நடிகர்கள், கல்லூரி அதிபர், ரசிகர் மன்ற நிர்வாகி - 23 புதிய அமைச்சர்களின் பின்னணி

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு சுற்றுலா மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மே 21) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 23 அமைச்சர்களின் பின்னணி என்ன?.

1. ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக பணியைத் தொடங்கிய ஸ்ரீநாத், நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். ரவி மோகன் நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் உள்பட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சில படங்களையும் அவர் இயக்கியுள்ளார். நடிகர் சந்தானம் நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தை ஸ்ரீநாத் இயக்கியிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கினார்.

தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. எஸ்.கமலி (அவிநாசி)

ராசிபுரத்தைச் சேர்ந்த கமலியின் குடும்பத்தில் இவர் மட்டுமே அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவரின் கணவர் இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

28 வயதான கமலி, முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இவர் தற்போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவிநாசி தொகுதியில் 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, கமலி தோற்கடித்துள்ளார். இங்கு தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருத்துவர் கோகிலாமணி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

பிரசாரத்தில் தொடக்கம் முதலே, தி.மு.க, பா.ஜ.க இடையே கடுமையான போட்டி நிலவுவதாகப் பேசப்பட்ட நிலையில், த.வெ.க வேட்பாளர் கமலி வெற்றி பெற்றது பெரிதாக பேசப்பட்டது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனைத் தோற்கடித்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கமலி, "அமைச்சரை தோற்கடித்தாக கூறுகின்றனர். எனக்குக் கிடைத்த வாய்ப்பாக அதைப் பார்க்கிறேன்" என்கிறார்.

"ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் தொகுதியில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வைக் கொடுப்பேன்" என கமலி தெரிவித்தார்.

3. சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்)

தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சி.விஜயலட்சுமி, சுயதொழில் செய்து வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

50 வயதான இவர், பிளஸ் 2 வரை படித்துள்ளார். குமாரபாளையம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக தங்கமணியும் தி.மு.க வேட்பாளராக எஸ்.பாலுவும் களமிறங்கினர்.

தொகுதியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்த தங்கமணியை 7,696 வாக்குகள் வித்தியாசத்தில் சி.விஜயலட்சுமி தோற்கடித்தார்.

பிளஸ் 2 வரை படித்திருப்பதாகக் கூறினாலும் தேர்தல் பிரசாரத்தில் பி.காம் படித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.

4. ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.வி.ரஞ்சித்குமார், விவசாயம், பெட்ரோல் பங்க், கோழி வளர்ப்பு, ரியஸ் எஸ்டேட் உள்பட பல்வேறு வணிகங்களை செய்து வருகிறார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 50 வயதான ஆர்.வி.ரஞ்சித்குமார் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையில் பல்வேறு நூதன வாக்குறுதிகளையும் அவர் அளித்தார். "ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கென என இரண்டு கூடைகளைக் கொடுத்து குப்பைகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு வழிவகை செய்வேன்" என வாக்குறுதி கொடுத்தார்.

5. வினோத் (கும்பகோணம்)

கும்பகோணம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வினோத், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயதொழிலில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் வினோத் கூறியுள்ளார்.

வினோத் மீது எட்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூரில் உள்ள வேப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்த வினோத், பின்னர் கட்சியில் இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

6. ராஜீவ் (திருவாடனை)

திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜீவ், தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

33 வயதான இவர், பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவம் சார்ந்த தொழிலை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

7. பி.ராஜ்குமார் (கடலூர்)

தமிழ்நாடு அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.ராஜ்குமார், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

46 வயதான இவர் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். தன் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

8. வி.காந்திராஜ் (அரக்கோணம்)

அரக்கோணம் (தனி) தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட வி.காந்திராஜ், தமிழ்நாடு அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவி வகிக்கும் வி.காந்திராஜ், 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். 52 வயதான இவர் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

9. பி.மதன்ராஜா (ஒட்டப்பிடாரம்)

ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வான மதன்ராஜா, தமிழ்நாடு அமைச்சரவையில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

41 வயதான இவர், பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். சுயதொழிலில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பி.மதன்ராஜா தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் வசித்து வரும் மதன்ராஜா, கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

10. கே.ஜெகதீஸ்வரி

ராஜபாளையம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வான ஜெகதீஸ்வரி, சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள ஜெகதீஸ்வரி, செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தி.மு.க வேட்பாளராக தங்க பாண்டியனும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க வேட்பாளராக பிரிசில்லா பாண்டியனும் போட்டியிட்டனர்.

இதே தொகுதியில் 2016, 2021 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் தங்கபாண்டியனை ஜெகதீஸ்வரி தோற்கடித்துள்ளார்.

11. ராஜேஷ்குமார் (கிள்ளியூர்)

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராஜேஷ்குமார், தமிழ்நாடு அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, த.வெ.க ஆட்சியமைப்பதற்கு உதவியது. த.வெ.க அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.

தற்போது சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக உள்ள ராஜேஷ்குமார், பட்ட மேற்படிப்பை நிறைவு செய்துள்ளார். 51 வயதான இவர் மீது 13 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

2016, 2021, 2016 எனத் தொடர்ந்து மூன்று முறை கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு ராஜேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

12. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட விஜய் பாலாஜி, தமிழ்நாடு அமைச்சரவையில் கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

39 வயதான இவர் சுயதொழிலில் ஈடுபட்டு வருகிறார். தன் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

13. லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)

ராசிபுரம் (தனி) தொகுதியில் இருந்து த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், அமைச்சரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

42 வயதான இவர் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்துள்ளார். அ.தி.மு.க ஆட்சிக்காலங்களில் அமைச்சராகவும் சபாநாயகராகவும் இருந்த தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்ச்செல்வன், கடந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார்.

அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறுப்பு வகித்த லோகேஷ் தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் தலைமை மீதான அதிருப்தியில் கடந்த பிப்ரவரி மாதம் த.வெ.கவில் இணைந்தார்.

14. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)

சேலம் தெற்குத் தொகுதியில் இருந்து தேர்வான விஜய் தமிழன் பார்த்திபன், தமிழ்நாடு அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். தன் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். சேலம் மத்திய மாவட்ட த.வெ.க செயலாளரான இவர், விஜய்யின் தீவிர ரசிகராக அறியப்படுகிறார். விஜய் மக்கள் மன்றத்திலும் செயல்பட்டு வந்துள்ளார்.

15. ரமேஷ் (ஸ்ரீரங்கம்)

சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31 வயதான இவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிபிசி தமிழிடம் ரமேஷ் பேசும்போது, "என் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாக பி.இ மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை நிறைவு செய்தேன்" எனக் கூறினார்.

தனது அம்மா சமையல் வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிய அவர், "எம்.எல்.ஏவாக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு என் தாயை அழைத்தேன். 'விடுமுறை கிடைக்காது' எனக் கூறி வர மறுத்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.

16. விஸ்வநாதன் (மேலூர்)

மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதன், தமிழ்நாடு அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். 61 வயதான இவர், தன் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தபோதும், மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மிக தாமதமாகவே வேட்பாளராக விஸ்வநாதனை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

17. ஆர்.குமார் (வேளச்சேரி)

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.குமார், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் தனக்கு 117 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

18. கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை தோற்கடித்த கே.தென்னரசு, தமிழ்நாடு அமைச்சரவையில் அயலக தமிழர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயதொழிலில் ஈடுபட்டு வரும் இவர், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இவர் மீது மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எம்.எல்.ஏவாக பதவியேற்கும்போது, "தளபதியின்றி நான் இல்லை" எனக் கூறி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

19. சம்பத்குமார் (கோவை வடக்கு)

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், தமிழ்நாடு அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான இவர், எம்.பி.ஏ படிப்பை நிறைவு செய்துள்ளார். கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட சம்பத்குமார், பிரசாரத்தில் த.வெ.க தலைமை அளித்த வாக்குறுதிகளுடன் தனிப்பட்ட சில வாக்குறுதிகளையும் அளித்தார்.

'மூன்று வாரத்துக்கு ஒருமுறை மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு தீர்வு கொடுப்பேன்' எனவும் 'குப்பையில்லா வீடுகள், இருட்டில்லா தெருக்களை அமைப்பதே தனது இலக்கு' எனவும் பரப்புரை செய்தார்.

தேர்தலில் தி.முக. வேட்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன் இரண்டாம் இடத்தையும் பா.ஜ.க மகளிரணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

20. முகமது ஃபர்வாஸ் (அறந்தாங்கி)

அச்சுத் தொழிலில் ஈடுபட்டு வரும் முகமது ஃபர்வாஸ், அறந்தாங்கி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31 வயதான இவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தன் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றி வந்த இவர், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

21. டி.சரத்குமார் (தாம்பரம்)

தாம்பரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற 34 வயதான சரத்குமார், த.வெ.க அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு (வட)மேற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் இவர், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

பட்டப்படிப்பை முடித்துள்ள சரத்குமார், தன் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

22. என்.மரியவில்சன் (ஆர்.கே.நகர்)

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வான என்.மரியவில்சன், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயதொழிலில் ஈடுபட்டு வரும் இவர், முனைவர் பட்டம் முடித்துள்ளார். தன் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

சத்யபாமா நிகர்நிலைப் பல்லைக்கழகத்தை நிறுவிய ஜேப்பியாரின் மருமகனான மரியவில்சன், ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராக இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் த.வெ.கவில் இணைந்த மரியவில்சன், கடந்த ஓராண்டாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

23. விக்னேஷ் (கிணத்துக்கடவு)

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தேர்வானார். தற்போது த.வெ.க அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

38 வயதான விக்னேஷ், பி.எஸ்.சி (கணிப்பொறி அறிவியல்) படித்துள்ளார். விஜய் மக்கள் மன்றம் மூலமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்ததால் தொகுதியில் அறியப்பட்ட முகமாக இருந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு