உங்கள் ஷாப்பிங் பைகளை இனி இவர்கள் 'சுமப்பார்கள்' - சர்ச்சையான புதிய சேவையின் பின்னணி

பட மூலாதாரம், Chitral Khambhati/ BBC
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது கடை கடையாய் ஏறியிறங்கி பொருட்களை வாங்கும்போது, பைகளை யாராவது தூக்கி வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? அல்லது நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது உங்கள் குழந்தையின் தள்ளுவண்டியை அவர்கள் தள்ளிக்கொண்டு வந்தால் எப்படியிருக்கும்?
டெல்லியில் உள்ள பரபரப்பான சந்தை ஒன்றில், புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்கி வருகிறது.
ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட 'கேரிமென்' நிறுவனம், லாஜ்பத் நகர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு மணி நேரம் வரை ஆண் மற்றும் பெண் உதவியாளர்களை வழங்குகிறது. இதற்கான கட்டணம் 30 நிமிடங்களுக்கு 79 ரூபாயில் தொடங்குகிறது. ஒரு மணி நேரத்திற்கு 149 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த சேவை வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த கேரிமென் ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், அதே வேளையில் இதுவொரு புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்திய நடுத்தர வர்க்கத்தினர், தங்களுக்கு எல்லாமே கிடைக்க வேண்டும் என அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறார்களா? மற்றும் இந்த உதவியாளர்கள் சுரண்டல் வேலைகளில் இருக்கும் வெறும் ஆடம்பர "கூலிகள்" தானா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ரிது கந்தாரி ஸ்ரீவஸ்தவா மற்றும் கனிஷ்கா மல்ஹோத்ரா ஆகிய இரு தோழிகள் இணைந்து இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் கைக்குழந்தைகள் இருக்கின்றன.
"கடந்த ஆண்டு கனிஷ்காவும் நானும் எங்களது குழந்தைகளுடன் லாஜ்பத் நகருக்குச் சென்றபோதுதான் இந்த யோசனை பிறந்தது. எங்களது ஷாப்பிங் பைகளைத் தூக்கிக்கொண்டு, குழந்தைகளின் தள்ளுவண்டியையும் கையாள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது" என ரிது பிபிசியிடம் கூறினார்.
"அங்கு வயதான பெண்மணி ஒருவர் தனது பைகளைத் தூக்க முடியாமல் திணறுவதைக் கண்டோம். அவருக்கு உதவ நாங்கள் விரும்பினோம், ஆனால் எங்களது பொருட்களையே எங்களால் கையாள முடியவில்லை என்ற நிலையில் அவர்களுக்கு உதவ முடியாதது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது."
"எனவே, பணம் கொடுத்து உதவி பெறக்கூடிய ஒரு சேவை இருந்தால், எங்களை ஷாப்பிங் அழைத்துச் செல்லும்படி குடும்ப உறுப்பினர்களிடம் கெஞ்ச வேண்டியிருக்காது என்று நாங்கள் நினைத்தோம்."
ரிது, கனிஷ்கா மற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள் அடிக்கடி ஷாப்பிங் செல்லும் லாஜ்பத் நகர் மற்றும் பல சந்தைகள், சமமான தரைகள், எஸ்கலேட்டர்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட மால்கள் அல்ல. அவை மக்கள் நெரிசல் மிகுந்த திறந்தவெளி சந்தைகள் ஆகும். அங்கு நடைபாதைகளே இருக்காது அல்லது அவை சமமற்று இருக்கும், அல்லது வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். இதனால் அங்கு குழந்தைகளின் தள்ளுவண்டிகளை ஓட்டிச் செல்வது அல்லது சில நேரங்களில் சாதாரணமாக நடப்பது கூட கடினமான ஒன்றாக உள்ளது.

பட மூலாதாரம், Geeta Pandey/BBC
விமர்சனம் என்ன?
அன்று மாலை தங்கள் குடும்பத்தினருடன் ரிது கந்தாரியும் கனிஷ்கா மல்ஹோத்ராவும் இந்த யோசனையைப் பற்றி விவாதித்தனர். அதன் பிறகு 'கேரிமென்' நிறுவனம் வடிவம் பெறத் தொடங்கியது.
அடுத்த சில மாதங்களில், அவர்கள் தங்களது நிறுவனத்தைப் பதிவு செய்து, மாநகராட்சி மற்றும் காவல்துறையிடமிருந்து அனைத்து அனுமதிகளையும் பெற்று, லாஜ்பத் நகரில் சிறிய சேவை மையம் ஒன்றை அமைத்தனர்.
பின்னர் அவர்கள் ஐந்து இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினார்கள். அதன் பிறகு இரண்டு பெண்களையும் வேலைக்குச் சேர்த்தனர். ஒரு மாத கால தீவிர பயிற்சிக்குப் பிறகு இந்தச் சேவையைத் தொடங்கினர்.
இந்தத் ஸ்டார்ட்-அப் நிறுவனம் மிக விரைவாக இணையத்தில் வைரலானது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டனர். உடனே, சமூக ஊடகங்களில் இந்த சேவைகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நகர்ப்புற வேலையின்மை தொடர்ந்து 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில், மில்லியன் கணக்கான மக்கள் வேலை கிடைக்காமல் திணறும் சூழலில், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சிறந்த யோசனை இது என்று பலர் இதனைப் பாராட்டினர்.
ஆனால் விமர்சகர்களோ, வீட்டு வேலைகள் மற்றும் சாதாரணப் பணிகளை மற்றவர்களைக் கொண்டு செய்து பழகிய சோம்பேறித்தனமான, வசதி படைத்த இந்தியர்களின் உச்சகட்ட ஆடம்பர மனப்பான்மை இது என்று இதனைக் குறிப்பிட்டனர்.
சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியான பிறகு இந்த எதிர்ப்பு மேலும் வலுத்தது. அந்தப் படங்கள், நன்கு ஆடை அணிந்த வசதியான பெண்கள் இந்தச் சேவையின் வாடிக்கையாளர்களாக இருப்பது போல் சித்தரித்திருந்தன.
"நகங்களை அழகுபடுத்திக் கொண்டு, அவை பாழாகக் கூடாது என்று நினைக்கும் அதி-பணக்காரப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சேவையை போல் இது தோன்றியது" என தொழிலாளர் உரிமை ஆர்வலரும் சமூகவியலாளருமான ஆகிருதி பாட்டியா கூறினார்.
சிலர் இந்த கேரிமென் ஊழியர்களை, சுரண்டல் நிறைந்த 'கிக் எகானமி' எனப்படும் தற்காலிகப் பணியாளர்கள் வேலைகளில் சேரும் வெறும் ஆடம்பரமான "கூலிகள்" என்று கூறினர். சிலர் இதனை நவீன கால அடிமைத்தனம் என்றும் அழைத்தனர். ஆனால் இந்த விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் நிறுவனர்கள் முற்றிலுமாக மறுத்தனர்.
"முதலாவதாக, இங்கு அடிமைத்தனம் எதுவும் இல்லை. எங்களுக்காக வேலை செய்ய நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மேலும் எங்களது ஊழியர்கள் அனைவரும் முழுநேர சம்பளம் பெறும் பணியாளர்கள், அவர்கள் தற்காலிக 'கிக்' ஊழியர்கள் அல்ல," என்று ரிது கூறினார்.
"மேலும், இது ஆடம்பர மனப்பான்மை பற்றியது அல்ல. தெருக்களிலும், மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைகளிலும் தனியாகச் செல்ல சிரமப்படுபவர்களுக்கு மட்டுமே நாங்கள் உதவி வழங்குகிறோம்."
கடந்த ஆறு வாரங்களில் தங்களது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்தான் என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Chitral Khambhati/ BBC
தங்களின் மிக முதல் வாடிக்கையாளர் ஒரு கர்ப்பிணிப் பெண் என்று 'கேரிமென்' ஊழியர்களில் ஒருவரான ஆனந்த் குமார் கூறுகிறார். தனது பயிற்சியின் போது, எப்போதும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களைத் தங்களுடைய குடும்பத்தினர் போல நடத்த வேண்டும் என்றும் தன்னிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த கேரிமென் ஊழியர்கள் தள்ளுவண்டிகள், குடைகள், மடிக்கக்கூடிய நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்களை உடன் எடுத்துச் செல்கின்றனர்.
"வாடிக்கையாளர்கள் செல்ல விரும்பும் கடைகளுக்கு அவர்களை விரைவாக அழைத்துச் செல்வதற்காக, சந்தையின் அமைப்பை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுமாறும் எங்களிடம் கூறப்பட்டது. அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்து காத்திருக்கும்போது, அவர்களுக்காக உணவகக் கவுண்டர்களில் நாங்கள் வரிசையில் நிற்போம்" என்று ஆனந்த் கூறினார்.
இதற்கு முன்பு புடவைக் கடை ஒன்றில் உதவியாளராகவும், செயலி வழி உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக சேவைகளில் டெலிவரி மேனாகவும் பணியாற்றிய 18 வயதான ஆனந்த், முந்தைய வேலைகளை விட இங்கு ஊதியம் நன்றாக இருப்பதாகவும், இந்த புதிய பணியில் தனக்கு மரியாதை கிடைப்பதாகவும் கூறுகிறார்.
செயற்கைக் கைகளைக் கொண்ட ஒரு மனிதர், தனது பணத்தையெல்லாம் ஆனந்திடம் கொடுத்து, ஷாப்பிங்கிற்கான தொகையைச் செலுத்தச் சொன்னதை அவர் நினைவு கூர்கிறார். "அவர் என் மீது வைத்த நம்பிக்கையைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்" என அவர் பிபிசியிடம் கூறினார்.
தொடக்க விழா முடிந்த முதல் வாரத்தில் எந்த முன்பதிவும் இல்லை என்றும், "ஆனால் எங்களால் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த முடிந்தது" என்றும் ரிது கூறினார்.
"மக்கள் எங்களது சேவை மையத்தின் அருகே நின்று இதைப் பார்த்து, இந்தச் சேவையைப் பற்றி விசாரித்துவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் இப்போது எங்களுக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட அரை டஜன் முன்பதிவுகள் வரை கிடைக்கின்றன, வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை எட்டு அல்லது ஒன்பதாக உயர்கிறது."
கடந்த வாரம் ஒரு மதிய வேளையில் நாங்கள் அவர்களின் சேவை மையத்திற்குச் சென்றபோது, தங்களுக்கு உதவி செய்ய உதவியாளர் தேவை என்ற கோரிக்கையுடன் ஜதிந்தர் மற்றும் அனிதா சபர்வால் தம்பதியினர் கேரிமெனின் மையத்திற்கு வந்திருந்தனர்.
இன்னும் இரண்டு மாதங்களில் தனக்கு 60 வயது நிறைவடைந்து "மூத்த குடிமகன்" ஆகிவிடுவேன் என்று கூறும் ஜதிந்தர், கனமான தோள் பையைச் சுமந்து கொண்டிருந்தார். அனிதாவும் இரண்டு பைகளை வைத்திருந்தார், அந்த தம்பதியினர் இன்னும் சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது, எனவே அவர்களுக்கு உதவியாள் தேவைப்பட்டது.

பட மூலாதாரம், Geeta Pandey/BBC
டெல்லி லாஜ்பத் நகர் பகுதியிலேயே வசிக்கும் சபர்வால் தம்பதியினர், உதவியாளரை வேலைக்கு அமர்த்துவது இதுவே முதல் முறை. தனது மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் இந்தச் சேவையைப் பற்றித் தெரிந்துகொண்டு தன்னிடம் கூறியதாக ஜதிந்தர் தெரிவித்தார்.
சபர்வால் தம்பதியினருடன் உதவியாளராக சென்ற ஆனந்த், அவர்களை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றார். அனிதாவிற்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டதால், அவருக்கு வலி நிவாரணி மாத்திரை தேவைப்பட்டது. சபர்வால் தம்பதியினர் கடைக்குள் சென்றபோது, ஆனந்த் அவர்களின் பைகளுடன் வெளியே காத்திருந்தார்.
அவர்கள் வெளியே வந்ததும், மாத்திரை சாப்பிடுவதற்காக அனிதாவிற்கு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார்.
"இங்குள்ள இடங்களைச் சுற்றிக்காட்டவும் இவர் எங்களுக்கு உதவினார். மருந்தகம் எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இது மிகச் சிறந்த சேவை என்று நான் கருதுகிறேன். இவர் எங்களுடன் இருப்பதால், எங்களுக்குத் தேவையான உதவி கிடைக்கிறது; எங்களால் நிம்மதியாகச் ஷாப்பிங் செய்ய முடிகிறது" என்று ஜதிந்தர் கூறினார்.
"இப்போது எங்களால் பைகளின் சுமையின்றி, சுதந்திரமாக நடமாட முடிகிறது" என்று அனிதா மேலும் கூறினார்.
ஆடம்பர மனப்பான்மை மற்றும் உழைப்புச் சுரண்டல் செய்யும் வழிமுறை இது என எழும் விமர்சனங்களை தாங்கள் ஆமோதிக்கவில்லை என்று இந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.
"தங்கள் பைகளைத் தாங்களே தூக்கிக்கொள்ள முடிந்தவர்கள் அதைச் செய்யலாம்; ஆனால் முடியாதவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்களைப் போன்றவர்களுக்கு இது மிகச்சிறந்த சேவை. இந்த சேவை எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும்" என்று ஜதிந்தர் கூறினார்.
இந்தச் சேவையை மேலும் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிது கூறினார். எதிர்வரும் ஜூலை மாதத்தில், பரபரப்பான சாந்தினி செளக் சந்தையில் 'கேரிமென்' சேவையைத் தொடங்கவுள்ளனர். இது படிப்படியாக டெல்லி நகரிலுள்ள பிற சந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படும், பிறகு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தொழிலாளர் உரிமை ஆர்வலர் பாட்டியா, இந்தச் சேவையை விரிவாக்கம் செய்ய கேரிமென் நிறுவனத்திற்கு நிதி முதலீடு தேவைப்படும் என்றும், அதுவே இந்தச் சேவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைத் தீர்மானிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில், கேரிமென் என்பது ஏழு முழுநேர ஊழியர்களைக் கொண்ட ஒரு மிகச் சிறிய அமைப்பாக செயல்படுகிறது.
"ஆனால் அவர்கள் தங்கள் நிறுவனத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும்போது, இதே முறையைப் பின்பற்ற முடியுமா? பல கிக் வேலைகளும் ஆன்லைன் தள வேலைகளும் தொடக்கத்தில் அதிக ஊதியத்துடனும், பல சலுகைகளைத் தரும் வாக்குறுதிகளுடனும் தான் தொடங்கின, ஆனால் போகப்போக அவை பொலிவிழந்து போயின" என்று பாட்டியா கூறினார்.
"இந்தியாவில், மலிவான விலையில் உழைப்பு அதிக அளவில் கிடைப்பதாலும், தொழிற்சங்கங்கள் இல்லாததாலும், நிறுவனங்களால் தொழிலாளர்களைத் தொடர்ந்து சுரண்ட முடிகிறது. கேரிமென் நிறுவனம் எந்தப் பாதையில் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என பாட்டியா கருதுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































