ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்?

    • எழுதியவர், எல்லன் சாங்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் ஆண் சகோதரர்களையோ அல்லது நண்பர்களையோ விட நீங்கள் நீண்ட காலம் உயிர்வாழவே அதிக வாய்ப்புள்ளது, உலகளாவிய சராசரியை எடுத்துக்கொண்டால், சுமார் 5 ஆண்டுகள் கூடுதலாக வாழக் கூடும்.

பெண்களின் இந்த நீண்ட ஆயுளுக்குரிய துல்லியமான காரணங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், அறிவியலாளர்களிடம் இது குறித்துச் சில கோட்பாடுகள் உள்ளன.

மேலும், சில பறவை இனங்களைப் போன்ற உயிரினங்களில், ஆண் உயிரினங்களே நீண்ட ஆயுள் கொண்டவையாக இருப்பது ஏன் என்பதை விளக்கிக்கூறவும் இந்தக் கோட்பாடுகள் உதவக்கூடும்.

இளவயது மரணம்

"கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும், ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்," என்கிறார் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு மக்கள்தொகை முதுமை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் சாரா ஹார்ப்பர்.

ஆனால், "இது நாட்டிற்கு நாடு பெருமளவில் மாறுபடுகிறது," என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக, ரஷ்யா, யுக்ரேன் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் பெண்கள் சுமார் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீண்ட காலம் வாழ்கின்றனர், அதேசமயம் நைஜீரியா போன்ற இடங்களில் இந்த இடைவெளி மிகவும் குறைவாக உள்ளது என்று 'அவர் வேர்ல்ட் இன் டேட்டா' என்ற ஆய்வு வெளியீடு கூறுகிறது.

இந்த வேறுபாடுகளில் சிலவற்றிற்கு சமூக மற்றும் நடத்தை வேறுபாடுகளே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ரஷ்யாவில், "புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை அடிப்படையில் ஒரு மிக முக்கிய உந்து சக்தியாக இருக்கின்றன என்பதற்கு ஆதாரம் உள்ளது," என்று ஹார்ப்பர் விளக்குகிறார்; இது அங்குள்ள ஆண்களிடையே மிகவும் பொதுவானது.

உலகெங்கிலும், ஆண்கள் தங்கள் வாழ்க்கையை முடக்கும் பிற நடத்தைகளிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

"அவர்களின் உணவுப் பழக்கங்கள் பொதுவாக ஆரோக்கியமற்றவையாக இருக்கின்றன," என்கிறார் ஹார்ப்பர்.

மேலும், அவர்கள் மருத்துவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு, இருப்பினும் "திருமணமான ஆண்களுக்கு ஒரு சாதகம் உள்ளது... ஏனெனில் பொதுவாக அவர்களின் துணைவர் அவர்களை வழி நடத்திச் செல்வார்" என்றும் அவர் கூறுகிறார்.

"பல சமூகங்களில், ஆண்கள் அதிக ஆபத்தான வேலைகளைச் செய்ய முனைகிறார்கள், மேலும் 'ஆண்மை' (masculinity) என்பது அதிக இடர்களை எதிர்கொள்வதுடன் தொடர்புடையதாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

உதாரணமாக, பிரிட்டனில் 1960-கள் மற்றும் 70-களில் முன்னெடுக்கப்பட்ட புகைபிடித்தல் எதிர்ப்புப் பிரச்சாரங்கள், ஆண்களின் அகால மரணங்கள் குறைவதற்கு வழிவகுத்தன.

"திடீரென அந்த இடைவெளி வியத்தகு முறையில் குறைந்தது," என்று ஹார்பர் கூறுகிறார்.

எனினும், மாறிவரும் பழக்கவழக்கங்களால் பாலின இடைவெளி ஒருபோதும் முழுமையாக மறைந்துவிடாது என்றே அவர் கருதுகிறார்; ஏனெனில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே "எப்போதும் அந்த உயிரியல் வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும்."

ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன்

ஆண், பெண் உயிரியல் வேறுபாடுகளில் ஒன்று ஹார்மோன்கள் ஆகும்.

"ஈஸ்ட்ரோஜன்கள் பெண்களைப் பாதுகாக்க பல விஷயங்களைச் செய்கின்றன," என்கிறார் ஸ்பெயினில் உள்ள வலென்சியா பல்கலைக்கழகத்தில் முதுமை குறித்த நிபுணத்துவம் பெற்ற உடலியல் நிபுணரான பேராசிரியர் கன்சுலோ போராஸ்.

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவது முதல், சிறுநீர் தொற்றுகளைத் தடுப்பது மற்றும் மூளை, எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது வரை இதன் செயல்பாடுகள் பரந்துள்ளன என்கிறார் அவர்.

