'மாதாந்திர ஓய்வூதியம்' போல் பி.எஃப். பணத்தை திரும்பப் பெற புதிய திட்டம் - சாதக, பாதகங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
நீங்கள் பணியில் இருக்கும் காலத்தில், ஒவ்வொரு மாதமும் உங்கள் ஊதியத்தின் ஒரு பகுதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படுகிறது. இந்தத் தொகைக்கு வட்டியும் சேர்ந்து வருவதால், நீங்கள் ஓய்வுபெறும் நேரத்தில் உங்களின் சேமிப்புத்தொகை கணிசமான அளவு உருவாகியிருக்கும்.
ஓய்வுபெற்ற பிறகு இந்தச் சேமிப்புத் தொகை முழுவதையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்வதுதான் சரியான முடிவா? அல்லது அந்தப் பணத்தை வைப்பு நிதிக் கணக்கிலேயே வைத்திருந்து, தேவைக்கேற்ப மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுத்துக்கொள்வது சிறந்ததா?
ஓய்வுக்காலத்தில் நிலையான வருமானத்தைப் பெற விரும்பும் ஊழியர்களுக்கு இந்தக் கேள்வி முக்கியமானது.
இதைக் கருத்தில் கொண்டு, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ), 'முறையான பணம் திரும்பப் பெறும் திட்டம்' (Systematic Withdrawal Plan – SWP) என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வசதியின் மூலம், ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது பிஎஃப் சேமிப்புத் தொகையை மொத்தமாகப் பெறுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவணை முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.
அப்படியானால், எஸ்.டபிள்யூ.பி எனப்படும் 'முறையான பணம் திரும்பப் பெறும் திட்டம்' என்றால் என்ன? இது எவ்வாறு செயல்படும்? ஏற்கெனவே நடைமுறையில் உள்ள முதலீட்டு மற்றும் சேமிப்பு வாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது இதன் சிறப்பம்சங்கள் என்ன?
எஸ்.டபிள்யூ.பி மூலம் பணத்தைப் பெறும்போது வரி விதிப்பு எவ்வாறு இருக்கும்? இந்த வசதியால் ஓய்வு பெற்றவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதன் சாதக பாதகங்கள் யாவை? அல்லது இதற்கு முந்தைய திட்டத்துடன் ஒப்பிடும்போது, ஊழியர்களுக்கு இழப்புகள் ஏதேனும் உள்ளனவா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை விரிவாகப் பார்ப்போம்.
எஸ்.டபிள்யூ.பி என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
எஸ்.டபிள்யூ.பி என்பது 'முறையான தவணைத் திரும்பப் பெறும் திட்டம்'. அதாவது, ஏற்கெனவே முதலீடு செய்துள்ள தொகையிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில், முன்கூட்டியே தீர்மானித்த ஒரு தொகையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதாகும்.
இதை 'முறையான முதலீட்டுத் திட்டம்' (SIP – Systematic Investment Plan) என்பதற்கு நேர்மாறான முறையாகக் கருதலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரபலமாக உள்ள எஸ்.ஐ.பி முறையில், ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறார். ஆனால், எஸ்.டபிள்யூ.பி முறையில் ஏற்கெனவே செய்துள்ள முதலீட்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைத் திரும்பப் பெறுகிறார்.
உதாரணமாக, ஒருவர் ஓய்வுபெறும்போது ரூ.20 லட்சம் பி.எஃப் சேமிப்பு வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணத்தை முழுமையாக ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 வீதம் பெற்றுக்கொள்ள அவர் விரும்புகிறார்.
இத்தகைய சூழலில் எஸ்.டபிள்யூ.பி முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 எடுத்துக்கொண்ட பிறகும், கணக்கில் எஞ்சியிருக்கும் தொகை தொடர்ந்து முதலீட்டில் இருக்கும். அதற்கு விதிகளின்படி வட்டி கிடைத்தால், அந்த வருவாயும் சேமிப்புடன் சேரும்.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் எடுக்கும் தொகை, அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டியை விட அதிகமாக இருந்தால், அசல் சேமிப்புத் தொகையும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். எனவே, எவ்வளவு தொகையை எடுக்கிறோம், எவ்வளவு வட்டி கிடைக்கிறது, சேமிப்பு எவ்வளவு காலத்துக்குப் போதுமானதாக இருக்கும் என்பதைக் கணக்கிடுவது அவசியம்.
எஸ்.டபிள்யூ.பி திட்டம் எவ்வாறு செயல்படும்?

பட மூலாதாரம், Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தப் புதிய வசதியின் கீழ், ஓய்வுபெறும் பணியாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள சேமிப்புத் தொகையை மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பணியாளர் திரும்பப் பெறும் தொகை போக, கணக்கில் எஞ்சியிருக்கும் பணம் தொடர்ந்து இபிஎஃப் கணக்கிலேயே இருக்கும். அந்தத் தொகைக்கு விதிமுறைகளின்படி வட்டியும் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த வசதியைப் பயன்படுத்துவது கட்டாயமல்ல; பணியாளர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. தேவைப்படுவோர் தவணை முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் தற்போதுள்ள நடைமுறையின்படி தங்களுக்குச் சேர வேண்டிய முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
முதற்கட்டமாக, 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், தங்களது பி.எஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான இருப்புத் தொகை வைத்திருப்பவர்கள் என சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவணை முறையில் பணம் பெற்றுக்கொண்டிருக்கும் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், அவரது வாரிசுதாரர் அல்லது நியமனதாரர் கணக்கில் எஞ்சியிருக்கும் தொகையை முழுமையாக ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தொடர்ந்து தவணை முறையில் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும்.
இதற்கிடையில், இபிஎஃப் கணக்கில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவையும் இபிஎஃப்ஓ குறைத்துள்ளது. இதுவரை 25 சதவீதமாக இருந்த இந்த அளவு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இறுதித் தொகையைப் பெறுவதற்கான காத்திருப்புக் காலமும் 12 மாதங்களிலிருந்து இரண்டு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வேலையிழந்த தொழிலாளர் இரண்டு மாதங்கள் காத்திருந்த பிறகு, தனது இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையில் 90 சதவீதம் வரை திரும்பப் பெற முடியும்.
இருப்பினும், இந்தப் புதிய வசதிக்கான விரிவான விதிமுறைகள், தவணை முறையில் பணம் எடுப்பதற்கான வரம்புகள், குறைந்தபட்ச இருப்புத் தொகை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளன. இபிஎஃப் திட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே இவை முழுமையாகத் தெரியவரும்.
வரி விதிப்பு எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
இ.பி.எஃப்.ஓ-வின் புதிய எஸ்.டபிள்யூ.பி திட்டத்தில் வரி விதிப்பு தொடர்பான அம்சங்கள் இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.
பொதுவாக, பணியில் இருக்கும் காலத்தில் இபிஎஃப் கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு, வருமான வரிச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், ஓய்வுக்குப் பிறகு கணக்கில் தொடர்ந்து இருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு எவ்வாறு வரி விதிக்கப்படும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
அதேபோல், எஸ்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் தவணை முறையில் திரும்பப் பெறப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படுமா என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தற்போதைய புதிய வரி முறையின்படி, இந்தியாவில் வசிக்கும் தகுதியான தனிநபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான மொத்த வருமானத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், இந்த வரிச் சலுகை எஸ்.டபிள்யூ.பி மூலம் பெறப்படும் தொகைகளுக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தத் திட்டம் தொடர்பாக வருமான வரிச் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து நிதி அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களோ அல்லது இறுதி முடிவுகளோ இதுவரை வெளியாகவில்லை.
எஸ்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பெறப்படும் தொகைகளுக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்பட்டால், அது ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு கூடுதல் நன்மையாக அமையும்.
இந்த சேமிப்புத் தொகை எவ்வளவு காலத்துக்குப் போதுமானதாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள அசல் தொகையைத் தொடாமல், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை மட்டும் தொடர்ந்து எடுத்துப் பயன்படுத்தினால், அசல் சேமிப்புத் தொகை குறையாமல் இருக்கும்.
உதாரணமாக, உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.50 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தற்போதைய 8.25 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தைக் கணக்கில் கொண்டால், இந்தத் தொகைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4.12 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது, மாதத்துக்குச் சராசரியாக ரூ.34,000 கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், இங்கு ஒரு சிக்கல் உள்ளது. கிடைக்கும் வட்டி வருமானம் காலப்போக்கில் அதிகரிக்காமல் இருக்கலாம். அதேவேளையில், பணவீக்கம் காரணமாக உணவு, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அன்றாடச் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும். எனவே, இன்றைக்கு போதுமானதாக இருக்கும் மாத வருமானம், சில ஆண்டுகளுக்குப் பிறகு போதுமானதாக இல்லாமல் போகலாம்.
எனவே, பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் திரும்பப் பெறும் தொகையைப் படிப்படியாக அதிகரிப்பது ஒரு மாற்று அணுகுமுறையாக இருக்கலாம்.
உதாரணமாக, ரூ.50 லட்சம் சேமிப்பில் முதல் ஆண்டில் 5 சதவீதத்தைத் திரும்பப் பெறுவதாக வைத்துக்கொள்வோம். இதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அல்லது மாதத்துக்கு சுமார் ரூ.20,800 கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தத் தொகையை ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே சென்றால், குறிப்பிட்ட வட்டி வருவாய் மற்றும் பிற நிதி அனுமானங்களைப் பொறுத்து, இந்தச் சேமிப்பை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
இருப்பினும், இந்தக் கணக்கீடு உறுதியான உத்தரவாதம் அல்ல. குறிப்பாக, கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்பட்டு, அந்த வரியையும் இதே சேமிப்பிலிருந்து செலுத்த வேண்டியிருந்தால், அசல் தொகை எதிர்பார்த்ததைவிட வேகமாகக் குறையலாம். வரி விதிப்பு என்பது பொருந்தக்கூடிய வருமான வரி விதிகள் மற்றும் தனிநபரின் வரி நிலையைப் பொறுத்தது.
எஸ்.டபிள்யூ.பி திட்டம் சிறந்த தேர்வா?

பட மூலாதாரம், Getty Images
தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில், இபிஎஃப் சேமிப்பிலிருந்து தவணை முறையில் பணத்தைப் பெறுவதற்கான இந்த எஸ்.டபிள்யூ.பி வசதி, பணி ஓய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருமானம் பெற விரும்புவோருக்கு பயனுள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.
குறிப்பாக, அரசு அமைப்பான இபிஎஃப்ஓ நிர்வகிக்கும் இந்தச் சேமிப்புத் திட்டத்தில், அறிவிக்கப்படும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் வருமானம் கிடைக்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்களை நேரடியாகச் சார்ந்திருக்காதது இதன் முக்கிய அம்சமாகும். நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு சாதகமான அம்சமாக இருக்கலாம்.
இருப்பினும், இபிஎஃப் மட்டுமே ஓய்வுக்கால முதலீட்டுக்கான ஒரே வாய்ப்பு அல்ல. வங்கிகளின் நிலையான வைப்புத் திட்டங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத் திட்டங்களும் உள்ளன.
அதேநேரத்தில், பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, நீண்டகாலத்தில் முதலீட்டின் மதிப்பைத் தக்கவைக்க, தங்களது முதலீட்டுத் தொகுப்பில் ஒரு பகுதியை ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளிலும் ஒதுக்கலாம் என்று நிதி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், பங்குச்சந்தை முதலீடுகளில் சந்தை அபாயம் இருப்பதால், வயது, வருமானத் தேவை, இடர்தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
எனவே, ஓய்வுக்கால நிதித் திட்டமிடலில் மாதாந்திர வருமானம், பணவீக்கம், வரி விதிப்பு, முதலீட்டின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிதித் தேவைகள் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொள்வது அவசியம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































