காதலருடன் சேர்ந்து வருங்கால கணவரை கோட்டையில் இருந்து தள்ளிவிட்டு கொன்றதாக பெண் கைது - என்ன நடந்தது?

கேதனுக்கும் சியாவுக்கும் பிப்ரவரி மாதமே நிச்சயம் செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, புனேயின் மாவல் தாலுகாவில் உள்ள கஹுஞ்சேவைச் சேர்ந்த கேதன் அகர்வாலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு புனே மார்க்கெட் யார்டு பகுதியைச் சேர்ந்த சியா கோயல் என்ற இளம் பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞரை லோஹாகட் கோட்டையிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு விபத்து போல சித்தரிப்பதற்காக , இளம் பெண்ணும் அவரது காதலரும் சேர்ந்து, அந்தப் பெண்ணின் வருங்கால கணவரை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் பெயர் கேதன் அகர்வால்.

சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி ஆகியோரை கொலை குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.

அவரது வருங்கால கணவரும் சியாவும் லோஹாகட் பகுதிக்கு நடைப்பயிற்சி சென்றிருந்தனர். அவர் அங்கு தவறி விழுந்து இறந்ததாக அந்த இளம் பெண் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் விசாரணையின் போது, அந்த இளம் பெண்ணின் காதலர் பற்றிய தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதிலிருந்து, அவர்களுக்குள் பழைய காதல் விவகாரம் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது, அதனைத் தொடர்ந்து, அவர்கள் இதனை கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் காவல்துறை துல்லியமாக என்ன கூறியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

சந்தேகம் எழுந்ததையடுத்து, காவல்துறை விசாரணை நடத்தியது, அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவருமே குற்றத்தை ஒப்புக்கொண்டதாக, புனே ஊரகக் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பிபிசி மராத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்களைத் தொடர்பு கொள்ள முயன்றது.

அவர்களின் பதில் இன்னும் பெறப்படவில்லை. பதில் கிடைத்தவுடன் இதுகுறித்த தகவல் புதுப்பிக்கப்படும்.

அந்த இளம் பெண் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லையா?

புனேயின் மாவல் தாலுகாவில் உள்ள கஹுஞ்சேவைச் சேர்ந்த கேதன் அகர்வாலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு புனே மார்க்கெட் யார்டு பகுதியைச் சேர்ந்த சியா கோயல் என்ற இளம் பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த மூன்று குடும்பங்களுக்கும் மார்க்கெட் யார்டு பகுதியில் வெவ்வேறு தொழில்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேதனுக்கும் சியாவுக்கும் பிப்ரவரி மாதமே நிச்சயம் செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது.

ஆனால் விசாரணையின் போது, திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பே சியாவுக்கு கொண்ட்வாவைச் சேர்ந்த சேத்தன் சௌத்ரி என்ற இளைஞருடன் காதல் இருந்ததாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

புனேயின் மாவல் தாலுகாவில் உள்ள கஹுஞ்சேவைச் சேர்ந்த கேதன் அகர்வாலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு புனே மார்க்கெட் யார்டு பகுதியைச் சேர்ந்த சியா கோயல் என்ற இளம் பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது.
படக்குறிப்பு, கேதனுக்கும் சியாவுக்கும் பிப்ரவரி மாதமே நிச்சயம் செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது.

சேத்தனுடன் காதலில் இருந்ததால், கேதனுடன் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்துக்கு சியா உடன்படவில்லை. எனவே, திருமணத்தைத் தவிர்ப்பதற்காக கேதனைக் கொலை செய்ய சியாவும் சேத்தனும் முடிவு செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தக் கொலையை ஒரு விபத்து போலக் காட்டுவதற்காக, லோஹாகட் கோட்டையிலிருந்து கீழே தள்ளி கேதனைக் கொலை செய்ய இருவரும் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

என்ன நடந்தது ?

கேதனுக்கும் சியாவுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.

எனவே, போலீஸாரின் கூற்றுப்படி, சியா, சேத்தனுடன் கலந்தாலோசித்து, ஜூன் 18 ஆம் தேதி கேதனை லோஹாகட் கோட்டைக்கு நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கில் கொடுத்த தகவலின்படி, சியாவும் கேதனும் முதலில் லோஹாகட் கோட்டைக்குச் சென்றிருந்தனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, சியாவின் காதலன் சேத்தன் அவர்களைப் பின்தொடர்ந்து அங்கு சென்றார். அங்கு கேதனை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டார், இதனால் அவர் கோட்டையின் மேற்குப் பகுதியில் விழுந்து காயமடைந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கில் கொடுத்த தகவலின்படி, சியாவும் கேதனும் முதலில் லோஹாகட் கோட்டைக்குச் சென்றிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விசாரணையின் போது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. (சித்தரிப்புப் படம் )

பின்னர் சியா கூச்சலிடவே, அங்கு இருந்த பாதுகாப்பு காவலர்கள் உதவிக்கு வந்தனர். அந்த நேரத்தில், கோட்டையின் மேற்குப் பகுதியில் உள்ள புதர்களில் கேதனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவத்துக்குப் பிறகு சியா கோயல் காவல்துறையிடம், "கோட்டையைச் சுற்றி நடந்து கொண்டிருந்தபோது, கேதனின் கால் வழுக்கி அவர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டார்" என்று கூறினார்.

அதனால் தொடக்கத்தில், இந்த வழக்கை போலீசார் திடீர் மரணம் என்ற வகையில் பதிவு செய்திருந்தனர்.

சந்தேகத்துக்கிடமான தடயங்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த வழக்கில் காவல்துறை திடீர் மரணம் எனப் பதிவு செய்து, விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலங்களைப் பெறத் தொடங்கியபோது, விசாரணையில் சில சந்தேகத்துக்கிடமான தடயங்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

விசாரணையின் போது, கடந்த சில நாட்களாக கேதனுக்கும் சியாவுக்கும் இடையே ஒரு சில வாக்குவாதங்கள் நடந்ததாக சில உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் ரகசிய விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, சியாவும் சேத்தனும் காதலில் இருந்தது குறித்து தெரியவந்தது. அதன்பிறகு, இந்த வழக்கை விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, சியா கோயல், சேத்தன் சௌத்ரி என்ற இளைஞருடன் காதலில் இருந்தது வெளிப்பட்டது.

இதற்கிடையில், சியாவும் அவரது காதலன் சேத்தனும் சேர்ந்து கேதனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி கேதனின் தந்தை விஷால் அகர்வால் புகார் அளித்தார்.

அதன் பிறகு, காவல்துறை இந்த வழக்கில் தொழில்நுட்ப விசாரணை நடத்தியது. இச்சம்பவம் நடந்த நாளில் லோஹாகட் கோட்டை பகுதியில் சேத்தன் சௌத்ரி இருந்தது அதில் தெரியவந்தது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, உள்ளூர் குற்றப்பிரிவு குழுவினர் சேத்தன் சௌத்ரியைத் தேடி அவரைக் கைது செய்தனர்.

பின்னர் விசாரணையின் போது, இந்தக் கொலையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

கொலைக்குப் பிறகு, சியா அதனை ஒரு விபத்து போலக் காட்ட முயன்றதாக காவல்துறை கூறுகிறது.

முன்னதாக, கேதன் கால் வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதாக அவர் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், விசாரணையின் தொழில்நுட்ப ஆதாரங்கள், சம்பவ இடத்தின் சூழல்கள் மற்றும் குற்றவாளிகளின் நடமாட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, காவல்துறை இந்த சதித்திட்டத்தை கண்டுபிடித்தது.

போலீஸாரின் கூற்றுப்படி, கேதனைத் திருமணம் செய்ய சியா சம்மதிக்கவில்லை.

தங்களது காதல் உறவுக்கு கேதன் ஒரு இடையூறாக இருப்பதாக சியாவும் சேத்தனும் கருதினர், அதனால் அவர்கள் அவரைக் கொலை செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகக் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கில்லும் தெரிவித்துள்ளார்.

இறந்த இளைஞரின் தாய் என்ன கூறினார்?

இறந்த இளைஞரின் தாயான பாக்கி அகர்வால் ஊடகங்களிடம் இது குறித்துப் பேசினார். அவர் கூறியதாவது: "இன்று என் மகன் நம்மிடையே இல்லை. இதற்கு சியாவும் அவளது காதலனுமே முழுப் பொறுப்பு. நான் சியாவை என் மருமகளாகவே கருதினேன். அவள் எனக்குப் பெரியதொரு அச்சுறுத்தலை விடுத்தாள்; பொய்களையும் கூறினாள். இப்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அவள் எங்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று முறை வந்திருக்கிறாள்."

இறந்த இளைஞரின் தாயான பாக்கி அகர்வால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இறந்த இளைஞரின் தாயான பாக்கி அகர்வால்

"அவள் ஒரு பூஜையின்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். எங்கள் வீட்டுப் பிறந்தநாள் விழாவுக்கும் வந்திருந்தாள்; அதுமட்டுமின்றி, இரவு உணவுக்காகவும் இரண்டு மூன்று முறை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாள்."

"நான் அவளைப் பலமுறை சந்தித்திருக்கிறேன், நாங்கள் பலமுறை ஒன்றாக ஷாப்பிங் கூடச் சென்றிருக்கிறோம். சியா இத்தகைய குணம் கொண்டவள் என்று நாங்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. அவளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்," என்று பாக்கி அகர்வால் கூறினார்.

"ஏன் இப்படியொரு முடிவெடுக்க வேண்டும்?"

கேதனின் தந்தை விஷால் அகர்வால் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "அவர்களது (சியா கோயல் மற்றும் கேதன் அகர்வால்) நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அவர்கள் ஜூன் 6-ஆம் தேதி பாலிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்; நால்வரும் ஒன்றாகப் பயணம் செய்யவிருந்த நிலையில், கேதனின் பாஸ்போர்ட் மட்டும் திருடப்பட்டது. இதனால் அவரால் பயணிக்க முடியாமல் போனதுடன், விமான நிலையத்திலிருந்து திரும்ப வேண்டிய சூழலும் ஏற்பட்டது."

"சேதன் சவுத்ரி இருசக்கர வாகனத்தில் லோஹாகட் கோட்டைக்கு வந்தார். அவர்கள் இருவரும் (சேதன் சவுத்ரி மற்றும் சியா கோயல்) ஒன்றாக மேலே சென்றனர்; அங்கு கேதனை ஒரு பொருளால் தாக்கி, மேலிருந்து கீழே தள்ளிவிட்டனர்," என்று விஷால் அகர்வால் கூறினார்.

விஷால் அகர்வால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, விஷால் அகர்வால்

மேலும் அவர் கூறுகையில், "உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டார்; அவர் உடனடியாக எங்களுக்கு விவரங்களைத் தெரிவித்ததுடன், அந்த இருவரையும் கைது செய்தார். சேதன் சவுத்ரி நேற்று இரவும், சியா இன்று காலையும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்."

"அவளுக்குத் திருமணம் செய்ய விருப்பம் இல்லையென்றால், அவள் அதைத் தவிர்த்திருக்கலாம்; நாங்கள் உடனடியாகத் திருமணத்தை ரத்து செய்திருப்போம். அவர்கள் ஏன் இவ்வளவு தீவிரமான முடிவை எடுத்தார்கள்? அவர்களின் மனநிலைதான் என்ன?"

"ஒருவரின் 26 வயது மகனைக் கொல்லும் அளவுக்கு அவர்களின் மனநிலை மிகவும் கொடூரமானதாக இருக்கிறது... இத்தகைய கொடூரமான மனநிலையைச் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சிந்தனை எங்கிருந்து வருகிறது? அவர்களின் குடும்பத்திலிருந்தா அல்லது வளர்ப்பிலிருந்தா?..." என்று கேள்வி எழுப்பிய அவர், இவ்வழக்கை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்குக் கூடிய விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு