காணொளி: 'டோரதி' திரைப்பட விமர்சனங்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதில்
தன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'டோரதி' திரைப்படத்திற்கு இணையத்தில் நிலவும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்குப் பெரிதாக தெரியாத சில எதிர்மறையான விஷயங்கள், இணையத்தில் மட்டுமே தனியாக இலக்கு வைக்கப்பட்டுப் பேசப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பெண்களை மையமாகக் கொண்ட ஒரு கதையைப் படமாகப் பார்ப்பதில் கூடச் சிலருக்குத் தயக்கம் இருக்கிறது என்றால், அது அவர்களுடைய உள்மனப் பிரச்சனை என்பதைப் பலர் சுட்டிக்காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், படம் குறித்து எதிர்மறையாகப் பேசுபவர்களும் திரையரங்கிற்கு வந்து திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றும், படம் பார்த்த பிறகு ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய உரையாடல்களும் விவாதங்களுமே சமூகத்தில் ஒரு நல்ல தீர்வை அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



