'7 பட்டியல் பிரிவினர், 2 பிராமணர்கள் - விஜயின் அமைச்சரவை சொல்லும் செய்தி என்ன?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் அமைச்சரவை வியாழக்கிழமையன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட 23 அமைச்சர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பட்டியல் சாதியைச் சேர்ந்த ஏழு பேருக்கும் பிராமண சாதியை சேர்ந்த இரண்டு பேருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 233 இடங்களில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சியமைத்தது.

கடந்த மே 10 ஆம் தேதியன்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் த.வெ.க எம்.எல்.ஏக்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், செங்கோட்டையன், அருண் ராஜ், கீர்த்தனா, ராஜ்மோகன், டி.கே.பிரபு, வெங்கட்ரமணன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் மே 13 ஆம் தேதியன்று நடைபெற்ற அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசு வெற்றி பெற்றது. நம்பிக்கை கோரும் வாக்கெடுப்புக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பட்டியல் பிரிவினருக்கு முக்கியத்துவம்

இந்த நிலையில், வியாழக்கிழமையன்று த.வெ.க தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 23 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் மூலம் அமைச்சரவையில் ராஜ்மோகன், கமலி, விஸ்வநாதன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகிய ஏழு பேர் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

பிராமணர் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கட்ரமணன், உணவுத்துறை அமைச்சராகவும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி என நான்கு பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

"முக்கியமான அரசியல் நகர்வு"

"கடந்த தி.மு.க ஆட்சியில் பட்டியல் பிரிவை சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக இருந்தனர். தற்போது ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

த.வெ.க அமைச்சரவையில் இரண்டு பிராமணர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்துப் பேசும் அவர், "இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏற்கெனவே தமிழ்நாடு அமைச்சரவையில் ஆர்.வெங்கட்ராமன், ஜெயலலிதா, ராஜாஜி, ஹண்டே ஆகியோர் பதவி வகித்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

"சமூகத்தின் ஒரு பகுதியாக பிராமணர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாக்குவங்கி உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

"த.வெ.க அமைச்சரவையில் ஏழு பட்டியல் பிரிவு அமைச்சர்கள் மற்றும் இரண்டு பிராமண அமைச்சர்கள் என்பது முக்கியமான அரசியல் நகர்வுதான்" எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்.

'பிரபல வேட்பாளர்களை தோற்கடித்ததால் பதவி'

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கமலி, அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க வேட்பாளருமான எல்.முருகனை தோற்கடித்தார். நாமக்கல் குமாரபாளையம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட தங்கமணியை, அமைச்சர் விஜயலட்சுமி தோற்கடித்தார்.

கோவை வடக்குத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை, அமைச்சர் சம்பத்குமார் தோல்வியடைய வைத்தார்.

காரைக்குடி தொகுதியில் சீமானை எதிர்த்து த.வெ.க சார்பில் போட்டியிட்ட டி.கே.பிரபு வெற்றி பெற்றார்.

இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய மாலன், "அமைச்சர்களாக இடம்பெற்றுள்ள பலரும் பிரபலமான அரசியல்வாதிகளை தோற்கடித்துவிட்டு வந்துள்ளனர். அதனாலேயே அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது" என்கிறார்.

இளவயது அமைச்சர்கள் - என்ன சிக்கல்?

புதிய அரசில் துறைகள் ஒதுக்கீடு குறித்தும் சில விமர்சனங்களை மூத்த பத்திரிகையாளர் மாலன் முன்வைத்தார்.

"செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறையை மரிய வில்சனிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தத் துறையைக் கையாளக் கூடிய அளவுக்கு அனுபவம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது" எனக் கூறுகிறார்.

"தமிழ்நாடு நிதித்துறையைப் பொறுத்தவரையில் கடன் அளவு எல்லைக்குள் இருக்க வேண்டும். மாநிலத்தின் வருவாயை எந்தளவுக்கு பெருக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, "மாநிலத்துக்கு தேவையான மத்திய அரசின் நிதி உதவியைக் கேட்டுப் பெறும் திறன் மரிய வில்சனுக்கு இருக்குமா என்பது போகப் போக தெரியும்" என்கிறார்.

"சீனியரான செங்கோட்டையனை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்தது ஆச்சர்யமாக உள்ளது. நிதி நிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்து விவாதிக்க வேண்டும். நிதி அமைச்சராக இளவயது எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

த.வெ.க அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

"நிதித்துறைக்கு அருண்ராஜை நியமித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்கிறார் மாலன்.

தொடர்ந்து பேசும்போது, "அமைச்சரவையில் நிறைய இளைஞர்கள் வந்துள்ளனர். குறிப்பாக, பட்டியல் சாதியினருக்கு முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நல்வாய்ப்பாக இது உள்ளது. தங்கள் துறைகளில் போகப் போக பழகிக் கொள்வார்கள்" என்கிறார் அவர்.

"த.வெ.க அமைச்சரவையில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவத்தை மட்டும் அளவீடாக வைத்துக் கொள்ள முடியாது" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

'கூட்டணி ஆட்சியின் தொடக்கம்'

அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியின் தொடக்கமாக இது உள்ளதாகக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " கூட்டணி ஆட்சியின் வெற்றி வைத்து ஜனநாயகப் பரிசோதனையை மக்கள் எடை போடுவார்கள்" என்கிறார்.

முக்கியமான திருப்பமாக இது உள்ளதாகக் கூறும் அவர், "வரும் காலங்களில் கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படும்போதே, கூட்டணி ஆட்சி என்ற ஒப்பந்தமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு