You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதன் விண்வெளியில் கருத்தரித்து குழந்தை பெற முடியுமா?
- எழுதியவர், டெய்ஸி ஸ்டீபன்ஸ்
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
விண்வெளி ஆய்வு சமூகம் பெரிய அளவிலான திட்டங்களை முன்வைத்து வருகிறது.
கடந்த மே மாதத்தில், நிலவில் அணுசக்தி மற்றும் சூரிய ஆற்றலால் இயக்கப்படும் நிரந்தர தளத்தை அமைப்பதற்கான தனது 20 பில்லியன் டாலர் திட்ட விவரங்களை நாசா வெளியிட்டது.
2032-ஆம் ஆண்டிற்குள், மனிதர்கள் நிலவில் "ஓரளவு நிரந்தரமான" குடியிருப்புகளில் வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நாசாவின் நோக்கமாகும்.
செவ்வாய் கிரகத்திற்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்புவதற்கான திட்டங்களையும் நாசா மேற்கொண்டுள்ளது. அந்தப் பயணம் சுமார் ஏழு முதல் பத்து மாதங்கள் வரை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், பூமிக்கு வெளியே மனிதர்கள் நீண்ட காலம் வசிக்க விரும்பினால், அங்கே இனப்பெருக்கமும் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, நமக்கு அறிமுகமே இல்லாத சில சூழ்நிலைகளைத் தாங்கும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
காந்தப்புலம் மற்றும் அடர்த்தியான வளிமண்டலத்தால் பாதுகாக்கப்படும் பூமியைப் போலன்றி, நிலவு மற்றும் செவ்வாய் போன்ற இடங்களின் மேற்பரப்புகள் அதிக அளவிலான விண்வெளிக் கதிர்வீச்சுகளால் தாக்கப்படுகின்றன. அவை பூமியை விடச் சிறியவை என்பதால், அங்கு நாம் உணரும் ஈர்ப்பு விசையும் மிகவும் குறைவாக இருக்கும்.
அங்கு செல்வது தொடர்பான சவால்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்; நீண்ட தூர விண்வெளிப் பயணம் மனித உடலையும், அதன் மூலம் இனப்பெருக்கத் திறனையும், நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத வகைகளில் பாதிக்கக்கூடும்.
வேறொரு கிரகத்தில் அல்லது விண்வெளியிலேயே கருத்தரிப்பது என்பது அறிவியல் புனைகதைகளில் வரும் விஷயமாகத் தோன்றினாலும், தற்போது அதிக எண்ணிக்கையிலான விஞ்ஞானிகளின் குழுக்கள் இது குறித்து உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றனர்.
அறிவியல் புனைகதையிலிருந்து அறிவியல் ஆராய்ச்சிவரை
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக உள்ள முனைவர் நிக்கோல் மெக்பெர்சன், ஃப்ரீமேசன்ஸ் ஆண்கள் நலவாழ்வு மையத்தில் விந்தணு மற்றும் கரு உயிரியல் குழுவை நடத்தி வருகிறார்.
விண்வெளி ஆவணப்படம் ஒன்றை தனது கணவருடன் இணைந்து பார்த்த அவர், விண்வெளியில் இனப்பெருக்கம் செய்வது என்ற யோசனையை ஆராயத் தொடங்கினார்.
"ஒரு சிறிய வேடிக்கையான துணை அறிவியல் புனைகதைத் திட்டமாகத் தொடங்கியது... இப்போது உண்மையில் ஒரு பெரிய ஆராய்ச்சித் துறையாக மாறியுள்ளது" என்கிறார் மெக்பெர்சன்.
ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் சேர்ந்து, வெளி விண்வெளியில் அனுபவிக்கப்படும் நுண் ஈர்ப்புவிசை நிலைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, இனப்பெருக்கப் பாதையை ஒத்த வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான பாதையில் விந்தணுக்களின் நகரும் திறனை அவர் அளவிட்டார்.
சில விந்தணுக்கள் அடிப்படையில் வழிதவறிவிட்டதாக அவர்கள் கண்டறிந்தனர்; சாதாரண ஈர்ப்புவிசை கட்டுப்பாட்டு நிலையுடன் ஒப்பிடும்போது, சிக்கலான பாதையின் இறுதியை அடைய முடிந்த விந்தணுக்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது.
இந்த ஆய்வு செவ்வாய் போன்ற குறிப்பிட்ட கோள்களின் ஈர்ப்புவிசை நிலைகளை பிரதிபலிக்கவில்லை என்றாலும், சாதாரண விந்தணு நடத்தையில் பூமியின் ஈர்ப்புவிசை வகிக்கும் பங்கை இது கோடிட்டுக் காட்டியதாக மெக்பெர்சன் கூறுகிறார்.
"இயற்கையான கருத்தரிப்பின்போது விந்தணுக்கள் ஒரு அடிப்படை ஈர்ப்பு விசையைப் பயன்படுத்துகின்றன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது," என்று அவர் கூறுகிறார்.
ஈர்ப்புவிசை தொடர்பான சவால்கள் கருவுறுதல் பற்றியவை மட்டுமல்ல. எலிகளில் கரு வளர்ச்சியின் முதல் 24 மணி நேரத்தில் நுண் ஈர்ப்புவிசை ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
"மோசமான விளைவுகளைக் கண்டோம்,அதாவது, கருவின் வளர்ச்சி குறைவாக இருந்தது. மேலும் அந்த ஆரம்பக் கட்டக் கருவின் பண்புகளும் மோசமாக இருந்தன" என்று மெக்பெர்சன் கூறுகிறார்.
நாசாவின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியான முனைவர் ஃபதி கரூயாவின் கருத்துப்படி, "செல்கள் எவ்வாறு பிரிகின்றன, தங்களை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்கின்றன மற்றும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை நுண் ஈர்ப்புவிசை பாதிக்கிறது. இவை அனைத்தும் கருவுறுதல் மற்றும் ஆரம்பக் கட்ட கரு வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய செயல்முறைகள் ஆகும்."
கதிர்வீச்சு
விண்வெளியில் உள்ள இரண்டாவது முக்கிய சவால் கதிர்வீச்சாகும்.
இது, ஆண்களில் விந்தணுக்களாகவும் பெண்களில் முட்டை அணுக்களாகவும் வளரக்கூடிய சிறப்புப் பெற்ற அணுக்களான இனப்பெருக்க அணுக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏற்கனவே அறியப்பட்டுள்ளது.
பூமியின் காந்தப்புலம் விண்வெளியில் உள்ள மிக மோசமான கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது, ஆனால் அதற்கு வெளியே, செவ்வாய் கிரகம் உட்பட அனைத்து இடங்களிலும் நிலைமை வேறுபட்டதாக இருக்கிறது.
துருக்கியின் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வான்வெளி மருத்துவ நிபுணரான முனைவர் அப்துர்ரஹ்மான் எங்கின், சூப்பர்நோவாக்கள் எனப்படும் வெடிக்கும் நட்சத்திரங்கள் போன்ற அண்ட நிகழ்வுகளால் விண்மீன் மண்டல அண்டக் கதிர்வீச்சு (GCR) உருவாகிறது என்று கூறுகிறார்.
இந்த வெடிப்புகளில் விண்கலங்களின் பாதுகாப்புக் கவசத்தையும் மனித திசுக்களின் ஆழத்தையும் ஊடுருவக்கூடிய துகள்கள் அடங்கியுள்ளன. பூமியில் நாம் எதிர்கொள்ளும் கதிர்வீச்சை விட அதிகமாக விண்கலத்தின் கவசத்தை ஊடுருவி மனித திசுக்களின் ஆழத்திற்குச் செல்லக்கூடியவை.
அவர் ஒரு எளிய கேள்விக்கான பதிலை அறிவதற்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். எதிர்காலத்தில் செவ்வாய் பயணத்திற்கான கற்பனையான கர்ப்பநிலைக்கான GCR அளவு, பூமியில் கர்ப்பநிலைக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படும் கதிர்வீச்சு அளவை மீறுமா என்பதே அந்தக் கேள்வி.
"துரதிர்ஷ்டவசமாக, பதில் ஆம் என்பதாகத் தெரிகிறது," என்று எங்கின் கூறுகிறார்.
பூமியிலிருந்து செவ்வாய்க்கு செல்லும் சுமார் ஆறு மாதப் பயணத்தின் போது, ஒரு கர்ப்பிணி விண்வெளி வீராங்கனை மொத்தமாக 90 முதல் 300 மில்லிசீவர்ட் வரை கதிர்வீச்சு வெளிப்பாட்டுக்கு உள்ளாகலாம்.
இது, அமெரிக்க தேசிய கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் அளவீடுகள் மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட, கர்ப்ப காலத்தில் தொழில்ரீதியான கதிர்வீச்சு வெளிப்பாட்டிற்கான ஐந்து மில்லிசீவர்ட் வரம்பை விட பல மடங்கு அதிகமாகும்.
இத்தகைய அதிகப்படியான கதிர்வீச்சு வெளிப்பாடு, வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களில் உள்ள கருக்களுக்கும் சிசுக்களுக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் அவற்றின் மரபணுவை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
"வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் விரைவான செல் பிரிவு மற்றும் உறுப்பு உருவாக்கம் காரணமாக, டிஎன்ஏ கட்டமைப்புகள், மரபணு பழுதுபார்ப்பு செயல்முறைகள் அல்லது செல்களின் வளர்ச்சியில் ஏற்படும் சிறிய இடையூறுகள்கூட வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் விளைவுகளுக்கு வழிவகுக்கக் கூடும்" என்று எங்கின் கூறுகிறார்.
அந்த ஆபத்துகளில் கருச்சிதைவு, வளர்ச்சி கட்டுப்பாடு, பிறவிக் குறைபாடுகள், நரம்பியல் குறைபாடுகள் மற்றும் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஆகியவை அடங்கும்.
விண்கலக் கவசம் போன்ற சில தொழில்நுட்பங்கள் அல்லது சூரிய சுழற்சியின் குறிப்பிட்ட கட்டங்களில் பயணங்களைத் திட்டமிடுவது போன்ற தொழில்நுட்பங்கள் அபாயங்களைக் குறைக்கக்கூடும் என்று முனைவர் எங்கின் கூறுகிறார்.
கதிர்வீச்சும் நுண் ஈர்ப்புவிசையும் சேர்ந்து "உயிரியல் செயல்பாடுகளை அடிப்படை மட்டத்தில் பாதிக்கின்றன" என்று கரூயா கூறுகிறார். ஆனால் இது மட்டுமே ஒரே சவால் அல்ல, வேறு பல சவால்களும் உள்ளன.
"விண்வெளிப் பயணத்தில், ஹார்மோன் ஒழுங்குமுறை, தூக்கச் சுழற்சிகள் மற்றும் உடலியக்க செயல்பாடுகள் (circadian rhythm) பாதிக்கப்படுகின்றன; இவை அனைத்தும் இனப்பெருக்க ஆரோக்கியத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளன" என்று அவர் கூறுகிறார்.
இந்தக் காரணிகள் ஒன்று சேரும்போது, கருப்பைக்குள் இருக்கும் விந்தணு அல்லது கருமுட்டைகளின் தரம் முதல் கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் வரை அனைத்தையும் இது பாதிக்கக்கூடும் என்று அவர் விளக்குகிறார்.
உயிரியல் பாடங்கள்
பூமிக்கு அப்பால் உயிரை நிலைநிறுத்துவது குறித்து சிந்திக்கும்போது, மனிதர்கள் விண்வெளியில் இனப்பெருக்கம் செய்ய முடியுமா என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
இருப்பினும், இது விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பதையும் பற்றியது என்று ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் செல்உயிரியல் பேராசிரியரான ஜான்-பெர்ன்ட் ஸ்டூகன்போர்க் கூறுகிறார்.
மனிதர்கள் இன்னும் விண்வெளியில் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கவில்லை என்றாலும், விண்வெளி வீரர்களும் அவர்களின் இனப்பெருக்கச் செல்களும் ஏற்கனவே இந்தச் சூழ்நிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இனப்பெருக்கச் செல்களில் கதிர்வீச்சின் தாக்கம் குறித்த ஆராய்ச்சி, அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிகளை உருவாக்க உதவக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
"விண்வெளிப் பயணத்தால் தோல் செல் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டால், நீங்கள் இறக்கும் போது அந்த தோல் செல்லும் உங்களுடன் இறந்துவிடும்" என்று ஸ்டூகன்போர்க் கூறுகிறார்.
ஆனால் இனப்பெருக்கச் செல்களுக்கு ஏற்படும் சேதம், விண்வெளி வீரர்கள் இன்னும் விண்வெளியில் இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்காதிருந்தாலும் கூட, அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடும்.
"எனவே, இந்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
மனித உயிரியல் பற்றிய மற்ற, மேலும் அடிப்படையான விஷயங்களைப் புரிந்துகொள்ள இந்தத் துறையில் கூடுதல் ஆராய்ச்சி உதவக்கூடும் என்று மெக்பர்சன் கூறுகிறார்.
உதாரணமாக, அவரது ஆராய்ச்சியில், சோதனைகளில் உள்ள சிக்கலான பாதையின் இறுதிவரை சென்றடைந்த விந்தணுக்களுக்கு, கருத்தரித்தல் மற்றும் ஆரம்பகட்ட வளர்ச்சியின் போது அவற்றிற்கு முன்னிலை அளிக்கும் பண்புகளும் இருந்ததாக கண்டறியப்பட்டது.
"அந்த விந்தணுக்களில் அப்படி என்ன இருக்கிறது என்பதை நாம் மேலும் புரிந்துகொள்ள முடிந்தால்... நாம் உண்மையில் அவற்றை ஐவிஎஃப் அல்லது வேளாண் ஐவிஎஃப்-இல் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்" என்று அவர் கூறுகிறார்.
பாலின பாகுபாடு
இப்போது விண்வெளிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்; எனவே, விண்வெளியில் இனப்பெருக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆண்களை மையமாகக் கொண்ட பாகுபாட்டைத் தவிர்க்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஸ்டூகன்போர்க் மேற்கோள் காட்டியுள்ள ஆராய்ச்சிகள், விண்வெளி வீராங்கனைகள் நீண்டகால விண்வெளிப் பயணங்களின் போது மாதவிடாயை நிறுத்துவதற்காக பெரும்பாலும் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால், விண்வெளிச் சூழல் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மெக்பர்சன் கூறுகிறார்.
"இதுவரை நம்மால் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் இது," என்று அவர் கூறுகிறார்.
கதிர்வீச்சால் சினைப்பையின் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கரூயா கூறுகிறார். அதே நேரத்தில், முட்டை முதிர்ச்சியடையும் செயல்முறையில் நுண் ஈர்ப்புவிசை குறுக்கிடக்கூடும்.
புரிதலில் உள்ள மிகப் பெரிய இடைவெளிகளில் ஒன்று கர்ப்பமே என்று அவர் கூறுகிறார்.
"ஒரு பாலூட்டி இனத்தின் கர்ப்பம் முழுமையாக விண்வெளியில் எவ்வாறு முன்னேறும் என்பது குறித்து, குறிப்பாக கரு பதிதல், நஞ்சுக்கொடி வளர்ச்சி மற்றும் உறுப்புகள் உருவாதல் போன்றவை தொடர்பான எந்தவித நவீன தரவுகளும் நம்மிடம் கிட்டத்தட்ட இல்லை" என்று அவர் கூறுகிறார்.
ஏறக்குறைய அனைவரும் ஒரு விஷயத்தில் உடன்படலாம் - செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன, மேலும் அதைச் செய்வது மிகவும் முக்கியம்.
"இது ஒரு விலக்கப்பட்ட விஷயமாக இருக்கக் கூடாது… இதைப் பற்றி நாம் இப்போதே சிந்திக்க வேண்டும்" என்று ஸ்டூகன்போர்க் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு