மஞ்சள் கரு சாப்பிட்டால் மாரடைப்பு வருமா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? 7 கேள்வி- பதில்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சண்முகப் பிரியா செல்வராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உலகளவில் அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இருந்தாலும், முட்டை குறித்து மக்களிடையே இன்னும் பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன. கோழி முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? நாட்டுக்கோழி முட்டை நல்லதா, பிராய்லர் கோழி முட்டை நல்லதா? முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? என பல கேள்விகள் நிலவுகின்றன.
இந்தச் சந்தேகங்களுக்கு உணவு ஆலோசகர் மருத்துவர் அருண்குமார் அளித்துள்ள விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் தொகுத்து தரப்பட்டுள்ளன.
1. முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன?
ஒரு முட்டையில் சராசரியாக அறுபது கலோரிகள் உள்ளதாகக் கூறும் மருத்துவர் அருண்குமார் அதில் ஆறு கிராம் அளவுக்கு உயர்தரப் புரதம் இருப்பதாக விளக்குகிறார்.
"முட்டையில் உள்ள புரதம் "உயர்தரமானது" என்று கூறப்படுவதற்குக் காரணம், அதன் உயிரியல் தன்மை (bio availability) நூறு சதவீதமாக இருப்பதே ஆகும். குறிப்பாகப் புரத சத்துக்களை உடல் எளிதாகச் செரித்து, உறிஞ்சி, பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனாலேயே மற்ற உணவுகளில் உள்ள புரதங்கள் எந்த அளவுக்கு உடலுக்குப் பயன்படும் என்பதை மதிப்பிடும்போது, முட்டையின் புரதத்தை அளவுகோலாகக் கொண்டு ஒப்பிடப்படுகிறது. இவை முட்டை புரதத்தின் "தங்க தரநிலை" (gold standard) எனக் கருதப்படுகிறது" என்கிறார்.

2. மஞ்சள் கரு உடலுக்கு தீங்கானதா?
மக்களிடையே பெரும்பாலும் இருக்கும் ஒரு நம்பிக்கை முட்டையின் வெள்ளைக் கரு மட்டுமே உடலுக்கு நல்லது என்பதாகும். ஆனால் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டிலும் புரதம் உள்ளது; வெறும் வெள்ளைக்கருவில் மட்டும் புரதம் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மஞ்சள் கருவில் நரம்பு மண்டலத்திற்குத் தேவையான முக்கியச் சத்தான கோலின் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கும், வளர்ந்து வரும் கருவுக்கும் மிக முக்கியமான ஊட்டச்சத்து. நரம்புகளுக்கும் கண் ஆரோக்கியத்திற்கும் தேவையான லுடீன் (Lutein), ஸீயாக்ஸாந்தின் (Zeaxanthin) ஆகிய சத்துக்களும் அதில் உள்ளன. இவை தவிர வைட்டமின் டி போன்ற சத்துகளும் முட்டையில் காணப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் என்சிபிஐ (NCBI) ஆய்வறிக்கை கோழி முட்டைகள் கோலின், ஃபோலேட், வைட்டமின் D, அயோடின், B வகை வைட்டமின்கள் மற்றும் உயர்தரப் புரதம் ஆகியவற்றை வழங்குகின்றன என்றும் தேசிய அளவிலான சுகாதார அமைப்புகள் தற்போது முட்டைகளை அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய-இரத்த நாள நோய்களுக்கு ஆபத்துக் காரணியாகக் கருதுவதில்லை என்றும் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
3. ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?
உலக சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் இருந்தே முட்டையை அறிமுகப்படுத்தலாம் என்கிறது.
- சிறு குழந்தைகளுக்கு - ஒன்று முதல் இரண்டு முட்டைகள்.
- கர்ப்பிணிகளுக்கு - இரண்டு முட்டைகள் வரை
- வயதானவர்களுக்கு - கோலின் சத்துக்காக, இரண்டு முட்டைகள் வரை
- தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், கூடுதல் புரதம் தேவைப்படுவோர் - ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை
பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டைகள் வரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டு முட்டைகள் என்பது, மஞ்சள் கருவுடன் கூடிய முழு முட்டைகளையே குறிக்கும்.
மஞ்சள் கரு சாப்பிட்டால் மாரடைப்பு வருமா?

பட மூலாதாரம், Getty Images
முட்டை மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது என்றும், இது இரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்புக்குக் காரணமாகிறது என்றும் சிலரால் கருதப்படுகிறது. ஆனால் இதன் உண்மைத்தன்மையை பரிசீலிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
"ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட இருநூறு மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், உணவில் இருந்து கிடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலுக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்துகொள்வது அவசியம். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் முழுவதும் உணவில் இருந்து மட்டுமே வருகிறது என்பது தவறான புரிதல்", என்கிறார் அவர்.
உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொலஸ்ட்ரால் அளவு இரண்டாயிரம் மில்லிகிராம் ஆகும் – அதாவது, சுமார் பத்து முட்டைகளில் உள்ள அளவு. உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ரால், கல்லீரல் (liver) மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிட்டு, அதன் மூலம் நானூறு மில்லிகிராம் கொலஸ்ட்ராலைப் பெறும்போது, கல்லீரலின் இரண்டாயிரம் மில்லிகிராம் உற்பத்தியில் அந்த அளவு குறைந்துவிடும். முட்டையில் மட்டுமல்லாமல் பால் பொருட்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றிலும் கொலஸ்ட்ரால் உள்ளது." என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
"அதிகப்படியான இரத்த எல்.டி.எல் (LDL) கொலஸ்ட்ரால் மாரடைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்றாலும், இது தொடர்பான விவாதங்கள் இன்னும் நடைபெற்று வருகின்றன. அது ஒரு பகுதி உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட, முட்டையில் உள்ள உணவு கொலஸ்ட்ரால் இரத்த கொலஸ்ட்ராலை அந்த அளவுக்கு அதிகரிப்பதில்லை. இதன் காரணமாகவே, முட்டை மஞ்சள் கருவைத் உண்ணக்கூடாது என்று முன்பு இருந்த வழிகாட்டுதல்கள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதயநோய் உள்ளவர்கள் உட்பட, அனைவரும் ஒன்று முதல் இரண்டு முட்டைகள் வரை தாராளமாகச் சாப்பிடலாம்", என்றும் அவர் விளக்கினார்.
"மிக அரிதான நிலைமையான பரம்பரை ஹைபர்கொலஸ்ட்ரோலீமியா ( familial hypercholesterolemia) நோய் உள்ளவர்களுக்கு மட்டும், இயற்கையாகவே கொலஸ்ட்ராலைச் செயலாக்கும் திறன் மிகக் குறைவாக இருக்கும் என்பதால், இரத்தத்தில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமாக இருக்கும். ஆகவே அவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று மஞ்சள் கருவை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. இவர்களைத் தவிர, மற்ற அனைவரும் எந்தத் தயக்கமும் இன்றி மஞ்சள் கருவை எடுத்துக் கொள்ளலாம்" என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
அதேபோல மஞ்சள் கரு சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வரும் அல்லது சிறுநீரக பிரச்னை வரும் என்பதெல்லாம் தேவையற்ற குழப்பங்கள் என்றும் அவர் விளக்குகிறார்.
இதனை அமெரிக்காவின் தேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 2026-ல் வெளியிடப்பட்டுள்ள அதன் ஆய்வறிக்கையில்," முட்டைகள் உணவில் உள்ள கொழுப்புச்சத்தின் (dietary cholesterol) முக்கிய ஆதாரமாக இருப்பதால், இரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் முட்டை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
ஆனால், உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்புச்சத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து அளவு மற்றும் அதிரோஸ்க்ளெரோசிஸ் எனப்படும் தமனிகளில் கொழுப்புப் படிதல் ஏற்படும் அபாயம் ஆகியவற்றில் குறைந்த அளவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன", எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. நாட்டுக்கோழி முட்டை நல்லதா அல்லது பிராய்லர் கோழி முட்டை நல்லதா?

பட மூலாதாரம், Getty Images
"உண்மையில், இரண்டு வகை முட்டைகளிலும் புரதம் மற்றும் ஏனைய ஊட்டச்சத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் உள்ளன. நாட்டுக்கோழிகள் இயற்கையான தீவனம் உண்பதால், அவற்றின் முட்டைகளில் கரோட்டினாய்டுகள் (carotenoids) சிறிது அதிகமாக இருக்கக்கூடும். இதன் காரணமாகவே நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கரு சற்று அடர்த்தியாகவும் அடர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்; அதே சமயம், தீவனம் உண்ணும் கோழிகளின் முட்டையின் மஞ்சள் கரு இளம் நிறத்தில் இருக்கும். இயற்கையாக புல் மற்றும் புழுக்களை உண்பதால், நாட்டுக்கோழி முட்டையில் ஒமேகா-3 அளவு சற்று அதிகமாக இருக்கக்கூடும். இந்த இரு சிறிய வேறுபாடுகளைத் தவிர, இரண்டு வகை முட்டைகளுக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை. புரத அளவு இரண்டிலும் ஒரே அளவில்தான் உள்ளது" என மருத்துவர் அருண்குமார் கூறுகிறார் .
"புரதத்திற்காக முட்டை எடுப்பவர்கள் பிராய்லர் கோழி முட்டையைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்; இதில் தவறு எதுவும் இல்லை. இரண்டு-மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து நாட்டுக்கோழி முட்டையையே சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை," எனவும் அவர் கூறுகிறார்.
5. ஹார்மோன் ஊசி குறித்த தவறான புரிதல் என்ன?
"கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி செலுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் விஷயம். இது குறித்து கவலைப்பட தேவையில்லை; இது ஒரு தவறான புரிதல். எந்தக் கோழிக்கும் ஹார்மோன் ஊசி செலுத்தி வளர்க்க முடியாது; அவ்வாறு செய்ய வேண்டுமெனில், அதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். கோழிகளுக்குச் செலுத்தப்படுவது நோய் தடுப்புக்கான தடுப்பூசிகள் மட்டுமே; இதையே பலரும் ஹார்மோன் ஊசி என்று தவறாகக் கருதுகின்றனர்", என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
சிறுமிகள் விரைவாக பூப்படைவதற்கு முட்டை அல்லது கோழி இறைச்சி காரணம் என்பதற்கும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை எனக் கூறும் மருத்துவர் அருண்குமார் ஆரோக்கியமான உணவுகள், நல்ல புரதங்கள் உட்கொள்வதன் காரணமாகவே தற்போது குழந்தைகள் விரைவாக பூப்படைகிறார்கள் என்றார்.
"சைவம் உட்கொள்பவர்களிடையேயும் கடந்த நூறாண்டுகளில் பூப்படையும் வயது குறைந்திருப்பது அறிவியல் உண்மை. எனவே, இதற்கும் நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி முட்டைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை," என்கிறார் அவர்.
6. முட்டை சாப்பிட்டால் வாயு தொல்லை அதிகரிக்குமா?
முட்டை சாப்பிடுவதால் வாயு தொல்லை அதிகரிக்கும் அளவுக்கு பாதிப்புகள் இருப்பதில்லை எனக் கூறும் மருத்துவர் அருண்குமார், சிலருக்கு மஞ்சள் கரு சாப்பிடும்போது ஒரு விதமான அசௌகரியம் ஏற்படலாம் என்றாலும் வழக்கமாகச் சாப்பிடத் தொடங்கினால், இந்த அறிகுறிகள் நடைமுறையில் குறைந்து விடுவதைக் காணமுடிகிறது என்கிறார்.
7. பச்சை முட்டை சாப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images
பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது. பச்சை முட்டையில் சால்மோனெல்லா (salmonella) எனப்படும் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தீவிர வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். பச்சை முட்டையில் உள்ள அவிடின் (avidin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் பயோட்டின் (biotin) எனப்படும் வைட்டமின் சத்தைக் குறைக்கிறது. இதன் காரணமாக சில சத்துக் குறைபாடுகளும் ஏற்படலாம். எனவே பச்சை முட்டையைத் தவிர்ப்பதே சிறந்தது என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது, ஹாஃப் பாய்ல் செய்வது, பொரித்துச் சாப்பிடுவது, வறுத்துச் சாப்பிடுவது என எந்த முறையில் சாப்பிட்டாலும் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை.
முட்டையைப் பற்றிய தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம் எனக் கூறும் மருத்துவர் அருண்குமார் உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதால் அனைவரும் எந்தக் குழப்பமும் இன்றி முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































