டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டது ஏன்? சச்சின் சாதனையை முறியடிப்பாரா சூர்யவன்ஷி?

வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்திய ஆண்கள் டி20 அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ஆண்கள் டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு, டி20 அணியில் சூர்யவன்ஷியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய போட்டிகளுக்கான இந்திய டி20 அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமையன்று (2026 ஜூன் 6) அறிவித்தது.

சமீபத்தில் இந்தியாவிற்கு டி20 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இப்போது டி20 அணியை வழிநடத்துவார். அணியின் துணை கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 19-வது சீசனில் அதிக ரன்கள் குவித்த 15 வயதே ஆன இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல்முறையாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த மூன்று தொடர்களிலும் அணியில் இடம் பெறவில்லை.

தேர்வு வாரியத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் இந்த இந்திய அணியை அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய விராட் கோலிக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் ஜூன் 13 முதல் தொடங்குகிறது.

ஹர்திக் பாண்ட்யா

இந்த அனைத்து தொடர்களிலிருந்தும் ஹர்திக் பாண்ட்யா விலகி இருப்பார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "ஹர்திக் பாண்ட்யா பெங்களூரில் உள்ள தகுதி மையத்தில் இருக்கிறார். அங்கு அவர் காயத்திலிருந்து குணமடைவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவர் விரைவில் இறுதி உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்'' என்றார்.

சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை டி20 கேப்டனாக நியமித்தது குறித்து பேசிய தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், "கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு அணிகளை வழிநடத்தி அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் ஒருமுறை ஐபிஎல் பட்டத்தை வென்றார். ஒரு கேப்டன் சந்திக்கக்கூடிய அனைத்து சூழ்நிலைகளையும் அவர் பார்த்துள்ளார்" என்று கூறினார்.

"அதுமட்டுமின்றி, அவருடைய சொந்த ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. அவர் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பதற்குக் கூட மிக அருகில் இருந்தார், ஆனால் சூர்யா அணியில் இருந்ததால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. என் பார்வையில், அவர் இப்போது அதிக அனுபவத்துடன் விளங்குகிறார். இது நிச்சயமாக அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும்."

வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்திய ஆண்கள் டி20 அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்ரேயஸ் ஐயர் இனி இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார்
வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்திய ஆண்கள் டி20 அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய ஐபிஎல் சீசனில் வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பியையும் ன்றிருந்தார் - கோப்புப் படம்

சச்சின் டெண்டுல்கரை முந்துவாரா வைபவ் சூர்யவன்ஷி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து அனைத்து இடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்திய ஆண்கள் அணியில் தேர்வு செய்யப்பட்ட மிக இளைய வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இவருக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்திருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி சமீபத்திய ஐபிஎல் சீசனில் 237.30 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்துள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 சுற்றுப்பயணத்திற்கு முன்பு, சூர்யவன்ஷி ஜூன் 9 முதல் 21 வரை இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முத்தரப்புத் தொடரில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடுவார்.

சூர்யவன்ஷி அயர்லாந்து அல்லது இங்கிலாந்து தொடரில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானால், 16 வயதிற்கு முன்பாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றைப் படைப்பார்.

சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது 205 நாட்களில் டெஸ்ட் போட்டியிலும், 16 வயது 238 நாட்களில் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார்.

இந்தியாவிற்காக மிகக் குறைந்த வயதில் டி20 போட்டியில் அறிமுகமானவர் வாஷிங்டன் சுந்தர் ஆவார். அவர் தனது 18 வயது 80 நாட்களில் இந்த சாதனையைச் செய்தார்.

இந்தியா ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 11 வரை இங்கிலாந்தில் ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி

வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்திய ஆண்கள் டி20 அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்திய அணியில் வைபவ் சேர்க்கப்பட்டது குறித்து மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் அயாஸ் மெமன், எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டு, "வைபவ் சூர்யவன்ஷி இந்த ஐபிஎல் சீசனின் அற்புதமாக விளையாடி 700 ரன்களுக்கு மேல் எடுத்தார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் அந்த ரன்களை அடித்த 'ஸ்டைல்' தான். இது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சுவதாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "தனது வயது குறித்து எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் அவர் தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மைக்கேல் கிளார்க் போன்ற உலகத்தரம் வாய்ந்த முன்னாள் வீரர்கள், வைபவ் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது சரியான முடிவு. இந்த முடிவு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கலாம். வைபவ் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வரவேற்கப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியை இழந்தது மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றது குறித்தும் அயாஸ் மெமன் எக்ஸ் சமூக வலைதளத்தில் பேசியுள்ளார்.

"ஒருவரால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை என்றால், எப்படி கேப்டனாகத் தொடர முடியும்? போட்டியைப் பாருங்கள், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா என அணியில் போட்டியும் அதிகமாகியுள்ளது. இப்போது ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் மாறியுள்ளார்."

"கேப்டன் பதவிக்காக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மற்றும் திலக் வர்மா ஆகியோரிடமிருந்தும் ஸ்ரேயஸ் சவால்களை எதிர்கொண்டார். ஆனால் அவர் ஐபிஎல் பட்டத்தை வென்றார். மேலும் இந்த பதவிக்கு அவர் முற்றிலும் தகுதியானவர்."

அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணிகளின் விவரம்:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி மற்றும் வைபவ் சூர்யவன்ஷி.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு