'மலம் தானம் செய்ய பணம்': மல மாற்று சிகிச்சையில் நீங்கள் ஒரு 'சூப்பர் பூப்பர்' ஆக எது வேண்டும்?

பட மூலாதாரம், BBC/ Emmanuel Lafont
- எழுதியவர், சோஃபியா குவாலியா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
மல மாற்று சிகிச்சையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தச் சிகிச்சைக்காகத் தானம் செய்யத் தகுதியான மலத்தை உற்பத்தி செய்பவர்கள் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இவர்களில் மிகச் சிலர்தான் 'சூப்பர் பூப்பர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மிகச் சிறந்த மலத்தைக் கண்டறிவது எப்படி? இதற்குப் பின்னால் இருப்பது சுவாரசியமான அறிவியல் தேடல்.
2013-ஆம் ஆண்டு, ஆடம் ஃபே ஒரு வித்தியாசமான விசயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அதாவது, எந்த வகையான உணவு மிக உயர் தரமான மலத்தை உருவாக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி.
அப்போது அவர் மருத்துவப் படிப்பின் நான்காம் ஆண்டில் இருந்தார். கடுமையான குடல் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் எதிர்க்கும் தன்மை கொண்ட 'கிளாஸ்ட்ரிடியாய்ட்ஸ் டிஃபிசில்' என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து அவர் கற்றுக்கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில், வயதான நோயாளி ஒருவர் மீண்டும் மீண்டும் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மல மாற்று சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
இந்தச் சிகிச்சை முறையில், ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து பெறப்படும் மலமானது நோயாளியின் பெருங்குடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் நோயாளியின் குடலில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை தீங்கு விளைவிக்கும் சி. டிஃபிசில் பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, குடலில் மீண்டும் நுண்ணுயிரிச் சமநிலையை ஏற்படுத்தும் என்பது இதன் அடிப்படை நோக்கம்.
ஆனால், இதற்குத் தேவையான மலத்தை எங்கிருந்து பெறுவது என்பதுதான் அப்போதைய சவாலாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மல வங்கிகள் அதிக அளவில் செயல்படவில்லை. நோயாளியின் குடும்பத்தினரும் நண்பர்களும் மலத்தைத் தானம் செய்ய முடியாத சூழலிலோ அல்லது அதற்கு விருப்பமில்லாத நிலையிலோ இருந்தனர்.
இறுதியில், ஆடம் ஃபே தானே மலத்தைத் தானம் செய்ய முன்வந்தார்.
அந்தச் சிகிச்சைக்கு முந்தைய நாள் இரவு, அவர் இரவு உணவாக ஒரு புரிட்டோவைத் தேர்ந்தெடுத்தார். மறுநாள் காலை, தான் தங்கியிருந்த மாணவர் விடுதியில், மருத்துவப் பயன்பாட்டுக்கான இளஞ்சிவப்பு நிறப் பாத்திரத்தில் மலத்தைச் சேகரித்தார். பின்னர், உப்புக் கரைசலில் நனைக்கப்பட்ட பருத்தித் துணி மூலம் அதை வடிகட்டி, ஒரு பாட்டிலில் நிரப்பினார்.
"கலங்கிய திரவம் நிரம்பிய பாட்டிலை ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டு, நான் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தேன்; அது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது" என்று அவர் நினைவுகூர்கிறார்.
சில மணி நேரத்திற்குப் பிறகு, பெருங்குடல் அகநோக்கிப் பரிசோதனையின்போது, ஃபே தானம் செய்த மலமானது நோயாளியின் பெருங்குடலுக்குள் செலுத்தப்பட்டது. இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. தற்போது நியூயார்க்கில் உள்ள என்.ஒய்.யூ லாங்கோன் ஹெல்த் மருத்துவமனையில் இரைப்பைக் குடலியல் நிபுணராகப் பணியாற்றும் ஃபே, அந்த நோயாளிக்கு அதன்பிறகு ஒருபோதும் சி. டிஃபிசைல் தொற்று ஏற்படவில்லை என்கிறார்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மனித ஆரோக்கியத்தில் குடல் நுண்ணுயிரிகள் வகிக்கும் பங்கு குறித்த ஆராய்ச்சிகள் வேகமெடுத்துள்ளன. இதன் விளைவாக, மல மாற்று சிகிச்சை அல்லது மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சை மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
சி. டிஃபிசைல் தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதில் இந்த முறைக்கு ஏற்கெனவே முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதுதவிர, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, நீரிழிவு நோய், ஆட்டிசம், எலும்புப்புரை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான சிகிச்சையாகவும் உலகின் பல பகுதிகளில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கான சிகிச்சையிலும் இதைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மல மாற்று சிகிச்சையைப் பல்வேறு முறைகளில் மேற்கொள்ள முடியும். நோயாளியின் குடலுக்குள் நேரடியாக மலத்தைச் செலுத்தலாம் அல்லது பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் மூலம் அதை வாய்வழியாக வழங்கலாம்.
ஆனால், இந்தச் சிகிச்சைக்குப் பொருத்தமான மலத்தைக் கொண்ட கொடையாளர்களைக் கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல. இதற்காகக் கொடையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் கடுமையானவை. உடல்நலப் பிரச்னைகள் இல்லாதவர்கள் மட்டுமின்றி, குடல் நுண்ணுயிரிகளின் அமைப்பும் சிறப்பாக உள்ளவர்களே தகுதியான கொடையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இவர்களில், மிகச் சிறந்த தரத்திலான குடல் நுண்ணுயிரிகளைக் கொண்ட மலத்தைத் தானம் செய்பவர்கள் 'சூப்பர் பூப்பர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள். அத்தகைய கொடையாளர்களைக் கண்டறிவதும், அவர்களிடமிருந்து சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடிய மலத்தைப் பெறுவதும் மருத்துவத் துறையின் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கட்டுரைக்காக, ஆறு மல வங்கிகள் மற்றும் ஆய்வகங்களைத் தொடர்புகொண்டு, மலத்தைத் தானம் செய்பவர்களுடன் நேர்காணல் நடத்த அனுமதி கேட்டேன். ஆனால், நம்பகமான கொடையாளர்களைக் கண்டறிவதே மிகவும் கடினமான பணி என்றும், அவர்களின் தனியுரிமைக்கு இடையூறு ஏற்படுத்தி, அதனால் அவர்கள் தானம் செய்வதிலிருந்து விலகிச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.
அப்படியானால், இந்தத் துறையில் மிகச் சிறந்த மலத்தைத் தானம் செய்பவர்கள் யார்? அத்தகைய மலத்தை அறிவியல் முறையில் எப்படிக் கண்டறிவது?
1. மல கொடையாளர்கள்: யார் தகுதியானவர்கள்?
மலத்தைத் தானம் செய்ய விரும்புபவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை நடைமுறை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எந்த நோய்க்கான சிகிச்சையில் அந்த மலம் பயன்படுத்தப்பட உள்ளது என்பதைப் பொறுத்து பரிசோதனைகளும் மாறுபடும். இருப்பினும், இந்தப் பரிசோதனை நடைமுறை மிகவும் விரிவானது.
"மனித ஆரோக்கியத்தின் மிகச் சிறந்த நிலையில் இருப்பவர்களையே நாங்கள் தேடுகிறோம். சிறுநீரகம் அல்லது ரத்தத்தைத் தானம் செய்பவர்களுக்குச் செய்யப்படும் பரிசோதனைகளைப் போலவே, மலக் கொடையாளர்களுக்கும் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்" என்கிறார் நியூயார்க்கில் உள்ள வெய்ல் கார்னெல் மெடிசின் நிறுவனத்தின் இரைப்பைக் குடலியல் நிபுணர் கார்ல் கிராஃபோர்ட்.
மலக் கொடையாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, ஒருவர் பல்வேறு உடல்நலப் பரிசோதனைகளையும் மருத்துவ நேர்காணல்களையும் எதிர்கொள்ள வேண்டும். அதோடு, தொற்றுநோய்களைக் கண்டறிவதற்காக விரிவான ரத்தம் மற்றும் மலப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பரிசோதனைகளில் 30-க்கும் மேற்பட்ட நோய்க்கிருமிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் பல்வேறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் இடம்பெறலாம். சில மருத்துவமனைகளில் கொரோனா தொற்று மற்றும் ஃப்ளூ காய்ச்சலுக்கான பரிசோதனைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இதற்குக் காரணம், பல்வேறு தொற்று நோய்கள் மலத்தின் மூலம் மற்றவர்களுக்குப் பரவக்கூடும் என்பதுதான். சில சந்தர்ப்பங்களில், மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சை மூலம் ஈ.கோலி பாக்டீரியா நோயாளிகளுக்குப் பரவிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கழிப்பறையைப் பயன்படுத்தும்போது காற்றில் பரவும் மிகச் சிறிய மலத் துகள்கள் மூலமாக, கோவிட்-19 உள்ளிட்ட சில தொற்றுகளும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் சில மனநலப் பாதிப்புகள் உள்ளிட்ட குறிப்பிட்ட உடல்நலப் பிரச்னைகள் குறித்தும் கொடையாளர்களிடம் விசாரிக்கப்படுகிறது.
சில ஆய்வகங்கள், கொடையாளர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் மிகக் கவனமாக ஆய்வு செய்கின்றன. குறிப்பாக, மல்டிவைட்டமின்கள், இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான மாத்திரைகள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு குறித்து விரிவாக விசாரிக்கப்படுகிறது.
"அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு மருந்து மற்றும் துணை உணவுப் பொருள் குறித்தும் விரிவாகக் கேட்கிறோம். அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா, தேவைப்பட்டால் அவற்றை நிறுத்த முடியுமா என்பதையும் ஆராய்கிறோம்" என்கிறார் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ நுண்ணுயிரியலாளர் சூசன் பௌட்டனென்.
கொடையாளர்கள் முந்தைய வாரத்தில் பொதுவான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை உட்கொண்டார்களா என்பதையும் சில ஆய்வகங்கள் பதிவு செய்கின்றன. "சில நேரங்களில் கொட்டைகள் இல்லாத மலத்தைக் கூட நாங்கள் தேட வேண்டியிருக்கிறது" என்கிறார் அவர்.
பொதுவாக, மலக் கொடையாளர்கள் 18 முதல் 48 வயதுக்குள் இருப்பவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இருப்பினும், மல மாற்று சிகிச்சையைப் பெறுவதற்கு வயது ஒரு தடையாக இருப்பதில்லை.
"நாங்கள் 17 வயதுடையவர்களுக்கும் சிகிச்சை அளித்திருக்கிறோம்; அதேபோல் 96 வயதுடைய முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்திருக்கிறோம்" என்கிறார் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த் துறை நிபுணரும், மல மாற்று சிகிச்சைகளை மேற்கொள்பவருமான சூசி ஹோட்டா.
பெரும்பாலான மல தானத் திட்டங்களில், கொடையாளர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும், நார்ச்சத்து அதிகமுள்ள ஆரோக்கியமான உணவுகளை அவர்கள் உட்கொள்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
பழங்கள், காய்கறிகள் மற்றும் முழுத் தானியங்கள் போன்ற உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. இதனால், குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை அதிகரிக்க உதவுகிறது.
"மலத்தைக் கொடையாக வழங்குபவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர்களைவிட, அனைத்து வகையான உணவுகளையும் உட்கொள்பவர்களின் குடலில் அதிக பன்முகத்தன்மை கொண்ட நுண்ணுயிரிகள் இருப்பதாகத் தெரிகிறது" என்கிறார் கார்ல் கிராஃபோர்ட்.
முடிந்தவரை உடல் பருமன் இல்லாத, ஆரோக்கியமான உடல் எடை கொண்டவர்களையே கொடையாளர்களாகத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்கிறார்கள் சூசி ஹோட்டாவும் சூசன் பௌட்டனெனும்.
இதற்கு உதாரணமாக, முன்பு ஒல்லியான உடல்வாகைக் கொண்டிருந்த 32 வயதுப் பெண் ஒருவர், அதிக உடல் எடை கொண்டிருந்தாலும் ஆரோக்கியமாக இருந்த ஒருவரிடமிருந்து மலத்தைப் பெற்ற பிறகு உடல் பருமன் அடைந்த சம்பவம் ஒன்றையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுதவிர, கொடையாளர்களின் மது அருந்தும் பழக்கம், உடற்பயிற்சி செய்யும் வழக்கம், தூக்கத்தின் தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைமுறை அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
மருந்துகளை எதிர்க்கும் திறன் கொண்ட குடல் பாக்டீரியாக்கள் கொடையாளர்களின் உடலில் தற்செயலாக இருக்கக்கூடும் என்பதால், சில நேரங்களில் அவர்களுக்குக் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.
தற்போது மல மாற்று சிகிச்சைக்காக நேரடியாக மலத்தைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவில்லை என்றாலும், தனது முந்தைய அனுபவத்தின் அடிப்படையில், ஆரம்பகட்டப் பரிசோதனையிலேயே சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார் கார்ல் கிராஃபோர்ட். அவர்களில் பாதிப் பேர் மட்டுமே வழக்கமான மலக் கொடையாளர்களாக இருப்பதற்குத் தேவையான குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையைக் கொண்டிருக்கிறார்கள்.
டொராண்டோவில் சூசி ஹோட்டா மேற்கொண்ட ஆய்வுகளின்படி, மலத்தைத் தானம் செய்ய முன்வருபவர்களில் சுமார் 1.6 சதவீதம் பேர் மட்டுமே ஆரம்பகட்டப் பரிசோதனையில் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களில் வெறும் 0.6 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து மலத்தை தானம் செய்யத் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதிலிருந்து, ஒரு சிறந்த மலக் கொடையாளரைக் கண்டறிவது எவ்வளவு கடினமானது என்பதையும், 'சூப்பர் பூப்பர்கள்' என அழைக்கப்படுபவர்கள் ஏன் மிகவும் அரிதானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், மல வங்கிகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை நடத்தும் விஞ்ஞானிகள், மலத்தைத் தானம் செய்வதில் உள்ள நடைமுறைச் சவால்களையும் அதற்குத் தேவைப்படும் நேரத்தையும் முயற்சியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என எச்சரிக்கின்றனர்.
ஆடம் ஃபேவைப் பொறுத்தவரை, தனக்குத் தெரிந்த ஒரு நோயாளியின் சிகிச்சைக்காக ஒருமுறை மலத்தைத் தானம் செய்தது என்பது விதிவிலக்கான நிகழ்வு. பொதுவாக, மலத்தைத் தானம் செய்வது அவ்வளவு எளிதானதல்ல.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெறும் மிகச் சிலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், தொடர்ந்து மலத்தைத் தானம் செய்யும் திட்டத்தில் பங்கேற்க அழைப்பு வரலாம். இதன்படி, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஆய்வகத்திற்குச் சென்று, மலக் கொடையாளர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்தி மலத்தைச் சேகரித்துத் தர வேண்டும்.
பல மல வங்கிகள், மலத்தைத் தானம் செய்பவர்களுக்குப் பணமும் வழங்குகின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு முறை மலத்தைத் தானம் செய்வதற்கும் 25 முதல் 100 அமெரிக்க டாலர் வரை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மல வங்கியும் தொடர்ந்து தானம் செய்யும் குறிப்பிட்ட கொடையாளர்களைக் கொண்டிருக்க விரும்புகின்றன. ஏனெனில், ஒவ்வொரு முறையும் புதிய கொடையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்வதைவிட, ஏற்கெனவே தகுதி பெற்றவர்களிடமிருந்து தொடர்ந்து மலத்தைப் பெறுவது எளிதானது.
"மலத்தைத் தானம் செய்பவர்களுடன் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு எனக்கு மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது" என்கிறார் சூசி ஹோட்டா. கொடையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் சுதந்திரத்திற்கும் மதிப்பளிப்பதுடன், அவர்களுடன் நம்பிக்கையான உறவை உருவாக்குவதும் அவசியம் என்கிறார் அவர்.
உதாரணமாக, கொடையாளர்களின் வாழ்க்கைமுறையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு அவர்களிடம் அடிக்கடி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. தானமாக பெறப்பட்ட மலத்தை சிகிச்சைக்கு தயார் செய்வது எப்படி?
மல மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளைத் தயாரிப்பதற்கும் பல்வேறு செயல்முறைகள் உள்ளன.
மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான எலிசபெத் ஹோமன், முதலில் சேகரிக்கப்பட்ட மலத்தை அரைத்துக் கூழாக்குகிறார்.
"இதைப் பற்றிக் கேட்கும்போதே இது சற்று அருவருப்பாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்" என்கிறார் அவர்.
அதன்பிறகு, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் மிக நுண்ணிய வலைகளைக் கொண்டு ஐந்து அடுக்குகளாக வடிகட்டி, அதிலுள்ள தேவையற்ற திடப்பொருட்களைப் பிரிக்கிறார். பின்னர், கிடைக்கும் மாதிரியைப் பிரித்து, உப்புக் கரைசலில் கலந்து, உறைய வைக்கிறார்.
இருப்பினும், உறைய வைக்கப்பட்ட மாதிரிகளைக் காட்டிலும், புதிதாகத் தயாரிக்கப்பட்ட மல மாதிரிகளை நோயாளிகளுக்குச் செலுத்தும்போது சிறந்த பலன் கிடைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. சூப்பர் பூப்பர்கள்
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மூலம், ஒரு மல மாதிரி சிகிச்சைக்கு எவ்வளவு சிறப்பாகப் பயன்படும் என்பதை ஓரளவுக்குத்தான் கணிக்க முடிகிறது.
ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளில் தகுதி பெறும் எந்தவொரு கொடையாளரின் மலமும், மீண்டும் மீண்டும் ஏற்படும் சி.டிஃபிசைல் தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதில் ஏறக்குறைய ஒரே மாதிரியான பலனைத் தரக்கூடும்.
ஆனால், மற்ற சில நோய்களைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சில கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் மல மாதிரிகள், மற்றவர்களின் மாதிரிகளைக் காட்டிலும் அதிக அளவில் நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஓர் உதாரணமாக, 2015-ஆம் ஆண்டு அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் என்ற குடல் அழற்சி நோய்க்கு மல மாற்று சிகிச்சையைப் பரிசோதித்த ஆய்வைக் குறிப்பிடலாம்.
இந்த ஆய்வில் பங்கேற்ற 38 பேரில் ஒன்பது பேர் மட்டுமே நோய்த் தணிவு நிலையை அடைந்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த ஒன்பது பேரில் ஏழு பேருக்குச் சிகிச்சை அளிக்க ஒரே கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட மலமே பயன்படுத்தப்பட்டது.
2017-ஆம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்விலும் இதேபோன்ற சுவாரசியமான முடிவு கிடைத்தது.
இந்த ஆய்வில், ஏழு கொடையாளர்கள் வரையிலான மல மாதிரிகள் ஒன்றாகக் கலக்கப்பட்டு, நோயாளிகளுக்குச் செலுத்தப்பட்டன. குறிப்பிட்ட ஒரு கொடையாளரின் மலம் இடம்பெற்ற கலவையைப் பெற்ற நோயாளிகள், அந்தக் கொடையாளரின் மலமில்லாத கலவையைப் பெற்றவர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக நோயிலிருந்து மீண்டதாக ஆய்வில் தெரியவந்தது.
ஆனால், அந்தக் குறிப்பிட்ட கொடையாளரின் மலத்தை மற்றவர்களைவிடச் சிறப்பாகச் செயல்பட வைத்தது எது என்பது இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை.
மலத்தைத் தானமாகப் பெறும்போது, அதிலுள்ள ஒட்டுமொத்த நுண்ணுயிரிகளின் அமைப்பையும் விரிவாக ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறையாக இல்லை. இருப்பினும், 'சூப்பர் பூப்பர்கள்' என அழைக்கப்படும் சிறந்த கொடையாளர்களின் மலத்தில் பல்வேறு வகையான குடல் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, உடலுக்கு நன்மை அளிப்பதாகக் கருதப்படும் ஃபேகலிபாக்டீரியம் ப்ராஸ்னிட்ஸி போன்ற பாக்டீரியாக்கள் இவர்களின் மலத்தில் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பாக்டீரியாக்கள் 'பியூட்டிரேட்' எனப்படும் கொழுப்பு அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது குடலில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதுடன், குடலின் உட்புறச் சுவரைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
இருப்பினும், ஒருவரின் மலத்தை அனைத்து நோய்களுக்கும் பொதுவான சிகிச்சையாகப் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, சி.டிஃபிசைல் தொற்றுக்குச் சிறந்த பலனைத் தரும் ஒரு கொடையாளரின் மலமானது, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி அல்லது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் எந்தப் பலனையும் அளிக்காமல் போகலாம் என்கிறார் ஆடம் ஃபே.
"எந்த வகையான குடல் நுண்ணுயிரிகளின் சேர்க்கை சிறந்த பலனைத் தரும் என்ற ரகசியத்தை இன்னும் கண்டறிய முயன்று கொண்டிருக்கிறோம்" என்கிறார் அவர்.
"நிச்சயமாகச் சிலர் 'சூப்பர் பூப்பர்களாக' இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்கான நம்பகமான பரிசோதனை முறைகள் நம்மிடம் இன்னும் இல்லை. அதற்குக் காரணம், 'சூப்பர் பூப்பர்' என்பதற்கு அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தெளிவான வரையறை இதுவரை உருவாக்கப்படவில்லை" என்கிறார் எலிசபெத் ஹோமன்.
மிகச் சிறந்த மலத்தைத் தேடுவதைக் காட்டிலும், ஒவ்வொரு நோயாளிக்கும் பொருத்தமான மலக் கொடையாளரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த அணுகுமுறையாக இருக்கலாம் என்று வளர்ந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்காக, கொடையாளர்கள் மற்றும் நோயாளிகளை அவர்களது குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதன் மூலம், ஒவ்வொரு நோயாளியின் குடல் நுண்ணுயிரிகளின் அமைப்புக்கும் பொருத்தமான கொடையாளரைத் தேர்ந்தெடுத்து, சிகிச்சையின் வெற்றியை அதிகரிக்க முடியும் என நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
4. மலத்திலிருந்து மாத்திரைகள் வரை: சிகிச்சையின் அடுத்த கட்டம்
மிகச் சிறந்த 'சூப்பர் பூப்பர்களிடமிருந்து' பெறப்படும் மலத்தைக் கொண்டு சிகிச்சை அளித்தாலும், மல மாற்று சிகிச்சை என்பது இன்னும் முழுமையாகக் கணிக்கக்கூடிய அறிவியல் முறையாக மாறவில்லை.
"மல மாற்று சிகிச்சையின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாத தன்மையே எனக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது" என்கிறார் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாரா பென்டர்கியா.
"இந்தச் சிகிச்சையில் ஒரு முழுமையான நுண்ணுயிரிக் கூட்டத்தையே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுகிறோம். எனவே, இதில் கவனிக்க வேண்டிய காரணிகள் ஏராளம். வெவ்வேறு கொடையாளர்கள், சிகிச்சைக்காகத் தயாரிக்கப்படும் மாதிரிகள் மற்றும் அவற்றைப் பெறும் நோயாளிகள் ஆகியவற்றைப் பொறுத்து குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் மாற்றங்களும் வேறுபடலாம்" என்கிறார் அவர்.
இதற்கிடையில், மல மாற்று சிகிச்சையானது எதிர்காலத்தில் இன்னும் துல்லியமான, தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையலாம் என்கிறார் கார்ல் கிராஃபோர்ட்.
இதற்கு உதாரணமாக, ஃபெர்ரிங் ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெபியோட்டா' என்ற எனிமா மருந்தைக் குறிப்பிடலாம். இது நன்மை பயக்கும் குடல் நுண்ணுயிரிகள் நிறைந்த கொடையாளர்களின் மலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அதேபோல், செரெஸ் தெரபியூட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'வோவ்ஸ்ட்' என்ற மாத்திரையில், மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பாக்டீரியாக்களின் வித்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்த இரண்டு தயாரிப்புகளும், மீண்டும் மீண்டும் ஏற்படும் சி.டிஃபிசைல் தொற்றைத் தடுப்பதற்கான சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
எதிர்காலத்தில், சி.டிஃபிசைல் தொற்றுக்கான சிகிச்சையில், சிறந்த மலக் கொடையாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை ஆய்வகங்களில் பெருமளவில் வளர்த்து, அவற்றைக் கொண்ட மாத்திரைகளை உருவாக்கும் முறை முக்கியத்துவம் பெறலாம் என்கிறார் கிராஃபோர்ட்.
"குடல் நுண்ணுயிரிகளை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை முறைகள் எதிர்கால மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று நான் நம்புகிறேன்" என்கிறார் அவர்.
இருப்பினும், நவீன வாழ்க்கைமுறை நமது குடல் நுண்ணுயிரிகளின் இயல்பான அமைப்பை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பது குறித்து கிராஃபோர்ட் கவலை தெரிவிக்கிறார்.
குறிப்பாக, அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, குடலில் வாழும் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மையைக் குறைக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"நமது குடலில் வாழும் பல்வேறு நுண்ணுயிரிகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் தனித்துவமான செயல்பாடுகளையும் நாம் இழந்துவிடுவோமோ என்று கவலைப்படுகிறேன். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் பல்வேறு திறன்கள் இந்த நுண்ணுயிரிகளிடம் உள்ளன. அவற்றை நாம் இழந்துவிடக் கூடாது" என்கிறார் கிராஃபோர்ட்.
நமது குடலில் மறைந்திருக்கும் இந்த மருத்துவப் பயன்பாட்டுத் திறனை, வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும் மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களுடன் அவர் ஒப்பிடுகிறார்.
"வெப்பமண்டல மழைக்காடுகளில் ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்கள் காணப்படுகின்றன. அதேபோல், நமது குடலில் வாழும் நுண்ணுயிரிகளின் சமூகமும் மிகப் பரந்தது. அவையும் நமக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கும் ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை" என்கிறார் அவர்.
மனிதக் குடலுக்குள் வாழும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், எதிர்கால மருத்துவத்துக்கான மிகப்பெரிய வளமாக இருக்கக்கூடும். அவற்றைப் பாதுகாப்பதும், அவற்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதும் எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொது விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாகவோ, மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































