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு 17,000 அடிக்கும் அதிகமான உயரத்திலிருந்து (5,200 மீட்டர்) திடீரெனக் கீழ்நோக்கிப் பாய்ந்தது.
இது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் குழுவினருக்கு அவசரகாலச் சிக்னல் அனுப்பியதுடன், விமானக் கடத்தலைக் குறிக்கும் '7500' என்ற அவசரகாலக் குறியீட்டிற்கும் (Squawk code) மாறியது.
விமானத்தை "மோதச் செய்து நொறுக்க முயல்வதற்கு முன்பு" ஒரு விமானி மற்றொருவரைக் கத்தியால் குத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்டவரை சக பயணிகள் மடக்கிப் பிடித்ததைத் தொடர்ந்து, விமானத்தில் பயணித்த இரண்டு ரிசர்வ் விமானிகள் வடமேற்கு சௌதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 06:58 மணிக்கு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
நெதன்யாகுவால் "உண்மையான ஹீரோ" என்று புகழப்பட்ட மச்சார், தபூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உடல் நலம் தேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தியவர் ஓமனைச் சேர்ந்தவர் என்றும், அவர் "தீவிரவாத இஸ்லாமியக் கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம்" என்று விசாரணைகள் தெரிவிப்பதாக நெதன்யாகு, ஃபாக்ஸ் நியூஸிடம் (Fox News) தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர் பயணிகளாலும் விமானப் பணியாளர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டுக் கட்டப்பட்ட பிறகு, விமானக் குழுவினரிடம் "என்னைக் கொல்லுங்கள், என்னைக் கொல்லுங்கள்" என்று கத்திக் கொண்டிருந்ததாகவும், எனவே அவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டவர் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் பயங்கரவாதச் செயல் அல்லது அதுபோன்ற நோக்கங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Embassy of India in Israel
ஸ்மித் மச்சாரின் அடையாளம் வெளிவந்ததிலிருந்து இந்தியச் சமூக ஊடகங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தான் கடந்த 17 ஆண்டுகளாக விமானங்களை இயக்கி வருவதாகவும், "கண்களை மூடிக்கொண்டு கூட விமானத்திற்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்" என்றும் அவர் மோதியிடம் தெரிவித்தார்.
அவரது தைரியம், பொறுமை மற்றும் துரிதமான முடிவெடுக்கும் திறன் ஆகியவை பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளன என்றும் ஒட்டுமொத்த நாடும் அவரைப் பற்றிப் பெருமிதம் கொள்வதாகவும் பிரதமர் அவரிடம் கூறினார்.
வியாழக்கிழமை அமீரகத்துக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்தியில், மச்சார் "நலமுடன் இருப்பதாகவும், நன்றாக மீண்டு வருவதாகவும்" தெரிவித்தது. கேப்டன் ஸ்மித்தின் துணிச்சலைக் கண்டு தாம் "பெருமிதம் கொள்வதாகவும்", அவரை நேரில் சந்தித்து "மிகவும் நிம்மதியடைந்ததாகவும்" தூதர் தீபக் மிட்டல் கூறினார்.
"இந்தக் காயத்தை நான் ஒரு காயமாகப் பார்க்கவில்லை, அப்படிப் பார்த்தால் எனது குணமடையும் செயல்முறை இன்னும் கடினமாகிவிடும்" என்று மச்சார் கூறினார்.
"இது மெல்ல நகர்ந்து, சிறிது காலம் எடுக்கக்கூடிய ஒரு பயணம் என்றே நான் பார்க்கிறேன். ஆனாலும், நான் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் பழையபடி ஆரோக்கியத்துடன் திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


































