இந்தியா - சீனா நெருங்கி வர தடையாக உள்ள 2 விஷயங்கள்

காணொளிக் குறிப்பு, ஏழு ஆண்டுகளுக்குப்பின் இந்தியா வந்த சீன அதிபர்.
இந்தியா - சீனா நெருங்கி வர தடையாக உள்ள 2 விஷயங்கள்
பிரசுரிக்கப்பட்டது

சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார். செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வருகிறார்.

ஜின்பிங் டெல்லிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் இந்தியப் பிரதமர் மோதியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவாரா என்பது தெளிவாக இல்லை.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு, சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஷி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார்.

ஆசியாவின் இரு வல்லரசுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீர்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளிலும், பிரிக்ஸ் ஒத்துழைப்பிலும் அவரது இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக உலகளாவிய சூழல் சிக்கலானதாக இருக்கும் நிலையில் இந்தப் பயணம் நடைபெறுகிறது. இதன் தாக்கம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிலும் இருக்கிறது.

எனினும், இரு பெரிய அண்டை நாடுகளுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள ராஜ்ஜீய ரீதியான நெருக்கம் மேலும் வலுப்பெறுவதற்கு ஜின்பிங்கின் இந்தப் பயணம் சாதகமான சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணம் குறித்து, "2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம், மோதிக்கு நட்புக் கரம் நீட்டுவதாக அமைந்துள்ளது" என்று ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது முன்கூட்டிய ஒன்றாகும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் உள்ள வணிகத்தில் இன்னும் பல சிரமங்கள் நீடிக்கின்றன.

கடுமையான விதிமுறைகள் முதலீடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், விசா வழங்குவதில் தாமதம் மற்றும் தொழில்துறை உபகரணங்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிச்சயமாக ஒரு மாற்றத்தைச் சந்தித்துள்ளதாக ஹர்ஷ் பந்த் கூறுகிறார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நம்பிக்கைக் குறைபாடும், வர்த்தகப் பற்றாக்குறையும் இன்னும் இரண்டு முக்கியமான பிரச்னைகளாக உள்ளன.

அவரது கூற்றுப்படி, "ஊடகச் செய்திகளின்படி, ஜின்பிங் இந்தப் பயணத்தின்போது 400 பிரதிநிதிகள் கொண்ட மிகப்பெரிய குழுவை அழைத்து வருகிறார். அவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள்."

"இதற்கு ஒரு காரணம், கல்வான் சம்பவத்துக்குப் பிறகு, எல்லையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த உறவையும், குறிப்பாக வர்த்தகக் கூட்டாண்மையையும் பாதிக்கும் என்று இந்தியா மிகவும் தெளிவாகக் கூறியதுதான்."

எல்லையில் பதற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொருளாதார உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த சீன முதலீடுகள் மீதான சில கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியது.

ராய்ட்டர்ஸ் வழங்கியுள்ள தகவல்படி, இந்தக் கட்டுப்பாடுகள் மின்னணுவியல், மூலதனப் பொருட்கள் மற்றும் சூரிய மின்கலத் துறைகளை உள்ளடக்கியிருந்தன. குறிப்பிட்ட சில தொழில்களில் இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளுக்கான ஒப்புதல்களை விரைவுபடுத்துவது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.

சமீபத்தில், இந்தியாவின் டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மொபைல் ஆகியவற்றுக்கு இடையிலான ஸ்மார்ட்போன் உற்பத்தி கூட்டு முயற்சி உள்ளிட்ட சில முக்கியத் திட்டங்களுக்கும் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், சில முக்கிய முதலீடுகள் மற்றும் திட்டங்கள் இன்னும் தடைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இந்தியாவின் கடுமையான அதிகரித்த கண்காணிப்பை எதிர்கொண்ட பின்னர், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முன்மொழியப்பட்ட திட்டங்களை நிறுத்தி வைத்திருந்த பிஓய்டி மற்றும் க்ரேட் வால் மோட்டார்ஸ் போன்ற முக்கிய சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தத் தளர்வுகள் போதுமானதாக இல்லை என்று இந்திய அரசின் ஆதாரத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் ஷி மற்றும் மோதி சந்தித்ததாகவும், இரு நாடுகளும் "எதிரிகள் அல்ல, கூட்டாளிகள். ஒருவரது வளர்ச்சிக்கு மற்றொருவர் அச்சுறுத்தல் அல்ல, வாய்ப்புகள்" என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

உண்மையில், இரு நாடுகளும் அமெரிக்காவுடனான நிலையற்ற உறவுகளால் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.

ஹர்ஷ் பந்த் கூறுகையில், "சமீப ஆண்டுகளில் அமெரிக்காவுடனான சீனாவின் உறவு வேகமாக மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியுள்ளது. சீனா முதன்மையாக ஏற்றுமதியைச் சார்ந்த பொருளாதாரமாக உள்ளது. அதற்கு ஒரு சந்தை தேவை. இந்தியா அதற்கு மிகப்பெரிய சந்தையாக அமையக்கூடும்."

அவரது கூற்றுப்படி, "இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை வர்த்தகப் பற்றாக்குறை. இது 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. சீனாவில் இந்தியப் பொருட்களுக்கு சந்தை அணுகல் இல்லை. இரண்டாவதாக, உற்பத்தித் துறையில், உத்திசார் துறைகளைத் தவிர, பொருளாதாரக் கூட்டாண்மைகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. "

ஜின்பிங்கின் டெல்லி பயணத்தின்போது, இந்த அனைத்து விவகாரங்களும் இரு தரப்புக்கும் இடையே விவாதிக்கப்படலாம் என்று அவர் கூறுகிறார்.

விரிவாக காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு