மத்திய கிழக்கு பற்றிய பிரிக்ஸ் நிலைப்பாடு பேசுபொருளானது ஏன்?
டெல்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு பேசுபொருளாகியுள்ளது. பாலத்தீனம் மற்றும் லெபனான் குறித்து பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, அமெரிக்காவுடனான போரில் எதிரெதிர் தரப்புகளில் உள்ள இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் மத்திய கிழக்கில் நிலவும் சூழலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
எந்த ஒரு நாட்டையும் நேரடியாகக் குற்றம்சாட்டுவதைத் தவிர்த்துள்ள பிரகடனம், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.
காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதிகளில் நிலவும் மனிதாபிமான சூழல் குறித்தும் பிரகடனம் தீவிர கவலை தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் தீர்வுக்கான தனது ஆதரவையும் பிரகடனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. லெபனானில் போர் நிறுத்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், லெபனானின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தனது படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் அதில் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரகடனத்தில் மத்திய கிழக்கு பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தெற்காசிய விவகார ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன், பாலத்தீனர்களின் கோரிக்கையை ஆதரிக்கும் வலுவான வாசகங்களைக் கொண்ட நான்கு பத்திகளை டெல்லி பிரகடனம் கொண்டுள்ளது. இஸ்ரேல், இந்தியாவின் முக்கிய கூட்டாளிகளில் ஒன்று. ஆனால், புதிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கருத்துக்களையும், குளோபல் சவுத் முழுவதும் இந்தக் கோரிக்கை எந்த அளவிற்கு எதிரொலிக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டால், பிரிக்ஸ் அமைப்பின் ஒருமித்த கருத்தை உறுதிசெய்ய இது ஒரு விவேகமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், பல்வேறு தரப்பு நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட இந்தியாவின் வியூக சுயாட்சிக் கொள்கை, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட குழுவினரிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க அதனை சிறந்த நிலையில் நிலைநிறுத்தியது. பெரும்பாலான பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகளாக உள்ளன. மேலும் பிரிக்ஸில் அதன் ஒரே போட்டியாளரான சீனாவுடனான பதட்டங்கள் தணிந்துள்ளன என குகல்மேன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்ட பிரகடனத்தில் யுக்ரேன் குறித்து ஒரு வார்த்தைகூட இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக தக்சஷிலா நிறுவனத்தின் ஆய்வாளரான மனோஜ் கெவல்ரமணி தெரிவித்துள்ளார்.
இரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் குறித்தும், இரான் பிராந்தியத்தில் நடத்திய தாக்குதல் குறித்தும் பிரிக்ஸ் நாடுகள் மென்மையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முழு விவகாரமும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் என்று மட்டுமே பொதுவாக விவரிக்கப்பட்டுள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.
தி இந்து நாளிதழின் ராஜீய விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒப்புதலுடன் இடம்பெற்றுள்ள மேற்கு ஆசியா குறித்த பத்தியில், அமெரிக்கா-இரான் போர் அல்லது பிராந்தியத்தில் இரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. அதேநேரத்தில், லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் வலுவாக விமர்சிக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த மூத்த ஆய்வாளரான கென் மொரியாசு, இந்தியா-இஸ்ரேல் உறவு எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள பிரிக்ஸ் கூட்டுப் பிரகடனம், பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை ஆதரிக்கிறது.
இஸ்ரேல்-பாலத்தீன மோதலுக்கு நியாயமான மற்றும் நீடித்த தீர்வு ஏற்பட வேண்டுமெனில், பாலத்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்குத் திரும்பும் உரிமை உள்ளிட்ட அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரகடனம் கூறுகிறது. இது 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரியோ பிரகடனத்திலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், 2024ஆம் ஆண்டு கஸான் பிரகடனத்திலோ அதற்கு முந்தைய பிரிக்ஸ் உச்சி மாநாடுகளின் பிரகடனங்களிலோ இடம்பெறவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் இந்தியா, இஸ்ரேலுடனான தனது உறவை 'சிறப்பு வியூக ரீதியான கூட்டணி' என்ற நிலைக்கு உயர்த்தியது. இருந்தபோதிலும், இந்த பிரிக்ஸ் வாசகத்தை இடம்பெறச் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தப் பன்முக வெளியுறவுக் கொள்கை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், இஸ்ரேலுக்குப் பிடிக்காது." என குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயர் நேரடியாக இடம்பெறவில்லை. ஆனால், அதன் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.
பிரகடனத்தில் அமெரிக்கா என குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஐ.நா.வின் அனுமதியின்றி அதிக அளவில் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகள் மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த வார்த்தைகள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தொடர்பாக ரஷ்யாவும் இரானும் நீண்ட காலமாக முன்வைத்து வரும் விமர்சனங்களைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
டிரம்ப் விதித்துள்ள வரிகள் குறித்து பிரகடனம் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் ஒருதலைப்பட்சமான வரி மற்றும் வரியல்லாத நடவடிக்கைகளை அது கண்டித்துள்ளது.
இது அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் பொருளாதார அழுத்தக் கொள்கைக்கு எதிரான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



