கால்பந்து உலக சாம்பியன் குகுரெல்லாவின் மறுபக்கம் - ஆட்டிசம் பாதிப்புள்ள மகனுடன் ஒரு தந்தையின் பயணம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி விளையாடிய எந்தப் போட்டியிலும், மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஓடிக்கொண்டிருக்கும் சுருள் தலைமுடியுடன் கூடிய வீரரை கவனிக்காமல் இருக்க முடியாது.
ஸ்பெயின் அணியின் டிஃபெண்டரான மார்க் குகுரெல்லாதான் அந்த வீரர்.
கோல் அடித்த பிறகு, பென்குயின் போல துள்ளிக் குதித்து அவர் கொண்டாடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"பென்குயின்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே துணையையும் ஒரே குடும்பத்தையும் தேர்ந்தெடுத்து, அவை என்றென்றும் ஒன்றாகவே வாழ்கின்றன என இணையத்தில் பார்த்தேன். அதனால்தான், இன்பத்திலும் துன்பத்திலும் எனக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என் குடும்பத்தை நான் நினைவுகூர விரும்புகிறேன். இந்தக் கொண்டாட்டம் அவர்களுக்காகத்தான்" என்று செய்தியாளர் சந்திப்பில் குகுரெல்லா குறிப்பிட்டார்.
குகுரெல்லாவுக்கு 28 வயதாகிறது. குகுரெல்லா-கிளாடியா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு மேட்டியோ, ரியோ, பெல்லா என மூன்று குழந்தைகள் உள்ளனர். கால்பந்தை விட தனது குடும்பமே முதன்மையானது என்பதை குகுரெல்லா அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் உறுப்பினராக குகுரெல்லாவும் தற்போது உலகச் சாம்பியனாக மாறியுள்ளார்.
ஆனால், கால்பந்து வீரர்களின் வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்கும்போது முழுமையாகத் தோன்றினாலும், அவர்களுக்கும் "தனிப்பட்ட பிரச்னைகள்" இருப்பதாகக் கூறுகிறார் குகுரெல்லா.

பட மூலாதாரம், Getty Images
அரங்கில் உள்ள ரசிகர்களுக்கு பெரும்பாலும் தெரியாத அன்றாட சவால்களில் ஒன்று, குகுரெல்லாவின் மகன் மேட்டியோவுடனான அவரது வாழ்க்கை.
மேட்டியோவுக்கு 3 வயதாக இருந்தபோது, அவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு நிலை 1 இருப்பது கண்டறியப்பட்டது.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தில் மிகவும் லேசான பாதிப்பாக நிலை 1 கருதப்படுகிறது.
அமெரிக்காவின் போஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் கூற்றுப்படி ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு என்பது ஒரு "நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு" ஆகும். அதாவது, ஒரு குழந்தை எவ்வாறு சிந்திக்கிறது, நகர்கிறது, பேசுகிறது அல்லது நடந்து கொள்கிறது என்பதில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சமூகத் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் சிரமம், ஒரே செயல்களை மீண்டும் மீண்டும் செய்வது போன்ற பழக்கவழக்கங்கள், மேலும் சிலருக்கு அறிவாற்றல் திறன்களில் வரம்புகள் அல்லது சமமற்ற வளர்ச்சி காணப்படுவது ஆகியவை இந்த பாதிப்பின் தாக்கங்களாக கருதப்படுகின்றன.
"என் மூத்த மகன் தான் எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றியவன். அவன் நர்சரி பள்ளியில் சேரத் தொடங்கியபோது, நாங்கள் வித்யாசமான விஷயங்களைக் காணத் தொடங்கினோம். குழந்தைகள் விளையாடும் புகைப்படங்களில், அவன் எப்போதும் சற்று தனியாக இருப்பதை நாங்கள் கவனித்தோம்" என்று குகுரெல்லா ஸ்பானிஷ் பொது ஒளிபரப்பு நிறுவனமான ஆர்டிவிஇ-யிடம் தெரிவித்தார்.
தங்கள் மகனுக்கு ஆட்டிசம் இருப்பதாகத் தங்களுக்கு எவ்வாறு சந்தேகம் எழுந்தது என்பதை அவர் பின்வருமாறு விளக்குகிறார்.
"அவன் வளர வளர, அதிகமாக பேசவில்லை. அதிகமாக உரையாடவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம். அந்த நிலைதான் மிகவும் கடினமாக இருந்தது. உங்கள் குழந்தை சிரமப்படுவதைப் பார்ப்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று என நான் நினைக்கிறேன்" என்று குகுரெல்லா கூறினார்.
இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது தனக்கு இன்னும் கடினமாக இருப்பதாகவும், சில நேரங்களில் தனது மகனுக்கு எவ்வாறு உதவுவது என்பதே தெரியாமல் போய்விடுவதாகவும் குகுரெல்லா கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்த அனுபவம், வாழ்க்கையை அதிக பொறுமையுடனும், பரிவுடனும், உணர்வுபூர்வமாகவும் அணுக கற்றுக்கொடுத்துள்ளதாக அவர் கூறுகிறார். மேலும், முன்னணி கால்பந்து வீரர் என்ற தனது நிலை, இந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதேபோன்ற சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு உதவவும் வாய்ப்பளிப்பதாக அவர் கருதுகிறார்.
"எங்களுக்கு கிடைத்துள்ள இந்தப் பரவலான கவனத்தின் மூலம், இந்த விஷயம் பலரையும் சென்றடைவதும், மேலும் பல குடும்பங்களுக்கு உதவுவதும், புதிய பள்ளிகள் மற்றும் கூடுதல் ஆதரவு மையங்கள் உருவாவதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அனுபவம், வாழ்க்கையில் உண்மையில் முக்கியமானவை எவை, முக்கியமில்லாதவை எவை என்பதை உணர்ந்து அதற்கு முன்னுரிமை கொடுக்க எனக்கு உதவியுள்ளது" என்கிறார் குகுரெல்லா.
குறிப்பாக, ஆரம்ப காலத்தில் தங்கள் மகன் படித்த பள்ளியிலிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்றும், பெற்றோர்களாக பல நேரங்களில் தாங்கள் வழி தெரியாமல் தவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"பள்ளியிலிருந்து எங்களுக்கு அதிக உதவி கிடைக்கவில்லை. நாங்கள் மிகவும் கடினமான மாதங்களைக் கடந்து வந்தோம். தினமும் நாங்கள் இருவரும் சேர்ந்து மேட்டியோவை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது அழுதுகொண்டே வருவோம். ஒவ்வொரு நாளும் அப்படித்தான் இருந்தது," என்று குகுரெல்லாவின் மனைவி கிளாடியா ரோட்ரிகஸ் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
'நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன'
"நாங்கள் எப்போதும் மேட்டியோவைப் பற்றியே சிந்திக்க வேண்டும். சில சமயங்களில் நாங்கள் சில விஷயங்களைச் செய்ய விரும்புவோம், ஆனால் அது அவனுக்கு நல்லது இல்லை என்பதால் எங்களால் அதைச் செய்ய முடியாது. விடுமுறை நாட்கள் எப்போதும் கடினமானவை, ஏனென்றால் அதில் அவனுக்கு பல மாற்றங்கள் இருக்கும்" என்று கூறும் குகுரெல்லா, "உங்கள் மகனுக்கு ஆட்டிசம் இருப்பதாக மருத்துவர் கூறிவிடலாம். ஆனால், அதை எதிர்கொள்வதற்கு பெற்றோர் தயாராக இருப்பதில்லை. அதனால், நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில், மேட்டியோவும் எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறான்" என்று கூறினார்.
ஒரு நேர்காணலில், அதைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட அவர், மேட்டியோ கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது தான் வேதனைப்படுவதாகக் கூறினார்.
தனது சகோதரர்களைப் போல மேட்டியோ போட்டிகளின் போது ரசிகர்கள் அமரும் பகுதிக்கு சென்று போட்டியை நேரில் பார்ப்பதில்லை. அதிக கூட்டமும் சத்தமும் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
எனினும், ஸ்பெயின் வானொலி நிலையமான கோப்பேவிடம் பேசிய குகுரெல்லா, 2024 ஆண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் போலவே, இந்த முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியையும் மேட்டியோ நேரில் காண வந்திருந்ததாக தெரிவித்தார்.
"அமெரிக்காவில் மிகவும் வெப்பமாக இருக்கும். அதனால் அவன் விரைவாக சோர்வடைந்து பதற்றமடைவான். குளிர்ச்சியான சூழல்தான் அவனுக்கு பிடிக்கும். குளிர்சாதன வசதி, நீச்சல் குளம் போன்றவற்றை விரும்புவான்," என்று குகுரெல்லா விளக்கினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































