திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருநாள் தீபம் ஏற்ற அனுமதி - உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?

காணொளிக் குறிப்பு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருநாள் தீபம் ஏற்ற அனுமதி - உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு பாஜக , இந்து அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில் சிபிஎம், இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் பின்னணி என்ன? உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள் என்ன?

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதேநேரம், கார்த்திகை தீப நாளான நவம்பர் 24 ஆம் தேதி மட்டும் தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளவதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். 'இந்த ஏற்பாட்டை இறுதி அங்கீகாரமாக கருதக் கூடாது' என நீதிமன்றம் குறிப்பிட்டதாக, 'லைவ் லா' தளம் கூறுகிறது.

'நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை வழக்கமான நடைமுறை இருந்ததற்கான ஆதாரமாக எந்த தரப்பும் பயன்படுத்த முடியாது. இதை அடிப்படையாக வைத்து வரும் ஆண்டுகளில் இதேபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு உரிமை கோர முடியாது' என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த அனுமதி குறித்து மேலதிக கருத்துகளை வெளிப்படுத்தியுள்ள நீதிபதிகள், "வரலாற்று ரீதியாக மத சடங்குகள் செய்யும் இடமாக கல் தூண் இருந்ததையோ அல்லது தனி நபர்களோ அல்லது அமைப்புகளோ அங்கு தீபம் ஏற்றுவதற்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பதையோ இந்த ஏற்பாடு உறுதிப்படுத்தவில்லை" எனத் தெரிவித்தனர்.

'கார்த்திகை தீப நாளில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அந்த இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என நீதிமன்றம் தெரிவித்தது.

'பொதுமக்கள் யாரும் தூண் அமைந்துள்ள பகுதிக்குச் செல்வதற்கு அனுமதியில்லை. தீபம் ஏற்றும் நிகழ்வின்போது ஊர்வலங்கள், மக்கள் கூடுதல், முழக்கமிடுதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை' எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தீபம் ஏற்றுவதற்குப் போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 'இதில் தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பணியமர்த்தலாம்' எனக் கூறினர்.

திருப்பரங்குன்றம் வழக்கின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகளின்கீழ் மத உரிமைகளின் வரம்பு உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள், இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது எழுந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

'தற்போதுள்ள நிலையில் இந்த கேள்விகளை நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை' எனவும் 'அவை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்' எனத் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் மத சடங்கை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு என இரண்டு நீதித்துறை அமைப்புகள் அனுமதி அளித்திருந்தன எனபது இடைக்கால நிவாரணம் வழங்குவதில் முக்கிய காரணியாக கருதப்படுவதாக நீதிமன்றம் கூறியது.

'நவம்பர் 24ஆம் தேதி விழாவை நடத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால் பிற்காலத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் மூலம் அதனை மீண்டும் ஈடுசெய்ய முடியாது' என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ஏற்பாடு, இரு தரப்பினரின் நலன்களை சமநிலைப்படுத்தும் என நீதிமன்றம் கருதுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்....

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு