'வந்தே மாதரத்துக்கும் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு' - மசோதாவில் என்ன உள்ளது? திமுக எதிர்ப்பு ஏன்?

திமுக எம்பி கனிமொழி

பட மூலாதாரம், Sansad

படக்குறிப்பு, திமுக எம்பி கனிமொழி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதமான ஜன கண மனவுக்கு இருப்பதைப் போன்ற சட்டப் பாதுகாப்பை வழங்கும் தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் (திருத்தம்) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 30) மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஆனால் இந்த மசோதாவை கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் தெரிவித்தார்.

வந்தே மாதரம் மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர், இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதுடன், மதச்சார்பின்மைக்கும் முரணானது என்றார்.

"தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநில மொழிகளில் உள்ள பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்த மசோதா மூலம் தமிழர்களையும் பிற மொழி பேசும் மாநில மக்களையும் இந்த அரசு அவமதிக்கிறது" என்று அவர் கூறினார்.

மேலும், "இந்தப் பாடலைத் திணிப்பதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்த முயல்வதை திமுக அனுமதிக்காது" என்று குறிப்பிட்ட அவர், இந்த மசோதாவுக்கு தனது கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்தார்.

திமுக எம்.பி ஆ ராசா.

பட மூலாதாரம், Sansad

படக்குறிப்பு, திமுக எம்.பி ஆ ராசா.

"இந்த மசோதா ஒரு அரசியலமைப்புச் சட்ட மோசடி" என்று திமுக எம்.பி. ஆ. ராசா தெரிவித்தார்.

வந்தே மாதரம் மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தொடங்கும்போது வெளியிடப்படும் அலுவல் பட்டியலில் இந்த மசோதா இடம்பெறவில்லை என்றும், பிற்பகலுக்கு பிறகு கூடுதல் அலுவலாக இது சேர்க்கப்பட்டதாகவும் கூறினார்.

"1950 ஜனவரி 24-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தலைமையில் வந்தே மாதரம் பாடலுக்கு தேசியப் பாடல் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால், இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட இரண்டு பத்திகளை நீக்கிய பிறகான வடிவத்தையே அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது," என்று அவர் கூறினார்.

மேலும், அரசின் பிஐபி இணையதளத்திலும் அந்த இரண்டு பத்திகள் இடம்பெறாத வடிவமே பதிவேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"எதிர்காலத்தில், வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக ஒருவர் தண்டிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் இது அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்படாத பகுதியை உள்ளடக்கியது என்று வாதிட்டால், அதற்கு அரசின் பதில் என்னவாக இருக்கும்?" என்ற கேள்வியையும் ஆ. ராசா எழுப்பினார்.

வந்தே மாதரம் மசோதா என்றால் என்ன?

மக்களவையில் கடும் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த வந்தே மாதரம் மசோதாவில் என்ன இடம்பெற்றுள்ளது?

'தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் (திருத்தம்) சட்டம், 2026' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, 1971-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3-ஐ திருத்துகிறது.

தற்போது தேசிய கீதமான 'ஜன கண மன'வுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பை, தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் இந்த மசோதா நீட்டிக்கிறது.

அதன்படி, தேசியப் பாடலைப் பாடுவதை தடுப்பதோ அல்லது அதைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதோ குற்றமாகக் கருதப்படும்.

திருத்த மசோதாவை அரசு ஏன் கொண்டு வந்தது?

1971-ஆம் ஆண்டு சட்டம், தேசிய கீதத்தைப் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பதையோ அல்லது அதைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதையோ குற்றமாக அறிவித்து தேசிய கீதத்துக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்குகிறது.

மசோதாவுடன் இணைக்கப்பட்டுள்ள நோக்கங்கள் மற்றும் காரணங்கள் விளக்கத்தில், 1950 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், வந்தே மாதரம் பாடல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிட்டு, அது தேசிய கீதமான ஜன கண மனவுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

''ஆனால் தேசியப் பாடலுக்கு இதுபோன்ற குறிப்பிட்ட சட்டப் பாதுகாப்பு இல்லை. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே 1971 சட்டத்தின் பிரிவு 3-இல் வந்தே மாதரம் பாடலையும் சேர்க்க இந்தத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன தண்டனை?

தேசிய கீதமான ஜன கண மனவுக்கு தற்போது பொருந்தும் தண்டனை விதிகளே, வந்தே மாதரம் பாடலுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

அதன்படி, தேசிய கீதம் அல்லது தேசியப் பாடலைப் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பது, அவற்றைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பது, ஆகியவை குற்றங்களாகக் கருதப்படும்.

இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், இதே குற்றத்தை இரண்டாவது முறை அல்லது அதற்குப் பிறகு மீண்டும் செய்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு