திருவாரூர்: வகுப்பறையில் 3 வயது சிறுவனை கட்டி வைத்து தாக்குதலா? வைரல் வீடியோவின் பின்னணி

திருவாரூர்: வகுப்பறையில் 3 வயது சிறுவனை கட்டி வைத்து தாக்குதலா? வைரல் வீடியோவின் பின்னணி
படக்குறிப்பு, கோப்புப் படம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருவாரூரில் 3 வயது சிறுவனின் கைகளைக் கட்டிப் போட்டு பள்ளி உதவியாளர் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆசிரியை உள்பட 2 பேர் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால், சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்த பிறகு அவர்களால் எதுவும் பேச முடியவில்லை' என்கிறார், காவல் ஆய்வாளர் மஞ்சுளா.

"தாக்குதல் சம்பவத்தில் இருந்து மனதளவில் சிறுவன் மீள்வதற்கு காலங்கள் தேவைப்படும்" என, மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3 வயது சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? வகுப்பறையில் மாணவர்களைக் கையாள்வது குறித்து அரசு வகுத்துள்ள விதிமுறைகள் என்ன?

வகுப்பறையில் என்ன நடந்தது?

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் கோபிநாத் என்பவரின் 3 வயது மகன், அங்குள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பிரீ கேஜி வகுப்பில் படித்து வந்தார்.

கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 16) பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவனின் கைகளில் காயங்கள் இருந்ததால், பெற்றோர் விசாரித்துள்ளனர். ஆசிரியர் மற்றும் உதவியாளர் தனது கைகளைக் கட்டிப் போட்டு தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

"மாணவர் கூறியதைக் கேட்டு பள்ளிக்கு சிறுவனின் பெற்றோர் சென்றுள்ளனர். ஆனால், 'வகுப்பில் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை' என்று பள்ளி முதல்வர் கூறியுள்ளார். அவர்களே, சிசிடிவி காட்சிகளைப் பார்க்குமாறு கூறினர்" என்கிறார், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சுளா.

"வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்த போது மாணவரின் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியர் முன்பு நின்று அழுவது போன்ற காட்சிகள் இருந்தன. இதனைப் பள்ளி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதனை தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட கோபிநாத், தனது மகனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

"பள்ளியின் உதவியாளரை கைது செய்ய வேண்டும் என்பது தான் பெற்றோரின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், மாணவரின் கையைக் கட்டிப் போட்டது தொடர்பான குற்றத்தை தடுக்காமல் வகுப்பறையில் ஆசிரியை அமைதியாக அமர்ந்திருந்தார். அவருக்கும் இந்தக் குற்றம் பொருந்தும்" என்கிறார் மஞ்சுளா.

இந்த வழக்கில் ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் உதவியாளர் செல்வி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
படக்குறிப்பு, இந்த வழக்கில் ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் உதவியாளர் செல்வி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வகுப்பறையில் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் பரவியது. இந்த விவகாரத்தில் ஐந்து பிரிவுகளில் ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் உதவியாளர் செல்வி ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துவது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றங்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

"வழக்கில் பள்ளி உதவியாளரைக் கைது செய்துள்ளோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம்" என காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

"பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?" எனக் கேட்டபோது, "அவர்கள் மீது புகார் கொடுக்கப்படவில்லை. வகுப்பில் மாணவர் மிகவும் சுட்டியாக இருந்துள்ளார். அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் கயிறு வைத்து மிரட்டுமாறு ஆசிரியை கூறியுள்ளார்" என அவர் கூறினார்.

மாணவரின் தாய் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளதாகக் கூறும் காவல் ஆய்வாளர் மஞ்சுளா, "வகுப்பறையில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகமும் விசாரணை நடத்தியுள்ளது. ஆசிரியை மற்றும் உதவியாளர் ஆகியோரை பணிநீக்கம் செய்துள்ளனர்" என்கிறார்.

சம்பவம் நடந்த தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் முதல்வர் லட்சுமி பிரியாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "ஆசிரியர்களுடன் தொடர்ந்து மீட்டிங் நடந்து கொண்டிருப்பதால் பேச இயலாது" என அவர் சார்பாக பேசிய அலுவலக உதவியாளர் தெரிவித்தார்.

'குற்றம் நிரூபிக்கப்பட்டால் அங்கீகாரம் ரத்து' - கல்வி அதிகாரி

"குறிப்பிட்ட தனியார் பள்ளியிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகப்பிரியா.

'மாணவர் மீதான தாக்குதல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது' எனக் கூறி தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"தனியார் பள்ளி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் சுகப்பிரியா.

தொடர்ந்து பேசிய அவர், "குழந்தைகள் மீது மன ரீதியாகவோ உடல்ரீதியாகவோ எந்தவித துன்புறுத்தல்களையும் மேற்கொள்ளக் கூடாது என்பதை விழிப்புணர்வு கூட்டங்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்" என்கிறார்.

"உடல்ரீதியான தண்டனைகள் எதையும் வழங்கக் கூடாது என சட்ட விதிகள் கூறுகின்றன. அவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது எனவும் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் சூழலை உருவாக்க வேண்டும் என்பதையும் ஆசிரியர்களிடம் வலியுறுத்தி வருகிறோம்" என அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி விதிகள் கூறுவது என்ன?

குழந்தைக்கு வலி, காயம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு செயலும் உடல்ரீதியான தண்டனையைக் குறிக்கும்.
படக்குறிப்பு, குழந்தைக்கு வலி, காயம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு செயலும் உடல்ரீதியான தண்டனையைக் குறிக்கும்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு கல்வி விதிகளில் சில மாற்றங்களைச் செய்து அரசாணை ஒன்றை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கல்வி கையேடு (Tamil Nadu Educational Manual) தயாரிக்கும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி, மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கச் செய்ய சில குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அந்த உத்தரவு கூறியது. அதன்படி,

  • எந்த சூழலிலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்கக் கூடாது.
  • எந்த சூழலிலும் மாணவர்களுக்கு மன ரீதியான வலியை ஏற்படுத்தக் கூடாது

'மாணவர்களின் நேர்மறையான மற்றும் பொருத்தமான நடத்தைகளுக்குப் பரிசுகள் வழங்கலாம்' எனவும் உயர்மட்டக் குழு பரிந்துரைத்தது. அதன்படி சுய ஒழுக்கம் குறித்த வழிகாட்டுதல்களைச் சேர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 கூறுவது என்ன?

குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்
படக்குறிப்பு, குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்

6 முதல் 14 வயதினருக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 17ன்கீழ் குழந்தைகளுக்கு உடல்ரீதியான தண்டனை மற்றும் மனரீதியான துன்புறுத்தல் அளிப்பதைத் தடை செய்துள்ளது.

'எந்தவொரு குழந்தையையும் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது. அவ்வாறு விதிகளுக்கு முரணாக செயல்படும் எவரும் அவருக்குப் பொருந்தக் கூடிய பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்' எனவும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது.

பள்ளிகளில் குழந்தைகளின் நலன் தொடர்பாக 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

குழந்தைக்கு வலி, காயம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு செயலும் உடல்ரீதியான தண்டனையைக் குறிக்கும். அதன்படி,

  • கைகளால் அல்லது குச்சியால் குழந்தைக்கு உடல்ரீதியாக தீங்கு விளைவிப்பது
  • குழந்தைகளை பெஞ்சின் மீது நிற்க வைப்பது, கால்களுக்கு இடையில் கைகளை விட்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளச் செய்வது என அசௌகரியமான நிலையில் இருக்கச் செய்வது
  • வகுப்பறை அல்லது நூலகம் என்று பள்ளியில் ஏதேனும் மூடிய அறைக்குள் குழந்தையை அடைத்து வைப்பது
  • குழந்தையின் உளவியல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நடத்தையில் ஈடுபடுவது
  • மிரட்டுதல், திட்டுதல், இழிவான வார்த்தைகளைக் கூறுதல், குழந்தையின் பெற்றோர் செய்யும் தொழில் குறித்து கேலி செய்வது, கல்வியில் ஆசிரியர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதபோது இழிவுபடுத்துவது போன்றவை அடங்கும் எனக் கூறியுள்ளது.

'பள்ளியில் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதோ அல்லது துன்புறுத்தலுக்கு உள்ளாவதோ இல்லை என்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்' எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன" என்கிறார்.

" 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களின் நலன் குறித்துக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பேசுகிறது. திருவாரூர் சம்பவத்தில் 3 வயது சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கொடுங்குற்றமாக கருத வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

"தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பாதிப்பில் இருந்து குழந்தைகள் மீள்வதற்கு காலஅவகாசம் தேவைப்படும்" எனக் கூறுகிறார், கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் முன்னாள் இயக்குநரும் மருத்துவருமான பூர்ணசந்திரிகா.

"உடல் மற்றும் மனரீதியான துன்பத்தில் இருந்து குழந்தை மீண்டும் வருவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் எதிர்காலத்தில் பிரச்னைகளைக் கொடுக்கும்" என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாதிக்கப்பட்ட மாணவரை பள்ளியை விட்டு மாற்றுவது, சமூகரீதியான கவுன்சிலிங் கொடுப்பது ஆகியவை முக்கியமானது. குழந்தைகள் எந்தளவுக்கு மனரீதியாக பாதிப்படைவார்கள் என்பதை ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு