'தடுப்பணை தூண்களில் குதித்து பள்ளி சென்ற மாணவர்கள்' - வைரல் வீடியோவுக்கு பிறகு என்ன நடந்தது?

பட மூலாதாரம், Naved Jafri
- எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பணையின் தூண்களை தாண்டி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஆபத்தான முறையில் குதித்து கடக்கும் காணொளி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.
பாலோஹ் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தடுப்பணையை கடக்கும் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை உடனடியாக நடவடிக்கையில் இறங்கின.
இதையடுத்து, தடுப்பணையில் இரும்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கிராமத்திலேயே 9 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வியை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேல்நிலைப் பள்ளிக் கல்விக்காக ஆற்றைக் கடக்க வேண்டியிருந்த மாணவர்களை அருகிலுள்ள பந்தேரா கிராம உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிபிசி குழு இந்த கிராமத்துக்குச் சென்றபோது, கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக மாணவர்கள் இதேபோல் உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று வந்ததாக கிராம மக்களும் மாணவர்களும் தெரிவித்தனர்.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பட மூலாதாரம், Naved Jafri
இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஜூலை 7-ஆம் தேதி தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டு, மத்தியப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.
கடந்த புதன்கிழமை, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டது. நிர்வாகத்திடம் ஆய்வு அறிக்கையை கோரிய நீதிமன்றம், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில், பிபிசி அங்கு சென்றபோது, பள்ளிக்குச் செல்ல இந்த தடுப்பணையை கடக்க வேண்டியிருந்த பல மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தடுப்பணையின் கரையில் நின்றபடி, 11-ஆம் வகுப்பு மாணவரான தேவ் சர்மா, ஒரு வருடத்திற்கு முன்பு பள்ளிக்குச் செல்ல ஆற்றைக் கடக்க வேண்டியிருந்த தனது அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.
"நானும் அந்த உயர்நிலைப் பள்ளியில்தான் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தேன். அப்போது பள்ளிக்குச் செல்ல இந்த தடுப்பணையின் தூண்களின் மீது குதித்துத்தான் கடப்பேன். சுமார் நான்கு அடி தூரம் குதிக்க வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.
விதிஷா சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் க்ஷிதிஜ் சர்மா பிபிசியிடம், "இதுகுறித்து முன்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காணொளி வெளியான பிறகுதான், குழந்தைகள் அருகிலுள்ள பந்தேரா கிராம உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்," என்றார்.
மேலும், "கிராம மக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில், தடுப்பணையில் இரும்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன," என்றும் அவர் தெரிவித்தார்.
'பல ஆண்டுகளாக உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் செல்கிறோம்'

பட மூலாதாரம், Vishnukant Tiwari
வைரலான காணொளியில் இடம்பெற்ற மாணவர்களில் ஒருவர்தான் கேஷவ் குர்ஜர். அவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீடு, தடுப்பணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவரான தேவ் சர்மாவின் வீட்டுக்கு எதிரே அவர் வசிக்கிறார்.
"அந்தக் காணொளியில் நீங்களும் இருந்தீர்களா?" என்று அவரிடம் கேட்டபோது, "ஆம், நானும் அந்தக் காணொளியில் இருந்தேன். என்னுடன் நான்கு மாணவிகளும், அதே பள்ளியைச் சேர்ந்த மற்ற மாணவர்களும் இருந்தனர். நாங்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் அந்தக் காணொளியை எடுத்தார்," என்று அவர் கூறினார்.
குழந்தைகள் ஏன் இவ்வளவு ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று கேட்டபோது, கேஷவ் "வேறு வழியில்லாத கட்டாயம், அண்ணா," என்றார்.
"சாலைவழியாகச் சென்றால் சுமார் 15 கிலோமீட்டர் சென்று, 15 கிலோமீட்டர் திரும்பி வர வேண்டும். இவ்வளவு தூரம் சைக்கிளில் பயணம் செய்தால் படிப்பில் எப்படி கவனம் செலுத்த முடியும்?"
"சைக்கிளில் ஏதாவது பழுது ஏற்பட்டாலும் இன்னும் சிரமமாகிவிடும். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த இந்த தடுப்பணை வழியாகத்தான் செல்வோம்," என்றார்.
.

பட மூலாதாரம், Vishnukant Tiwari
அருகிலுள்ள பந்தேரா கிராமத்தைச் சேர்ந்த ரிச்சா கிரி கோஸ்வாமி, "எங்கள் அண்ணன், அக்காக்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரும் இதே வழியாகத்தான் பள்ளிக்குச் சென்றுள்ளனர். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக மாணவர்கள் அனைவரும் இந்த தடுப்பணை வழியாகத்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள்," என்றார்.
"இன்று ஒரு வைரல் காணொளி மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்தப் பாதை, எங்களுக்கு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தது." என்றும் அவர் கூறினார்.
கிராம மக்களின் கூற்றுப்படி, நடுநிலைப் பள்ளிக்குப் பிறகு மேல்படிப்பு தொடர்வதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது.
மாணவர்கள் மேல்படிப்புக்காக விதிஷா நகரத்திற்கோ அல்லது பேத்வா ஆற்றின் மறுகரையில் உள்ள பள்ளிக்கோ செல்ல வேண்டியிருந்தது.
ஏன் இரண்டாவது தேர்வைத் தங்கள் குடும்பம் எடுத்தது என்பதை கேஷவின் தந்தை தருவார் சிங் குர்ஜர் விளக்குகிறார்.
"நடுநிலைப் பள்ளிக்குப் பிறகு குழந்தைகள் மேல்படிப்புக்காக விதிஷா நகரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு செல்ல முதலில் ரயில் பாதையையும், பின்னர் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் கடக்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.
"தனியார் பள்ளியில் சேர்க்கும் பொருளாதார வசதி எங்களிடம் இல்லை. அதனால், இந்த தடுப்பணையின் தூண்கள் மீது குதித்து ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தாலும், ஆற்றின் மறுகரையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்தான் எங்கள் குழந்தைகளைச் சேர்த்தோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்னை குறித்து இதற்கு முன்பும் பலமுறை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்
'பெரிதாக கவனம் செலுத்தவில்லை'

பட மூலாதாரம், Lochan Mali
மாணவர் தேவ் சர்மா இதுகுறித்து பலமுறை புகார் அளித்ததாகக் கூறினார்.
"குழந்தைகள் குதித்து கடக்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க இங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் சர்பஞ்சிடம் பலமுறை கூறினேன். நான்கு அல்லது ஐந்து முறை புகார் அளித்தேன். என்னுடன் பள்ளிக்குச் சென்ற மற்ற மாணவர்களும் பலமுறை இதே கோரிக்கையை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் குரல் புறக்கணிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஆனால், தற்போதைய சர்பஞ்சான பூஜா அஹிர்வார், இந்த விவகாரத்தை அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
"எனக்கு முன் இருந்த சர்பஞ்சும் இதுகுறித்து எதுவும் செய்யவில்லை. அதனால் நாங்களும் தொடர்ந்து முயற்சி செய்யவில்லை. மழைக்காலங்களில் குழந்தைகள் இந்த வழியாகச் செல்லவே மாட்டார்கள்," என்று அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































