அமேசான் காடுகளில் தனித்து வாழ்ந்த அவா பழங்குடிகள் திடீரென மற்றொரு சமூகத்துடன் தொடர்புக்கு வந்தது ஏன்?

பட மூலாதாரம், Cortesía de Survival International
- எழுதியவர், வாலன்டினா ஒரோபெசா
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பிரேசிலின் அமேசான் காடுகளில் தனிமையில் வாழ்ந்து வந்த பழங்குடியினர் அவர்கள். அமகாரியா, ஜகரேவிஜ், இராஹோவா ஆகிய மூவரும், பிரேசிலின் வடகிழக்கு அமேசான் பகுதியில் தங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் வேட்டையாடியும், மீன்பிடித்தும், பழங்கள் மற்றும் தேன் சேகரித்தும் வாழ்ந்து வந்தனர். ஆனால், மரம் அறுக்கும் இயந்திரங்களின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அங்கிருந்து தப்பியோடி மறைந்துகொண்டனர்.
அமகாரியாவும் ஜகரேவிஜும் சகோதரிகள். இராஹோவா, ஜகரேவிஜின் மகன்.
பல ஆண்டுகளாக இவர்கள் மூவரும் முற்றிலும் தனிமையில் வாழ்ந்து வந்தனர். ஆனால், மரம் வெட்டுபவர்கள், குடியேறியவர்கள், கால்நடைப் பண்ணை உரிமையாளர்கள் ஆகியோரின் ஊடுருவல் அதிகரித்ததால், அப்பகுதியில் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் தொடர்பில் இருந்த மற்றொரு பழங்குடி சமூகத்திடம் அவர்கள் அடைக்கலம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.
"காட்டில் இருந்தபோதே அவர்களுக்கு சுவாச நோய்கள், காய்ச்சல், காசநோய் ஆகியவை ஏற்பட்டன. வேட்டையாடுவதற்கான உடல் வலிமையையும் அவர்கள் இழந்துவிட்டனர்" என்கிறார், பழங்குடியினரின் நில உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் சர்வைவல் பிரேசில் என்ற தன்னார்வ அமைப்பின் இயக்குநர் சாரா ஷென்கர்.
2015-ஆம் ஆண்டின் இறுதியில் அந்தச் சமூகத்தைச் சந்தித்தபோது நடந்தவற்றை நினைவுகூர்ந்த அவர், "அவர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்ததால், அவர்களுக்கு உணவளிப்பதற்காக வேட்டையாடவோ, உணவு உண்பதற்கு உதவவோ வேறு யாரும் இல்லை" என்கிறார்.
அமகாரியா, ஜகரேவிஜ், இராஹோவா ஆகியோர் தங்கள் வாழ்விடத்திலிருந்து வெளியேறியதற்கு கிரேட் கராஜாஸ் திட்டம் முக்கியக் காரணமாக இருந்தது. அவா பழங்குடியினரின் நிலப்பரப்பின் மையப்பகுதியில், உலகின் மிகப்பெரிய சுரங்க வளாகங்களில் ஒன்றைக் கட்டமைப்பதே இந்தத் திட்டம்.
1980களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. உலகின் மிகப்பெரிய திறந்தவெளி இரும்புத் தாதுச் சுரங்கத்தைத் திறப்பது, ரயில் பாதைகளை அமைப்பது, காடுகளைக் கடந்து செல்லும் சாலை வலையமைப்பை உருவாக்குவது ஆகியவையே அவை.

பட மூலாதாரம், Cortesía de Survival International
'மரம் வெட்டுபவர்கள் அவர்களைக் கொன்றுவிடுவார்கள்'
அவா பழங்குடியினரை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக அவர்களை அணுகுவதைத் தவிர்க்கின்றனர். தனிமையில் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கும் அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளிக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்வதாக ஷென்கர் விளக்குகிறார்.
ஆனால், இந்தச் சம்பவத்தில் நடந்தவற்றைப் பற்றித் தெரிவிக்க இராஹோவா முன்வந்தார். சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட 'Resisting to Exist: The Global Struggle of Indigenous Peoples in Isolation' என்ற அறிக்கையில் அவரது வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.
"நாங்கள் பயந்துபோயிருந்தோம். எங்களால் எங்கும் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டோம்" என்று இராஹோவா அதில் கூறியுள்ளார்.
அமகாரியா, ஜகரேவிஜ், இராஹோவா ஆகிய மூவரையும் கண்டுபிடித்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், சர்வைவல் அமைப்பின் நிபுணர்களிடம் கூறியதாவது:
"மரம் வெட்டுபவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்திருந்தனர். அருகில் மரம் அறுக்கும் இயந்திரங்களின் சத்தம் அதிகமாகக் கேட்டது. மரங்களை எடுத்துச் செல்வதற்காகப் பாதைகளை அமைக்க டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வெட்டுவதற்காகப் பல மரங்களில் அடையாளமிடப்பட்டிருந்தன. அதனால், 'எங்களுடன் வந்துவிடுங்கள். இல்லையென்றால் மரம் வெட்டுபவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்' என்று அவர்களிடம் கூறினோம். அவர்களும் எங்களுடன் வந்துவிட்டனர்."
படுகொலைகளில் இருந்து தப்பியவர்கள்
அந்தச் சந்திப்பு நிகழ்ந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 16 திங்கட்கிழமை, பிரேசிலின் மரான்யாவ் பகுதியில் உள்ள அராரிபோயா பழங்குடியினர் நிலப்பகுதியில், பிரேசிலின் தேசிய பழங்குடியினர் அறக்கட்டளையான ஃபுனாய் அமைப்பின் பாதுகாப்பு முகாமுக்கு 20 அவா பழங்குடியினர் வந்ததாக வெளியான செய்தி குறித்து கவலைப்படுவதாக ஷென்கர் கூறுகிறார்.
இதுவரை காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த அவா பழங்குடியினர், தவாரி கிராமத்தைச் சேர்ந்த குவாஜஜாரா (டெனெதேஹார்) பழங்குடியினருடன் தொடர்புக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் அவா பழங்குடியினருக்குச் சாப்பிடுவதற்காக மரவள்ளிக்கிழங்கு போன்ற ஒரு கிழங்கு வகையை வழங்கியதாக சர்வைவல் அமைப்பு தெரிவித்துள்ளது.
"இது கவலையளிக்கும் அறிகுறி. நாம் பார்க்க விரும்பாத ஒரு சூழல் இது" என்கிறார் ஷென்கர்.
"இன்று தனிமையில் வாழும் அவா பழங்குடியினர், பல தசாப்தங்களாகத் தங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளில் இருந்து உயிர் பிழைத்தவர்கள்."
"அவர்களின் செயல்பாடுகளுக்கும் அவர்கள் வாழும் மழைக்காடுகளின் ஆரோக்கியத்துக்கும் இடையிலான நேரடித் தொடர்பைக் கருத்தில் கொள்ளாமல் இதைப் பற்றிச் சிந்திக்க முடியாது. ஏனெனில், அவர்கள் உயிர்வாழ அந்தக் காடுகளையே முழுமையாகச் சார்ந்துள்ளனர்.
"உணவு, தண்ணீர், மருந்து, ஆன்மிக வாழ்க்கை என அனைத்துக்கும் அந்தக் காடுகளே ஆதாரம். அவர்கள் ஓரிடத்தில் நிலையாக வசிக்காமல், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழும் நாடோடிச் சமூகத்தினர்" என்கிறார் அவர்.
காடுகள் அழிக்கப்படுவதால் வறண்ட பகுதிகள் உருவாகின்றன. இதனால், காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது என்று ஷென்கர் சுட்டிக்காட்டுகிறார். அமேசான் காடுகளில் வறண்ட காலங்களில் சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற தீ விபத்துகளைப் பார்த்திருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்.
காட்டுத் தீ, வேட்டையாடுதலையும் கடுமையாகப் பாதிக்கிறது.
"அவா பழங்குடியினர் வேட்டையாடுவதற்குச் சார்ந்திருக்கும் விலங்குகள், மரங்கள் இல்லாததால் இறந்துவிடுகின்றன அல்லது வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகின்றன. கட்டுமானப் பணிகள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுவது இன்னும் கடினமாகிறது."
2002-ஆம் ஆண்டு சர்வைவல் அமைப்பு பதிவு செய்த வாக்குமூலத்தில், டூ'ஓ (To'o) என்ற அவா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
"முன்பெல்லாம் நாங்கள் நிறைய விலங்குகளை வேட்டையாடினோம். குரங்குகளும் மான்களும் அதிகமாக இருந்தன. ஆனால், இப்போது காடுகள் வெட்டப்பட்டுவிட்டதால் அவை மிகக் குறைவாகவே உள்ளன."
"எங்கள் நிலப்பரப்பு இல்லாவிட்டால், வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும். ஒவ்வொரு நாளும் வேட்டையாடுவதற்கான விலங்குகள் எங்களை விட்டு வெகுதூரம் சென்றுகொண்டிருக்கின்றன. எனவே, எங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் நிலப்பரப்புக்காக நாங்கள் போராடுவோம். எங்கள் நிலத்தை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்."

பட மூலாதாரம், Cortesía de Survival International
வேட்டையாடுவதில் ஏற்படும் சிரமங்கள் அவா பழங்குடியினரை மட்டுமல்லாமல், அவர்களுக்கு அடைக்கலம் அளித்த குவாஜஜாரா சமூகத்தினரையும் பாதிப்பதாக ஷென்கர் எச்சரிக்கிறார்.
"மரம் வெட்டுபவர்களும், தனிமையில் வாழும் அவா பழங்குடியினரும் ஒரே காட்டுப் பகுதியில் இருந்தால், மரம் வெட்டுபவர்கள் தங்களுடைய ஆயுதங்களைப் பயன்படுத்தி அவா மக்களைத் தாக்கக்கூடும். தற்போது அப்படியொரு சம்பவம் நடக்கிறது என்று நான் கூறவில்லை. ஆனால், மரம் வெட்டி பணம் சம்பாதிக்கத் தீவிரமாக இருக்கும் அந்தக் குழுவினர் அதிக ஆயுதங்களைக் கொண்டிருப்பதால், அத்தகைய ஆபத்து இருக்கிறது."
நோய்கள் பரவும் அபாயமும் அவா பழங்குடியினருக்கு இருப்பதாக ஷென்கர் கூறுகிறார். தனிமையில் வாழ்வதால், இதுவரை அவர்கள் எதிர்கொள்ளாத தொற்றுக் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அவர்களிடம் இல்லை.
"ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு வலுவான, தொடர்ச்சியான நடவடிக்கைகள் தேவை. இல்லையென்றால், அவா பழங்குடியினரால் உயிர்வாழ முடியாது." என்கிறார் ஷென்கர்.
தனிமையில் வாழும் அவா பழங்குடியினரின் உயிர், உடல்நலம் மற்றும் தன்னாட்சியைப் பாதுகாப்பதே தங்களின் முன்னுரிமை என்று பிரேசில் அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
"நிலப்பரப்பைப் பாதுகாப்பது, சுகாதார அபாயங்களைத் தடுப்பது, பழங்குடியின மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளிப்பது" ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Cortesía de Survival International
தடயங்களை அழித்துவிட்டுச் சென்றவர்கள்
அமகாரியா, ஜகரேவிஜ் ஆகிய சகோதரிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மரான்யாவ் மாநிலத்தின் தலைநகரான சாவ் லூயிஸுக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததாக ஷென்கர் நினைவுகூர்கிறார்.
உடல்நலம் தேறியதும் அவர்கள் மீண்டும் காட்டுக்குத் திரும்ப முடிவு செய்தனர். ஆனால், இராஹோவா மட்டும் தங்களுக்கு அடைக்கலம் அளித்த பழங்குடி சமூகத்துடனேயே தங்கிவிட்டார்.
அமகாரியாவும் ஜகரேவிஜும் காட்டுக்குத் திரும்பியபோது, தங்களைக் கண்டுபிடிக்க முடியாதபடி நிலத்தில் பதிந்திருந்த தங்கள் காலடித் தடங்களை மறைத்துவிட்டுச் சென்றனர்.
"பல மாதங்கள் காட்டில் இருந்த பிறகு, ஜகரேவிஜ் உயிரிழந்தார். அமகாரியா தனியாக விடப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் அந்தப் பழங்குடி சமூகத்திடம் திரும்பினார்."
அதன்பிறகு அமகாரியா தனித்து வாழ்வதற்காக மீண்டும் காட்டுக்குச் செல்லவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































