நடுவானில் இந்திய விமானியை தாக்கிய துணை விமானியின் பின்னணி என்ன? புதிய தகவல்கள்
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபை விமானத்தில், இந்திய கேப்டனை தாக்கி விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட துணை விமானி குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த விமானி பயங்கரவாத தாக்குதலை நடத்த முயன்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமை அரசு வழக்கறிஞர் சனிக்கிழமை கூறியதாக அந்நாட்டின் அரசு செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. விபத்து போன்ற அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக, விமானி அறையில் இருக்கும் கோடாரியை கொண்டு சக விமானியை தாக்கி விமானத்தின் கட்டுப்பாட்டை அவர் கைப்பற்ற முயன்றதாக தலைமை அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம்சாட்டப்படும் துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், துணை விமானியின் குடியுரிமை குறித்து ஃப்ளைதுபை நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், சர்வதேச ஊடகங்கள் துணை விமானி குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
ஏபிசி நியூஸ் இதுகுறித்த செய்தியில், "துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஓமன் ஏர் நிறுவனத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டு, விமானம் இயக்கத் தடை விதிக்கப்பட்டவர்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், அந்தச் செய்தி, "2024இல் ஓமன் ஏர் நிறுவனத்தில் பயிற்சி துணை விமானியாக பணியாற்றியபோது, ஹமாம் அல்-ஹமாமி என்ற இந்த துணை விமானியிடம் தீவிர கருத்து கொண்ட ஆவணங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அந்த நபர் நிர்வாகம் சார்ந்த பணியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த செய்தி, பின்னர் அவர் எவ்வாறு ஃப்ளைதுபை நிறுவனத்தில் பறப்பதற்கான அனுமதியைப் பெற்றார் என்றும் இஸ்ரேல் செல்லும் விமானத்தின் காக்பிட்டில் முதல் அதிகாரியாக எவ்வாறு நுழைந்தார் என்பதையும் கண்டறிய அதிகாரிகள் முயன்று வருவதாக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கூறுகிறது.
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் இது பற்றி வெளியிட்டுள்ள செய்தியில், தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த விமானி ஃப்ளைதுபை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் இடையிலான முக்கியமான வழித்தடத்தில் பறக்க அவர் அனுமதிக்கப்பட்டார். விமானியின் தீவிரவாத போக்கு குறித்த தனது கவலைகளை ஓமன் பிற நாடுகளுடனோ அல்லது விமான நிறுவனங்களுடனோ பகிர்ந்து கொண்டதா என்பது தெரியவில்லை. அவரது தீவிரவாத போக்கின் தன்மையும் அறியப்படவில்லை" என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும் போது "தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்ப்பு கொண்டவர். விமானத்தில் இருந்த பயணிகளுடன் சேர்த்து அதை விபத்துக்கு உள்ளாக்கும் எண்ணத்துடன் வந்திருந்தார் என கூறினார். தாக்குதல் நடத்திய விமானி தனியாகச் செயல்பட்டாரா அல்லது வேறு யாருடனாவது சேர்ந்து பணியாற்றினாரா என்பது குறித்து இஸ்ரேல் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் வெளியிட்ட செய்தியில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள விமானி, ஓமனின் தேசிய விமான நிறுவனத்தில் அவர் வகித்த வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தீவிரத்தன்மை கொண்ட அவரது கருத்துகள் தொடர்பாக கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்த விவகாரம் குறித்து அறிந்த இரண்டு வட்டாரங்கள் சிஎன்என் சேனலிடம் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சில வட்டாரங்களை மேற்கோள்காட்டியுள்ள அந்த செய்தி ஹமாம் அல்-ஹமாமி என்ற அந்த விமானி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஓமனிய தந்தைக்கும் சிரியாவை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர். அவர் தனது வாழ்வின் பல ஆண்டுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கழித்தார் என குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



