உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி உடலுக்கு கேடானதா? அசல், போலியை கண்டறிவது எப்படி?

உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் என்ன ஆகும்? அசல், போலியைக் கண்டறிவது எப்படி?
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரை கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சமர்ப்பித்த கணக்குகளின் மூலம் இது தெரிய வந்திருப்பதாக, ஜி.எஸ்.டி அதிகாரிகள் கூறுகின்றனர்.

"கருப்பட்டி ஆலைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக" பிபிசி தமிழிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள உடன்குடி பேரூராட்சி பனங்கருப்பட்டி தயாரிப்புக்குப் பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது. அங்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கருப்பட்டி வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"உடன்குடி பகுதியில் கிடைக்கும் பதநீரில் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதைப் பிற பகுதிகளில் உள்ள பனை மரங்களில் பெருமளவு பார்க்க முடியாது" என்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசீலன்.

கருப்பட்டி தயாரிப்பு முதல் அதை அடைத்து விற்கும் பெட்டி வரை அனைத்திற்கும் பனை சார்ந்த பொருட்களே பயன்படுத்தப்படுவதால் உடன்குடி கருப்பட்டிக்கு அதிக வரவேற்பு இருப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"சந்தையில் பழைய கருப்பட்டி கிலோ 480 ரூபாய் வரை விலை போகிறது. இதை பரண் அமைத்துப் பாதுகாக்க வேண்டும். புதிய கருப்பட்டி என்றால் கிலோ 420 ரூபாய் வரை விலை போகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கருப்பட்டி கெட்டுப் போகாது" என அவர் தெரிவித்தார்.

அசல் கருப்பட்டிக்கு வரிவிலக்கு

கருப்பட்டி உற்பத்தியில் தனிச் சிறப்புடன் உடன்குடி விளங்குவதால் அதற்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் விண்ணப்பித்தன.

பனங்கருப்பட்டியில் உள்ள பல்வேறு நன்மைகளைப் பரிசீலித்த மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிவகம், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கியது.

உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் என்ன ஆகும்? அசல், போலியைக் கண்டறிவது எப்படி?

இதனால் உலகம் முழுவதும் உடன்குடி கருப்பட்டிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. "அசல் கருப்பட்டி என்றால் ஜிஎஸ்டி-யில் வரிவிலக்கு உள்ளது. அதுவே, சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்பட்டால் 5% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்" என்றார், திருநெல்வேலி டிவிஷன் ஜிஎஸ்டி இணை ஆணையர் லட்சுமிபதி.

இவர் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான இணை ஆணையராகப் பதவி வகிக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அசல் கருப்பட்டியாக இல்லாமல் சர்க்கரை கலந்து விற்றால் அதற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதிக சர்க்கரை கொள்முதலால் தெரிய வந்த கலப்படம்

இந்த நிலையில், கருப்பட்டி தயாரிப்பில் உடன்குடி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்தியது ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து சர்க்கரை கலந்த கருப்பட்டியை 'அசல் கருப்பட்டி' என்று வணிகர்கள் விற்று வருவதை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவில் ஆறு வியாபாரிகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் வரை செலுத்துமாறு ஜிஎஸ்டி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய ஜிஎஸ்டி இணை ஆணையர் லட்சுமிபதி, "அபராதம், வட்டி ஆகியவற்றுடன் சுமார் 38 கோடி ரூபாய் வரை சில வணிகர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, ஜிஎஸ்டி-யில் அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர்" என்றார்.

இதைக் கண்டறிந்த விதம் குறித்துக் கேட்டபோது, "கருப்பட்டி விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான விவரங்களை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வணிகர்கள் சமர்பிப்பது வழக்கம். இதில், அதிகளவு சர்க்கரையைக் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டதாக" கூறினார்.

உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் என்ன ஆகும்? அசல், போலியைக் கண்டறிவது எப்படி?
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"உடன்குடி பகுதியில் மட்டும் அதிகளவு சர்க்கரையை வியாபாரிகள் கொள்முதல் செய்திருந்ததால், இது அசல் கருப்பட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

இணை ஆணையர் லட்சுமிபதியின் கூற்றுப்படி, "இதன் அடிப்படையில் பார்த்தால், கருப்பட்டியில் தயாரான ஒரு புதிய பொருளாகவே இதைப் பார்க்க முடியும் என்பதால் 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது."

திருநெல்வேலி ஜிஎஸ்டி பிரிவுக்கு இணை ஆணையராக லட்சுமிபதி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. "வசூலிக்கப்பட வேண்டிய தொகைகள் நிலுவையில் இருந்ததால் அதைப் பட்டியலிட்டு கடிதம் அனுப்பினோம். எனவே இந்த விவகாரம் வெளியில் வந்தது. மற்றபடி, இது வழக்கமான பணிதான்" என்று அவர் குறிப்பிட்டார்.

கருப்பட்டி தயாரிப்பில் சர்க்கரையுடன் செயற்கை நிறமிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் அவர், "கருப்பட்டிக்கு வணிகர்கள் பெற்றுள்ள சான்றிதழில் சுக்ரோஸ், பிரக்டோஸ் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவை சர்க்கரையிலும் உள்ளன" என்கிறார்.

அதேநேரம், "கருப்பட்டி தயாரிப்பில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்றும் லட்சுபதி தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்னை நீடித்து வருவதாகக் குறிப்பிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசீலன், "கருப்பட்டி காய்ச்சிய பிறகு வரக்கூடிய கழிவுகளில் சர்க்கரையைக் கலந்து கருப்பட்டி போல சிலர் தயாரித்து வந்துள்ளார்கள்" என்றார்.

உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் என்ன ஆகும்? அசல், போலியைக் கண்டறிவது எப்படி?

'ஒரு சதவிகித சர்க்கரை கலந்தாலும் கலப்படம்'

கடந்த 2019ஆம் ஆண்டில் இதுதொடர்பான புகார்கள் எழுந்தபோது, கருப்பட்டி வணிகர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இரண்டு கூட்டங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், "பதநீரில் இருந்து தயாரிக்கப்பட்டு சர்க்கரை கலக்கப்படாமல் இருந்தால் மட்டுமே அது பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு எனக் குறிப்பிட வேண்டும். ஒரு சதவிகிதம் சர்க்கரை கலக்கப்பட்டாலும் அது கலப்படமாகக் கருதப்படும்" என எச்சரித்துள்ளனர்.

ஆனால், அதன் பிறகு அரசுத் துறைகள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டதாகக் கூறும் குணசீலன், "குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒன்றாக பனங்கருப்பட்டி உள்ளது. சிலரின் செயல்களால் ஊரின் பெயர் கெட்டுப் போகிறது" என்று கவலை தெரிவித்தார்.

சர்க்கரையின் மூலம் தயாரிக்கப்படும் கருப்பட்டியை சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று விற்பதாகக் கூறும் குணசீலன், "தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் ஜிஎஸ்டி அதிகாரிகளும் ஆய்வு நடத்தினால் தீர்வு கிடைக்கும்" எனக் குறிப்பிட்டார்.

'அனைத்துமே சர்க்கரை அல்ல' - வணிகர்கள் கூறுவது என்ன?

இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், தூத்துக்குடி மாவட்ட கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன்.

"அபராதம் செலுத்த வேண்டிய விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி அலுவலகத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய நடராஜன், "கருப்பட்டிக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி-யை கணக்கிட்டு அரசுக்குப் பணம் செலுத்தி வருகிறோம். சர்க்கரையை வாங்கினாலும் அரசுக்கு முறையாக கணக்கு காட்டி வருகிறோம்" எனக் கூறுகிறார்.

"சொந்தமாக பனை மரங்களை வைத்து பதநீர் இறக்குகிறோம். அதன் மூலம் கருப்பட்டி தயாரிக்கிறோம். அனைத்தும் சர்க்கரையாக இருப்பதாகக் கூறும் தகவல் உண்மையில்லை" என்று மறுக்கிறார் அவர்.

"வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை" எனக் கூறிய நடராஜன், "மக்களிடம் கருப்பட்டியை விற்று பணம் வாங்குகிறோம். எங்களின் கைக்காசு எதையும் போடுவதில்லை. அதனால் வரி கட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார்.

"சிலர் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். உடன்குடிக்கு இருக்கும் கருப்பட்டிப் பெருமையை சிலர் சீர்குலைக்கின்றனர். இது வணிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் என்ன ஆகும்? அசல், போலியைக் கண்டறிவது எப்படி?

'மாதிரிகள் சேகரிப்பு' - உணவுப் பாதுகாப்புத் துறை

கருப்பட்டியில் அதீத சர்க்கரை கலப்பு குறித்த புகார்களில் தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

"பனை வெல்லத்தில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. அதில் சர்க்கரை கலந்து தயாரிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வேறு நிறமிகள் சேர்க்கப்பட்டு கலப்படம் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன" என்கிறார், தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரும் மருத்துவருமான அருண்.

"ஆலைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

கருப்பட்டியில் அசல், போலியைக் கண்டறிவது எப்படி?

"கருப்பட்டியைப் பொறுத்தவரை அசலாக இருந்தால் காபி, தேநீரில் கலக்கும்போது இனிப்புச் சுவை நன்கு தெரிய அதிகளவில் போட வேண்டியிருக்கும்" என்று விளக்கினார் திருநெல்வேலி பிரிவு ஜிஎஸ்டி இணை ஆணையர் லட்சுமிபதி.

அவரது கூற்றுப்படி, "அசல் கருப்பட்டியை சாப்பிட்டால் லேசான இனிப்புச் சுவை மட்டுமே இருக்கும். அதுவே, கருப்பட்டி போலியானதாக இருந்தால் வாயில் போட்டாலே அதிக இனிப்பு தெரியும். இதை வைத்தே கண்டறியலாம்."

இதே கருத்தை 2019ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரும் மருத்துவருமான கருணாகரன் முன்வைத்துள்ளார். கலப்பட கருப்பட்டியைக் கண்டறிவது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த விளக்கத்தில், "கலப்படமில்லாத பனங்கருப்பட்டி மிகவும் கடினமானதாக இருக்காது. இனிப்பும் குறைவாகவே இருக்கும். பதநீரில் சுண்ணாம்பு இருப்பதால் லேசான கசப்பு சுவையைக் கொண்டிருக்கும்" என்று விளக்கியுள்ளார்.

உடன்குடியில் கருப்பட்டியில் அசல், போலி இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார் சமூக ஆர்வலர் குணசீலன்.

அதை விளக்கிய அவர், "அசல் கருப்பட்டியை உடைத்தால் ஒரே வடிவத்தில் உடையாது. வெளியில் கடினமாக இருக்கும். உள்ளே மாவு போல் இருக்கும். கருப்பட்டியில் அதிகளவு சர்க்கரை கலந்திருந்தால் ஒரே வடிவத்தில் உடையும். இதை அனுபவத்தின் மூலமாக இங்குள்ள விவசாயிகள் கண்டறிகின்றனர்" எனத் தெரிவித்தார்.

உடன்குடி சர்ச்சை: கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் என்ன ஆகும்? அசல், போலியைக் கண்டறிவது எப்படி?

ஆனால், "கைகளால் உடைத்துப் பார்த்தால் தெரிய வரும் என்பதை அறிவியல்பூர்வமாக பொருந்தும் பரிசோதனை முறையாகக் கருத முடியாது" என்கிறார் தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அருண்.

அவரது கூற்றின்படி, "கருப்பட்டியை நேரில் பார்த்துக் கண்டறிவது சிரமம். ஆய்வக முடிவுகள் வரும்போதுதான் இதுதொடர்பான முழு விவரங்களும் தெரிய வரும்."

கலப்படக் கருப்பட்டி உடலுக்குக் கேடு விளைவிக்குமா?

சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட கருப்பட்டியைச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் குறித்துப் பேசிய அருண், "சர்க்கரையை அதிகமாக எடுக்கும்போது வரக்கூடிய பாதிப்புகளே இதிலும் ஏற்படும்" என்றார்.

மறுபுறம், "சர்க்கரை கலந்த கருப்பட்டியை சாப்பிடுவது என்பது ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும்" என்கிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி.

"சர்க்கரை என்பது கார்போஹைட்ரேட்டில் வரும். அதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது எடை கூடுவது, இதயநோய் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக" கூறுகிறார் அவர்.

மேலும், "கலப்படக் கருப்பட்டி தயாரிக்கும்போது நிறத்திற்காக ஒருவேளை நிறமிகள் சேர்க்கப்பட்டால் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும்" எனவும் மருத்துவர் புகழேந்தி குறிப்பிட்டார்.

சர்க்கரை கலந்த கருப்பட்டியின் மூலம் வயிற்றில் கொழுப்பு சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறிய அவர், "கருப்பட்டியை தண்ணீரில் போடும்போது நிறமிகளைக் கண்டறியலாம். சுவையில் வித்தியாசத்தை உணரலாம். அதேநேரம், ஆய்வக சோதனை முக்கியமானது" என்றார்.

அதோடு, "ரசாயனப் பகுப்பாய்வு சோதனையில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருப்பதை எளிதில் கண்டறியலாம்" என்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, "சர்க்கரையைவிட கருப்பட்டி சிறந்தது. உடலுக்கு நல்லது. அதில் இரும்புச் சத்து உள்படப் பல்வேறு தாதுச் சத்துகள் உள்ளன. சர்க்கரையில் இவை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு