உலகின் பாதுகாப்பான 5 நாடுகளில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு பார்வை

2026 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளில் வாழ்வது எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லின்ட்சே கேலோவே
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இரண்டாம் உலகப் போருக்கு பின் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது உலகில் அதிகமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், ஐஸ்லாந்து, நியூசிலாந்து மற்றும் பிற சில நாடுகளின் குடியிருப்பவர்கள் அவர்களின் நாடுகள் ஏன் இவ்வளவு அமைதியானவை என்பதைக் கூறுகின்றனர்.

சமீபத்திய உலக அமைதி குறியீட்டின்படி, உலகம் கடந்த ஆண்டைவிட குறைவான அமைதியைக் கொண்டதாக மாறியுள்ளது. மொத்தத்தில், 99 நாடுகளில் அமைதித் தன்மை குறைந்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய அமைதி தொடர்ந்து 12-ஆவது ஆண்டாக சரிவடைந்துள்ளது.

எனினும், மோசமடைந்து வரும் சூழ்நிலைக்கு மத்தியிலும், ஒரு சிறிய அளவிலான நாடுகள் தொடர்ந்து தனித்து நிற்கின்றன.

"இந்த துயரத்திற்குரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், தரவரிசையின் உச்சியில் உள்ள நாடுகளை அது உண்மையில் பாதிக்கவில்லை," என்று 2007-ஆம் ஆண்டு இந்த குறியீட்டை உருவாக்கிய பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் ஸ்டீவ் கில்லிலியா கூறினார்.

இந்த குறியீடு 163 நாடுகளை 23 அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறது. அதில் ராணுவச் செலவு, நடைபெற்று வரும் மோதல்கள், கொலை விகிதங்கள், பாதுகாப்பு குறித்த மக்களின் உணர்வுகள் போன்றவை அடங்கும். சிறந்த தரவரிசையைக் பெறும் நாடுகளில் பொதுவாக வன்முறை குறைவாக இருக்கும். திறம்பட செயல்படும் அமைப்புகள், உயர்ந்த சமூக நம்பிக்கை, அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகள் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் காணப்படும்.

உலகின் மிகவும் பாதுகாப்பான ஐந்து நாடுகளில் வசிக்கும் மக்களிடம், அன்றாட வாழ்க்கையில் அந்த பாதுகாப்பு உணர்வு எப்படிப்பட்டது, அந்த அமைதியை நிலைநிறுத்த உதவும் காரணிகள் என்ன? மேலும் பயணிகள் அந்த அமைதியையும் நிலைத்தன்மையையும் எவ்வாறு அனுபவிக்க முடியும் என்பது குறித்து கேட்டறிந்தோம்.

ஐஸ்லாந்தின் அற்புதமான இயற்கை நிலப்பரப்புகளும் குறைந்த மக்கள் தொகையும் அதன் உயர்தர வாழ்க்கைத் தரத்திற்குப் பங்களிக்கின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐஸ்லாந்தின் அற்புதமான இயற்கை நிலப்பரப்புகளும் குறைந்த மக்கள் தொகையும் அதன் உயர்தர வாழ்க்கைத் தரத்திற்குப் பங்களிக்கின்றன

1. ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து 2008-ஆம் ஆண்டு முதல் உலக அமைதி குறியீட்டில் முதலிடத்தில் உள்ளதுடன், தொடர்ச்சியாக 19-ஆவது ஆண்டாக உலகின் மிகவும் பாதுகாப்பான நாடாக நீடிக்கிறது.

2026-ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அமைதி நிலை 2 சதவீதம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, வன்முறையாக மாறிய போராட்டங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தனிநபர் பாதுகாப்பு, குறைந்த அளவிலான மோதல்கள் மற்றும் மிகக் குறைந்த ராணுவமயமாக்கல் ஆகிய அம்சங்களில் ஐஸ்லாந்து தொடர்ந்து உயர்ந்த இடத்தைப் பெற்று வருகிறது.

"ஐஸ்லாந்தில் அமைதித் தன்மை எங்களைச் சுற்றியுள்ள இயற்கையில் எங்கும் உள்ளது. ஆனால் அது நெருக்கமான சமூகங்களின் வேரூன்றி நாங்கள் உணர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு தேர்வும் ஆகும்," என்று விசிட் ஐஸ்லாந்து அமைப்பின் தலைவர் ஒட்னி அர்னார்ஸ்டோட்டிர் கூறினார்.

பாலின சமத்துவம் உள்ளிட்ட சமநிலைக்கான ஆழமான அர்ப்பணிப்பு, வலுவான பொதுச் சேவைகள் மற்றும் பரவலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு ஆகியவையே இதற்குக் காரணம் என அவர் நம்புகிறார்.

அந்த அர்ப்பணிப்பு கொள்கைகளைத் தாண்டி ஆழமாகச் செல்கிறது. வலுவான சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்புணர்வை அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"இந்த அமைதியான வாழ்க்கை முறையை அனுபவிக்க நாங்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதை நன்றாக உணர்கிறோம்," என்றார் அர்னார்ஸ்டோட்டிர்.

"இது திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது."

ஐஸ்லாந்தின் தொலைதூர அமைவிடமும் ஒரு பங்கு வகிக்கிறது.

"ஐஸ்லாந்தின் புவியியல் தனிமை காரணமாக, அது உலகளாவிய பதற்றங்களில் குறைவாகவே சிக்கிக்கொள்கிறது," என்கிறார் ஹோட்டல் ரங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் எய்ருன் அனிதா கில்பாடோட்டிர்.

"பரந்த திறந்த நிலப்பரப்புகள், மலைகள், தூய்மையான காற்று மற்றும் தாராளமான நன்னீர் ஆகியவை இங்குள்ள வாழ்க்கைத் தரத்தில் மையப் பங்கு வகிக்கின்றன."

ஐஸ்லாந்தின் அமைதியான வாழ்க்கை முறையை உணர விரும்புவோர், முக்கிய சுற்றுலாத் தலங்களை விரைவாகச் சுற்றிப்பார்ப்பதற்குப் பதிலாக மெதுவாகப் பயணித்து இயற்கையில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று அர்னார்ஸ்டாட்டிர் பரிந்துரைக்கிறார்.

குறிப்பாக, ஐஸ்லாந்தின் புகழ்பெற்ற புவிவெப்ப நீர்குளியல் கலாசாரத்தை அனுபவிப்பது அவசியம் என அவர் கூறுகிறார். ஆடம்பர ஸ்பாக்கள் முதல் உள்ளூர் மக்கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் நீச்சல் குளங்கள் வரை, ஐஸ்லாந்தில் 120-க்கும் மேற்பட்ட புவிவெப்ப நீர்குளங்கள் உள்ளன.

"ஐஸ்லாந்தின் அமைதியை அனுபவிப்பது நல்வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது," என்கிறார் அர்னார்ஸ்டாட்டிர்.

"புவிவெப்பக் குளியல் கலாசாரம், இயற்கையில் நேரத்தைச் செலவிடுவது அல்லது வெளி உலகத் தொடர்பிலிருந்து விலகியிருக்கச் சிறிது இடைவெளி கிடைப்பது என எதுவாகவும் இருக்கலாம்."

அதேபோல், பிரபலமான சுற்றுலாத் தலங்களைத் தாண்டி நாட்டின் பிற பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

ஐஸ்லாந்து முழுவதும் பரவியுள்ள 220-க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களில், தலைநகரில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் வெஸ்ட்ஃபியோர்ட்ஸ் பகுதியில் உள்ள ஐஸ்லாந்து கடல் அரக்கன் அருங்காட்சியகம் ஆகியவற்றை அவர் குறிப்பிடுகிறார்.

"எங்கள் வித்தியாசமான அருங்காட்சியகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று அவர் கூறுகிறார். "அவை உள்ளூர் கதைகள் மற்றும் பாரம்பரியங்களைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், மக்களை நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணிக்கவும் ஊக்குவிக்கின்றன."

இயற்கையை எளிதாக அணுகும் வசதி நியூசிலாந்தின் நகரங்களின் வாழ்க்கையை வரையறுக்கும் அம்சமாகும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இயற்கையை எளிதாக அணுகும் வசதி நியூசிலாந்தின் நகரங்களின் வாழ்க்கையை வரையறுக்கும் அம்சமாகும்

2. நியூசிலாந்து

2025-ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆசியா–பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் பாதுகாப்பான நாடாகத் திகழும் நியூசிலாந்து, அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மோதல்களின் அளவிலும் மிகக் குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது.

இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக ஆயுத இறக்குமதி குறைந்திருப்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த ராணுவமயமாக்கல் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் நியூசிலாந்து தொடர்ந்து திகழ்கிறது.

இந்த அமைதிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் புவியியல் அமைப்பாகும்.

"எல்லா இடங்களிலிருந்தும் இவ்வளவு தொலைவில் இருப்பதனால், பிற நாடுகளை மோதலுக்குள் இழுக்கும் புவிசார் அரசியல் சிக்கல்களை நியூசிலாந்து பெருமளவில் தவிர்த்துவிட்டது என்று அர்த்தம்," என்கிறார் நியூசிலாந்து குடிமகனும் என்இசட் கோல்டன் விசா நிறுவனருமான வார்விக் உட்லி.

ஆனால், இதற்கு நியூசிலாந்தின் கலாசாரமும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் கருதுகிறார்.

"இங்குள்ள மக்கள் பொதுவாக அமைதியானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

நியூசிலாந்தில் பாதுகாப்பு என்பது அன்றாட வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாகவே உள்ளது.

"பெரும்பாலான மக்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. உண்மையில், அதுவே பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாததற்கான மிகச் சிறந்த அடையாளம்," என்று உட்லி கூறுகிறார்.

"துப்பாக்கிகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப் பிறகு ஆயுதச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டன," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவியும் கவனமும் செலுத்துகிறார்கள்.''

அதன் குறைந்த மக்கள் தொகை இயற்கையை எளிதாக அணுக முடியும் என்பதையும் குறிக்கிறது.

"நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து மலைகள், கடற்கரைகள் மற்றும் காட்டுப்பகுதி நடைபாதைகள் அனைத்தும் அடையும் தூரத்தில் உள்ளன," என்றார் உட்லி.

"சில பெரிய மற்றும் பரபரப்பான நாடுகளைப் போல வாழ்க்கை எப்போதும் உங்களைத் துரத்திக்கொண்டு ஓடுவது போன்ற உணர்வை இங்கு ஏற்படுத்தாது," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சமூக ஒருங்கிணைப்பையும் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் சுவிஸ் வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமூக ஒருங்கிணைப்பையும் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் சுவிஸ் வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்

3. சுவிட்சர்லாந்து

கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து, 2026-ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறைந்த குற்ற விகிதங்களும், நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் ராணுவ நடுநிலை கொள்கையும், உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக அதை நிலைநிறுத்த உதவியுள்ளன.

"இங்கு மக்கள் ஒருவருக்கொருவர் வழிவிடத் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது," என்கிறார் ஜெனீவாவில் வசிக்கும் நிர்வாகப் பயிற்சியாளரும் எழுத்தாளருமான கொர்னேலியா சோ.

"அது ஒரு நம்பிக்கை உணர்வை உருவாக்குகிறது. பொதுவாக மக்கள் சரியானதைச் செய்வார்கள், அன்றாட வாழ்க்கை இயல்பாகவும் ஒழுங்காகவும் செயல்படும் என்ற நம்பிக்கையை அது அளிக்கிறது," என்றும் அவர் கூறுகிறார்.

அந்த நம்பிக்கை, அன்றாட வாழ்க்கையின் சிறிய நிகழ்வுகளில்கூட வெளிப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் தனது பணப்பையை இரண்டு முறை தவறவிட்டதை சோ நினைவு கூர்கிறார்.

முதல் முறை, தெரியாத ஒருவர் சில நாட்களுக்குள் அவரது பணப்பையை அஞ்சல் மூலம் திருப்பி அனுப்பியிருந்தார். அதில் இருந்த பணமும் அப்படியே இருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு ரயில் நிலையத்தில் அவர் தனது வங்கிக் கார்டை தவறவிட்டார். அதை கண்டெடுத்த நபர், மோசடியிலிருந்து அவரைப் பாதுகாக்க நேரடியாக வங்கியைத் தொடர்புகொண்டு கார்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார்.

இவை சிறிய சம்பவங்களாகத் தோன்றலாம். ஆனால் அவை நீண்டகால நினைவுகளை உருவாக்குகின்றன. அதைவிட முக்கியமாக, அளவிட முடியாத பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன," என்று அவர் கூறுகிறார்.

சுவிட்சர்லாந்தின் அமைதியான வாழ்க்கை முறையை உணர விரும்பும் பயணிகள், அந்நாட்டின் வலுவான வேலை – வாழ்க்கை சமநிலையை அனுபவிக்க வேண்டும் என்று சோ பரிந்துரைக்கிறார்.

உதாரணமாக, பல நிறுவனங்கள் மதிய நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரம் செயல்படாமல் இருக்கும்.

அதேபோல், நாட்டின் நான்கு தேசிய மொழிகளையும், அவற்றுடன் தொடர்புடைய தனித்துவமான பிராந்திய அடையாளங்களையும் புரிந்துகொள்வதும் பயனுள்ளதாக இருக்கும்.

"எல்லா விஷயங்களிலும் ஒரே கருத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை; இருந்தாலும் சமூகங்கள் வலுவாக இருக்க முடியும்," என்று சோ கூறுகிறார்.

"வேறுபாடுகளைத் தாண்டி சமரசங்களையும் நடைமுறைத் தீர்வுகளையும் தேடும் ஒரு பண்பை நான் இங்கு கவனித்துள்ளேன். அதுவே மக்களை ஒன்றாக முன்னேறச் செய்கிறது."

"ஒருவேளை அமைதி என்பதன் உண்மையான பொருள் இதுதான். வேறுபாடுகள் இல்லாத நிலை அல்ல; அவற்றுடன் இணைந்து நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புதான் அமைதி," என்று அவர் கூறுகிறார்.

சுலோவேனியர்கள் இயற்கை, வேலை-வாழ்க்கைச் சமநிலை மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுலோவேனியர்கள் இயற்கை, வேலை-வாழ்க்கைச் சமநிலை மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்

4. ஸ்லோவேனியா

உலக அமைதி குறியீட்டின் முதல் ஐந்து இடங்களுக்குள் முதல்முறையாக நுழைந்துள்ள ஸ்லோவேனியா, குறைந்த ராணுவச் செலவினம் மற்றும் உயர்ந்த பாதுகாப்பு நிலை காரணமாக இந்தச் சாதனையைப் பெற்றுள்ளது.

"ஸ்லோவேனியர்கள் சமூக ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். மேலும், இயற்கைச் சூழலில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அதுவே எங்களிடம் ஒரு அமைதியான மற்றும் நிலையான மனநிலையை உருவாக்குகிறது என்று நான் நம்புகிறேன்," என்று லியூப்லியானாவில் வசிக்கும் இன்ட்ரெபிட் டிராவல் நிறுவனத்தின் கிழக்கு ஐரோப்பிய செயல்பாடுகள் மேலாளரான ஜெர்னேயா ஸ்வெர் கூறுகிறார்.

வார இறுதிகளில் பெரும்பாலான நேரத்தை வெளிப்புற இயற்கைச் சூழலிலேயே செலவிடுவதாக அவர் கூறுகிறார். நடைபயணம், சைக்கிள் பயணம், பனிச்சறுக்கு மற்றும் நண்பர்கள், குடும்பத்தினருடன் கூடுவது போன்றவை அவரது வழக்கமான செயல்பாடுகளாகும்.

வேலை–வாழ்க்கை சமநிலைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், மனித உறவுகளுக்கான நேரத்தை அதிகரிக்கிறது என்றும், அதுவே சமூகத்துடன் இணைந்திருக்கும் உணர்வை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கருதுகிறார்.

"உலகின் பல பகுதிகளில் தற்போது மோதல்களும் நிச்சயமற்ற சூழல்களும் நிலவி வரும் நிலையில், ஸ்லோவேனியாவை என் தாயகமாகக் கொண்டிருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன்," என்று ஸ்வெர் கூறுகிறார்.

"அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பாகவும் பயமின்றியும் வாழ முடிவது போன்ற சிறிய விஷயங்களுக்குக்கூட இன்று நான் அதிக மதிப்பளிக்கிறேன்," என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்லோவேனியாவின் முழுமையான அனுபவத்தை உணர விரும்பும் பயணிகள், தலைநகர் லியூப்லியானாவில் ஒரு வார இறுதி மட்டும் செலவழித்து திரும்பிவிடக் கூடாது என்று ஸ்வெர் பரிந்துரைக்கிறார்.

"குறைந்தது ஒரு வாரமாவது தங்குங்கள்," என்று அவர் கூறுகிறார்.

"ஸ்லோவேனியாவில் நீங்கள் எதைச் செய்தாலும், மக்களின் அன்பான விருந்தோம்பல், அற்புதமான இயற்கைக் காட்சிகள் மற்றும் கண்கவர் நிலப்பரப்புகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்," என்று ஸ்வெர் கூறுகிறார்.

"அதோடு, சுவையான உணவுகளையும் மறக்க முடியாது," என்றும் அவர் சிரித்தபடி கூறுகிறார்.

அயர்லாந்தின் அமைதி உணர்வு பெரும்பாலும் அதன் நடுநிலைமை மற்றும் விருந்தோம்பல் கலாசாரம் ஆகிய இரண்டோடும் இணைக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அயர்லாந்தின் அமைதி உணர்வு பெரும்பாலும் அதன் நடுநிலைமை மற்றும் விருந்தோம்பல் கலாசாரம் ஆகிய இரண்டோடும் இணைக்கப்பட்டுள்ளது

5. அயர்லாந்து

ஐந்தாவது இடத்தில் உள்ள அயர்லாந்து, குறைந்த அளவிலான வன்முறை மற்றும் சர்வதேச மோதல்களில் குறைந்த ஈடுபாடு ஆகியவற்றிற்காக அதிக புள்ளிகளைப் பெறுகிறது.

கொந்தளிப்பான கடந்த காலத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நாடாக இருந்தாலும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பையும் அமைதியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.

"ஒரு தேசமாக அயர்லாந்து சந்தித்த வரலாற்று அனுபவங்கள், பாகுபாடுகளின் ஆபத்துகளையும் மற்றவர்களிடம் தாராள மனப்பான்மையுடனும் அன்புடனும் நடந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு ஆழமாக உணர்த்தியுள்ளன," என்கிறார் மேற்கு கார்க்கில் உள்ள 'நேட்டிவ்' என்ற ஹோட்டலின் நிறுவனர் டிடி ரோனன்.

அயர்லாந்தின் நடுநிலை வெளிநாட்டு கொள்கையும் அதன் அமைதியான தன்மைக்கு ஒரு சர்வதேச பரிமாணத்தை வழங்குகிறது. அந்நாடு வெளிநாட்டு போர்களிலோ ராணுவக் கூட்டணிகளிலோ பொதுவாக இணையாது.

"உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மையும் பதற்றமும் அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில், அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவே தொலைவில் இருக்கும் ஒரு தீவில், சிறந்த இசை, அழகான நடைபாதைகள் மற்றும் நல்ல புத்தகங்களுடன் வாழ்வதில் ஒரு ஆறுதல் உணர்வு இருக்கிறது," என்று ரோனன் கூறுகிறார்.

"இன்று உலகின் பல பகுதிகளில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அநீதிகளையும் பார்க்கும்போது, எங்கள் சொந்த தேசிய வரலாற்றை நினைவுகூர்கிறோம். அதனால் இந்த அமைதியான வாழ்க்கை ஒரு சிறப்புரிமை என்பதை நாங்கள் நன்றாக உணர்கிறோம்," என்றும் அவர் கூறுகிறார்.

அயர்லாந்தின் அமைதியான வாழ்க்கை முறையை உணர விரும்பும் பயணிகளுக்கு, இயற்கையே சிறந்த வழி என்று ரோனன் பரிந்துரைக்கிறார்.

அது ஒரு காட்டுப்பாதை நடைபயணமாக இருக்கலாம்; அல்லது கடற்கரைப் பகுதிகளை ஆராயும் சாகசமாக இருக்கலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்கு, காடுகள் அல்லது கடற்கரை சாகசங்கள் போன்ற இயற்கையின் வழியே அயர்லாந்தின் அமைதியான பகுதியை அடைவதற்கு மிக வேகமான வழியாகும். கேப் கிளியர் தீவுக்கான படகுச் சவாரி, த்ரீ காசில் ஹெட் இடிபாடுகள் அல்லது கிளாண்டோர் அருகே உள்ள த்ரோம்பெக் கல் வட்டம் ஆகியவற்றைப் பார்வையிட ரோனன் பரிந்துரைக்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு