நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் பல ஆதாரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா?
இது வெறும் பொழுதுபோக்குக்கான பெயின்ட்பால் விளையாட்டா? அல்லது எஃப்.பி.ஐ சந்தேகித்தது போல், இந்த ஆண்கள் "ஜிஹாத்" பயிற்சி மேற்கொண்டார்களா?
இவர் ஒமர் அல்-பயூமி.
பெயின்ட்பால் விளையாட்டை இவர் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.
2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதல்களுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்படும் இந்த நபர் குறித்து புதிய ஆதாரங்களை பிபிசி விசாரணை ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது. அல்கொய்தாவின் எதிர்கால மூத்த தலைவர் ஒருவருடன் அவர் இருக்கும் இந்தக் காட்சிகளும் அதில் அடங்கும்.
அன்வர் அல்-அவ்லாகி ஒரு கடும்போக்கு பிரச்சாகராக இருந்தார். பின்னர் அரேபிய தீபகற்பத்தில் அல்கொய்தாவை அவர் தலைமை தாங்கினார். பயூமி, அல்-அவ்லாகியை தான் ஒருபோதும் சந்தித்ததில்லை என்று கூறுகிறார்.
பயூமி 1994ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த இலக்குகளைத் தாக்குவது என்பது குறித்து அல்கொய்தா திட்டமிட்டு வந்தது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டடத்தை பயூமி படம் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால், பின்னர் அது சுற்றுலாவின்போது எடுத்த காணொளி என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு, பிப்ரவரி 2000இல், இரண்டு ஆண்கள் சான் டியாகோவில் ஒரு வீட்டைப் பெறுவதற்கு அவர் உதவினார்.
அந்த இரண்டு ஆண்களும் 9/11 அன்று பென்டகனில் மோதிய விமானத்தைக் கடத்திச் செல்லவிருந்தவர்கள்.
பயூமியின் தொடர்பு வலையமைப்பில் இருந்தவர்கள், பின்னர் விமான கடத்தல்காரர்களாக மாறிய அந்த இருவருக்கும் அவர்கள் சான் டியாகோவில் இருந்த காலத்தில், உதவினர்.
9/11 தாக்குதலுக்கு முன்னதாக, பயூமி பிரிட்டனின் பர்மிங்காமுக்கு இடம்பெயர்ந்தார்.
தாக்குதல்களுக்குப் பிறகு மெட்ரோபாலிட்டன் காவல்துறை அவரைக் கைது செய்தது. அவரது வீடுகளில் இருந்து காணொளிகள் மற்றும் இந்த விமான வரைபடம் உள்ளிட்ட ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது விமானம் விழுந்ததற்கான கணிதக் கணக்கீடு. அது என்னவென்று நாங்கள் கண்டுபிடித்தபோது, நாங்கள் தேடிக்கொண்டிருந்த முக்கிய ஆதாரம் இதுதான் என்பது எங்களுக்குத் தெரிந்தது.
விமான வரைபடம் உடனடியாக எஃப்.பி.ஐ-யிடம் பகிரப்பட்டபோதிலும், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் மெட்ரோபாலிட்டன் காவல்துறை அவரை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பெரும்பாலான ஆதாரங்கள் பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2004ஆம் ஆண்டு 9/11 ஆணையத்திடம்கூட அவை தெரிவிக்கப்படவில்லை. அவை ஏன் எஃப்.பி.ஐ-யால் வெளியிடப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இது இந்தக் கதையின் பல மர்மங்களில் ஒன்றுதான் என்று நான் கருதுகிறேன். அது திறமையின்மையால் கையாளப்பட்டு, கவனிக்கப்படாமல் போனதா? அல்லது ஏதோ ஒரு வகையில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா? 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது குறித்து நமக்குத் தெரிந்த அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, எஃப்.பி.ஐ இந்த விமான வரைபடத்தை முற்றிலும் கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று நினைப்பது கடினம்.
இதுகுறித்து எஃப்.பி.ஐ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. நடந்துகொண்டிருக்கும் சட்ட வழக்கு காரணமாக கருத்து தெரிவிக்க முடியாது என்று மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்தது.
இஸ்லாமிய விவகார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மூலம் பனோரமா, ஒமர் அல்-பயூமியைத் தொடர்புகொள்ள முயன்றது. கருத்து கோரி நாங்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அவரோ அல்லது சௌதி அரசாங்கமோ பதிலளிக்கவில்லை
ஹஸ்மி மற்றும் மிஹ்தார் ஆகியோர் பின்னர் விமானக் கடத்தல்காரர்களாக மாறுவார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று அவர் ஏற்கெனவே மறுத்துள்ளார். விமான வரைபடம் வெறும் ஒரு சமன்பாடு மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். 9/11 தாக்குதல்களில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
விரிவாக காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



