இரான்-அமெரிக்க ஒப்பந்தம்: பாகிஸ்தானின் 'ராஜதந்திர வெற்றி' குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் என்ன விவாதிக்கப்படுகிறது?

 பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்.

பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்த ஆவணத்தைக் காட்டும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

100 நாட்கள் போருக்குப் பிறகு, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஒப்பந்தத்தின் மீதமுள்ள நிபந்தனைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த விவாதங்கள் அடுத்த 60 நாட்களில் நடைபெறும்.

இரு தரப்பிற்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான ஒப்பந்தத்திற்கான முதல் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தானின் பங்கு உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் சர்வதேச ஊடகங்கள் இதை ஒரு பெரிய ராஜ்ஜீய வெற்றியாகப் பாராட்டுகின்றன.

பாகிஸ்தானின் பங்கு குறித்து, கட்டுரையாளர் சதானந்த் துமே அமெரிக்க நாளிதழான "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்"-இல் எழுதுகையில், "இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், குறைந்தது ஒரு நாடாவது அதை ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கும். அந்த நாடு பாகிஸ்தான். அமெரிக்கா மற்றும் இரான் இடையே ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது?

பாகிஸ்தானின் பங்கு உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் சர்வதேச ஊடகங்கள் இதை ஒரு பெரிய ராஜ்ஜீய வெற்றியாகப் பாராட்டுகின்றன.

பட மூலாதாரம், Aamir QURESHI / AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தைக் கொண்டாடும் இஸ்லாமாபாத்தில் உள்ள விளம்பரப் பலகைகள்

"இந்த வெற்றி நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம், ஆனால் பாகிஸ்தான் உலக அரங்கில் தனக்குக் கிடைத்துள்ள இந்த புதிய முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி தனது பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

ஒரு வருடத்திற்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்த எவரும் ஒரு பகற்கனவு காண்பவராகவே இருந்திருப்பார்.

ஆனால் பாகிஸ்தானின் இந்த ராஜ்ஜீய வெற்றி, ஃபிஃபா உலகக் கோப்பையில் கேப் வெர்டே பெற்ற வெற்றியைப் போன்றது" என்று தனது கட்டுரையில் சதானந்த் துமே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு கணிசமாக மேம்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் பிரசாரத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளித்தது மற்றும் அரிய வகை கனிமங்களை அணுகுவதற்கும் உறுதியளித்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட நான்கு நாள் மோதலைத் தொடர்ந்து, டிரம்பின் பங்கை பாகிஸ்தான் பகிரங்கமாகப் பாராட்டியது, ஆனால் இந்த வாதத்தை இந்தியா நிராகரித்தது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எதிர்காலத்தில், வெள்ளை மாளிகையுடன் எவ்வாறு சிறந்த உறவை வளர்த்துக்கொள்வது என்பதைப் புரிந்து கொள்ள, மற்ற நாடுகளும் பாகிஸ்தானின் முறைகளை ஆராயக்கூடும்" என்றும் அவர் எழுதியுள்ளார்.

"பாகிஸ்தான் கடந்த காலங்களில் பல ராஜ்ஜீய வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஆனால் அவை சாதாரண குடிமக்களுக்கு மிகக் குறைந்த பலனையே அளித்துள்ளன. கடந்த ஆண்டு, உலக வங்கியின் அறிக்கை ஒன்று, பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளது என்று தெரிவித்தது. தனிநபர் ஜிடிபி கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக தேக்கமடைந்து, 2015 இல் 1,380 டாலராக இருந்தது 2024 இல் 1,478 டாலராக மட்டுமே உயர்ந்துள்ளது"என்றும் சதானந்த் துமே குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் தலைமை தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினால், இந்த புதிய உலகளாவிய அங்கீகாரத்தைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும், பரவலான வறுமை மற்றும் இன்னல்களைக் குறைக்கவும் முடியும்" என்று அவரது கட்டுரை கூறுகிறது.

இது உண்மையிலேயே ஒரு அபாயமா?

வான்ஸ்- பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், Jacquelyn Martin - Pool/Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 2026-ல் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, ​​அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.

சர்வதேச விவகார இதழான 'தி டிப்ளமட்' , தற்போதைய நிகழ்வுகள் மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், ஆனால் பாகிஸ்தான் இந்த முழு விவகாரத்திலும் மத்தியஸ்தராகப் பங்காற்றியுள்ளதால் பாகிஸ்தானில் குறிப்பான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எழுதியுள்ளது.

"அமைதி செயல்முறை தற்போது வரை ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், வரவிருக்கும் மாதங்களில் பல சவால்கள் எழக்கூடும் என்றாலும், பாகிஸ்தானுக்குள் முதலீடு, வர்த்தகம் மற்றும் அந்நியச் செலாவணி வரவு போன்றவை குறித்து பரவலான எதிர்பார்ப்புகள் உள்ளன" என்று அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது

மேலும் தி டிப்ளமட் இதழில் கீழ்க்கண்ட கருத்துக்களும் குறிப்பிடப்படுகின்றன.

  • "நீண்டகாலமாகத் தாமதமாகிவரும் இரான்-பாகிஸ்தான் எரிவாயுக் குழாய்த் திட்டம் இறுதியாக நிறைவடையும் என்றும், அது நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு கணிசமான நிவாரணம் அளிக்கும் என்றும் பாகிஸ்தானியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்".
  • "மேலும், உலக நாடுகளுக்காகத் தன் பொருளாதாரத்தைத் திறந்துவிடும் ஒரு நம்பகமான பங்காளியாக இரான் மாறுவது, பாகிஸ்தானின் பொருளாதார வாய்ப்புகளையும் வலுப்படுத்தும் என்று மக்கள் நம்புகிறார்கள்."
  • "பிராந்திய நிலைத்தன்மையில் பாகிஸ்தான் ஆற்றிய பெரிய பங்கிற்குப் பதிலாக, வளைகுடா நாடுகளிடமிருந்து அது சலுகை விலையில் எண்ணெயைப் பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிகரித்துள்ள தனது உலகளாவிய அந்தஸ்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும்."
  • "போரிலிருந்து அமெரிக்கா ஒரு கண்ணியமான வழியில் வெளியேறுவதற்கு உதவியது, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் என்றும் பாகிஸ்தானியர்கள் நம்புகிறார்கள்."
  • "இருப்பினும், ராணுவ ஒத்துழைப்புக் காலங்களையும், அதைத் தொடர்ந்த புறக்கணிப்புக் காலங்களையும் அடிப்படையாகக் கொண்டே அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளின் வரலாறு அமைந்துள்ளது."

உதாரணமாக, "1980களில், ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற தளவாட ஆதரவை வழங்க அமெரிக்கா பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவுடன், அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் தேவை குறைவாகவே தோன்றியது, மேலும் அது பாகிஸ்தான் மீது தடைகளைக்கூட விதித்தது"என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது .

"இப்போது, பாகிஸ்தானின் உதவியைப் பெற்ற பிறகு, அதனை மறந்துவிடும் தனது பழைய கொள்கையை அமெரிக்கா மீண்டும் செய்யாது என்று மக்கள் நம்புகிறார்கள்." என்றும் அந்த கட்டுரை விவரிக்கிறது.

“நீண்டகாலமாகத் தாமதமாகிவரும் இரான்-பாகிஸ்தான் எரிவாயுக் குழாய்த் திட்டம் இறுதியாக நிறைவடையும் என்றும், அது நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு கணிசமான நிவாரணம் அளிக்கும் என்றும் பாகிஸ்தானியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்”.

பட மூலாதாரம், ATTA KENARE / AFP via Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரானில் உள்ள ஒரு சுவர் ஓவியம், அந்த ஒப்பந்தத்தை இரானின் வெற்றியாகச் சித்தரிக்கிறது.

"போரிலிருந்து வெளியேறும் ஒரு வழியைப் பாதுகாக்க உதவிய பிறகு, இரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் பாகிஸ்தானிய நிறுவனங்கள் பணியாற்ற அமெரிக்கா அனுமதிக்கும் என்பதே பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவிடம் இருந்து எதிர்பார்க்கும் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும். இது பொதுமக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்" என்று அந்தப் பத்திரிகை எழுதியிருந்தது.

"இருப்பினும், கடந்த கால அனுபவங்களால் இந்த சுமுகமான எதிர்பார்ப்பு பெரும்பாலும் மட்டுப்படுத்தப்படுகிறது, கடந்த காலங்களில் பாகிஸ்தான் இத்தகைய பரிவர்த்தனை கூட்டணிகளின் சுமையை நீண்ட காலத்திற்குத் தாங்க வேண்டியிருந்தது, அதே நேரத்தில் அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது."

"இந்த முறை அமெரிக்கா மற்றும் இரான் இடையே மத்தியஸ்தம் செய்வதில் பாகிஸ்தான் ஏற்கும் இடர்களுக்கு இணையான பலன்களை அது பெறுமா என்பதுதான் கேள்வி."

மேலும் அந்த கட்டுரையில்,"போருக்குப் பிறகு, பாகிஸ்தான் சந்தேகத்திற்கு இடமின்றி மேற்கு ஆசியாவில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. அதன் தெற்காசிய அடையாளத்துடன் சேர்த்து, மத்திய கிழக்குடன் தொடர்புடைய ஒரு புதிய அடையாளத்தையும் பங்கையும் அது இப்போது பெற்றுள்ளது என்று கூறலாம்."

"இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்பான பாதுகாப்புப் பிரச்னைகள் பாகிஸ்தானைத் தெற்காசியாவுடன் பிணைத்து வைத்திருக்கக்கூடும் என்றாலும், மேற்கு ஆசியாவில் அதிகரித்த அதன் பங்கு, அதற்கு முக்கிய உலக அரசியல் நன்மைகளை வழங்கியுள்ளதுடன், அதன் உலகளாவிய நற்பெயரையும் ராஜ்ஜீய செல்வாக்கையும் வலுப்படுத்தியுள்ளது." என கூறப்பட்டுள்ளது.

"இருப்பினும், பாகிஸ்தானின் மிகப்பெரிய சவால் அதன் உள்நாட்டு சூழ்நிலையைச் சரிசெய்வதாகும். பல நிர்வாக மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் உள்ளன, இவற்றைத் தீர்க்காமல், அதன் வளர்ந்து வரும் உலகளாவிய நற்பெயரை அது முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது." எனவும் விவரிக்கிறது.

'டான்' நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில் அரசியல் ஆய்வாளர் குர்ரம் உசேன் கூறியதை 'தி டிப்ளமேட்' மேற்கோள் காட்டியுள்ளது, அதில், "இரான் நம்மை எப்படி நினைவில் கொள்கிறது மற்றும் அமெரிக்கா நமக்கு எவ்வளவு வெகுமதி அளிக்கிறது என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

"இவை, பிற நாடுகளின் தலைநகரங்களில் மற்றவர்கள் தத்தமது சொந்தக் காரணங்களுக்காக எடுத்த முடிவுகள்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரைப் பொறுத்தவரை, "நமது கட்டுப்பாட்டிற்குள் இருப்பது எதுவோ அதுதான் உண்மையில் மிகவும் முக்கியமானது, ஆனால் அதை நாம் தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறோம்."

உள்நாட்டுச் சீர்திருத்தங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

'நம்பிக்கையைப் பெறுவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது'

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர்

பட மூலாதாரம், Jacquelyn Martin - Pool/Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் ஆகியோர் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸுடன் உரையாடினர்.

இரானுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஆசிஃப் துரானி, பாகிஸ்தானின் புதிய பங்கு குறித்து குறிப்பிட்டதாக பிரான்ஸ் 24 செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

"மத்தியஸ்தரின் நம்பகத்தன்மையே மிக முக்கியமான விஷயம். இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நம்பிக்கையையும் பாகிஸ்தான் பெற்றிருந்ததால், இந்தப் பணிக்கு அது மிகவும் பொருத்தமானதாக இருந்தது" என்று ஆசிஃப் துரானி கூறினார் என பிரான்ஸ் 24 கூறியுள்ளது.

நெருங்கிய உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இரானும் பாகிஸ்தானும், 900 கிலோமீட்டர் எல்லையையும் வலுவான கலாச்சார பிணைப்புகளையும் பகிர்ந்து கொள்கின்றன.

சுன்னி பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தான், இரானுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஷியா மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

"அமெரிக்காவுடன் பாகிஸ்தானின் உறவுகளும் முக்கியமானவை, அவை சிக்கலானதாக இருந்தபோதிலும். ஆப்கானிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் நேட்டோ அமைப்பிற்கு விநியோக வழிகளை வழங்கியது மற்றும் அதற்குப் பதிலாக பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவிடம் இருந்து உதவியாகப் பெற்றது.

ஆனால் 2011 ஆம் ஆண்டில், செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னணியில் இருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்கா பாகிஸ்தானில் வைத்து கொன்றது, அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன" எனவும் அந்த கட்டுரை விவரிக்கிறது.

"பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிரின் தனிப்பட்ட தொடர்புகள் பாகிஸ்தானின் செல்வாக்கை விரிவுபடுத்த உதவியுள்ளன. ஒரு செல்வாக்குமிக்க ராணுவத் தலைவராக, முனிர் இரானின் புரட்சிகர காவல்படையின் தளபதிகளை நன்கு அறிந்திருந்தார்." என கட்டுரை குறிப்பிடுகிறது.

அவருக்கு டொனால்ட் டிரம்புடன் நெருங்கிய உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் மத்தியஸ்தம் செய்த இந்திய-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் முனிரை தனக்கு "விருப்பமான ஃபீல்ட் மார்ஷல்" என்று அழைத்தார்.

ஆசிப் துரானி கூறுகையில், "இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் மொழியை திறம்பட பயன்படுத்துவதில் பாகிஸ்தான் எப்போதும் நற்பெயரைக் கொண்டுள்ளது. இந்தத் திறன் இங்கே கை கொடுத்தது" என்கிறார் ஆசிஃப் துரானி .

உலகளாவிய மோதல்களில் நீண்டகால மத்தியஸ்தராக இருக்கும் கத்தார் நாடும், சமீபத்திய வாரங்களில் மிகவும் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மத்தியஸ்த முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் கத்தாரை ஒரு "சகோதரர்" என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் முதன்மை எதிரியான இந்தியாவுடனான தற்போதைய சர்ச்சைகளிலும் சர்வதேச ஆதரவை கோருகிறது. முக்கிய நீர் ஆதாரங்களின் விநியோகத்தை துண்டிப்பதாக இந்தியா அச்சுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் 24 தனது கட்டுரையில் அட்லாண்டிக் கவுன்சிலின் தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகெல்மேனை மேற்கோள் காட்டியுள்ளது.

"தன்னை ஒரு அமைதி ஏற்படுத்துபவராகவும் மத்தியஸ்தராகவும் நிலைநிறுத்திக் கொண்டதன் மூலம், சர்வதேச சமூகத்தில் பலரின் பார்வையை பாகிஸ்தான் மாற்றியுள்ளது. இதற்கு முன்பு, இது வரையறுக்கப்பட்ட உலகளாவிய செல்வாக்கைக் கொண்ட, நெருக்கடிகள் நிறைந்த நாடாகவே பார்க்கப்பட்டது" என்று குகெல்மேன் கூறினார்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான சவால்கள் பாகிஸ்தானின் உலகளாவிய பிம்பத்தை சேதப்படுத்தியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

"பாகிஸ்தான் இப்போது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும், அமெரிக்கத் தடைகள் காரணமாக பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இரானுடனான தனது முன்மொழியப்பட்ட எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியும் என்றும் நம்புகிறது."

"இருப்பினும், இந்த செயல்முறை இன்னும் முழுமையடையவில்லை. ஆரம்ப உடன்படிக்கையானது இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான மிகவும் விவாதத்திற்குரிய விஷயங்களை உள்ளடக்கவில்லை. எனவே, மேலும் ராஜ்ஜீய நடவடிக்கைகள் தேவைப்படும், இது பாகிஸ்தானுக்கு புதிய சவால்களையும் கொண்டு வரும்."

"பாகிஸ்தான் மத்தியஸ்தர் பாத்திரத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது, அதன் மூலம் அது சில இடர்களையும் எதிர்கொண்டது. சூழ்நிலை மோசமடைந்தால், அதன் மீது பழி சுமத்தப்படலாம். ஆனால் அந்த அபாயத்தை எதிர்கொள்ள அது தயாராக இருந்தது" என்று குகெல்மேன் கூறினார்.

பாகிஸ்தானுக்கு கிடைத்த மாபெரும் ராஜ்ஜீய வெற்றி

பிரிட்டிஷ் நாளிதழான 'கார்டியன்' , இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் ஒரு பெரிய இராஜதந்திர வெற்றியாகக் கருதியுள்ளது.

பட மூலாதாரம், Iranian Presidency / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன்

பிரிட்டிஷ் நாளிதழான 'கார்டியன்' , இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் ஒரு பெரிய ராஜ்ஜீய வெற்றியாகக் கருதியுள்ளது.

"பாகிஸ்தான் அதிகாரிகளின் முயற்சிகள், குறைந்தபட்சம் தற்போதைக்கு ஒரு பெரிய நெருக்கடியைத் தவிர்த்த ஒரு திருப்புமுனைக்கு வழிவகுத்தன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்," என அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "பாகிஸ்தானின் தலைவர்கள் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்திருந்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டு வாரங்களுக்கும் மேலாக தீவிர முயற்சிகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் ராஜ்ஜீய சந்திப்புகளை மேற்கொண்ட பிறகு, நிலைமை மேம்படுவதற்குப் பதிலாக பாகிஸ்தானின் மிக மோசமான கனவை நோக்கிச் செல்வது போல் தோன்றியது."

"நாட்டின் உண்மையான அதிகாரமாகக் கருதப்படும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது வெறும் கௌரவப் பிரச்னை மட்டுமல்ல. நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய நலன்கள் மற்றும் மதரீதியான சமநிலை என அனைத்தும் அதைச் சார்ந்தே இருந்தன."

"சவூதி அரேபியாவுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ரியாத் இந்த போரில் இணைந்தால், பாகிஸ்தானும் ஏதோ ஒரு வழியில் இதில் இழுக்கப்படக்கூடும் என்ற நிலை இருந்தது"என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு