இரு முறை மரண ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த கிறிஸ்டா பைக் உடல்நிலை எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Tennessee Department of Corrections
- எழுதியவர், பிராண்டன் ட்ரெனன்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அமெரிக்காவின் டென்னசி மாகாண மரண தண்டனைப் பிரிவில் உள்ள கிறிஸ்டா பைக், இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் உயிர் பிழைத்த நிலையில், தற்போது மருத்துவமனையில் "கவலைக்கிடமான நிலையில், உயிர் காக்கும் சிகிச்சை பெற்று வருவதாக" அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த ஆண்டு நடைபெறவிருந்த அனைத்து மரண தண்டனைகளையும் மாகாண ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார்.
"தற்போது அவரது உடல்நிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எங்களுக்கு எந்தத் தெளிவும் இல்லை. அவரது உடல்நிலை குறித்து சொல்லக் கூடிய புதிய தகவலும் இப்போதைக்கு இல்லை. ஆனால், அவர் தற்போது உயிருடன் இருக்கிறார் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்," என்று அவரது வழக்கறிஞர் ராண்டி ஸ்பிவி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பைக்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். 50 வயதான பைக்கிற்கு, 1996ஆம் ஆண்டு கொலீன் ஸ்லெம்மர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
புதன் கிழமை அவருக்கு பென்டோபார்பிட்டால் என்ற மரண ஊசி மருந்தின் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டன. ஆனால், அதற்குப் பிறகும் அவர் உயிருடன் இருந்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது தனது காதலராக இருந்த டடாரில் ஷிப்புடன் சேர்ந்து 19 வயதான ஸ்லெம்மரை தாக்கி, சித்ரவதை செய்து கொலை செய்தபோது பைக்கிற்கு 18 வயது,
புதன் கிழமை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தடுக்க கடைசி நேரம் வரை சட்டப் போராட்டம் நடைபெற்றது. இறுதியில், மரண ஊசி செலுத்தும் நடவடிக்கையைத் தொடர அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென விரும்பியவர்களில் ஸ்லெம்மரின் தாய் மே மார்ட்டினெஸும் ஒருவர். அதைப் பார்ப்பதற்காக அவர் டென்னசிக்கு சென்றிருந்தார். இந்த முயற்சி தோல்வியடைந்த பிறகு என்.பி.சி நியூஸிடம் பேசிய அவர், "அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியதாக" தெரிவித்தார்.
வியாழக்கிழமை பிற்பகலில், பைக்கின் வழக்கறிஞர்கள் மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியின்போது என்ன நடந்தது என்பது குறித்து மேலும் சில தகவல்களை வெளியிட்டனர். ரகசியம் சூழ்ந்திருந்த அந்த நிகழ்வு மிகவும் வேதனையானதாக இருந்ததாக அவர்கள் விவரித்தனர்.

பட மூலாதாரம், Family handout
"நேற்றிரவு, மரண தண்டனை நிறைவேற்றும் குழுவினர் ஒரு மணிநேரம் நரம்பில் ஊசி செலுத்துவதற்கான வழியை ஏற்படுத்த முயன்றனர். அவரது இடது கையில் மட்டும் குறைந்தது ஏழு ஊசிகள் பயன்படுத்தப்பட்டதை நான் எண்ணினேன். அவற்றில் ஒன்று, தோல்வியடைந்த முயற்சிக்குப் பிறகு அவரது கையிலிருந்து எடுக்கப்பட்டபோது வளைந்திருந்தது போலத் தெரிந்தது," என்று ஸ்பிவி கூறினார்.
இரண்டாவது மரண ஊசி டோஸ் செலுத்தப்பட்ட பிறகும், சில நிமிடங்கள் கழித்து, "பைக் இன்னும் சுவாசித்துக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தபோது" பார்வையாளர்கள் மூடிய திரைக்குப் பின்னால் இருந்த இருண்ட அறையில் வைக்கப்பட்டு இருந்ததாக ஸ்பிவி தெரிவித்தார்.
"அந்தத் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. மருத்துவப் பணியாளர்கள் எப்போது உதவத் தொடங்கினார்கள் அல்லது உதவத் தொடங்கினார்களா என்பதே எனக்குத் தெரியவில்லை," என்று ஸ்பிவி கூறினார்.
கிறிஸ்டா பைக்கின் மரண தண்டனையை இப்போது ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென மாகாண ஆளுநரிடம் ஸ்பிவி கோரிக்கை விடுத்தார். முன்னதாக இதே கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.
பைக்கின் மற்றொரு வழக்கறிஞரான ஸ்டீபன் ஃபெரெல், தாங்கள் வேறு சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். "இதைப் பற்றி நாங்கள் ஆழமாகச் சிந்தித்து (முடிவெடுக்க) விரும்புகிறோம். கிறிஸ்டா குணமடைவதையும், அவருக்கு என்ன வேண்டும் என்பதில் அவருடைய கருத்து இருப்பதையும் உறுதி செய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
டென்னசி ஆளுநர் பில் லீ, இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பைக்கின் மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்தது தொடர்பான விசாரணை "முழுமையாக இருக்கும்" என்றும், "இதற்கு நேரம் ஆகும்" என்றும் அவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பட மூலாதாரம், J. Miles Carey/USA TODAY/Imagn Images via Reuters
"பல கேள்விகள் உள்ளதாக" கூறிய லீ, "அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறிய எங்கள் மாகாண மக்களுக்கு உரிமையுள்ளது, அதற்காகத்தான் இந்த விசாரணை நடைபெறுகிறது."
மரண தண்டனை நடைமுறைகள் குறித்த இந்தச் சுயாதீன ஆய்வை யார் மேற்கொள்வார்கள் என்பது குறித்து லீ விளக்கமளிக்கவில்லை. அவர் பிறப்பித்துள்ள 'அனைத்து மரண தண்டனைகளையும் தற்காலிகமாக நிறுத்தும்' உத்தரவு, கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட கேரி சூட்டனுக்கு டிசம்பர் 3ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மரண தண்டனையையும் பாதிக்கும்.
மரண தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பைக் கொண்ட டென்னசி திருத்தத் துறை, இந்த வழக்கில் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட "சட்டபூர்வமான, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மரண தண்டனை விதிமுறையின் ஒவ்வொரு படியையும் தாங்கள் பின்பற்றியதாக" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
"இந்த நடைமுறையில் பயன்படுத்தப்படும் மரண ஊசி மருந்து தொடர்ந்து பயனுள்ளதாகவே இருந்து வந்துள்ளது. அந்த நடைமுறையில், இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி இல்லை," என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல் முயற்சி தோல்வியடைந்தால், மாகாண நடைமுறையின்படி பென்டோபார்பிட்டால் மருந்தின் இரண்டு டோஸ்கள் பைக்கிற்கு செலுத்தப்பட்டன. ஆனால் அதற்குப் பிறகும் அவர் உயிருடன் இருந்ததாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் தெரிவித்துள்ளனர். "பைக்கிற்கு இந்த மரண தண்டனை தேவையற்ற வேதனையை ஏற்படுத்துகிறது. மேலும், கொடூரமான, வழக்கத்திற்கு மாறான தண்டனையின்றி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்ற அவரது உரிமையை இது மீறுகிறது," என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற முடிவுக்குத் தாங்களும் உடன்படுவதாக டென்னசி அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. "என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றும் அந்த அலுவலகம் கூறியது. டென்னசி ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மார்ஷா பிளாக்பர்ன், இந்தச் சம்பவத்தை "சோகமானது" என்று குறிப்பிட்டார்.
"என்ன நடந்தது, இந்த நடைமுறை ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான பதில் எளிதானது: மின்சார நாற்காலியை மீண்டும் கொண்டு வர வேண்டும்," என்று பிளாக்பர்ன் கூறினார். அதைத் தொடர்ந்து, பிளாக்பர்னின் தேர்தல் போட்டியாளரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜெர்ரி கிரீன், "மரண தண்டனைகளில் மிகவும் கொடூரமான முறைகளில் ஒன்றை மீண்டும் கொண்டு வர" அவர் விரும்புவதாகக் கூறி அவரை விமர்சித்ததுடன், "நான் ஆளுநராக இருந்தால், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து மரண தண்டனைகளுக்கும் தற்காலிகத் தடை விதிப்பேன்," என்று கிரீன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும், 2026ஆம் ஆண்டில் டென்னசி அதிகாரிகள் ஒரு கைதிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முயன்று அது தோல்வியடைவது இது இரண்டாவது முறை. மே மாதத்தில், டோனி காரதர்ஸுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி கைவிடப்பட்டது. மரண ஊசி மருந்தைச் செலுத்துவதற்கான நரம்பைக் கண்டறிய ஊழியர்களால் முடியவில்லை. அவருக்கு ஓராண்டு கால மரண தண்டனை நிறுத்தி வைப்பு வழங்கப்பட்டது.
கூடுதல் தகவல்கள்: உலக சேவை செய்தியாளர் ஸ்டெஃபனி ஹெகார்ட்டி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