இது பல நன்மைகளைக் கொண்டிருப்பதற்கான காரணங்களில் ஒன்று, இது ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்பட்டு, நமது செல்களுக்குள் உருவாகி முதுமைக்குக் காரணமாக அமையும் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் துகள்களை எதிர்க்கிறது.

"மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் பாதுகாப்பை இழப்பது உடலில் உள்ள பல செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டியுள்ளன," என்று போராஸ் விளக்குகிறார். "உதாரணமாக, ஆஸ்டியோபோரோசிஸ் என்பது முதுமை செயல்முறையால் ஏற்படுகிறது, ஆனால் ஈஸ்ட்ரோஜன்கள் கிடைக்காமலும் போகிறது".

மெனோபாஸ் காலத்தின் ஆரம்பத்தில் சரியான பெண்களுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை அளிக்கப்படும்போது, ​​இந்தச் செயல்பாடுகளில் சில மீட்டெடுக்கப்படுவதை நாம் அடிக்கடி காண்கிறோம் என்கிறார் அவர்.

மறுபுறம், ஆண்களின் முக்கிய பாலியல் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் ஆகும், இது அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ளும் நடத்தைகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அது உடலுக்குள் சில தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று போராஸ் சந்தேகிக்கிறார், இருப்பினும் அது எப்படி என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

உண்மையில், 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்யாத, கொரியாவைச் சேர்ந்த ஒரு குழு அலிமிகள், ஆண்மை நீக்கம் செய்யப்படாத தங்களின் ஆண் சகாக்களை விட 14-19 ஆண்டுகள் நீண்ட காலம் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்டது.

இருப்பினும், இந்தத் தரவுகளில் வரம்புகள் உள்ளன, மேலும் வெளிப்படையான காரணங்களுக்காக இதை மீண்டும் செய்து பார்க்க முடியாது. ஆனால் சில விலங்குகளில் கிடைத்த சான்றுகளும், ஆண்மை நீக்கம் செய்யப்படும்போது ஆண்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது.

நீண்ட ஆயுள் என்ற புதிரில் ஹார்மோன்கள் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் இன்னும் பல காரணிகள் உள்ளன.

"பல காரணிகள் உள்ளன, அவற்றில் சில நமக்குத் தெரியும், ஆனால் இது மிகவும் சிக்கலான ஒரு செயல்முறை என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் போராஸ்.

பரிணாமக் குறிப்புகள்

இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில், சில விஞ்ஞானிகள் மனிதர்களைத் தாண்டி ஆராய்ந்து வருகின்றனர்.

நீண்ட காலம் வாழும் பெண்களைக் கொண்ட ஒரே இனம் நாம் அல்ல. சிங்கங்கள், செம்மறி ஆடுகள் முதல் ஓர்கா திமிங்கலங்கள், எலிகள் வரை பல பாலூட்டிகளிலும் இது காணப்படுகிறது.

வியப்புக்குரிய வகையில், பறவைகளில் இது நேர்மாறாக உள்ளது; அங்கு ஆண் பறவைகளே நீண்டகாலம் வாழும் தன்மையைக் கொண்டுள்ளன. இதற்கான ஒரு தடயம், அவற்றின் வெவ்வேறு பாலின குரோமோசோம்களில் இருக்கலாம்.

"பாலூட்டிகளில், பெண் உயிரினங்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் உள்ளன, ஆனால் ஆண் உயிரினங்களுக்கு ஒரு X மற்றும் ஒரு Y மட்டுமே உள்ளன," என்கிறார் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோஹன்னா ஸ்டார்க்.

"XX குரோமோசோம்களைக் கொண்டிருப்பது பெண் உயிரினங்களுக்கு உயிர்வாழ்வதற்கான ஒரு சாதகத்தை அளிக்கக்கூடும், ஏனெனில், அதன் நகல்களில் ஒன்றில் ஒரு பிறழ்வு ஏற்பட்டால், உங்களிடம் கூடுதலாக ஒரு நகல் இருக்கும், அது அந்தப் பிறழ்வை ஈடுசெய்யும்," என்று ஸ்டார்க் விளக்குகிறார்.

"ஆனால் ஆண் உயிரினங்களில், அவற்றுக்கு ஒரே ஒரு X குரோமோசோம் மட்டுமே இருப்பதால், இந்தப் பிறழ்வுகள் அதிக தீங்கு விளைவிக்கக்கூடும்."

பறவைகளில், ஆண் உயிரினங்களுக்கு ஒரே குரோமோசோமின் இரண்டு நகல்கள் உள்ளன - அவற்றின் விஷயத்தில் இது Z என்று அழைக்கப்படுகிறது - அதேசமயம் பெண் உயிரினங்களுக்கு ஒரு Z மற்றும் ஒரு W மட்டுமே உள்ளன.

"பாலூட்டிகளில் பெண் உயிரினங்கள் ஏன் நீண்ட காலம் வாழ்கின்றன, பறவைகளில் ஆண் உயிரினங்கள் ஏன் நீண்ட காலம் வாழ்கின்றன என்பதற்கு இது ஒரு விளக்கமாக இருக்கலாம்," என்று ஸ்டார்க் கருதுகிறார்.

ஆனால் 2025-ல் வெளியிடப்பட்ட அவரது ஆய்வு, இந்தக் கதைக்கு மேலும் பல பரிமாணங்கள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

"ஒற்றைத் துணை இனங்களில் வலுவான பாலின வேறுபாடுகள் காணப்படுவதில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்," என்கிறார் அவர். "ஒற்றைத் துணை இனமற்ற இனங்களான கொரில்லாக்கள், சிங்கங்கள் போன்றவற்றில், ஆண் விலங்குகள் பல பெண் விலங்குகளுக்காகப் போட்டியிடுகின்றன; அவற்றில் மிகப் பெரிய பாலின வேறுபாடுகள் காணப்படுகின்றன."

பிந்தைய இனங்களில், பெண் விலங்குகளைக் கவர்வதற்காக, நீண்ட ஆயுளைப் பொருட்படுத்தாமல், பெரிய உடல்களை வளர்ப்பது அல்லது பெரிய கொம்புகளை வளர்ப்பது போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆண் விலங்குகள் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.

மறுபுறம், பெண் விலங்குகளில் பரிணாம வளர்ச்சி வேறு பாதையில் சென்றிருக்கலாம்.

"பெண் விலங்குகள் குட்டிகளைப் பராமரிக்கும் இனங்களில், குறிப்பாக மனிதர்கள் அல்லது பெரும் குரங்குகள் போன்ற மிக நீண்ட காலம் வாழும் இனங்களில், தாய் நீண்ட காலம் வாழ்வது நன்மை பயக்கும். அப்போதுதான் அவை தங்கள் சந்ததிகளை முதிர்ச்சி அடையும் வரை வளர்க்க முடியும்," என்பது ஒரு கருத்தாகும் என்கிறார் ஸ்டார்க்.

பெண்களுக்கு இருக்கும் சிக்கல் என்ன?

ஆனால், பெண்களுக்கு இது அனைத்தும் நற்செய்தியை மட்டுமே தருவது அல்ல.

அவர்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழக்கூடும் என்றாலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் உயிருக்கு ஆபத்தற்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன — கீழ் முதுகு வலி, மனச்சோர்வு சார்ந்த கோளாறுகள் மற்றும் தலைவலி போன்றவை இதில் அடங்கும்.

"பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் செயல்முறைகள் பொதுவாக வலிமையாக இருக்கும்; ஆனால் இதுவே சில சமயங்களில் அழற்சி சார்ந்த நோய்களுக்கு (inflammatory diseases) வழிவகுக்கக்கூடும்," என்று ஹார்பர் விளக்குகிறார். "மேலும், நிச்சயமாக, எங்களின் தசை மற்றும் எலும்பு மண்டலங்கள் ஆண்களை விடச் சற்று குறைவான வலிமையுடனேயே அமைந்துள்ளன." என்கிறார் அவர்.

"ஆண்களின் உயிரியல் அமைப்பு அவர்களை மரணத்திற்கு ஆளாகக்கூடியவர்களாகவும், பெண்களின் உயிரியல் அமைப்பு அவர்களை உடல் குறைபாடுகளுக்கு ஆளாகக்கூடியவர்களாகவும் ஆக்குகிறது," என்று அவர் நிறைவு செய்கிறார்.

ஆனால், நமது உயிரியல் அமைப்புகள் நமது விதியை முன்னரே தீர்மானித்துவிடுவதில்லை என்பதை அந்த மூன்று நிபுணர்களும் வலியுறுத்த விரும்புகின்றனர்.

"உயிரியல் ரீதியான வேறுபாடுகள் என்பவை சூழல் மற்றும் நடத்தை சார்ந்த காரணிகளால் முழுமையாகப் பாதிக்கப்படுகின்றன," என்று Borrás விளக்குகிறார்.

பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருவருமே உணவுமுறை, உடற்பயிற்சி, உறக்கம் மற்றும் மன அழுத்த அளவுகள் போன்ற விஷயங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும் என்றும்; அவ்வாறு சிந்திப்பது வெறும் "நீண்ட காலம் வாழ்வதற்காக மட்டுமல்ல, நிச்சயமாகச் சிறந்த முறையில் வாழ்வதற்காகவும்" இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு