You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேநீர் உலகம் முழுவதும் பரவியதற்கு பின்னால் உள்ள 'இருண்ட வரலாறு' என்ன?
- எழுதியவர், ஜஸ்டின் ரோவ்லாட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இது மிகவும் பிரபலமான இந்திய வீதி உணவுகளில் ஒன்றைப் பற்றிய அசாதாரணமான கதை.
நான் வீதி உணவு என்று கூறுகிறேன், ஆனால் இது உண்மையில் ஒரு பானம். சர்வதேச பொருளாதாரத்தின் உலகமயமாக்கலைத் தூண்டிய மாபெரும் காரணிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்வது மிகையாகாது.
இது போர்களுக்கு வழிவகுத்தது, அடிமைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவித்தது.
இருப்பினும், இது பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ரசித்துப் பருகப்படுகிறது, அதிலும் இந்தியாவே மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில் இந்தத் தயாரிப்பு இந்தியாவில் தோன்றவில்லை என்றாலும், அது உலகளவில் பிரபலமடைவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது.
ஆம், நீங்கள் யூகித்தபடி, நாம் தேநீர் பற்றிதான் பேசுகிறோம்.
முதலில் தேநீர் மீதான சுவையை இந்தியாவும் உலகமும் எப்படி வளர்த்துக்கொண்டன என்பதைக் கண்டறிவோம்.
இந்தி மற்றும் சில இந்திய மொழிகளில் தேநீருக்கு 'சாய்' என்று பெயர், இதுவே நம் பயணத்தைத் தொடங்குகிறது, ஏனெனில் இந்த நறுமணமுள்ள இலைகளின் மூலத்தை இந்த வார்த்தையே காட்டிக் கொடுத்துவிடுகிறது.
இந்தச் சொல்லின் வேர் மாண்டரின் மொழியின் 'சா' (chá) என்ற வார்த்தையாகும்.
ஆனால், சீன தயாரிப்பான தேநீர் மீது இந்தியாவிற்கு எப்படி ஆர்வம் வந்தது என்பதற்கான கதை அவ்வளவு எளிமையானது அல்ல.
'உலகை அடிமையாக்கிய தேநீர்'
உண்மையில், இந்தியாவில் முதன்முதலில் சுத்திகரிக்கப்பட்ட மற்றொரு உணவுப் பொருள்தான் உலகைத் தேநீருக்கு அடிமையாக்கியது.
சீனர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேநீர் அருந்தி வந்தனர். 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தூர கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்த டச்சு வணிகர்கள் கொண்டு வந்த புதிய பொருட்களில் தேநீரும் ஒன்றாகும்.
இந்த பானம் முதலில் மருந்தாகவும், பின்னர் ஐரோப்பிய தலைநகரங்களின் காபி கடைகளில் ஒரு புதுமையான உணவுப் பொருளாகவும் விரைவாகப் பிரபலமடைந்து, நியூ ஆம்ஸ்டர்டாம் (நியூயார்க்) வரை சென்றது.
இதன் புகழ் சீராக வளர்ந்தது, ஆனால் அதற்கடுத்த நூற்றாண்டில் இந்த நறுமணமுள்ள ஆனால் கசப்பான பானம் உயர்குடி மக்களால் மட்டுமே ரசித்துப் பருகப்படும் அரிய மற்றும் விலையுயர்ந்த விருந்தாகவே இருந்தது.
ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய ஆக்கிரமிப்பாளர்கள் கரும்புகளைப் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், அது அப்படித்தான் இருந்திருக்கும்.
இயேசு யூதேயாவில் போதித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், சர்க்கரைப் படிகங்களை உற்பத்தி செய்யும் ஒரு செயல்முறையை முதன்முதலில் இந்தியர்கள் உருவாக்கினர்.
ஆசியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து வந்த இனிப்புப் புல்லின் தண்டுகளிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
ஆனால், ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட அடிமைகளின் வியர்வையையும் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் பிரமாண்டமான கரும்புத் தோட்டங்கள் அமைக்கப்பட்ட பிறகுதான், சர்க்கரை உற்பத்தி பெரிய அளவில் நடைபெறத் தொடங்கியது.
முதன்முறையாக இது ஐரோப்பாவில் தாராளமாகவும் மலிவாகவும் கிடைத்தது.
ஆனால் இந்த சுவையான புதிய பொருளை எப்படி உட்கொள்வது?
எங்கோ, யாரோ ஒருவருக்கு, ஒரு கப் தேநீரில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கும் யோசனை தோன்றியது.
பின்னர் பாலும் சேர்த்து அருந்துவது நாகரிகமாக மாறியது.
ரசனை மிக்கவர்களுக்கான பானம் என இருந்த தேநீர், திடீரென்று அனைவரும் பருகக்கூடிய ஒன்றாக மாறியது.
தேநீர் மற்றும் சர்க்கரையை 'வீட்டுப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த' இந்த செயல்முறை, அவ்விரண்டின் பிரபலத்திலும் ஒரு பெரும் ஏற்றத்திற்கு வழிவகுத்தது.
அடிமை வர்த்தகத்திற்கு அடித்தளம்
ஐரோப்பாவின் இனிப்புத் தேநீர் மீதான நாட்டம், ஆப்பிரிக்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அடிமை வர்த்தகத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்றால், அது உலகின் மறுபக்கத்திலும் அதே அளவு அழிவை ஏற்படுத்தியது.
18-ஆம் நூற்றாண்டில் தேயிலை சீனாவில் மட்டுமே விளைவிக்கப்பட்டது.
பிரிட்டன் இந்த பொருளை பெருமளவில் வாங்கிக்கொண்டிருந்தது - பட்டு மற்றும் பீங்கான் போன்ற பிற கவர்ச்சியான சீனப் பொருட்களை விட தேசிய கொள்முதல் பட்டியலில் தேயிலை முதலிடத்தில் இருந்தது.
பிரச்னை என்னவென்றால், சீனர்கள் இதற்குப் பதிலாக எதுவும் பிரிட்டனிடம் இருந்து வாங்கவில்லை.
ஐரோப்பிய தேநீர் வர்த்தகத்தின் மையமாக இருந்த பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருளின் மீதும் சீனர்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை.
அப்போதும் சரி, இப்போதும் சரி, இது பொருளாதாரப் பேரழிவிற்கான ஒரு வழிமுறையாகவே இருந்தது.
பிரித்தானியர்கள் சந்தையை கட்டுப்படுத்த முயன்றபோது, தேயிலைக்கான மற்றொரு செழிப்பான சந்தையான அமெரிக்காவில் இருந்த குடியேற்றவாசிகள் மகிழ்ச்சியடையவில்லை.
அவர்கள் ஒரு கப்பல் முழுவதும் இருந்த தேயிலையை பாஸ்டன் துறைமுகத்தில் வீசியெறிந்த சம்பவம், அமெரிக்காவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் முடிவின் தொடக்கத்தைக் குறித்தது.
பிரிட்டனின் தேநீர் மீதான மோகம் ஒட்டுமொத்த தேசத்தையும் திவாலாகும் பாதையில் இழுத்து சென்றுகொண்டிருந்தது.
தூரக் கிழக்கு நாடுகளுடனான வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி, சீனர்கள் நுகர விரும்பிய ஒரு பொருளான அபினைக் கண்டுபிடிக்கும் வரை, நிலைமை இப்படியே இருந்தது.
அது இந்திய மாநிலமான வங்கத்தில் அபின் சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, விவசாயிகளை மேலும் அதிகமாகப் பயிரிட ஊக்குவித்ததுடன், உற்பத்தியை முறைப்படுத்தி, புதிய சாகுபடி நுட்பங்களையும் உருவாக்கியது.
சீனர்கள் அபின் வர்த்தகத்தைத் தடை செய்தபோது, கம்பெனி அதைச் சிறிய வர்த்தகர்களுக்கு ஏலம் விட்டது, அவர்கள் அதைச் சீனாவிற்கு கடத்த, இதன் மூலம் தடை தவிர்க்கப்பட்டது.
சீனாவுடனான 'சமாதான' உடன்படிக்கை
அபின் போதைப்பொருள் மில்லியன் கணக்கானவர்களை அடிமையாக்குகிறது என்று சீனப் பேரரசர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆனால், 1839-ல் அவர் சுமார் 20,000 பெட்டிகள் அபினைப் பறிமுதல் செய்தபோது, பிரிட்டிஷார் நடவடிக்கை எடுத்தனர்.
சிக்கலைத் தீர்க்க ஒரு சிறிய ராணுவத்துடன் போர்க்கப்பல்கள் விரைவாக அனுப்பப்பட்டன.
அவர்களின் மேம்பட்ட ஆயுதங்களும் உபகரணங்களும் பிரிட்டிஷாருக்கு விரைவான வெற்றியை உறுதிசெய்தன, அதனைத் தொடர்ந்து அவர்கள் சீனாவுடன் 'அவமானகரமான சமாதான' உடன்படிக்கையை மேற்கொண்டனர்.
அபின் உட்பட எல்லாவற்றிலும் பிரித்தானிய வர்த்தகத்திற்குத் துறைமுகங்களைத் திறக்குமாறும், ஹாங்காங் தீவை பிரிட்டனிடம் ஒப்படைக்குமாறும் சீனர்களை அவர்கள் கட்டாயப்படுத்தினர் (இது 1997-இல் தான் திரும்ப வழங்கப்பட்டது).
இதற்கிடையில், கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் தேநீர் சந்தையில் எதிர்கால இடையூறுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு திட்டத்தை ஏற்கனவே வகுத்துக்கொண்டிருந்தனர்.
மீண்டும் ஒருமுறை, இந்தியாவே அதைத் தொடங்குவதற்கு வெளிப்படையான இடமாக இருந்தது.
1830-களில், சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைச் செடிகளைப் பயன்படுத்தி, இந்தியாவின் அசாம் மாநிலத்தில் முதல் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
சர்க்கரையைப் போலவே, தேயிலை சாகுபடியும் அதிக உழைப்பு தேவைப்படும் ஒரு தொழிலாகும். எனவே, அதற்கு அடிமைகளைப் பணியமர்த்துவதுதான் எளிதான வழியாக இருந்திருக்கும்.
ஆனால் 1833-ல், பிரிட்டிஷ் பேரரசில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகிகள் ஒரு மாற்று வழியைக் கண்டறிய வேண்டியிருந்தது - அதை அவர்கள் கண்டறிந்தனர்.
அடிமைகளுக்குப் பதிலாக, தேயிலை தோட்டங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தின. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்ய ஆண்களும் பெண்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
ஆனால் உண்மை என்னவென்றால், இந்தத் தொழிலாளர்களின் நிலை அடிமைகளை விடச் சிறப்பானதாக இருக்கவில்லை.
இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்தத் தோட்டங்கள் முதன்முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் நிறுவப்பட்ட பல நடைமுறைகளும் மரபுகளும், உலகின் மிகவும் விரும்பப்படும் சில பிராண்டுகளுக்குப் பொருட்களை வழங்கும் தோட்டங்களில்கூட இப்போதும் தொடர்கின்றன என்பதே. இதை 2015இல் பிபிசி நியூஸ் மேற்கொண்ட ஒரு புலனாய்வில் கண்டறிய முடிந்தது.
மோசமான நிலைமைகள் ஒருபுறம் இருக்க, வெகுவிரைவில் இந்தியா, பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் விரும்பப்படும் தேநீரின் மிகப்பெரிய விநியோகஸ்தராக மாறியது.
முதலில், இந்த மதிப்புமிக்க பொருள் ஏற்றுமதிக்காக மட்டுமே இருந்தது, ஆனால் உற்பத்தி வளர்ந்து விலை குறைந்தபோது, இந்தியர்களும் தேநீர் குடிக்கத் தொடங்கினர்.
இயல்பாகவே, அவர்கள் பிரித்தானியர்களைப் பின்பற்றி பால் மற்றும் சர்க்கரையுடன் தேநீர் குடித்தனர்.
தேநீரின் இருண்ட வரலாறு
நீங்கள் தேநீர் அருந்தும் போதெல்லாம் அதன் இருண்ட வரலாற்றைப் பற்றி நினைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவ்வப்போது, நீங்கள் ரசித்துப் பருகும் இந்த பானம் உங்கள் கைகளில் எட்டுவதை சாத்தியமாக்கிய முக்கியமான உலகளாவிய தொடர்புகளைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
ஏனென்றால், சர்வதேச வர்த்தகத்தின் வளர்ச்சி உலகிற்கு அளவற்ற செல்வத்தைக் கொண்டு வந்திருந்தாலும், உலகமயமாக்கல் கிட்டத்தட்ட எப்போதுமே சில பாதிப்புகளை விட்டுச் செல்கிறது என்பதை அது நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தக் கருத்தை மேலும் ஆணித்தரமாக வலியுறுத்த, சீனர்களுக்கு அபின் மீது ஏன் அவ்வளவு நாட்டம் இருந்தது என்பதை நான் இதுவரை குறிப்பிடவில்லை.
ஆசியாவிற்குக் கொண்டுவரப்பட்ட புகையிலைக் குழாய்களை மாற்றி, அவற்றை அபின் புகைப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தினர்.
அதன் விளைவாக, மிகவும் வலிமையானதும், மேலும் அடிமையாக்கும் தன்மையுடையதுமான ஒரு தாக்கம் உருவானது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டன் உலகம் கண்டிராத மிகப்பெரிய போதைப்பொருள் வர்த்தக நாடாக உருவெடுத்திருந்தது; மேலும், எந்தவொரு நாடும் சந்தித்திராத மிகப்பெரிய போதைப்பொருள் சிக்கலை சீனா உருவாக்கியிருந்தது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1906-ஆம் ஆண்டில், சீனாவின் வயதுவந்த ஆண்களில் 23.3% பேர் அபினுக்கு அடிமையாக இருந்தனர்.
(2016ஆம் ஆண்டு வெளியான இந்த கட்டுரை சர்வதேச தேநீர் தினத்தையொட்டி மறுபகிர்வு செய்யப்படுகிறது)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு