இலங்கை: 277 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் - நீதிமன்ற தீர்ப்பு விவரம்

பட மூலாதாரம், Ishara S. KODIKARA / AFP via Getty Images
- எழுதியவர், இஷாரா தனசேகரா
- பதவி, பிபிசி சிங்களம்
- எழுதியவர், குமுடு ஜெயவர்தன
- பதவி, பிபிசி சிங்களம்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களில், தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட நௌஃபர் மௌலவியும் அடங்குவார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்ற 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.
2009-ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் குண்டுவெடிப்புகள், இலங்கையில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இறந்தவர்களில் 45 வெளிநாட்டினரும் அடங்குவர்.

இந்த தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று புலனாய்வாளர்கள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினர். அவர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
கொலை, பயங்கரவாதச் சதி மற்றும் துப்பாக்கிகளை வைத்திருத்தல் உள்ளிட்ட 23,000க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில் 2,300-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர்.
வெடிபொருட்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட 2,076 சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் "முக்கியமான உளவுத்துறைத் தோல்வி" இருந்ததாக இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தாக்குதல்கள் குறித்த இந்தியாவின் எச்சரிக்கை தகவல் அதிகாரிகளுடன் முறையாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்களுக்கு வழிவகுத்த தேசியப் பாதுகாப்புத் தோல்விகளுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்று கண்டறிந்த உச்ச நீதிமன்றம், 2023-ஆம் ஆண்டில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவியல் ரீதியான அலட்சியத்திற்காக, கடந்த மாதம் இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது பல தசாப்தங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இத்தகைய தண்டனைகள் வழக்கமாக ஆயுள் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்படுகின்றன.
ஈஸ்டர் தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, இலங்கையர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் 2019ம் ஆண்டு 277 பேரின் உயிர்களை காவுக்கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையிலுள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்றத் தெரிவு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டவரும், சுமார் 45 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































